பிதற்றித் திரியும் பெற்றோர்களே..!

‘எம்புள்ள, பிரீ. கே. ஜி. படிக்கும் போதே நல்லா எழுதவும், பாடவும் செய்கிறது’ எனப் பிதற்றித் திரியும் பெற்றோர்களே! உங்களுக்காக அந்த வள்ளுவன் தாத்தா ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

child education, importance of child education, child education in india, child education articles
child education, importance of child education, child education in india, child education articles

முனைவர் கமல. செல்வராஜ்

ஒரு நாள் மாலையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி, என் பாலியக்கால நண்பரின் வீட்டிற்கு இயல்பாகச் சென்றேன். அங்கே நான் கண்ட ஒரு காட்சி, சில நிமிடங்கள் என்னை உணர்ச்சியற்றச் சிலையாக்கியது.

வெறும் இரண்டு வயதும் மூன்று மாதங்களுமான குழந்தையொன்று, அந்த வீட்டின் வரவேற்பறையில் தன்னம்தனியாக இருந்து கதறி அழுது, கண்கள் இரண்டும் ரத்தம் போல் சிவந்து, பார்ப்பவர்களை அதிர்ச்சியடையச் செய்யும் விதத்தில் வீக்கம் போட்டு, எடுப்பாருமின்றி அணைப்பாருமின்றி அலங்கோலமாகக் காட்சியளித்தது. குழந்தையின் அருகில் ஒருசில புத்தகங்களும் ஒரு சிலேட்டும் ஒண்றிரண்டுப் பென்சிலும் சிதறுண்டுக் கிடந்தன.


குழந்தையின் கதறல் சத்தத்தையும் மீறி வீட்டின் உள்ளிருந்து ‘சனியனை வீட்டில வைச்சிருக்கிறதே தப்பு; பள்ளிக்கு விட்டு மூணு மாதமான பிறகு, இதுவரை ஒரு லெட்டர் கூட எழுதத் தெரியல, ஒரு றயிம்ஸ் கூட ஒழுங்காச் சொல்லமாட்டேங்கிறான். சனியன் தொலஞ்சுப் போனாக்கூட பரவாயில்ல’ என்னும் சாபக்குரல் என் காதுகளைத் துளைத்தது.

ஒரு நிமிடம், உள்ளே செல்லவா? இல்லை திரும்பிப் போகவா? என்ற குழப்பத்தில் நிற்கும் போது, உள்ளேயிருந்து சாபம் போட்ட அதே குரல் வெளியே வந்து ‘ஆ… வாங்க… வாங்க… எப்ப வந்தீங்க…’ எனக் கேட்க, நானும் சுதாரித்துக் கொண்டு, ‘இப்பத்தான் வந்தேன்’ எனக் கூறிக்கொண்டு உள்ளே சென்றேன்.

உள்ளே சென்ற நான் எதுவும் தெரியாதது மாதிரி, ‘குழந்தை எங்கே?’ எனக்கேட்டேன். ‘அறுபதாயிரம் பணம் கொடுத்து ஒரு பெரிய இங்கிலீஷ் மீடியம் பள்ளியிலே பிரீ. கே. ஜி. அட்மிஷன் வாங்கி மூணு மாசமா போயிட்டிருக்கான், இதுவர ஒரு எழுத்துகூட அவனால எழுத முடியல… ஒரு றயிம்ஸ் கூட சொல்லமாட்டேங்கிறான்… என்னச் செய்றதென்று தெரியல…’ எனக் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தாள் அந்தச் சாபக்காரி அம்மா…?

எனது கனத்த இதயத்தைக் கொஞ்சம் இதமாக்கிக் கொண்டு, ‘சரி, இப்பத்தானே பள்ளிக்கு விட்டிருக்கீங்கப் போகப்போக எல்லாம் சரியாகும்.’ என சமாளித்துக் கொண்டு, ‘உங்க மாமா, வீட்டில இல்லையா?’ எனக் கேட்டேன். ‘இல்ல, இப்பத்தான் வெளியே போனாரு’ எனக்கூற, ‘சரி அவரு வந்தா நான் வந்திருந்ததாச் சொல்லுங்க’ எனக் கூறிக்கொண்டு, அந்தச் சாபக்காரியிடமிருந்து விடைபெற்று வெளியே வந்தேன்.

அந்த வீட்டில், நான் கண்ட அக்குழந்தையின் கோரக்காட்சி, அன்று என்னை உண்ணவும், உறங்கவும் அனுமதிக்கவில்லை. அதன் வெளிப்பாடுதான் இது.

இந்தியாவின் கல்விமுறை, ஆரம்பக்காலக் குருகுலக் கல்வியிலிருந்து தொடங்கி, பள்ளிக் கல்வி, தொலைநெறிக் கல்வி எனப் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று, இன்று ஆங்கிலவழிக் கல்வியின் ஆதிக்கதில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஆங்கிலவழிக் கல்வியின் ஆதிக்கம் இந்தியாவி்ல் குறிப்பாகத் தமிழகத்தில் தலைத்தூக்காதது வரைக்கும் கற்றல், கற்பித்தலில் எவ்விதச் சிக்கலுமின்றி ஒரளவுக்குச் சீராகவே சென்றுகொண்டிருந்தன.

அதுவரை ஒரு குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும் வயது குறைந்தது ஐந்து என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஐந்து வயதில் பள்ளியில் சேர்த்தாலும், முதல் இரண்டாண்டுகள் தாய்மொழியில் மட்டுமே கற்பிக்கப்பட்டது. மூன்றாம் வகுப்பு முதல்தான் இரண்டாம் மொழியான ஆங்கிலம் கற்பிக்கப்பட்டது. இம்முறை, மாணவர்களின் சிறு வயதில் நல்ல புரிதலுக்கு வித்திட்டது. அதனால் ஆசிரியர்களின் கற்பித்தலும், மாணவர்களின் கற்றலும் மிகவும் எளிமையாகவும், இனிமையாகவும், சுவையாகவும் இருந்தன.

அப்பொழுதெல்லாம், முதல்முதலாகக் குழந்தைகளுக்கு எழுதுவதற்குக் கற்பித்துக் கொடுப்பதற்குத் தரையில் மணலைப் பரப்பி அதில் கைவிரல் கொண்டு எழுத வைக்கும் முறையைக் கடைபிடித்தனர். அதோடுமட்டுமின்றி நெல், அரிசி, மற்றும் நெல்லிலிருந்து வரும் உமி, தவிடு ஆகியவற்றைப் பரப்பி அதில் விரல் கொண்டு எழுதுவதற்குப் பயிற்சியளித்தனர். அம்முறையை சிறு குழந்தைகள் மிகவும் ஆசையோடும், தங்களின் சுயவிருப்பத்தோடும், ஒரு விளையாட்டாகவே கருதி எழுதிப் பழகினார்கள்.
இம்முறையினால் குழந்தைகளுக்கு எழுத்தின் மீதோ, படிப்பின் மீதோ, கற்பிக்கும் ஆசிரியர்கள் மீதோ எவ்வித வெறுப்பும் எழவில்லை. மாறாக அபரிதமான ஆசையும், அன்பும் பெருகின. ஆனால் என்றைக்கு ஆங்கிலவழிக் கல்வி, ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதோ அன்றிலிருந்து நிலைமைத் தலைகீழாக மாறத்தொடங்கியது.

ஆங்கிலவழிக் கல்வியில் முதலில் மூன்று வயதிலிருந்து குழந்தைகளை எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்கத் தொடங்கினார்கள். பின்னர் இரண்டு அல்லது இரண்டரை வயதில் பிரீ.கே.ஜி. வகுப்பில் சேர்க்கத் தொடங்கினார்கள். இரண்டு அல்லது இரண்டரை வயது என்பது, பால் மணம்மாறாப் பச்சிளம் குழந்தைப் பருவம். வீட்டில் அதன் விருப்பத்திற்கு வேண்டியதையெல்லாம் தின்று… விரும்பிய போதெல்லாம் விளையாடி… தூக்கம் வரும்போதெல்லாம் தாயின் மடியில் படுத்துத் தாலாட்டுக் கேட்டுக்கொண்டே தூங்க வேண்டியப் பருவம்.

இந்தப் பருவத்தில் அவர்களைப் பள்ளிக்கு, அனுப்புவது எந்த வகையில் நியாயமாகும்? அப்படி அனுப்பினால்கூட, பள்ளிக்கு அனுப்பி ஒன்றிரண்டு மாதத்திற்குள், அப்பச்சிளம் குழந்தை எழுத்தவில்லை, பாடவில்லை, ஆடவில்லை, படிக்கவில்லை என்று எப்படிக் கண்டிக்க முடியும்?

ஐந்து வயதிற்கு முன் குழந்தைகளுக்கு பேனா அல்லது பென்சில் வைத்து எழுதுவதற்குக் கற்றுக்கொடுத்தால், அந்தப் பேனாவை அல்லது பென்சிலைப் பிடிப்பதற்கான வலிமை, அக்குழந்தைகளின் விரல் தசைக்கோ, நரம்பிற்கோ இருக்காது. அதனால் குழந்தைகள் எழுதும்போது கைவிரல் கடினமாக வலிக்கும். அதனால் குழந்தைகளுக்கு அதிக நேரம் எழுதுவதற்கு இயலாத நிலை ஏற்படும். இது அவர்களுக்கு எழுத்தின் மீதும், கற்பிக்கும் ஆசிரியர் மீதும் பெரும் வெறுப்பை உருவாக்கும். கூடவே படிப்பின் மீது அறவே அக்கறையில்லாமல் ஆக்கிவிடும்.

மேலும் குழந்தைகளின் மூளை சரியான வளர்ச்சியடைவதற்கு முன்பு அவர்களைப் பாடங்களைப் படித்து மனப்பாடம் செய்யக் கட்டாயப்படுத்துவது பெரும் தவறு என மருத்துவர்களும், உளவியல் வல்லுனர்களும் உரைக்கின்றனர். இதனால் குழந்தைகளின் மனவளர்ச்சி குன்றுவதோடு, அவர்களுக்குப் படிப்பின் மீது பெரும் வெறுப்பை உருவாக்கி மனநோய்க்கு வழிவகுக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

குழந்தைகளின் இம்மாதிரியான உளவியல் தத்துவங்களை, தற்போதுள்ள கல்வியாளர்களும், கல்வித்துறையும் உணர்ந்ததினால் தான் மத்திய அரசின் கல்விக் குழுவான என். சி. இ. ஆர். டி. (தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில்) சி. பி. எஸ். இ. பள்ளிகளில் இரண்டாம் வகுப்புவரை வீட்டுப்பாடம் கொடுக்கவோ, பாடங்களை மனப்பாடம் செய்வதற்கு வற்புறுத்தவோ கூடாது என அறிவித்துள்ளது.

இதே நடைமுறையை சி. பி. எஸ். இ. பள்ளிகளில் மட்டுமின்றி அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறைப் படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் தமிழகக் கல்வித்துறைக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது என்பதை அனைத்துப் பெற்றோரும், ஆசிரியர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தற்போதைய நவீனகாலப் பெற்றோர்கள், தாயின் வயிற்றில் கரு உற்பத்தியான உடனேயே, அக்குழந்தையைப் படிக்க வைப்பதற்கு, அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து பல கிலோமீட்டர் தூரத்திலுள்ள மிகவும் பிரபலமான ஆங்கிலவழிக் பள்ளிக்கூடத்தில் அட்மிஷனுக்காக லட்சக்கணக்கானப் பணத்தை அட்வான்சாகக் கொடுத்து இடத்தை ரிசர்வ் செய்கின்றனர். அதன் பின்னர் தங்களின் குழந்தைப் பிறந்து வெளியே வரும்போது ஒரு சிலேட்டும் பென்சிலும் கூடவேக் கொண்டுப் பிறக்காதா? என்ற ஏக்கத்தில் காத்திருக்கின்றனர்.

பால்மணம் மாறாதப் பச்சிளம் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பி, அங்கிருந்து ஆசிரியர்களின் துன்புறுத்தலின் பேரில் ஒன்றிரண்டு ஆங்கில எழுத்துகளை எழுதவும், எ முதல் இசட் (A to Z ) வரை எழுத்துக்களைக் சொல்லவும் தெரிந்திருக்கும் பிள்ளைகளைப் பற்றி, வருவோர் போவோரிடத்திலெல்லாம் ‘எம்புள்ள, பிரீ. கே. ஜி. படிக்கும் போதே நல்லா எழுதவும், பாடவும் செய்கிறது’ எனப் பிதற்றித் திரியும் பெற்றோர்களே! உங்களுக்காக அந்த வள்ளுவன் தாத்தா ஒன்றை எழுதி வைத்துள்ளார். கொஞ்சம் கவனியுங்கள்.

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.

உங்களின் செல்லக் குழந்தைகளை மடியில் அமர்த்தி அவர்களுக்கு பூவும் பொட்டும் வைத்து… கொஞ்சிப் பேசி… வாய்விட்டுச் சிரித்து… தாலாட்டுப்பாடி… கொண்டாடத் தெரியாத உங்களுக்கு, எதற்கு குழந்தைச் செவ்வம் என்பதை வள்ளுவன் கூற்றிலிருந்து புரிந்துகொள்ளுங்கள்.

எனவே, குறைந்தது மூன்று வயதிற்குப் பிறகுக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புங்கள். முறையான, முழுமையான உடல் வளர்ச்சியும், மன எழுச்சியும் அடைந்த பின்பு மட்டுமே அவர்களுக்கு எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடுங்கள். அதுவரை குழந்தைகளை ஒரு தொல்லையாகக் கருதாமல், அவர்கள் ஒரு வரம் எனக்கருதி, அவர்களோடு கொஞ்சி விளையாடுங்கள். அதிலிருந்து குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். கல்வியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)

 

Get the latest Tamil news and Opinion news here. You can also read all the Opinion news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Child education article kuzhanthai kalvi essay by kamala selvaraj

Next Story
ஒரு மனிதன், ஒரு சித்தாந்தம்: ஈ.வெ.ராமசாமி பெரியாரின் முக்கியத்துவம்Periyar EVR, Periyar Birth anniversary,The importance of EV Ramasamy Periyar, Periyar 141st Birth anniversary, periyar dk, periyar women's rights in tamil, பெரியார் பிறந்தநாள், தந்தை பெரியார், periyar speech in tamil, dravidar kazhagam flag, periyar stories in tamil, periyar self respect movement
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com