மம்தா, சந்திரசேகர் ராவ், மு.க.ஸ்டாலின் : காங்கிரஸை மிரட்டும் அணி!

மாநிலக் கட்சிகளுக்கு அந்தந்த மாநிலங்களில் மட்டுமே செல்வாக்கு! தேர்தலுக்கு முன்பு இந்த அணிகள் இணைவதால் எந்தக் கட்சிக்கும் லாபம் இல்லை.

ச.செல்வராஜ்

சந்திரசேகர ராவ் அபூர்வமாக ஒரு அரசியல் பயணத்தை தமிழ்நாட்டில் திட்டமிட்டிருக்கிறார். மு.க.ஸ்டாலினுடன் அவரது சந்திப்பு தேசிய முக்கியத்துவம் பெறுகிறது.

சந்திரசேகர ராவ், தெலங்கானா என்கிற குட்டி மாநிலத்தின் முதல்வர்தான்! ஆனால் தேசிய அரசியலில் அவரது பெயர் அதிகம் உச்சரிக்கப்படும் சூழல் உருவாகி வருகிறது. தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் ஒருங்கிணைப்பு என முதன்முதலில் அவர் வீசிய கல்தான் இதற்கு காரணம்!

சந்திரசேகர ராவ் முன்வைத்த அந்தக் கோஷத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் சேர்ந்து ஒலித்தார். கடந்த மார்ச் 5-ம் தேதி இது தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலினை தொடர்புகொண்டு மம்தா பேசினார். அப்போது அது குறித்து எந்த ‘கமெண்ட்’டும் கூறாத ஸ்டாலின், சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பிறகு மம்தாவின் முயற்சியை பாராட்டி அண்மையில் ஒரு ட்வீட் போட்டார்.

சந்திரசேகர ராவின் தமிழக விசிட்டுக்கு அடிப்படையே அந்த ட்வீட்தான்! ‘மாநிலக் கட்சிகளின் ஒருங்கிணைப்பை எப்போதுமே திமுக ஆதரித்து வந்திருக்கிறது. அந்த அடிப்படையில் மம்தாவின் முயற்சிக்கு திமுக ஆதரவு கொடுக்கும்’ என குறிப்பிட்டார் ஸ்டாலின்.

சந்திரசேகரராவ் இன்று சென்னை விசிட்டில் இது தொடர்பாக மு.க.ஸ்டாலினுடன் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய அளவில் 3-வது அணிக்காக முயற்சியாக இதை அரசியல் வட்டாரத்தில் குறிப்பிடுகிறார்கள். ஆனால் தங்கள் அணியில் காங்கிரஸ் இடம் பெறாது என மம்தா பானர்ஜி இதுவரை குறிப்பிடவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

காங்கிரஸ் தலைமை தாங்குவதாக புதிய அணி இருக்கக்கூடாது என்கிற கருத்தை மம்தா பானர்ஜி முன் வைக்கிறார். ‘ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தக் கட்சி பாஜக.வை எதிர்க்கும் வலுவுடன் இருக்கிறதோ, அந்தக் கட்சி அந்த மாநிலத்தில் தலைமை தாங்க வேண்டும்’ என மம்தா கூறி வருகிறார். திமுக.வும் இந்த நிலைப்பாட்டை கொண்டிருக்கவே வாய்ப்பு அதிகம்!

ஆனால் சந்திரசேகர் ராவ் நிலைப்பாடு இந்த விஷயத்தில் இன்னும் தெளிவாகவில்லை. எனவே புதிதாக அமையும் அணி எப்படி இருக்க வேண்டும்? அது, பாஜக.வுக்கு எதிரான அணியா? அல்லது காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் எதிரான அணியா? என்பதை தெளிவுபடுத்தும் அம்சம் தொடர்பாக இரு தலைவர்களும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக.வுடன் மட்டுமல்ல, காங்கிரஸுடனும் நேரடியாக கூட்டணி இல்லை என்கிற நிலைப்பாடில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிற்கிறது. மம்தா பானர்ஜி இடம்பெறும் கூட்டணியிலும் மார்க்சிஸ்ட் இடம் பெறாது. பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அடுத்த அளவில் பெரிய தேசியக் கட்சியான மார்க்சிஸ்ட் இடம் பெறாத ஒரு அணி வலுப்பெற முடியுமா? என்கிற கேள்வியும் எழுந்து நிற்கிறது.

மாநிலக் கட்சிகளுக்கு அந்தந்த மாநிலங்களில் மட்டுமே செல்வாக்கு! தேர்தலுக்கு முன்பு இந்த அணிகள் இணைவதால் எந்தக் கட்சிக்கும் லாபம் இல்லை. எனவே காங்கிரஸை புறக்கணித்துவிட்டு இந்தக் கட்சிகள் அணி அமைத்தால், அது பாஜக.வுக்கு மறைமுகமாக உதவுகிற அம்சமாகவே இருக்கும் என்றும் ஒரு விமர்சனம் வைக்கப்படுகிறது.

‘திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தங்கள் அணியில் மைனர் பார்ட்னராக, கொடுக்கிற இடங்களை பெற்றுக்கொண்டு கூட்டணி அமைக்க வேண்டும் என விரும்புகின்றன. அதற்காகவே காங்கிரஸை மிரட்டும் வகையில் மாற்று அணி என பேசிக்கொண்டிருக்கிறார்கள். சந்திரசேகர் ராவ்-மு.க.ஸ்டாலின் இடையே இன்றைய சந்திப்பும் சம்பந்தப்பட்ட இரு மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு வைக்கப்படும் செக்!’ என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்!

2019 தேர்தலுக்கான நகர்வுகள் ஆரம்பித்துவிட்டன!

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close