ச.செல்வராஜ்
தேசிய அளவில் வலிமையான ஒரு கூட்டணியை அமைக்க களம் இறங்கியிருக்கிறார் சந்திரபாபு நாயுடு. சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு பேட்டியளித்த நாயுடு, ‘இந்த அணியை ஒருங்கிணைப்பது எனது பணி! வழி நடத்துவது யார்? என்பதை பிறகு முடிவு செய்வோம்’ என்கிறார்.
1989-ல் நாயுடுவின் மாமனார் என்.டி.ராமராவ் முன்னின்று கலைஞர் கருணாநிதியின் துணையுடன் சென்னையில் தொடங்கிய தேசிய முன்னணி நினைவுக்கு வருகிறது. அந்தக் கூட்டணியின் அமைப்பாளராக என்.டி.ராமராவ் இருந்தார். ஒரே வித்தியாசம், அன்று இவர்கள் அணி திரண்டது காங்கிரஸுக்கு எதிராக!
போபர்ஸ் ஊழல் எதிர்ப்பு அலை, வி.பி.சிங்கிற்கு இருந்த இமேஜ் ஆகியவற்றின் உதவியுடன் ஜெயித்த அந்த அணி, பாஜக மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது வரலாறு! அப்போதும் ராமராவ், பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை. ஆந்திராதான் அவரது குறியாக இருந்தது. கலைஞரைப் போலவே தன் ‘உயரம்’ தெரிந்தவர் அவர்! அதே பாதையில்தான் நாயுடு பயணிக்கிறார். ‘பிரதமர் பதவி எனக்கு வேண்டாம்’ என கடந்த வெள்ளிக்கிழமை வெளிப்படையாக சென்னை பேட்டியில் கூறினார் சந்திரபாபு நாயுடு.
1989-ல் அவ்வளவு சிரமப்பட்டு உருவாக்கிய தேசிய முன்னணி ஆட்சி 2 ஆண்டுகள்தான் நீடித்தது இங்கே நினைவுபடுத்தியாக வேண்டும். அந்தப் பலவீனத்திற்கு மிக முக்கிய காரணம், வலுவான தேசியக் கட்சியால் அந்தக் கூட்டணி முன்னெடுக்கப்படவில்லை. வி.பி.சிங் ஆட்சிக்கு பிறகு காங்கிரஸ் வலுவாகவே ஆட்சியில் வந்து உட்கார்ந்தது.
அதேசமயம், 2004-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவான விதம் சற்றே வித்தியாசமானது. கூட்டணியை உருவாக்குவதில் சோனியா முனைப்புடன் செயல்பட்டார். அவரே மாநிலத் தலைவர்களை சந்தித்தார். கலைஞர் கருணாநிதி, மம்தா பானர்ஜி போன்றோர் பக்கபலமாக இருந்தனர்.
ஐமு கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகும் சோதனைகள் எழாமல் இல்லை. அந்த ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, மதிமுக, பகுஜன் சமாஜ், இடதுசாரிகள், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி, பாமக, திரிணாமுல் காங்கிரஸ், ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா, கடைசியாக திமுக என அத்தனைக் கட்சிகள் விலகியும் முழுமையாக 10 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்தார் மன்மோகன்சிங்!
பாஜக ஒவ்வொரு முறையுமே நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியை தானே முன்னின்று உருவாக்குவதையும் கவனிக்க வேண்டும். தேசிய அளவில் ஒரு வலுவான அணியை கட்டமைக்க வரலாறு நம் முன் வைத்திருக்கும் அனுபவப் பாடம் இது! இதை உணராமல் நாயுடு கட்டமைக்கும் கூட்டணி எப்படி இருக்கும்?
சென்னையில் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாயுடு, ஒரு இடத்தில்கூட பாஜக.வை மதவாதக் கட்சியாக விமர்சிக்கவில்லை. காரணம், கடந்த மார்ச் வரை அவரும் அந்த அணியில், ஆட்சியில் இருந்தவர் அல்லவா?
அதேசமயம், என்ன பிரச்னைக்காக மத்திய அரசில் இருந்து விலகினேன்? என்பதையும் ஆந்திராவுக்கு வெளியே அவரால் பேச முடியாது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் அங்கு ஜெகன்மோகன் ரெட்டி கடும் போட்டி கொடுக்கிறார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு போராட்டங்களை ரெட்டி முன்னெடுக்கிறார். சந்திரபாபு நாயுடுவின் வாக்குறுதிகள் என்னவாயிற்று? என்கிறார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், அந்தப் பிரச்னையில் மத்திய அரசு மீது குற்றம்சாட்டி வெளியே வருவதைத் தவிர நாயுடுவுக்கு வேறு வழியில்லை. அதையே செய்தார். 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஈழப் பிரச்னையை காரணம் காட்டி, மத்திய அரசில் இருந்து திமுக விலகியதைப் போல!
ஆனால் சென்னைப் பேட்டியில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, வாராக் கடன் பிரச்னைகளை குறிப்பிட்டு தேச நலன்களுக்காக பாஜக.வை எதிர்ப்பதாக கூறுகிறார் நாயுடு. ஏனென்றால். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து என்பது தமிழக தொழில் வளர்ச்சிக்கு மிரட்டலாக பார்க்கப்படும். அதை இங்கே பேசினால் திமுக.வை இங்குள்ள இதரக் கட்சிகள் ஒருவழி செய்துவிடும்.
இதில் நாயுடுவை குறை சொல்ல எதுவும் இல்லை. மாநிலக் கட்சிகளின் நிஜ ஆர்வம், மாநிலம் சார்ந்ததாகத்தான் இருக்கும். நாளைக்கே மாநிலம் சார்ந்த இன்னொரு பிரச்னையில் காங்கிரஸ் அணியை விட்டு, பாஜக அணிக்கு செல்ல இந்தக் கட்சிகள் தயங்காது என்பதே நிஜம்!
ராகுல் காந்தியை சந்தித்துவிட்டுத்தான், இந்த அணியை நாயுடு கட்டமைக்கிறார். அதை ஏன் ராகுல் காந்தி நேரடியாக செய்யவில்லை? அல்லது, ராகுல் காந்தியையே இந்தப் பணியை செய்யும்படி நாயுடு ஏன் கோரவில்லை? அதுதான் மாநிலக் கட்சிகளின் புத்திசாலித்தனமான அரசியல்!
மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, மு.க.ஸ்டாலின் என ஒவ்வொரு மாநிலத் தலைவர்களும் தங்கள் மாநிலங்களில் காங்கிரஸ் குறைந்தபட்சத் தொகுதிகளை பெற்றுக்கொண்டு தங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.
திமுக.வால் நாயுடுவுக்கோ, நாயுடுவால் மம்தாவுக்கோ நேரடியாக எந்த ஆதாயமும் இல்லை. அதேசமயம், தேசிய அளவிலான ஒரு கூட்டணி என உருவாக்கி, அந்தக் கட்டமைப்பை தங்கள் கையில் வைத்துக்கொண்டால் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தங்களின் சொல்படி கேட்கும். கொடுக்கிற சீட்களைப் பெற்றுக்கொண்டு தேர்தல் களத்தில் நிற்கும்.
இந்த மாநிலக் கட்சிகள் எல்லாமே இதற்கு முன்பு பாஜக அணியில் இருந்தவைதான்! ‘இனி ஒருபோதும் நாங்கள் பாஜக.வுடன் அணி சேர மாட்டோம்’ என இந்தக் கட்சிகளில் எதுவும் பட்டயம் எழுதிக் கொடுக்கவில்லை. எனவே தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி எப்படி அமையும் என யாரும் சொல்ல முடியாது.
தேசியக் கட்சியான காங்கிரஸின் ஆளுமையில் கூட்டணி அமையாதவரை, நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக.வுக்கு வலிமையான எதிர்ப்பை கொடுக்க முடியாது என்பதுதான் நிஜம்! அப்படி ஒரு முயற்சியை எடுக்கும் அளவுக்கு தன்னை வலிமையான கட்சியாக காங்கிரஸ் நினைக்கவில்லை என்றால், அதுவே பாஜக.வுக்கு லாபம்தான்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.