கட்டுரையாளர்கள்; அமிதாங்ஷூ ஆச்சார்யா, அஜயா தீட்சித்
சென்னை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வடகிழக்கு பருவமழை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெய்துள்ளது. 2015 ஆம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய சென்னை வெள்ளத்தின் நினைவுகளை சென்னை மக்களுக்கு மீண்டும் கொண்டு வந்து, அதிர்ச்சி அளித்துள்ளது.
கடந்த இரண்டு தசாப்தங்களில், தெற்காசியாவில் வெள்ளம் நகர்ப்புறங்களில் அதிகம் ஏற்படுகிறது. இது நீண்ட காலமாக நகரத்தையும் நாட்டையும் பிரித்து வைத்திருந்த கர்வத்தை அழித்துவிட்டது. மும்பை, சென்னை, டாக்கா, கராச்சி மற்றும் காத்மாண்டு போன்ற முக்கிய நகரங்களில் அதிக தீவிர மழை காரணமாக வெள்ளம் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. இந்த ஆண்டு அக்டோபரில், ஹைதராபாத்தில் பேருந்துகள் வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் மிதந்தன, அதே நேரத்தில் பெங்களூரில், இந்தியாவின் முதல் "கிரீன்ஃபீல்ட்" சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்திய துணைக்கண்டம் முழுவதும் பருவமழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகையில், IPCC இன் 6வது மதிப்பீட்டு அறிக்கை (AR6) வெளியிடப்பட்டது. 1950 களில் இருந்து அதிக மழைப்பொழிவு நிகழ்வுகளின் அதிர்வெண் அதிகரித்து வருவதை அறிக்கை குறிப்பிட்டது மற்றும் அவை மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தால் ஏற்படுகின்றன என்று ஊகித்தது.
காலநிலை நெருக்கடி பற்றிய சந்தேகங்களுக்கான விளக்கங்களை தேடுகையில், காலநிலையானது, முன்னெப்போதையும் விட தீவிர மழை நிகழ்வுகளை மிகவும் கடுமையானதாகவும் கணிக்க முடியாததாகவும் ஆக்கியுள்ளது. இருப்பினும், நகர்ப்புறங்களில் வெள்ளம் மீண்டும் மீண்டும் வருவதை ஓரளவு மட்டுமே விளக்குகிறது. இதற்கான விளக்கமும் நில அரசியலில் புதைந்து கிடக்கிறது.
இந்திய துணைக்கண்டத்தில் உள்ள அனைத்து நகரங்களும் நீர்நிலை நகரங்கள். அவை ஆறுகளால் இழைக்கப்பட்டவை, சதுப்புநிலங்கள் மற்றும் நீரூற்றுகள் கொண்டவை, மேலும் அவை கண்ணுக்கு தெரியாத நீர்நிலைகளின் மேல் உருவாக்கப்பட்டுள்ளன. ஆயினும்கூட, நிலத்தின் மீதான தாகத்தால் உந்தப்பட்டு, நமது நகரங்கள் தண்ணீருடன் வாழப் பழகாமல் அடிபணியச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன. இந்த நில மையவாதம்தான் நகர்ப்புற வடிகால்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.
வடிகால் என்ற சொல் பழைய ஆங்கிலத்தில் இருந்து பெறப்பட்டது, dreahnian, முதலில் திரவத்தை வெளியேற்றுவதைக் குறிக்கிறது. நகர்ப்புற வடிகால், அதன் சொற்பிறப்பிற்கு நியாயம் செய்ய வேண்டுமானால், நகரங்கள் நீர் ஊடுருவி செல்லும் பகுதிகளாகவும், கடந்து செல்ல அனுமதிக்கும் வகையிலும் சல்லடைகளாக மாற வேண்டும். இதற்கு, நகரத்தை ஒட்டிய ஏராளமான இயற்கை நீர்வழித் தடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், ஏனெனில் அவை தண்ணீரை வெளியேற்றி, அழியக்கூடிய நிலத்தடி நீர்நிலைகளை நிலைநிறுத்துகின்றன. இந்த நீர்வழித் தடங்கள் இயற்கையான புயல் வடிகால்கள் அல்லது நுல்லாக்கள் என புறக்கணிக்கப்பட்டவை. இவை நிலத்தை மையமாகக் கொண்ட நகர்ப்புற வளர்ச்சியின் பலிபீடத்தில் தியாகம் செய்யப்பட்டுள்ளன.
2014 ஆம் ஆண்டில், பெங்களூருவில் உள்ள குப்பி லேப்ஸ் என்ற ஆராய்ச்சிக் குழு, புவிசார் இமேஜிங் மூலம் 376 கிமீ இயற்கையான புயல் வடிகால்கள், ஆக்கிரமிப்பு மற்றும் நடைபாதைகளாக, இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கின் (பெங்க்ளூருவின்) இதயத்திலிருந்து மறைந்துவிட்டதாக நிறுவியது.
2015 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் டெல்லியில் உள்ள இயற்கை மழைநீர் வடிகால்களின் நிலையை அறிக்கையிட ஒரு குழுவை அமைத்தது. ஆய்வில், 1976 இல் பதிவு செய்யப்பட்ட 201 "வடிகால்களில்", 44 "காணாமல்" போய் இருப்பது கண்டறியப்பட்டது.
இரண்டு சந்தர்ப்பங்களிலும், இந்த "காணாமல் போன" நீர்வழித் தடங்கள் ஒன்று ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன அல்லது கழிவுநீர் வடிகால்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. மறைந்து வரும் நகர்ப்புற நீர்வழித் தடங்களை மீட்டெடுப்பதில் உள்ள அக்கறையின்மை, பண்டைய நதிகளை புத்துயிர் அளிப்பதில் இந்திய அரசாங்கத்தின் சமீபத்திய முயற்சிகளுக்கு முற்றிலும் மாறுபாடாக உள்ளது.
மோசமான வடிவமைப்பு மற்றும் ஊழல், தெற்காசிய நகர்ப்புற திட்டமிடலுடன் பிரிக்க முடியாதவை. இவை நகர்ப்புற வெள்ளத்திற்கு கணிசமாக காரணமாகின்றன. மழைநீர் வடிகால்களின் வடிவமைப்பை பொறுத்தவரையில், அவற்றின் வெளியேற்று அமைப்புகளின் அளவு மழையின் தீவிரம் (மிமீ/மணிக்கு) மற்றும் வடிகால்களுக்குள் இருக்கும் அதிகப்பட்ச நீர் ஓட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். இருப்பினும், பெரும்பாலான தெற்காசிய நாடுகளில், வடிகால்களின் வடிவமைப்பு வழிகாட்டுதல்களின்படி இல்லை, அல்லது வெளியேற்று அமைப்புகள் அதிகபட்ச நீர் ஓட்டத்திற்கு இடமளிக்க முடியாத அளவுக்கு சிறியதாக உள்ளன. உதாரணமாக, கராச்சியின் குறிப்பிட்ட பகுதிகளில், ரியல் எஸ்டேட் சொத்துகளில் இருந்து மழைநீர் வடிகால் பிரதான சாலைகளை நோக்கி செலுத்தப்படுகிறது. இதனால், சராசரிக்கும் சற்று மேலான மழையே, வெள்ளம் நிறைந்த பகுதிகளை உருவாக்குகிறது என்பதில் ஆச்சரியமில்லை.
அதேபோல், சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் நகராட்சி விதிகளை மீறி, திறந்தவெளிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் வெள்ள வடிகால் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள், நகரங்களை மழைநீருக்கு எதிரியாகவும், ஊடுருவ முடியாததாகவும் மாற்றியுள்ளன. தெற்காசியாவில் உள்ள அனைத்து நகரங்களிலும், மழைநீர் வடிகால்களில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. கராச்சியில் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளால் வடிகால்களின் அகலம் 200 அடியில் இருந்து 20 அடியாக குறைந்துள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, போதுமான சமூக வீடுகள் இல்லாததால் தாழ்வான வடிகால் பகுதிகளில் ஆபத்தான நிலையில் வாழும் நகர்ப்புற ஏழைகள் மீது ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டுகள் எப்போதும் சுமத்தப்படுகின்றன. 2015 ஆம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய சென்னை வெள்ளத்திற்குப் பிறகு, நகர்ப்புற நீர்வழித் தடங்கள் மற்றும் சதுப்பு நிலங்களின் மிகப்பெரிய ஆக்கிரமிப்பாளர் உண்மையில் தமிழக அரசு என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டினர், தமிழக நீர்நிலைகளில் நடைபாதைகள், பேருந்து முனையங்கள் மற்றும் ஐடி பூங்காக்களை அரசு உருவாக்கியுள்ளது.
நகரமயமாக்கல் என்பது கான்க்ரீட்டிசேசன் என்று மாறியதிலிருந்து, மாறிவரும் காலநிலையில் பெய்யும் மழை நீரானது நிலத்தடி நுண்குழாய்கள் அல்லது மேற்பரப்பு நீர்நிலைகளை நோக்கி செல்வதில்லை. அதிகப்படியான குறுகிய கால மழையின் போது வெளியேற்றப்படும் பெரிய அளவிலான நீர் வடிகால் வலையமைப்புகளை நோக்கி திருப்பி விடப்படும், ஆனால் தற்போது அவை "காணாமல்" போய் இருக்கும் அல்லது குப்பைகள், கழிவுநீர் மற்றும் திடக்கழிவுகளால் அடைக்கப்பட்டிருக்கும். இருப்பினும் மழைநீர் எப்படியாவது அருகிலுள்ள ஆற்றை சென்றடைந்தாலும், அந்த ஆற்றின் கரை ரியல் எஸ்டேட்டாக மாற்றப்பட்டிருப்பதையும், ஆற்றின் படுகையில் மணலுக்காக அதிக அளவில் வெட்டியெடுக்கப்பட்டதையும் காணலாம். இது வெள்ளத்திற்கு காரணமாகிறது.
வெள்ளத்திற்கான அரசியல் பிரதிபலிப்பு எப்போதுமே பழியை வானத்திற்கு மாற்றுவதாகும். "நிலையற்ற" பருவமழை மற்றும் நதிகளில் ”அதிகப்படியான நீரின்” காரணமாக வெள்ளங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் பதிலுக்கு, அணைகள், நீர்தேக்கங்கள், மதகுகள் மற்றும் கடல் சுவர்களை கட்டுவதற்கு நீர்நிலைகளில் மில்லியன் கணக்கான டன் கான்கிரீட் தொடர்ந்து ஊற்றப்பட்டு வருகிறது. முரண்பாடாக, தெற்காசிய நகரங்கள் ஊடுருவ முடியாத கான்கிரீட் கட்டிகளாக உருமாறியதால், அவை வெள்ளத்தை வீடுகளுக்குள் அழைத்துச் சென்றன.
நமது நகர்ப்புற அனுபவத்தை வடிவமைத்துள்ள ஹைட்ரோஃபோபியாவை குணப்படுத்த, நாம் நிலத்தை மையமாகக் கொண்ட நகரமயமாக்கலில் இருந்து விலகி நகரங்களை நீர்நிலைகளாக அங்கீகரிக்க வேண்டும். நகர்ப்புற நதிகளை அவற்றின் வெள்ள வடிகால் அமைப்புகளுக்குத் திருப்பி அனுப்புவதன் மூலம் அவற்றை சுவாசிக்க நாம் அனுமதிக்க வேண்டும். ஒரு புனரமைக்கப்பட்ட ஏரி அல்லது மீட்டெடுக்கப்பட்ட நீர்வழித் தடம், வரவேற்கத்தக்கது என்றாலும், அது போதுமானதாக இல்லை. முழு நகர்ப்புற நீர்நிலைகளும் மீட்டெடுக்கப்பட வேண்டும், அது நடக்க, நமக்கு குறைவான கான்க்ரீட் அமைப்பு மற்றும் அடித்தளம் வரையில் அதிக ஜனநாயகம் மற்றும் அறிவியல் தேவை.
இந்த கட்டுரை முதன்முதலில் நவம்பர் 12, 2021 அன்று அச்சுப் பதிப்பில் ‘நீருடன் வாழக் கற்றுக்கொள்வது’ என்ற தலைப்பில் வெளிவந்தது. கட்டுரையாளர்களில் ஆச்சார்யா, இங்கிலாந்து எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் Leverhulme Trust PhD ஆராய்ச்சியாளர்; தீட்சித் நேபாளத்தின் சமூக மற்றும் சுற்றுச்சூழல் மாற்றத்திற்கான நிறுவனத்தின் (ISET) மூத்த ஆலோசகர் ஆவர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.