Chidambaram writes who wants a tough leader : கடுமையான தலைவர்களை விட மென்மையான தலைவர்களே சிறந்தவர்கள் என நான் நினைக்கிறேன். அவர்கள் புத்திசாலிகள். மென்மையாகப் பேசுவார்கள். சட்டத்தை மதித்து மக்களிடம் கருத்து கேட்பார்கள். இவர்கள் நாட்டின் பன்முகத்தன்மையை கொண்டாடுவார்கள். மக்களிடையே நல்லிணக்கத்திற்காக வேலை செய்வார்கள். பதவி இழந்தாலும் பதவியில் இருந்து அமைதியாக வெளியேறுவார்கள். அவர்களது குணநலன்கள் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதாகவே இருக்கும்
கண்டிப்பான அல்லது கடுமையான என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என நான் பல முறை யோசித்திருக்கிறேன். இந்த வார்த்தை வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளது. கடுமை என்பது உறுதியைக் குறிக்கும். அத்துடன் கஷ்டங்களை தாங்கும் திறன், கடினமான விளையாட்டு, பிடிவாதமான போக்கு என்று பல விஷயங்களை சொல்லலாம். இன்னும் சொல்லப் போனால் முரட்டுத்தனமான,போக்கிரியான, வன்முறைக்கு பயப்படாத நிலை என்றும் பொருள் கொள்ளலாம்.
பொதுவாக, ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் தலைவர், நீண்ட ஆண்டுகள் ஆட்சியில் இருந்து பதவி விலக நேர்ந்தால் கடினமானவர் ஆகி விடுகிறார். நான் பிறப்பதற்கு முன்பே ஹிட்லர் இருந்தார். பின்னாட்களில் நான் வளர்ந்த போது ஜவஹர்லால் நேருவின் நெருங்கிய நண்பர்களான குவாமே நக்ருமா, ஜோசப் ப்ரோஸ் டிட்டோ, கமல் அப்துல் நாசர் மற்றும் சுகர்னோ ஆகியோர் மிதவாதத்திலிருந்து கடினமான தலைவர்களாக மாறியது கண்டு நான் திகைத்தேன். ஒவ்வொருவரும் அவரவர் நாட்டில் விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்கள், மக்களின் ஆதரவால் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு போற்றப் பட்டார்கள். ஆனால் இறுதியில் கடுமையாக மாறி ஜனநாயகத்தையும் மக்களின் மரபுகளையும் குழிதோண்டிப் புதைத்தார்கள்.
பஞ்சசீலக் கொள்கையில் கையெழுத்திட்ட ஐந்து பேரில் ஜவஹர்லால் நேரு மட்டும் விதிவிலக்காக செயல்பட்டார். 1952, 1957 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் அவர் பிரதமராக இருந்த ஒவ்வொரு தேர்தலும் உண்மையான ஜனநாயக தேர்தலாகும். அவரது தேர்தல் பேச்சுக்கள் ஜனநாயகத்தின் பாடங்கள். கூட்டத்தில் அவர் பேசிய அவர் பேசிய ஆங்கிலம் பெரும்பான்மையானவர்களுக்கு புரியவில்லை, ஆனால் அவர் ஜனநாயகம், மதச்சார்பின்மை, ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதற்கான கடினமான பணி, வறுமையை ஒழிப்பது, அரசாங்கத்தின் பங்கு மற்றும் பலவற்றைப் பற்றி பேசுகிறார் என்பதை மட்டும் உணர்ந்தனர். நேரு மக்களை நேசித்த தலைவர். அவர் ஒருபோதும் கடுமையாக செயல்பட்டதில்லை.
இன்றைய உலகில் கடினமான தலைவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தல் நடத்தப்பட்டால் இவர்கள் யாருமே வெல்ல முடியாது. பிரேசிலின் திரு ஜெய்ர் போல்சனாரோ, துருக்கியின் திரு ரெசெப் எர்டோகன், எகிப்தின் திரு அப்துல் அல்-சிசி, ஹங்கேரியின் திரு விக்டர் ஓர்பன், பெலாரஸின் திரு அலெக்சாண்டர் லுகாஷென்கோ, வட கொரியாவின் திரு கிம் ஜாங்-உன் என பத்துக்கும் மேற்பட்ட பலர் கடினமான தலைவர்களாக இருக்கின்றனர். அவர்கள் அவர்கள் நாட்டிற்கு வெளியே அறியப்படாதவர்கள். இவர்களில் திரு விளாடிமிர் புடின் தனி ரகம். திரு. ஜி ஜின்பிங்கும் அப்படித்தான். இருவரும் கடுமையான தலைவர்கள், அவர்கள் வாழும் வரை ஆட்சி செய்யத் திட்டமிடுபவர்கள். நான் இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது உக்ரைன் மீது ராக்கெட்டுகளை பொழிந்து கொண்டிருக்கிறார் புதின். இதன் அடிப்படையில் பார்த்தால் உலகின் 52 நாடுகளில் சர்வாதிகார ஆட்சி நடப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.
கடினத்தை விரும்பும் மோடி
உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில், திரு நரேந்திர மோடி ‘கடுமையான’ தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். பஹ்ரைச்சில் நடந்த பேரணியில் பேசிய போது திரு மோடி, உலகில் கொந்தளிப்பு நிலவும் போது, இந்தியா வலுவாக இருக்க வேண்டும் என்றும் கடினமான சூழலில் நாட்டிற்கு கடினமான தலைவர் தேவை என்று வலியுறுத்தினார். . இது தி எகனாமிக் டைம்ஸ், பிப்ரவரி 23 2022 நாளிதழில் வெளியானது. வறியவர்கள் 70 சதவீதத்திற்கும் மேல் வாழும் பகுதிகளாக நிதி ஆயோக் இனம் கண்ட உ.பி மாநிலத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் பஹ்ரைச் மாவட்டமும் ஓன்று.
திரு ஆதித்யநாத் இந்த கடினமான’ காலங்களில் தேவைப்படும் ஒரு கடினமான தலைவர். திரு ஆதித்யநாத் சட்டம் மற்றும் ஒழுங்கை அமல்படுத்துவதில் நம்பிக்கை கொண்டவர் என்கிறார் திரு. மோடி. அவரது எண்ணப்படி என்கவுண்டர்களுக்கு அதிகாரப்பூர்வ அனுமதி உண்டு. ஒரு குற்றவாளியை நீதிமன்றத்தின் முன் கொண்டு வந்து தண்டிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களை என்கவுண்டரில் சுட்டு வீழ்த்தலாம் என்று இவர்கள் கருதுகின்றனர். கடந்த ஜூலை 13, 2021 வெளிவந்த தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி , மார்ச் 2017 முதல் ஜூன் 2021 வரை, 139 குற்றவாளிகள் போலீஸ் என்கவுண்டர்களில் கொல்லப்பட்டனர். இது தவிர 3,196 பேர் காவல் துறை உடனான மோதலில் காயமடைந்தனர்.
ஆதித்யநாத்துக்கு பிடித்தமான வார்த்தை புல்டோசர் என்பது தான். கடந்த பிப்ரவரி 27, 2022 அன்று, சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள கர்கா பஜாரில் நடைபெற்ற பேரணியில் பேசிய திரு ஆதித்யநாத், நெடுஞ்சாலைகளை உருவாக்கும் இந்த எந்திரம் மாஃபியாக்கள் மற்றும் குற்றவாளிகளையும் சமாளிக்கும். அதற்காகவும் இந்த இயந்திரத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். நான் இங்கு வரும்போது புல்டோசர்களைப் பார்த்தேன். இங்கு ஐந்து சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொன்றை அனுப்பினால் எல்லாம் சரியாகி விடும் என்று திரு. ஆதித்யநாத் சொன்னதாக இந்தியா டுடே இதழில் செய்தி வெளிவந்திருக்கிறது. உ.பி.யில் புல்டோசர்களைப் பயன்படுத்தி கட்டிடங்களை இடித்து தள்ளவும் குடியிருப்பவர்களைக் காலி செய்யவும் முடியும் என்று இவரது அரசு நம்புகிறது. இங்கு நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் சட்டப்பூர்வ நடைமுறைகள் எதுவும் தேவையில்லை என்று சொல்லலாம்.
ஹத்ராஸ் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு குறித்து எழுதிய கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் திரு சித்திக் கப்பன் அக்டோபர் 5, 2020 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தி வயர் பத்திரிக்கை செய்தியின் படி திரு ஆதித்யநாத் முதலமைச்சர் ஆனதில் இருந்து மொத்தம் 12 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 48 பேர் உடல் ரீதியாக பாதிக்கப் பட்டுள்ளனர். 66 பேர் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தின் மக்கள் தொகையில் 20 சதவீதம் முஸ்லிம்கள் இருந்தாலும், 403 தொகுதிகளில் எதிலும் ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு கூட டிக்கெட் கொடுக்க வேண்டாம் என்பதில் முதல்வர் தனது கட்சியை வற்புறுத்தும் அளவுக்கு கடினமானவர். இப்படிப்பட்ட கடினமான தலைவரின் கீழ், உ.பி. மாநில மக்கள் மக்கள் மேலும் மேலும் ஏழைகளாகி இருக்கின்றனர். வறியவர்கள் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில், மாநிலத்தின் கடன் சுமை 6,62,891 கோடி அதிகரித்திருக்கிறது.
மென்மையும் ஆழ்ந்த அறிவும்
மென்மையான தலைவர்களை சிறந்த ஆட்சியாளர்களாக நான் நினைக்கிறேன். அவர்கள் புத்திசாலிகள், மென்மையாகப் பேசுவார்கள், மக்களிடம் கருத்து கேட்பார்கள். நாட்டின் பன்முகத்தன்மையை கொண்டாடுவார்கள். மக்களிடையே நல்லிணக்கத்திற்காக வேலை செய்வார்கள். பதவி இழந்து விட்டால் அமைதியாக பதவியில் இருந்து வெளியேறுவார்கள். அவை தான் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். அவர்கள் வேலை, சிறந்த கல்வி மற்றும் சுகாதாரத்தை நாட்டுக்கு தருவார்கள். அவர்கள் போருக்கு எதிரானவர்கள். காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர் கொள்வார்கள். உலகில் இப்படிப்பட்ட தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் நெல்சன் மண்டேலாவும் ஒருவர். ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், நியூசிலாந்தின் பிரதம மந்திரி ஜெசிந்தா ஆர்டெர்ன், நெதர்லாந்தின் பிரதம மந்திரி மார்க் ருட்டே மற்றும் சிலரையும் நாம் உதாரணமாக சொல்லலாம்.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் உ.பி., உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் மக்கள் எப்படிப்பட்ட தலைவரை தேர்ந்தெடுப்பார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அந்த மாநிலங்களில் ஏதேனும் ஒன்றில் எனக்கு வாக்கு இருந்தால், நான் ஒரு மென்மையான மற்றும் புத்திசாலித்தனமான ஒரு தலைவருக்கே வாக்களிப்பேன்.
தமிழில் : த. வளவன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil