முதலில் அண்டை நாடு… இப்ப நம்ம நாடு… அப்ப அண்டை மாநிலம்… இப்ப நம்ம மாநிலம்… அன்று அடுத்த மாவட்டம்… இன்று நம்ம மாவட்டம்… நேற்று அந்த வீட்டு… இன்று இந்த வீடு… நாளை நம்ம வீடா இருக்குமோ… என ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மனிதனையும் கதிகலங்க வைக்கிறது கண்ணுக்குக் காணாதக் கொடியக் கொரானோ வைரஸ்.
ஆரம்பத்தில் பத்திரிகைகளும் மீடியாக்களும் தான் அப்படி வரும்… இப்படிவரும்… எதைச் செய்யலாம்… எதைச் செய்யக் கூடாது… என்றெல்லாம் எழுதியும், வாசித்தும் மக்களை பீதிக்குள்ளாக்கின. ஆனால் ஆரம்பத்தில் மீடியாக்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் அந்த அளவிற்கு எந்த பாதிப்பையும் மக்களால் உணர முடியவில்லை. ஆகவே மக்கள் கொஞ்சம் மெத்தனமாகவே இருந்தனர்.
பின்னர் இம்மாதம் 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு, அரசு விடுமுறை அளித்தது, அதன் பிறகுக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது. அப்போது மக்கள் மத்தியில் லேசான பய உணர்வு இருந்தது. ஆனால் அதிலும் மாணவர்களுக்கு, இந்த நோயினால் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதைப் பெற்றோரும் பொதுமக்களும் உணரத் தொடங்கினார்கள். மட்டுமின்றி வீடுகளில் பிள்ளைகளின் குறும்புத்தனங்களைப் பெற்றோர்களால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அதனால் எதற்குப் பிள்ளைகளுக்கு இந்த விடுமுறை எனப் பெற்றோர்களே சலித்துக் கொள்ளத் தொடங்கினார்கள்.
தொடர்ந்து சூழ்நிலைக்கு ஏற்ப கொஞ்சம் கொஞ்சமாக மாநில அரசுகள் களத்தில் இறங்கத் தொடங்கின. ஒவ்வொரு மாவட்டங்களின் நிலைமைக்கு ஏற்ப மக்களுக்கு அறிவுரை வழங்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கவும் தொடங்கின. அதில் முதல் முதலில் கேரளா மாநிலம் மக்களிடம் கோயில், தேவாலயங்கள் போன்ற புனிதத் தலங்களுக்குக் கூட மக்கள் செல்லக் கூடாது எனக் கட்டுப்பாடு விதித்தது. அதிலும் கூட ஒட்டுமொத்த மக்களும் அந்த அளவுக்கு அசையவில்லை.
இந்நிலையில் தான் திடீரென நம்ம பிரதமர் நரேந்திர மோடி களத்தில் இறங்கி கொரோனா வைரஸ் தாக்குதல் மூன்றாம் உலகப்போருக்கு நிகரானது. அதனால் மார்ச் 22 ஆம் தேதி மக்கள் அனைவரும் தாமாகவே முன் வந்து ஒரு நாள் முழுவதும் ஊரடங்கைக் கடைபிடிக்க வேண்டும் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பிறகுதான் மக்கள் உண்மையில் கொரோனாவின் கொடூரத்தைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினார்கள்.
அதோடு பெரும் பீதியடையவும் செய்தார்கள். முதலில் அந்தந்த மாநில அரசுகள் தாங்களாகவே முன் வந்து தங்கள் மாநிலங்களின் எல்லைகளை மூடினார்கள், பின்னர் மாவட்டங்களின் எல்லைகளை மூடினார்கள். இப்பொழுது மார்ச் 31 ஆம் தேதிவரை ஒட்டு மொத்த இந்தியாவிலும் 144 அவசர நிலைப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதனால் ஒட்டு மொத்த மக்களிடையேயும் ஒரு விதமான பீதி பற்றிக்கொண்டுள்ளது. அந்த பீதி இரண்டு விதத்தில் உள்ளது. முதல் பீதி கொரோனா தங்களையும் தாக்கிவிடுமோ என்பது. இரண்டாவதாக அனைவரும் வீட்டுக்குள்ளையே முடங்கிக் கிடந்தால் எப்படி வாழ்க்கையை ஓட்டுவது என்ற பயங்கரப் பீதி.
மக்களின் இந்த இரண்டு விதமான பீதியும் நியாயமானதே. கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி மக்கள் அடைந்துள்ள இந்தப் பீதி பற்றி இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசியத் தலைவரும், அகில உலக மருத்துவச் சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவருமான டாக்டர் விஜயகுமார் கூறும் போது;
“கொரோனா வைரஸ் தாக்குதல் என்பது கடுமையானதுதான். ஆனால் இன்றைக்கு மீடியாக்கள் ஏற்படுத்தும் பரபரப்பிற்கு ஏற்ற விதத்தில் நாம் பீதியடைய வேண்டிய தேவையில்லை. ஏனென்றால் இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டவர்களில் பத்து சதவீதம் மக்கள் மட்டுமே மரணமடைவதற்கான சாத்தியம் உண்டு. அதாவது நூறு பேரை இந்த வைரஸ் தாக்கினால் அதில் பத்து பேர் மட்டுமே உயிரிழக்கும் நிலைக்குச் செல்வார்கள். அதிலும் பெரும்பாலானவர்கள் அறுபது வயதைத் தாண்டியவர்களாகத்தான் இருப்பார்கள். மற்றவர்களை இதன் தாக்கத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம்” என்கிறார்.
மேலும் அவர் கூறும் போது; “அகில இந்திய மருத்துவ சங்கம் இதற்கான மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. அரசு அனுமதியளித்தால் அந்த சிகிச்சை முறையை மருத்துவர்கள் கையாண்டு இந்த வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு முடியும்” என்ற உத்தரவாதத்தையும் தருகிறார். “தற்போதைய சூழ்நிலையில் மக்கள் மத்தியில் கொரோன வியாதியைவிட பீதியே அதிகமாக உள்ளது. அந்த பீதியிலிருந்து மாறி மக்கள் தங்களைத் தாங்களே சுயக் கட்டுப்பாடு, சமூகத்திடமிருந்து விலகி இருத்தல், சுய சுத்தம் ஆகியவற்றின் மூலம் இந்த வைரஸ் தாக்குதலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்” என்கிறார்.
எனவே ஒரு பக்கத்தில் முன்னெச்சரிக்கை என்கின்ற பெயரில் மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் ஒரு வகையில் நன்மை பயப்பதாக இருந்தாலும், இன்னொரு வகையில் அவை மக்களைப் பெரும் பீதியடையச் செய்திருக்கின்றன என்பதுதான் உண்மை. அந்த பீதியும் சமூக வலைதளங்கள் பரப்பும் தேவையற்றச் செய்திகளாலும், வதந்திகளாலும் உருவாகக் கூடியதுதான் அதிகமாக உள்ளது.
எனவே மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தாக்குதலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு எடுக்கும் நடவடிக்கையைப் போன்று, மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பும் வகையில் தவறான கருத்துகளைப் பரப்பும் சமூக வலைதளங்கள் மீதும் கட்டுப்பாடு விதிப்பது இந்தக் காலகட்டத்திற்கு மிக அவசியமான ஒன்றாக உள்ளது.
கூடவே நீண்ட நாள் 144 தடை உத்தரவினால் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கும் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்குத் தேவையான அனைத்து அத்யாவசியப் உணவுப் பொருட்களும் கிடைப்பதற்கான வழிவகைச் செய்வதும் அரசின் தலையாயக் கடமையாகும். இல்லையேல் கொரோனா வைரஸ் தாக்குதல் வியாதியை விட, மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் பீதியே அவர்களைக் கடுமையாகப் பாதித்து விடும்.
(கட்டுரையாளர், முனைவர் கமல. செல்வராஜ் கன்னியாகுமரி மாவட்டம், அருமனையை சேர்ந்தவர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.