Advertisment

இந்தியாவின் பழைய ஆன்மாவும் பயங்கர பலமும் தான் குடியுரிமை சட்டம்

இந்த சட்டங்களும் இயற்கை நீதி, பன்னாட்டுச் சட்டம் மற்றும் நடைமுறைகள், காரணங்கள், பரிவு ஆகியவற்றின்படியே வழிமொழியப்படுகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Supreme court hears 140 petitions challenging citizenship law today

Supreme court hears 140 petitions challenging citizenship law today

 E Suresh Kumar

Advertisment

மந்தமான, எதிர்வினையாற்றுகிற நாடு என்கிற நிலையிலிருந்து மெய்யான நவீன தேசமாக இந்தியா மாறத் தொடங்கியிருக்கிறது. வளரும் திறன்களையும் வாய்ப்புகளையும் அது உணர்ந்துள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், தொடர்ச்சியான நிலைமாறு கட்டத்தில் மிக அண்மையானது ஆகும். இது, திறன், ஞானம், கண்ணோட்டம் மற்றும் தீர்மானித்தல் ஆகியவற்றில் எதிரொலிக்கிறது; இது நல்ல தலைமைத்துவத்தின் குணாம்சம் மட்டுமல்ல, இராஜ்ஜியவாதியின் தனித் தன்மையும்கூட.

பிரதமரோயோ அவருடைய ஆலோசகர்களைப் பற்றி சொல்லவேண்டுமானால், ’இந்த காலகட்டத்துக்கு இங்கு இவர் வந்தேதீருவார்’ என்பதே பொருத்தம். குடியுரிமைத் திருத்தச்சட்டம், இந்தியாவின் பழமையான ஆன்மாவும் அதன் பெரும் உறுதிப்பாடும் இணைந்த சேர்க்கையாகும். ஒரு  தேசமாக, மக்களாக நாம் யார் என்பதை வரையறுக்க உதவும் சட்டமாகும்.

இச்சட்டமானது, நூற்றாண்டுகளாக ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஓர் இடம் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. நம் தேசமானது இதன் வரலாறு நெடுகிலும் பல்வேறுபட்ட மக்களை வரவேற்று இருக்கிறது. அலெக்சாண்டரின் எழுச்சிக் காலத்தில் கிரேக்கர்களை, அவர்களின் அறிவை ஆரத் தழுவிக்கொண்டார்கள். பார்சிகள், யூதர்களுக்கு அடைக்கலம் தந்தது. இசுலாம் தோன்றிய மண்ணுக்கு அப்பால் முதலில் இங்குதான் முதல் மசூதி கட்டப்பட்டது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் பல்வேறு தட்பவெப்பம், வழக்குகள், மதங்கள், இனங்களைச் சேர்ந்த மக்களைச் சேர்த்துக்கொள்ளும் நம் மரபை மறு உறுதிசெய்திருக்கிறோம்.

இதைச் செய்கையில், அறிவுக்கும் உணர்ச்சிக்கும் ஈடுகொடுக்கும்படியாக பொன்னான வழிமுறையைக் கடைப்பிடித்திருக்கிறோம். குடியுரிமைத் திருத்தச் சட்டமானது, வடகிழக்கில் உள்ள நம் மக்களின் பண்பாடு முதல் மதரீதியாகத் துன்புறுத்தப்பட்டு- கைவிடப்பட்டு அடைக்கலம்தேடி இங்கு வந்த பிற நாட்டினர்வரை ஒவ்வொருவரின் நலனையும் சாத்தியமுள்ளவகையில் பாதுகாக்கும். இந்த மக்களின் பூர்வீக நாடுகள் இவர்களுக்கு என்ன செய்திருக்கவேண்டுமோ, அதாவது சிறுபான்மையினரைப் பாதுகாத்து, அவர்களின் வாழ்க்கைக்கான வழியை உறுதிப்படுத்துவது ஆகியவற்றை இந்தியா இப்போது செய்கிறது.

நாகரிகமடைந்த எல்லா தேசங்களும் அரசியல் துன்புறுத்தலுக்காகவோ மனமொப்பியோ அடைக்கலம் தருகின்றன என்பது நன்றாகத் தெரிந்ததே! பொருளாதாரரீதியாக இடம்பெயரும் முசுலிம்களைப் பொருத்தவரை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகியவற்றில் இப்படியான அபாயம் இல்லவே இல்லை. வங்கதேசப் பிரதமரின் உயர்மட்ட ஆலோசகர் ஒருவர் அண்மையில் அளித்த பேட்டியில், அங்கிருந்து இங்குவந்த முசுலிம்களை திரும்ப அழைத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். சட்டவிரோதக் குடியேற்றம் என்பது ஒரு குற்றம்; அதனால் அது தண்டிக்கப்படக்கூடியது என்பதால் அவர் அவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க : ”மதங்கள் எதற்கு? ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரே போதும்” – முன்னாள் மக்களவை பொதுச்செயலாளர்

இந்தச் சட்டமானது கவனமாக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். 2016-லேயே இது பொதுவெளியில் வைக்கப்பட்டுவிட்டது. 30 பேர் கொண்ட அனைத்து கட்சிக் குழுவால் ஆய்வும்செய்யப்பட்டது. உண்மையில், சரியான குடியேறிகளுக்கு ஏற்கெனவே பலவிதமான அனுமதி, நீட்டிக்கப்பட்ட விசா ஆகியவை வழங்கப்பட்டதுடன், இவை மேலும் சட்டரீதியாக அங்கீகரிக்கப்படும். இதற்கிடையில், குடியுரிமைச் சட்டமானது மூன்றாவது அட்டவணையில் வைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேச சிறுபான்மையினருக்கு மட்டும்தான், தகுதிக்காலம் 11 ஆண்டுகளிலிருந்து ஐந்தாகக் குறைக்கப்பட்டது.

முதலில் இச்சட்டம் வடகிழக்கு மாநில மக்களை மீறமுடியாத உள் அனுமதி முறை மூலம் பாதுகாக்கிறது. அவர்களுக்கான நில உரிமையையும் தனித்திருக்கச் செய்கிறது. அசாமிய பண்பாட்டை கவனமாகப் பாதுகாக்கவும் செய்கிறது. மண்ணின் பூர்வீகமக்கள் எந்த மதவேறுபாடுமின்றி சமமாகவும் பாதுகாப்புடனும் ஒவ்வொரு வகையிலும் முழு வளர்ச்சி அடையவும் உறுதியளிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டன் ஆளும்வர்க்கங்களின் நலன்களுக்காக 1873-ல் கொண்டுவரப்பட்ட வங்காளக் கிழக்கு முனைப்பகுதி ஒழுங்கமைப்பு முறையின்படி, வடகிழக்கு மாநில மக்களுக்கு அரசியல்சாசன காப்புறுதி வழங்கப்பட்டிருப்பது, சுவாரசியமானது. பிரிட்டன் ஆட்சி எப்படி அசாம் மக்களின் நலன்களைப் பாதுகாத்ததோ அதையே இந்திய அரசும் இந்தச் சட்டத்தின் மூலம் செய்கிறது.

இந்தச் சட்டம் நடைமுறைக்கேற்றதும்கூட. இந்தியா எந்த எல்லைவரை போகமுடியும் என்பதை உணர்ந்துகொண்டு, அதற்குள் நின்றுகொண்டிருக்கிறது. கணக்கில்லாத மக்களுக்கு வாழ்வாதாரத்தையும் மருத்துவ வசதியையும் தங்குமிடத்தையும் எந்த நாட்டாலும் தரமுடியாது. சொந்த நாட்டு மக்கள் வேலையில்லாமல் அவதிப்படுகையில் பிரத்யேகமான வாழ்க்கைவசதிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களை நாம் தாங்கிப்பிடிக்கவேண்டும் என்பது முற்றிலும் அபத்தமானது. வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் கணிசமான அளவில் சிறுபான்மையினர் இருந்துவருவது வரலாற்று உண்மை; அவர்களில் தகுதி உள்ளவர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்படும். இந்த நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினர், துன்புறுத்தலாலும் அவர்களின் மதநம்பிக்கைக்காக அநீதியாகவும் குறைந்துவருகின்றனர். நம்மைப் பொருத்தவரை அவர்களைக் கைவிடுவதானது நமது பண்பாடு, நியதிகள் மற்றும் பொறுப்புகளைக் கைவிடுவதாக இருக்கும்.

இந்த நாடுகளின் முசுலிம் அல்லாத மக்கள் என்பதாலேயே அவர்களுக்கு இந்தச் சட்டம் குடியுரிமை வழங்காது; இதைப் போலவே முசுலிம்களுக்கு அவர்களின் கண்ணோட்டத்தை, அரசியல் நம்பிக்கையை, இன்னும் பிற காரணங்களுக்காக துன்புறுத்தப்பட்டால் அவர்களை விலக்கியும்வைக்காது என்பதை வலியுறுத்தி குறிப்பிடவேண்டிய தேவை உள்ளது. எடுத்துக்காட்டாக, பதான்கோட்டில் 1965-ல் குண்டுவீசித் தாக்குதல்நடத்திய பாகிஸ்தான் வான்படை விமானியின் மகன் என்றபோதும், ஒரு பிரபல பாடகருக்கு இந்தியா குடியுரிமை வழங்கியது. அந்த மரபு இப்போதும் தொடர்கிறது. அரசாங்கத்தின் புள்ளிவிவரப்படி கடந்த ஆறு ஆண்டுகளில் 2,830 பாகிஸ்தான் நாட்டவருக்கு அதாவது, ஆண்டுக்கு 470 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இசுலாத்தைப் பின்பற்றும் இந்தியர்களை இந்தச் சட்டம் எந்தவகையிலும் பாதிக்காது என்பதைக் கூறவேண்டியதில்லை. அவர்கள் தங்களின் இருப்பிடச் சான்றையோ அதையொட்டிய வேறு எதையுமோ நிரூபிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படமாட்டார்கள். இது மற்ற சில சட்டங்களில் உள்ள ஓட்டைகளை அடைக்கும்படியாக விரிவானதாகவும் உள்ளது. எடுத்துக்காட்டாக, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒருவரின் ஓசிஐ கார்டை ரத்துசெய்ய போதுமான ஏற்பாடு இல்லை.

இந்தச் சட்டம் மதவேறுபாடின்றி இடைவெளியை நிரப்புகிறது. இந்த சட்டத்தின் நல்ல பலன் என்று பார்த்தால், உதவியில்லாத, வலுக்குறைந்த அனைத்து மதப்பிரிவினருக்கும் வேறுபாடின்றி வளங்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய கூடுதல் சமத்துவமான சமூகத்தை நிறுவுவது ஆகும். பொய்யான பொருளாதாரக் காரணக் குடியேறிகளைத் திருப்பி அனுப்புவது மேற்கு ஐரோப்பாவில் இன்று நடப்பதுதான். அப்படிச் செய்கையில் இந்தியா மட்டுமே அதன் பண்பாட்டையும் சட்டங்களையும் கடைப்பிடிக்கிறது. இந்த சட்டங்களும் இயற்கை நீதி, பன்னாட்டுச் சட்டம் மற்றும் நடைமுறைகள், காரணங்கள், பரிவு ஆகியவற்றின்படியே வழிமொழியப்படுகின்றன.

கட்டுரையாளர், ஐதராபாத், இலக்னோ, சில்லாங்கில் உள்ள ‘ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள் பல்கலைக்கழக’ துணைவேந்தர்.

தமிழில்: இர.இரா.தமிழ்க்கனல்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment