கண்ணன்
மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இல்லாததை கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று மிக அதிக தமிழர்களால் உணரப்பட்டிருக்கும். அவரைப் போன்ற ஒரு தலைவர் இருந்திருந்தால் தமிழகத்துக்கும் தமிழக அரசுக்கும் அரசின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரான முதலமைச்சருக்கும் இப்படியொரு அவலம் நிகழ்ந்திருக்காது. சுதந்திர இந்தியாவில் வேறு எந்த மாநிலத்துக்கு நிகழ்ந்திராத அவலம் அது.
எல்லை மீறும் மத்திய அரசு
கடந்த ஞாயிறு (மே 14, 2017) அன்று சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் சுரங்க வழிச் சேவையத் தொடங்கி வைக்க மத்திய நகர்ப்புற மற்றும் செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு வந்திருந்தார். அந்த சேவையைத் தொடங்கி வைத்ததோடு மத்திய அரசின் நிதி உதவியில் இயங்கும் திட்டங்களைத் தமிழக அரசு எப்படி செயல்படுத்திவருகிறது என்பதை ஆய்வு செய்யும் கூட்டம் ஒன்றில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் இதர அமைச்சர்களுடன் பங்கேற்றார். இந்தக் கூட்டம் நடந்த இடம் ஒரு மாநில அரசு அமைப்பின் கோவிலுக்கு இணையான அந்தஸ்தைக் கொண்ட தலைமைச் செயலகத்தில்.
தமிழகம் மட்டுமல்லாமல் வேறு எந்த ஒரு மாநிலத்திலும் ஒரு மத்திய அமைச்சரும் முதல்வரும் ஒன்றாகப் பங்கேற்கும் அதுவும் முதல்வர் முன்னிலையிலேயே மாநில அரசின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் கூட்டம் அந்த மாநிலத்தின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றதில்லை. அந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பேசியிருக்கும் விதம் அதைவிட அதிர்ச்சிக்குரியது.
“உங்களது (தமிழக அரசு) ஒத்துழைப்பைப் பொறுத்தே மத்திய அரசின் நிதி உதவி உங்களுக்குக் கிடைக்கும். தமிழக அரசு, மத்திய அரசின் திட்டங்கள் சிறப்பாகச் செயல்பட உழைத்தால்தான் மத்திய அரசின் ஒத்துழைப்பு தொடர்ந்து கிடைக்கும். உங்கள் ஒத்துழைப்பு இல்லையென்றால் எங்களிடமிருந்து கிடைக்கும் நிதி உதவிகள் உள்பட பலவும் நின்று போகும்”என்று பேசியிருக்கிறார்.
மத்திய அமைச்சர் மொத்த தேசத்துக்கும் பொதுவானவர். அதேபோல் முதலமைச்சர் என்பவர் மாநிலத்தின் முதன்மையான தலைவர். இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டாட்சி. அப்படி இருக்கையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்துள்ள முதல்வரின் முன்னிலையிலேயே தமிழக அரசுக்கு எச்சரிக்கைவிடுப்பது போன்ற தொனியில் மத்திய அமைச்சர் பேசியிருப்பதை இந்தியக் கூட்டாட்சிச் சட்டத்தை உதாசீனப்படுத்தும் செயலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
தனது திட்டங்களும் அதற்கு ஒதுக்கப்படும் நிதிகளும் மாநில அரசால் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறதா என்று ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு உரிமை இருக்கிறது. மத்திய மாநில அரசுகள் இணந்து நடத்தும் கூட்டங்கள் பெரும்பாலும் அதிகாரிகள் மட்டத்திலேயே நடந்திருக்கின்றன. ஒரு சில அரிய நிகழ்வுகளில் மத்திய-மாநில அமைச்சர்கள் இணைந்து இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்றிருந்தாலும் அப்படிப்பட்ட கூட்டங்கள் பொது இடத்தில்தான் நடந்திருக்கின்றனவே அன்றி மாநில அரசின் தலைமைச் செயலகத்தில் அல்ல.
அமைதி காக்கும் மாநில அரசு
டிசம்பர் 2016ல் ஜெயலலிதா இறந்து சில வாரங்களுக்குப் பின், முன்னாள் தமிழக தலைமைச் செயலர் பி.ராம மோகன் ராவ் வீட்டில் வருமான வரி இலாகாவின் சோதனை நடந்தபோது அதன் ஒரு பகுதியாகத் தமிழகத் தலைமைச் செயலக்த்திலும் சோதனை நடைபெற்றது. அது மாநில அரசின் மீதான மத்திய அரசின் எல்லை மீறிய நடவடிக்கை என்றும், கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதல் என்றும் பரவலாக விமர்சிக்கப்பட்டது. அந்த விமர்சனத்தில் அதிமுகவினர் மற்றும் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர்களின் குரலும் இணைந்திருந்தது.
ஆனால் இப்போது மாநில அரசின்மீது அதைவிடக் கடுமையான நடவடிக்கையை மத்திய அமைச்சரே செலுத்தியிருக்கிறார். தமிழகத்தை ஆளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்தோ அல்லது பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் குழுவிடமிருந்தோ ஒரு சிறு சலசலப்புகூட எழவில்லை.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான பிரிவினர் மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் பல்வேறு நிகழ்வுகள் கடந்த சில மாதங்களாக அரங்கேறி வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பிரிவும் மத்திய அரசிடம் பணிந்துபோவதில் பன்னீர்செல்வ பிரிவினரிடம் போட்டிபோடுவதன் மிகத் தெளிவான உதாரணம் என்றே இதை அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
ஆளும் கட்சியில் பல அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்தால் அந்த ஊழல் குற்றச்சாட்டுகளின் மீது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் உழல் தடுப்பு அமைப்புகளின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. அந்த பயத்தில்தான் ஆளும் கட்சியினர் மத்திய அரசு எது செய்தாலும் அமைதி காக்கின்றனர் என்ற எண்ணம் அரசியல் விமர்ச்கர்கள் பலரால் முன்வைக்கப்படுகிறது.
ஜெயலலிதா இருந்திருந்தால்...
ஜெயலலிதா மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாமல் இருந்ததில்லை. அவரது அரசியல் வாழ்வின் பெரும்பகுதியில் சொத்துக் குவிப்பு வழக்கை எதிர்கொண்டார். அவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோதுகூட அவர் மத்திய அரசின் இதுபோன்ற எல்லை மீறல்களை, குறிப்பாக மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் நடவடிக்கைகளைக் கடுமையாக எதிர்த்து வந்ததோடு மாநில சுயாட்சியை ஓரளவு பாதுகாத்தும் வந்தார். நீட் தேர்வு, உணவுப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்டவற்றை எதிர்த்துவந்தார். காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் தலைமையில் முதல்வர்கள் கூட்டம் நடந்தபோது தனக்குப் பேச வாய்ப்பளிக்கவில்லை என்பதற்காகக் கூட்டத்தைவிட்டு வெளியேறினார். இதுபோன்ற செயல்பாடுகள் பற்றிப் பலருக்குப் பலவேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால் இவை மாநில அரசின் முக்கியத்துவத்தையும் மாநில முதல்வரின் மரியாதையையும் காக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அதிமுகவில் அடிமட்டத் தொண்டன் முதல் அமைச்சர்கள் வரை ஜெயலலிதாவை அம்மா என்று போற்றியவர்கள்தான். நடப்பது அம்மாவின் ஆட்சி என்றுதான் அதிமுகவினர் இன்றும் மக்கள் மத்தியில் சொல்லிக்கொள்கின்றனர். ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சியில் இப்படி எல்லாம் நடக்காது என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.