போய்ஸ் லாக்கர் அறை சம்பவம் நமக்கு முக்கியமான ஒரு பாடத்தை கோடிட்டு காட்டியுள்ளது. கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பள்ளிகள், தங்கள் மாணவர்கள் ஆரம்ப காலத்திலேயே பாலின கல்வியை பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சிமாந்தினி கோஷ், கட்டுரையாளர்.
போயிஸ் லாக்கர் அறை சம்பவம் எழுந்ததால், நான் அச்சத்துடனும், வேதனையுடனும் இதை எழுதுகிறேன். ஆறு வயது ஆண் குழந்தையின் தாயாக நான் அச்சமடைந்துள்ளேன். ஆண், பெண் பாகுபாடின்றி குழந்தைகளுக்காக நான் அஞ்சுகிறேன். நாம் இப்போது இதுகுறித்து பேசாவிட்டால், சில ஆண்டுகள் கழித்து என் மகனோ அல்லது மற்றவர்களின் மகன்களோ பெண்களை மட்டம் தட்டிக்கொண்டிருப்பார்கள் என்ற அச்சத்தில் நான் இதற்கு இப்போது எதிர்வினையாற்றுகிறேன்.
மிகவும் வருந்தத்தக்க மற்றும் பரவலாக நடைபெற்று வரும் இரண்டு உண்மைகள் குறித்து பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒன்று இணையதள அச்சுறுத்தல், அது மனஅழுத்தம், பயம், பதற்றம், அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கக்கூடிய அளவிலான அழுத்தத்தை அதிகமாக ஏற்படுத்தும். லாக்கர் அறை சம்பவத்தில், இணையதள அச்சுறுத்தல் என்பது பெண்களுக்கு எதிரான வன்முறையிலிருந்து பிரிக்கப்படுகிறது. துரதிஷ்டவசமாக, இந்தியாவில் மிகவும் பழக்கப்பட்டதாக இருக்கிறது.
இந்தியா எப்போதும் தனது நாட்டின் பெண்களை துணியால் மூடி பாதுகாக்கப்பட வேண்டியவர்களாகவும், வீட்டிலிருந்து வெளியே செல்லும்போதும் பிரச்னை ஏற்படுத்தாதவர்களாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை அவமானத்தின் சின்னமாகவும், வன்முறையாளர்களை சுதந்திர பறவையாகவும் நடத்துகிறோம். அது பெண்களை இரு வகைகளாக பிரிக்கும், நல்ல பெண்கள் என்பவர்கள் அவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் எல்லையை கடக்கமாட்டார்கள். கெட்ட பெண்கள் என்று அழைக்கப்படுபவர்கள் அனைத்தும் எதிர்க்கும் துணிவுடையவர்கள். அவ்வாறு எதிர்ப்பதால்தான் அவர்கள் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்று வரையறுக்கிறார்கள்.
இணைய வெளியிலும் இதுவே பிரிதிபலித்திருக்கிறது. வெளிப்படையாக பேசும் பெண்கள் இயல்பாகவே இணையவெளியில் பாலியல் தொடர்பான அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுவார்கள். இதற்கு இணையத்தை பயன்படுத்தும் பெரும்பாலான பெண்கள், இணையதள பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து, தங்களின் சொந்த அனுபவத்தில் இருந்து உதாரணம் கூறுவார்கள். குற்றவாளிகள் தொடர்ந்து குற்றம் செய்பவர்களாக இருந்தாலும் கூட, பாதிக்கப்பட்ட பெண்கள்தான் குறிப்பிட்ட குழுவில் இருந்து வெளியேற அறிவுறுத்தப்படுவதே வழக்கமான ஒன்றாக இருக்கும். பல பெண்களை துன்புறுத்திய பின்னர், அவர்களின் நடவடிக்கைகளுக்காக குற்றவாளிகள் எப்போதாவது பொறுப்பாக்கப்படுவார்கள். இல்லாவிட்டால், கருணைமிக்க குழு உறுப்பினர்கள், அவர்களின் பாலியல் துன்புறுத்தல்களையும், ஆபாசங்களையும் பாதிப்பில்லாத வேடிக்கைகளாகவும், விளையாட்டுக்காக செய்ததாகவும் சித்தரிப்பார்கள்.
ஒருவர் இதை அனுபவிக்காதவரை அது ஏற்படுத்தும் தாக்கத்தின் வீரியத்தை உணர முடியாது. இணையதளங்களில் நடப்பதால் இதை புரிந்துகொள்வது கடினமாக உள்ளது. சமூகம், மத ரீதியான எதிர் கருத்துடைய பெண்கள்தான் பாலியல் பலாத்காரம் போன்ற மிரட்டல்களுக்கு ஆளாகிறார்கள். பெண்கள் தங்களின் கருத்துக்களை தைரியமாக சொல்வதற்காக வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அனைத்து வழிகளிலும் பெண்கள் கேவலப்படுத்தப்படுவார்கள். மொத்தத்தில், சமூக வலைதளங்களை பயன்படுத்தும் இந்தியர்கள், இதனுடனே செல்ல பழகிக்கொண்டார்கள். ஊடக வெளிச்சம் அதிகரித்தாலும், குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறைவாகவே எடுக்கப்படும். இதை செயல்படுத்துபவர்கள் சட்டத்திலிருந்து விலகியிருக்கிறார்கள்.
இந்த நிகழ்வில் பொது மக்கள், நகரிலேயே சிறந்த பள்ளியில் படித்த மாணவர்கள் இதை செய்திருக்கமாட்டார்கள் என்ற எண்ணமும் பரவலாக உள்ளது. அவர்கள் அவ்வாறு செய்தாலும் அவர்களை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். பருவ வயதின் காரணமாக இதுபோன்ற தவறுகள் நடைபெற்றதாக விளக்கங்கள் வேறு கொடுக்கப்படும். Sociobiology எனப்படும் சமூக உயிரியில் பாடம் 1960களில் மிகப்பிரபலமாக இருந்தது. உயிரியல் நிர்ணயத்தால் ஏற்படக்கூடிய வன்முறையான பழக்கவழக்கங்கள் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்றன. டெஸ்டோஸ்ரோன், போரிடும் மரபணு, அழகான ஆண் போன்ற பதங்கள் அதிகளவிலான ஊடக வெளிச்சத்தை பெற்றன. அதில் பல பிற்காலத்தில், முழுவதுமாவோ அல்லது பகுதியாகவோ நிரூபிக்கப்படவில்லை, ஆனால் மிகக்கவனமாக ஆராய்ச்சிகளை கட்டுப்படுத்தியது. ஆனால் பெரும்பாலானவர்களின் மனதில் டெஸ்டோஸ்ரோன் தான் ஆண்களின் வன்முறை மற்றும் முரட்டுத்தனமான சுபாவத்திற்கு காரணம் என பதிந்துவிட்டது. ஆனால், குறிப்பாக அது பாலியல் உணர்வோடு தொடர்புடையதாக உள்ளது.
பெரும்பாலும் நம்பப்படுகின்ற கதைகளையும்(myth), அதற்கு காரணமான நிரூபணங்களையும் இங்கு காணலாம்.
முதலாவதாக நல்ல குடும்பத்தில் இருந்து வரும் படித்த ஆண்கள், பெண்களிடம் தவறான முறையில் நடந்துகொள்ள மாட்டார்கள். அந்த குழுவில் தொடர்புடைய அனைத்து ஆண்களும், டெல்லி மற்றும் நொய்டாவைச் சேர்ந்த 4 அல்லது 5 பணக்கார பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள். படித்த மற்றும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். மாறாக, சமூகத்தில் அந்தஸ்தில் உள்ளவர்கள் மற்றும் அதிகாரம் இருந்தால், அவர்கள் எந்த தவறிழைத்தாலும் தண்டனையின்றி தப்பிவிடாலாம் என்பது இந்தியாவில் வழக்கமாக உள்ளது. இதுபோன்ற பாலியல் வன்முறைகளையும் அனுதின நிகழ்வாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம்.
இரண்டாவது ஆண் எப்போதும் ஆணாகவே பார்க்கப்படுகிறான். அவன் செய்யும் அனைத்திற்கும் அவனின் டெஸ்டோஸ்டிரோன் காரணமாக்கப்படுகிறது.
டெஸ்டோஸ்டிரோன் எனப்படும் ஆண்மை ஹார்மோனுக்கும் ஆணிண் முரட்டுத்தனங்களுக்கும் தொடர்பு உள்ளது உண்மைதான். பாலூட்டிகளில் ஆணாதிக்கம் அதிகம் இருக்கும். சிம்பன்சி வகை குரங்கினங்கள், நமது முன்னோர்கள் என்று அறியப்படுபவைகள். அதேபோல் போனோபோஸ் எனும் பாலூட்டி வகை மற்றொரு வனை சிம்பன்சியினம் பெண்ணியம் மற்றும் சமத்துவ சமுதாயமாக இருப்பவை. ஆதலால் மனிதனுக்கு வன்கொடுமை உணர்வு ஹார்மோன்களால் வருகின்றன என்ற கருத்தே தவறானது.
மனித ஆண்களில் வன்முறை என்பது பின்னிபிணைந்தது. அதுவே அவர்களின் குறையாகும். ஒருவரின் பழக்கவழக்கம் என்பது, சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் தொடர்பு ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது. 12 ஆயிரத்துக்கும் மேலான ஆண்டுகள் கலாச்சார மற்றும் அறிவாற்றல் பரிணாம வளர்ச்சி ஆகியவை சமூக பழக்கவழக்கங்களுக்கு காரணமாகின்றன. இளமைப்பருவம் மட்டுமே மனிததன்மையற்ற செயலுக்கு காரணம் என்று குற்றம்சாட்ட முடியாது. வாலிபப்பருவத்தில் வசதியானவர்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களின் பிள்ளைகள் செய்யும் தவறுகளை ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை.
மூன்றாவது, ஒரு சிறிய பாதிப்பில்லாத வேடிக்கையான விளையாட்டால் என்ன பிரச்னை?
தவறான கேள்வி. ஒரு கடுமையான வன்முறை எப்படி வேடிக்கையான விளையாட்டாக முடியும்? அது யாரையும் பாதிக்கவில்லை என்பதை எவ்வாறு தீர்மானிக்க முடியும்? பொதுவெளியில் பெண்களின் படங்கள் பயன்படுத்தப்பட்டபோது, அவர்கள் அடைந்த அதிர்ச்சியை யாராவது அளவிட்டு பார்க்க முயற்சி செய்ய முடியுமா? பெண்கள் உடலின் மீது இதுபோன்ற உரிமை வழங்குவது எங்கிருந்து வந்தது? ஒருவரின் புகைப்படத்தையோ அல்லது கருத்தையோ பகிர்வதற்கு அவரின் சம்மதம் என்ற எண்ணமே புறக்கணிக்கப்படுகிறது. சில மாதங்களாகவே அறிமுகமான ஒரு பெண்ணின் மீது வன்முறையை ஏவி, எப்படி அதிலிருந்து இன்பம் அடைய முடியும்? இந்த அளவிற்கு நமது சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது இயல்பான ஒன்றாகிவிட்டதா? பெண்களை கூட்டு பாலியில் பலாத்காரம் செய்வது குறித்து பாய்ஸ் லாக்கர் அறையில் பேசுவது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றா? சமூகத்தில் சகோதரத்துவம் வளர்ப்பது என்ற நமது திட்டம் எப்படி சாத்தியமாகும்?
பெற்றோராக நாம் எப்படி இந்த ஆண்மை என்னும் நச்சை அனுமதிக்க முடியும்? அது நம் ஆண் குழந்தைகளை அழிக்கிறது. அதன் மூலம் நம் பெண் குழந்தைகளுக்கு சரிசெய்ய முடியாத பாதிப்பை கொடுக்கிறது. அதை நாம் எப்படி நிறுத்த முடியும்? பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டவரை, பொதுநிலையில் இருந்து மாறுபட்டவர் என குறிப்பிட்டு, அவருக்கு தண்டனை கொடுத்துவிட்டு, எளிதாக விலகிச்சென்றுவிட முடியாது. இந்தியாவில் ஒவ்வொரு பாலியல் பலாத்காரம் நடந்த பின்னரும், குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள் என்று பொதுமக்கள் கதறுகிறார்கள். அதில் சிலர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். போலீசாரின் என்கவுன்டர்களிலும் பாலியல் பலாத்கார குற்றவாளிகள் கொல்லப்படுகிறார்கள். ஆனால், ஆய்வுகள் என்ன கூறுகிறதென்றால், மரண தண்டனைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒருபோதும் எங்கும், எப்போதும் குறைக்கவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றன. பாலியல் பலாத்காரம் அல்லது கூட்டு பாலியல் பலாத்கார வழக்குகளில் குற்றஞ்சாட்டப்படும் இளஞ்சிறார்களுக்கு இந்தியா மரண தண்டனையை அனுமதிக்கிறது. ஆனால், கீழ் நீதிமன்றங்களினால் அவர்கள் எளிதாக தப்பித்துவிடுகின்றனர். அண்மையில் நடந்த சம்பவம் மற்றொரு உதாரணம். அந்த பாலியல் பலாத்கார குற்றவாளியை தூக்கிலிடுவதோடு பிரச்னை முடிந்துவிடவில்லை. ஏனெனில் பாலியல் பலாத்காரம் என்ற குற்றம் நம்முடனே இருக்கிறது. நமது சமுதாயம் இதை ஏற்றுக்கொள்கிறது. அதை அனுமதிக்கிறது. இந்த அமைதி பாலியல் பலாத்கார கலாச்சாரத்தை பலப்படுத்துகிறது. நம் முன் இருக்கும் மிகப்பெரிய ஆபத்து இந்த பாலியல் பலாத்கார கலாச்சாரமாகும். இரண்டு அணுகுமுறைகள் தற்போதைய உடனடி தேவை. பாலினம் மற்றும் ஆண், பெண் பாகுபாடு குறித்த கல்வி தொடக்கக்கல்வி பாடத்திட்டதிலேயே சேர்க்கப்படவேண்டும். இணையதள அச்சுறுத்தல்கள், பாலின சமத்துவம், பாலின சுரண்டல் போன்ற தலைப்புகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொள்ளும் பயிற்சி பட்டறைகளை பள்ளிகள் நடத்தவேண்டும். அதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். நான் ஆண் குழந்தைகளை வைத்துள்ள ஒவ்வொரு பெற்றோரையும் வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன், இந்திய ஆண் குழந்தைகளிடம் பொதுவாக இருக்கும் ஆண் ஆதிக்கத்தை உங்கள் குழந்தைகளிடம் வளரவிடாதீர்கள். நம் பெண் குழந்தைகளை, வீடுகளில் அடங்கியிருங்கள், உடல் முழுவதையும் மறைத்து ஆடை அணியுங்கள் என்று கூறுவதை தவிர்த்து, ஆண் குழந்தைகளுக்கு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள். சம்மதம் என்பதன் அர்த்தத்தை நமது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் அவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வழி நடத்தாவிட்டால், மேலே கூறிய அனைத்தும் ஒன்றுமில்லாமல் போய்விடும். பாலின சமத்துவத்துடன் பெரும்பாலான இந்திய ஆண்கள் வளர்க்கப்படவில்லை. மாறாக அதற்கு எதிரான ஒன்றைதான் அவர்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். குழந்தைகள், அவர்களை சுற்றியுள்ள பெரியவர்கள் செய்வதை அப்படியே பின்பற்றுவார்கள். பாலின பாகுபாட்டின் அடிப்படையிலான வேலைகள் மற்றும் பாலின பாகுபாட்டை உணர்த்தும் விஷயங்களை நாம் உடைக்க வேண்டும். இவற்றை பாலினம் கடந்து குழந்தைகளிடம் வளர்த்தெடுக்க வேண்டும். இதுபோன்ற பாலின பாகுபாட்டின் அடிப்டையிலான வேலைகள் குடும்பத்தில் ஒரு படி நிலைகளை உருவாக்கும். அது ஒரு பாலினம் குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கும், மற்றொரு பாலினம் அதற்கு அடங்குவதற்கும் வழிவகுக்கும்.
பல்கலைக்கழகத்தில் பாடம் கற்றுக்கொடுக்கும் நாம், குடிமக்கள் மற்றும் பெற்றோர் அனைவரும் பாலினம் குறித்து சரியாக கற்பிக்காததில் தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்க வேண்டும். அதை களைவதற்கு இப்போதே செயலாற்ற வேண்டும். கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பள்ளிகள், தங்கள் மாணவர்கள் ஆரம்ப காலத்திலேயே பாலின கல்வியை பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இந்த பாலியல் பலாத்கார கலாச்சாரம் பல்கிப்பெருகும். இந்திய பெண்களின் பாதுகாப்பு, மரியாதை ஆகியவை எட்டக்கனியாகிவிடும்.
இக்கட்டுரையை எழுதியவர் அசோகா பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர்.
தமிழில்: R. பிரியதர்சினி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.