Advertisment

தமிழர்களின் கலாச்சாரமாக மாறிவிட்ட சினிமா! டிக் டாக் வழங்கும் வாய்ப்பு

இந்தியாவில் மட்டும் சுமார் 200 மில்லியன் பேர்களுக்கு மேல் பயன்படுத்தும் டிக்டாக் செயலி கலாச்சார சீரழிவை உருவாக்குவதாக கூறி அதை தடை செய்ய வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cinema became tamilians culture and tik tok performing chances - தமிழர்களின் கலாச்சாரமாக மாறிவிட்ட சினிமா! டிக் டாக் வழங்கும் வாய்ப்பு

cinema became tamilians culture and tik tok performing chances - தமிழர்களின் கலாச்சாரமாக மாறிவிட்ட சினிமா! டிக் டாக் வழங்கும் வாய்ப்பு

எ.பாலாஜி

Advertisment

பெரும்பாலும் பழைய தமிழ் இலக்கியங்கள் நாடகப் பாங்கிலானவை. அதனால்தான், தமிழை இயல் இசை நாடகத்தை குறிக்கும் வகையில் முத்தமிழ் என்று கூறுவது வழக்காக இருந்து வருகிறது. தமிழ்ச் சமூகத்தில் நாடக மரபு என்பது ஒரு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. அதனால், பல்வேறு பொழுதுபோக்கு சாதனங்கள் வந்துவிட்டாலும் நாடகம் இன்னும் தனது உயிரை இழுத்துப் பிடித்துக்கொண்டு ஜீவித்து வருகிறது.

தமிழ் மக்கள் நாடகத்தை வெறுமனே ஒரு கலை வடிவத்தை பார்க்கும் பார்வையாளர்களாக மட்டுமல்லாமல் தங்களை சில சமயம் பங்கேற்பாளர்களாகவும் அதாவது நாடகத்தை நிகழ்த்துபவர்களாகவும் நடிப்பவர்களாகவும் மாறி இருந்துள்ளார்கள். நாடகத்தை பார்த்து ரசிப்பதோடு நின்றுவிடாமல் சிலர் ஆர்வத்தின் காரணமாக நாடகத்தின் வசனம் பாடல் ஆகியவற்றை கற்றுக்கொண்டு நடித்தும் வந்துள்ளனர். இவர்கள் தொழில்முறை நாடக கலைஞர்கள் அல்ல. இவர்கள் ஆர்வத்தின் காரணமாக ஒருமுறை மட்டும் தங்கள் பகுதிகளில் நாடகம் நடிப்பவர்கள்.

அதாவது நாடக கலை பார்வையாளர்களுக்கு அவர்கள் விரும்பினால் நடிப்பதற்கான வாய்ப்பையும் வழங்கியுள்ளது. இந்த நாடக கலை சினிமா, தொலைக்காட்சி, இணையம், யூ டியூப், சமூக ஊடகங்கள் பரவலாகிவிட்ட பிறகு அதன் செல்வாக்கை இழந்துவிட்டது.

சினிமா என்பது ஒரு பிரம்மாண்ட கலை வடிவமாக உள்ளது. நாளை புதிதாக உருவாகப் போகிற ஒரு கலை வடிவத்தைக் கூட அது தனக்குள் ஈர்த்துக்கொள்ளும். பல கலைவடிவங்களின் கூட்டுதான் சினிமா என்பதால் அது நாடகத்தை கலை மரபாகக் கொண்ட உணர்ச்சிப்பூர்வமான இயல்பைக் கொண்ட தமிழர்களைக் கவர்ந்ததில் வியப்பில்லை. கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழ் சினிமா தமிழ் மக்களின் கலாச்சாரமாக மாறி இருக்கிறது. கிட்டத்தட்ட உலகம் முழுவதும் சினிமா ஒரு கலாசாரமாக மாறியிருக்கிறது. ஆனால், அது நாடகத்தைப் போல, பார்வையாளர்கள் அனைவரையும் பங்கேற்பாளராக மாறுவதற்கு அதன் வடிவம் மற்றும் நடைமுறை காரணமாக அனுமதிப்பதில்லை. இதனால், சினிமா கலாச்சாரமாக மாறினாலும் நாமும் பங்கேற்பாளராக வேண்டும் என்ற ஆவல் தமிழ் ரசிகர்களின் ஆழ்மனதில் உயிர்ப்புடன் இருந்துவந்தது. இதற்கு தீனி போடும் வகையில் ஸ்மார்ட் போன் பரவலானபோது வாய்ப்புகள் வந்தன. அந்த வாய்ப்பை மிகவும் குறைவாக குறும்படங்கள், யூடியுப், ஃபேஸ்புக், போன்ற சமூக ஊடகங்கள் அளித்தன. ஆனால், அது போதவில்லை. இந்த வெற்றிடத்தைதான் டப் ஸ்மாஷ், டிக்டாக், மியுசிக்கலி போன்ற செயலிகள் நிரப்பியுள்ளன.

சினிமா தங்களின் கலாசாரமாக மாறிவிட்ட சூழலில் தாங்களும் அதில் பங்கேற்பாளராக மாறி தங்கள் திறன்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆவலை இந்த செயலிகள்தான் தீர்த்து வைத்துள்ளன. இதில் கூடுதலாக இன்னொரு விஷயம் என்னவென்றால் பாலின பேதம் வயது வித்தியாசம் என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவருக்கும் இது வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

ஆனால், இதில் நேர்ந்த மிகப்பெரிய ஆபத்து சுய தணிக்கை, சுயக்கட்டுப்பாடு இல்லாதது. டிக்டாக் செயலி நடைமுறைக்கு வந்த பிறகு டிக்டாக் கொலைகளுக்கு காரணமாகி உள்ளது. சமூக மோதல்களுக்கு காரணமாகி உள்ளது. சமூக அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. காவல் நிலையங்கள் முன்பு டிக்டாக் செய்தவர்கள் கைது செய்ப்பட்டிருகிறார்கள். இவற்றையெல்லாம் ஏன் நாடகங்கள் செய்யவில்லையா என்றால் அவைகளும் செய்திருக்கின்றன. ஆனால், அங்கே பார்வையாளனுடன் நிகழ்த்துபவனும் நேரடியாக அருகருகே இருப்பதால் இருவருக்கும் நிகழ்த்துவதில் பொறுப்பு இருந்தது. அதனால், சில விதிமீறல்கள் இருந்தாலும் அதனால், ஏற்பட்ட பாதிப்பு பரவலாகாமல் இருந்தது. ஆனால், இந்த செயலிகளில் அது இல்லை. நிகழ்த்துபவர்களும் பார்வையாளர்களும் வேறு எங்கேயோ இருக்கிறார்கள் அதனால், சுய தணிக்கை கட்டுப்பாடு என்பது இல்லாமல் போகிறது. கட்டற்ற ஒரு வடிவத்தில் இருக்கிறது.

அதே நேரத்தில், இந்த செயலிகள் பயணாளர்களுக்கு வழங்கும் வாய்ப்பு என்பது முழு திறமையை வெளிப்படுத்துவதற்கான தளம் இல்லை. பெரும்பாலும் அது போல நடிப்பதுதான் (imitation) தான். பார்வையாளர்களின் ஆவலுக்கு இது அளிக்கும் வாய்ப்பு யானைப் பசிக்கு சோளப்பொறி போல என்பதால்தான் ஆவல் தீறாமல் இந்த டிக்டாக் வீடியோக்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம். சிலர், இந்த டிக்டாக் செயலிகளில் தங்களை வெளிப்படுத்திக்கொண்டு டிவி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர் என்பதையும் நாம் கருத்தில் கொள்ளும்போதுதான் இதனுடைய தாக்கம் புரியும்.

டிக்டாக் செயலியால் ஏற்பட்ட சர்ச்சைகளால் நீதிமன்ற உத்தரவின் பேரில் அது கூகுல் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டது. இந்தியாவில் மட்டும் சுமார் 200 மில்லியன் பேர்களுக்கு மேல் பயன்படுத்தும் டிக்டாக் செயலி கலாச்சார சீரழிவை உருவாக்குவதாக கூறி அதை தடை செய்ய வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன. தமிழகத்தில் அமைச்சர் மணிகண்டன் போன்றவர்கள் இதனை வலியுறுத்தியும் உள்ளனர்.

இந்நிலையில்தான், ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பு அளித்த புகாரின்பேரில், ‘டிக் டாக்’, ‘ஹலோ’ ஆகிய சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. அதில் 21 கேள்விகள் அடங்கிய பட்டியல்களுடன் தடை விதிக்கப்போவதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டன.

இது தொடர்பாக, டிக்டாக், ஹலோ நிறுவனங்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில், “இந்தியாவில் அதிகரித்து வரும் டிஜிட்டல் சமூகத்தினர் எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் இல்லாமல் எங்கள் வெற்றி சாத்தியம் அல்ல. அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.

ஆகவே, இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.7 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளோம். தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்த முதலீட்டை மேற்கொள்கிறோம். ‘திறன்மிகு இந்தியா’ போன்ற திட்டங்களை ஆதரிப்போம்.” என்று கூறியுள்ளது. ரூ.7000 கோடி முதலீடு செய்யும் அளவுக்கு அதன் வணிகம் உள்ளது என்றால், நாம் இதை குறைத்து மதிப்பிடுவது சரியாக இருக்காது.

பிடி இறுகும்போது அந்த நிறுவனங்களும் விழித்துக்கொண்டுவிட்டன. நேற்று முன் தினம் டிக்டாக் விதிகளை மீறிய 60 ஆயிரம் வீடியோக்களை நீக்கி தனது தணிக்கையை தொடங்கியுள்ளது. இதனால் எல்லாம் அதை கட்டுப்படுத்துவது எளிதான காரியம் அல்ல. அதனுடைய பலமும் ஆபத்தும் அதனுடைய கட்டற்ற தன்மைதான். ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் சினிமா என்ற ஒரு கலாச்சாரத்துக்கு பழகிவிட்ட மக்கள் தங்கள் கலாச்சார நடவடிக்கைகளில் பங்கேற்று தங்கள் திறன்களை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பும் தடை செய்யப்படுமானால் அவர்கள் அதற்கு மாற்றாக ஒன்றை எதிர்பார்க்கவெ செய்வார்கள். அப்போது அது வேறு ஒரு புது வடிவத்தில் வரத்தான் செய்யும். டிக் டாக் ஏதோ பொழுதுபோக்கு செயலி மட்டுமல்ல அது உங்களின் சினிமா கலாச்சாரத்தில் பங்கேற்பாளர்களாக மாறும் ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment