Advertisment

அண்ணா கைவிட்ட 'திராவிட நாடு’ முழக்கம்- ஓர் அலசல்

திராவிட நாடு பரப்புரையை பெரியார் முன்னெடுக்கவில்லை. தனித்தமிழ்நாடு என்றே பெரியார் முன்வைத்தார். ஆனால், திமுக தொடர்ந்து திராவிட நாடு என பேசிவந்தது.

author-image
WebDesk
Sep 15, 2018 12:29 IST
New Update
பேரறிஞர் அண்ணா 110-வது பிறந்த நாள் விழா, அண்ணாதுரை, திராவிட நாடு, அண்ணா கைவிட்ட முழக்கம், திராவிட முன்னேற்றக் கழகம், Arignar Anna Birthday, Dravida Nadu

பேரறிஞர் அண்ணா 110-வது பிறந்த நாள் விழா, அண்ணாதுரை, திராவிட நாடு, அண்ணா கைவிட்ட முழக்கம், திராவிட முன்னேற்றக் கழகம், Arignar Anna Birthday, Dravida Nadu

அறிஞர் அண்ணா, தமிழ்நாடு அரசியலின் திசைவழியை மாற்றியவர்! திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரான அவரது 110-வது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 15)!

Advertisment

அண்ணா ஆரம்பத்தில் வலியுறுத்தி, பின்னர் கைவிட்டதுதான் திராவிட நாடு முழக்கம்! திராவிட நாடு கோரிக்கையை திமுக கைவிட்டது ஏன்? என்பது குறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை:

விவேக் கணநாதன்

‘திராவிட நாடு’ எனும் கோஷம் கடந்த சில மாதங்களில் மீண்டும் விவாதப்பொருள் ஆனது. 15-வது நிதிக்குழுவில் செய்யப்படும் நிதிப்பகிர்மான முறை மாற்றங்களால் தமிழ்நாடும் , கேரளாவும் பாதிக்கப்படும் என்றபோதும், மோடி அரசு மீதான விமர்சனங்களின் போதும் திராவிட நாடு கோஷத்தை பார்க்க முடிந்தது.

நிதிச்சிக்கல், இந்துத்துவ நெருக்கடி, கல்வி - வேலைவாய்ப்புகளில் ஆதிக்கச்சிக்கல் எழும்போது ‘எங்களால் இந்தியா என்கிற அமைப்பில்லாமல் தனித்தும் இயங்க முடியும்’ என்கிற நம்பிக்கை வாதத்தை இந்துத்துவாதிகளுக்கு பதிலாக அளிக்கும் வகையில் இன்றைய தலைமுறை திராவிட நாடு கோஷத்தைப் பார்க்கிறது.

சமீபத்தில் மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, ஒரு நேர்காணலில் தனித்தமிழ்நாடு கோரிக்கையை அண்ணா கைவிட்டதே இன்றைய நிலைமைகளுக்கு காரணம் என்று பேசியிருந்தார். அது பெரும் விவாதமானது.

இந்நிலையில், திராவிட நாடு என்கிற கோரிக்கையை மிக நீண்ட காலம் வலியுறுத்தி வந்த திமுக.வும் அதன் நிறுவனரான அண்ணாவும் அதைக் கைவிட்ட பின்னணியைத் தெரிந்துகொள்வது முக்கியமானதாகும்.

1953 அக்டோபர் 1-ம் தேதி ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டது. பின்னர், மொழிவாரி மாநில புணரமைப்புக்காக டிசம்பர் 22-ம் தேதி பசுல் அலி, கே.எம்.பணிக்கர், ஹெச்.என். குன்ஸ்ரூ தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 1954-ம் ஆண்டு மே 3-ம் தேதி இக்குழுவைச் சந்தித்து திமுக சார்பில் அண்ணா அறிக்கை அளித்தார். அந்த அறிக்கையில், “விசால ஆந்திரம், சம்யுக்த கர்நாடகம், ஐக்கிய கேரளம், தமிழகம் என்கிற பெயரில் உலவும் கோரிக்கைகளை திமுக முழுமனதுடன் வரவேற்பதுடன், ஆதரவளித்தும் வருகிறது. அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். மொழிவழிப்பிரிவினை வேண்டும் என்ற இரண்டின் சேர்க்கையே திராவிடநாடு கோரிக்கையாகும்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கைப் பிறகுதான், “மொழிவழிப்பிரிந்து, இனவழி கூடிய திராவிட கூட்டாட்சி” என்பதே திராவிட நாடு என்கிற விளக்கம் அளிக்கப்பட்டது.

பசுல் அலி குழுவின் அறிக்கை 1955 அக்டோபரில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் பெரியாறு ஓடுகின்ற தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரளத்தோடு இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெரியார், அண்ணா உட்பட காங்கிரஸ் அல்லாத அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து அதைக் கண்டித்தன. இந்நிலையில், மொழிவாரி மாநிலப் பிரிவினையை விட மேற்கு, கிழக்கு, உத்தர, தட்சிண, மத்திய மாகாணங்களாக பிரிக்கும் திட்டத்தை நேரு வெளியிட்டார்.

இதற்கு காரணம் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டால், இன தேசிய உணர்வு மேலோங்கி, அகில இந்தியம் என்கிற தேசிய உணர்வு மங்கும் என்கிற அச்சமாகும். நேருவின் மிக நெருங்கிய நண்பரான வி.கே.கிருஷ்ண மேனனின் அறிவுரை இதற்கு பின்னால் இருந்தது. பசுல் அலி குழுவில் இடம்பெற்றிருந்த, கேரளப் பகுதியைச் சேர்ந்த கே.எம்.பணிக்கரின் சொந்த விருப்பத்தின் பெயரில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக கிருஷ்ணமேனன் பதிவுசெய்திருக்கிறார்.

“ கேரளம் பிரிக்கப்பட வேண்டும் என்பது சமீபத்தில் எழுந்த ஒரு கோரிக்கைதான். அதிகாரத்து வரத்துடிப்பவர்கள் தான் அப்படி பேசுகிறார்கள். இதற்கு பின்னால் பொருளாதார, அரசியல், நிர்வாக, ராஜதந்திர மற்றும் நாட்டுப்பாதுகாப்பு ரீதியிலான எந்த காரணமும் கிடையாது. தமிழ்நாட்டில் துணைதேசியவாத பிரிவினை கோஷ பாசிஸ்ட்டுகள் அதிகரித்திருக்கிறார்கள். இந்நிலையில், தனித்தமிழ் மாநிலம் என்பது ஆபத்தானது, தனித்தமிழ் மாநிலம் என்பது மிகப்பெரும் தேசவிரோதியாக இருக்கும். கேரளாவைப் பிரித்துக் கொடுத்தால் அடுத்த தேர்தலில் நிச்சயம் கம்யூனிஸ்ட்கள் அங்கே ஆட்சிக்கு வருவார்கள். அது படுமோசமான உள்நாட்டு, சர்வதேச பயங்கரங்களை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளார். ( கிருஷ்ண மேனன் கணித்தபடியே, 1957 தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் கேரளத்தில் ஆட்சியைப் பிடித்ததும், பின்னர் 1959-ல் ஆட்சி மத்திய அரசால் கலைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது ).

இதுதொடர்பாக, 1955 செப்டம்பர் 28 அன்று நேருவுக்குக் கடிதம் எழுதிய வி.கே.மேனன், “ தமிழகம், கேரளா, மலபார் பகுதிகளை இணைத்து கேரள - கர்நாடக எல்லையில் இருக்கும் காசர்கோடு வரையிலான பகுதிகளை உள்ளடக்கி தட்சிண பிரதேசம் என்கிற மாகாணத்தை உருவாக்கலாம். அது உத்திரப்பிரதேசம் அளவுக்கு இருக்கும்” என குறிப்பிட்டிருக்கிறார்.

இதனையடுத்து, ஐம்பெரும் மாகாணங்களை அமைக்கும் முடிவை வெளியிட்டார் நேரு. தட்சிணப்பிரதேசத்தில் தமிழக, கேரள, ஆந்திர, கன்னடப்பகுதிகள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு தென்னகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பெரியார், அண்ணா இருவருமே இதைக்கண்டித்தனர். 1956, பிப்ரவரி 20-ம் தேதி தமிழகத்தில் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் அனைத்தும் சேர்ந்து போராட்டமும், பொதுக்கூட்டமும் நடத்தினர். இந்நிலையில், சுமார் ஒருமாதம் கழித்து தட்சிணப்பிரதேசத் திட்டம் கைவிடப்படுவதாக நேரு அறிவித்தார்.

1956 நவம்பரில் மொழிவாரி மாநில புனரமைவுக்குப் பிறகு, திராவிட நாடு பரப்புரையை பெரியார் முன்னெடுக்கவில்லை. தனித்தமிழ்நாடு என்றே பெரியார் முன்வைத்தார். ஆனால், திமுக தொடர்ந்து திராவிட நாடு என பேசிவந்தது.

1953 ஜூன் மாதம் நடந்த விருதுநகர் திமுக மாவட்ட மாநாட்டில் பேசிய அண்ணா, “அடிப்படை பிரச்னை திராவிட நாடு திராவிடருக்கே என்பதுதான். அதற்கு தேர்தல் பயன்பட்டால், பயன்படும் சூழ்நிலை ஏற்பட்டால் தக்கவழிவகை முறைகளை வகுத்துக்கொண்டு திமுக தேர்தலில் அக்கறை காட்டும்” என்று பேசியிருந்தார். இதன்பிறகு, 1956 மே மாதம் நடைபெற்ற திருச்சி மாநில மாநாட்டில் தான் திமுக தேர்தலில் போட்டியிடுவது என வாக்கெடுப்பின் மூலம் முடிவுசெய்யப்பட்டது.

தேர்தலுக்கு தயாரான நிலையில், திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நேரடியாக பிரிவினை வேண்டும் கேட்காமல், மாநிலங்கள் விருப்பப்பட்டால் பிரிந்துசெல்லக்கூடிய மாநில சுயநிர்ணய உரிமையை வழங்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என கூறியிருந்தது.

1957 தேர்தல் முடிவுக்குப் பிறகும், தொடர்ந்து திராவிட நாடு கோரிக்கையை திமுக வலியுறுத்தி வந்தது. ஆண்டுதோறும் திமுக நடத்தும் மாவட்ட மாநாடுகளில் திராவிட நாடு திராவிடருக்கே முழக்கமும், திராவிடர் விடுதலை என்பதும் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. திராவிட நாடு என்கிற கோஷத்தை பெரியாரும், தமிழ்தேசியம் என்று பேசுவோரும் கண்டித்து வந்தனர். இவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் முரசொலி மாறன் எழுதிய ‘ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்?’ புத்தகம் 1957 மே மாதம் வெளியிடப்பட்டது. அதில், அதிகாரக்குறைவோ, நிதி ஒதுக்குவதில் இருக்கும் பாரபட்சமோ மட்டுமே திராவிட நாடு கோரிக்கை எழுப்பப்படவில்லை என்றும், திட்டக்குழு தென்மாநிலங்களுக்கு நிதியை அள்ளிக்கொடுத்தாலும், அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டாலும்கூட திராவிட நாடு அமைவதே நியாயம் என்பதே எங்களின் கருத்து என்றும் முரசொலி மாறன் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், 1961ம் ஆண்டு ஜனவரி மாதம் சர் சி.பி.ராமசாமி அய்யர் தலைமையில் தேசிய ஒருமைபாட்டுக்குழு என்கிற ஒரு ஆலோசனைக்குழவை காங்கிரஸ் அமைத்தது. இக்குழுவின் நோக்கம், இந்திய ஒன்றிய ஒற்றுமைக்கு எதிரான செயல்களைத் தடுப்பதற்கான ஆலோசனைகள் வழங்குவதாகும். இந்தக்குழு, 1961 நவம்பர் 5-ம் தேதி தன்னுடைய அறிக்கையை அளித்தது. அதில், பிரிவினைவாதிகள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடைசெய்யும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தின் 19-வது விதி திருத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியது. இதற்கிடையில், தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் (NIC) என்கிற அனைத்து மாநில முதல்வர்களை உள்ளடக்கிய இந்திய அளவிலான அமைப்பை 1961 செப்டம்பரில் நேரு உருவாக்கினார்.

1962 ஆகஸ்டில் விலைவாசி உயர்வைக் கண்டித்து நடத்திய போராட்டத்திற்காக, அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட திமுகவின் முக்கியமான தலைவர்கள் அனைவரும் சிறையில் இருந்த நேரத்தில் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில், கம்யூனிஸ்ட் உட்பட அனைத்துக் கட்சிகளும் காங்கிரஸை ஆதரித்தனர். திமுக தனித்துப் போட்டியிட்டது. கடும் போட்டிக்கு இடையே திமுக வென்றது. திமுகவின் இந்த வெற்றி மாநில காங்கிரஸாரை கடுமையாக பாதித்தது. பிரிவினை தடுப்பு மசோதா கொண்டுவரப்பட திருச்செங்கோடு வெற்றியும் ஒரு காரணம்.

திமுக தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து 1951 செப்டம்பர் 17 முதல், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ம் தேதியை திராவிடர் விடுதலை நாளாக கொண்டாட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, 1961 வரை திராவிடர் விடுதலை நாள் ஊர்வலங்கள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. 1961-ம் ஆண்டு ‘தேசிய ஒருமைப்பாடு’ நாடு முழுவதும் விவாதப்பொருள் ஆகியிருந்த நிலையில் திராவிடர் விடுதலை நாள் பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. பின்னர், அண்ணாவின் கோரிக்கையை ஏற்று அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால், 1962-ல் விலைவாசி உயர்வைக் கண்டித்து திமுகவினர் போராட்டம் நடத்தி அண்ணா, நெடுஞ்செழியன், கருணாநிதி, நடராசன், மதியழகன் என கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவருமே சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அந்த ஆண்டு திராவிடர் விடுதலை நாள் பேரணி நடத்தப்பட்டதற்கான குறிப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில், தேசிய ஒருமைப்பாடு விவாதம் நடந்துகொண்டிருந்த போதே, இந்திய -சீனப்போர் தொடங்கிவிட்டது. 1962 அக்டோபர் - நவம்பர் வரை அப்போர் நடைபெற்றது. போருக்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் சி.பி.ராமசாமி அய்யர் பரிந்துரை மற்றும் தேசிய ஒருமைபாட்டுக்குழு முடிவுகளின் அடிப்படையில் பிரிவினைவாத தடுப்புச் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. மசோதாவின் மீது பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரன், திராவிட நாடு அடைவதே திமுகவின் லட்சியம் என்று குறிப்பிட்டார்.

1963 ஜனவரி 25-ம் தேதி இம்மசோதாவை எதிர்த்து அண்ணா பேசினார். அவ்வுரையில், பிரிவினைத் தடுப்புச் சட்டம் குறித்து எல்லா கட்சிகளிடமும் கருத்துபெற்ற சி.பி.ராமசாமி அய்யர் குழு திமுகவிடம் கருத்துக்களை பெறாததை கண்டித்தார் .‘எங்களது நோக்கம் தவறு என்று நீங்கள் நினைத்தால் எங்களை மனமாற்ற முயற்சிக்க வேண்டுமே தவிர, சட்டத்தால் ஒடுக்கக்கூடாது’ என்று குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் இம்மசோதா முன்வைக்கப்பட்ட போது, இதை பிரிவினை எதிர்ப்பு மசோதா என்பதைவிட, திமுக எதிர்ப்பு மசோதா என்றே தென்னகத்தில் மக்கள் நினைக்கிறார்கள் என்று ஆந்திராவைச் சேர்ந்த நரசிம்ம ரெட்டி என்கிற உறுப்பினர் குறிப்பிட்டார். ஒரே ஒரு கட்சிக்கு எதிராக மசோதா கொண்டுவரப்படுவதாக விமர்சனம் எழுந்த நிலையில், அவையில் பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ஏ.கே.சென், “ யாரெல்லாம் வெளிப்படையாக பிரிவினை கேட்கிறார்களோ, யாரெல்லாம் வெளிப்படையாக தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசுகிறார்களோ, பஞ்சாப்பிலிருந்து தென்னிந்தியா வரை, அவர்களுக்காகத்தான் இம்மசோதா கொண்டுவரப்படுகிறது” என்று விளக்கமளிக்க வேண்டியிருந்தது. மசோதா கொண்டுவருவதற்கான காரணமாக, “1940களில் முஸ்லீம் லீக், பாகிஸ்தான் கோரிக்கையை வலியுறுத்திய பிறகு மாகாண தேர்தலில் பெரும் வெற்றிகளைக் குவித்தது. அதுவே பாகிஸ்தான் கோரிக்கைக்கு வெகுமக்கள் ஆதரவைக் கொடுத்தது. இதை அடிப்படையாக வைத்தே இத்தகைய பரிந்துரை செய்யப்பட்டது” என்று வி்ளக்கமளித்தார்.

பிரிவினைவாத தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், 1963 ஜூன் 8,9,10 ஆகிய தினங்களில் திமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டப்பட்டு, திமுகவின் விதி 2 திருத்தப்பட்டது. அதன்படி, “தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய நான்கு மாநிலங்களும் இந்திய அரசுரிமை, ஒருமைத்தன்மை, அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு, இயன்ற அளவு கூடுதல் அதிகாரங்களைப் பெற்று, நெருங்கிய திராவிட கூட்டமைப்பாக இருக்க பாடுபடுவது” என்பது கொள்கையானது.

#C N Annadurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment