ஜிஎஸ்டி அனுபவம் சிறப்பாக செய்யப்பட்டால், ஒரே ரேஷன் திட்டமும் உண்மையான தேசிய மற்றும் நன்மைகள் கொண்ட பல்வேறு திட்டங்கள் வருவதற்கு அடித்தளம் அமைக்கும். அவற்றில் எல்பிஜி மானியம், சமூக ஓய்வூதிய திட்டம் ஆகியவையும் அடங்கும்.
வரத் பாண்டே, சுபாஷிஷ் பாந்தரா, கட்டுரையாளர்.
கோவிட் – 19 ஏற்படுத்திய பொருளாதார பிரச்னைகள், மாநிலங்களுக்கிடையே புலம்பெயர்ந்து தொழில் செய்யும் தொழிலாளர்கள் மீது கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. பல லட்சம் இந்தியர்கள் தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதற்காக மாநில எல்லைகளை கடந்துள்ளனர். இந்த பிரச்னைகள் அவர்களின் சமூக – பொருளாதார சூழலின் நிலையற்ற தன்மையை கோடிட்டு காட்டியுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
வரலாற்று ரீதியாக அரசுகள் இந்த இடைவெளியை நிரப்ப பல்வேறு நடவடிக்கைகளை முயற்சித்துள்ளது. அதன் முக்கிய பகுதியாக எளிதில் கிடைக்கக்கூடிய நலத்திட்ட நன்மைகள், ஒருவர் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தாலும் அவருக்கு அத்திட்ட நன்மைகள் கிடைப்பதற்கு ஆவண செய்யவேண்டும். ரேஷன் பொருட்களை பொருத்தவரையில், இந்த யோசனையை, ஜக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் 2011ம் ஆண்டு நியமிக்கப்பட்ட நந்தன் நிலகேனி தலைமையிலான குழு முதன்முதலில் விவாதித்தது. தற்போதைய அரசு ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்ட் என்ற திட்டத்தை இந்தாண்டு ஜீன் மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணியிருந்தது. 12 மாநிலங்களில் முதற்கட்ட ஆய்வையும் செய்துவிட்டது. மாநிலத்துக்குள்ளே அதன் துவக்கம் நன்றாக இருந்தது. ஆனால், மாநிலங்களுக்கு இடையில் சென்றபோது அதில் சில சுணக்கங்கள் ஏற்பட்டன. 2021 மார்ச் மாதத்திற்குள் இத்திட்டத்தை நிறைவேற்றிவிட வேண்டும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த, அதன் சவால்களை, நமக்கு கிடைத்த முந்தைய அனுபவங்களிலிருந்து நாம் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். முதலில் நிதி தாக்கங்கள்: இந்த ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்ட் திட்டம், எப்படி மாநிலங்களுக்கு இடையே நிதிச்சுமைகள் பகிரப்பட்டுள்ளது என்பதை பாதிக்கும். இரண்டாவது, கூட்டாட்சியின் பெரிய பிரச்னை மற்றும் மாநிலங்களுக்கு இடையே உள்ள ஒருங்கிணைப்பு. ஒரு அளவு அனைவருக்கும் பொருந்தும் என்பதை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்கவில்லை. ஏனெனில் அவர்கள், பொது வழங்கல் முறையை, அதிக மானியங்கள், அதிக வழங்கல் அளவு மற்றும் கூடுதல் பொருட்களை வழங்குவது ஆகியவை மூலம் தங்களுக்கு உகந்ததாக மாற்றியமைத்திருந்தனர். மூன்றாவது தொழில்நுட்ப அம்சங்கள்: ஒவ்வொரு ஆண்டும், 750 மில்லியன் பயனாளர்கள், 5 லட்சத்து 33 ஆயிரம் ரேஷன் கடைகள் மற்றும் 54 மில்லியன் டன் உணவு தானியங்களை ஒரே இடத்தில் கையாள வேண்டிய தொழில்நுட்ப வசதி பெற்றிருக்க வேண்டும்.
இந்த தடைகள் அச்சுறுத்துவதுபோல் தெரியலாம். ஆனால், முதலில் ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தியபோது, இதுபோன்ற பிரச்னைகளை நாடு எதிர்கொண்டது. அது ஒரே தேசம், ஒரே வரி என்று கூறப்பட்டது.
ஒரே ரேஷன் திட்டத்தைப்போல் பொருளாதார பிரச்னைகள் துவக்கத்தில் ஜிஎஸ்டிக்கு நெருக்கடி கொடுத்தன. நிகர ஏற்றுமதி செய்யும் மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் குஜராத், நிகர நுகர்வோரை கொண்ட உத்ரபிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களிடம் தங்களின் வரி வருமானத்தை இழக்கும் என்று கொந்தளித்தன. அப்போது வரி வருமான இழப்புக்கு, முதல் 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்தது. அதேபோன்ற வாக்குறுதியை, மகாராஷ்ட்ரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களின், புலம்பெயர்ந்தவர்களுக்கும் மத்திய அரசு வழங்கலாம். 5 ஆண்டுகளுக்கு, புலம்பெயர்ந்தவர்களுக்கு, கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம்.
மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பில், ஜிஎஸ்டிக்கும் இதே சவால்கள் ஏற்பட்டன. இந்த பிரச்னை குறித்து விவாதிப்பதற்கு, ஒத்துழைப்புடன் செய்யப்படும் கூட்டாட்சியில், எடுத்துக்காட்டாக, மத்திய அரசு, மத்திய நிதியமைச்சர் மற்றும் மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சிலை உருவாக்கியது. அதே போன்ற ஒரு தேசிய அளவிலான ஆணையத்தை இந்த திட்டத்திற்கும் ஏற்படுத்தலாம். திறம்பட செயலாற்ற இந்த ஆணையம் அடிக்கடி சந்திக்கும் வழக்கத்தை ஏற்படுத்தலாம். குறிப்பிட்ட முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பெற்ற நபரை நியமிக்கலாம். நம்பிக்கையை வளர்க்கும் விதமாக, பிரச்னைகளை தீர்க்கக்கூடிய வகையில் இயங்க வைக்கலாம்.
இறுதியாக, ஜிஎஸ்டி குறிப்பிட்ட, உயர்தர தொழில்நுட்ப உதவியுடனும், ஜிஎஸ்டி வலைபின்னலுடனும், மத்திய மற்றும் மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படுகிறது. ஒரே ரேஷன் திட்டத்திற்கும் அதே போன்றதொரு நிர்வாக முறை தேவைப்படுகிறது. நிலகேனி தலைமையிலான குழு, ரேஷன் பொருட்கள் எங்கு செல்கிறது என்பதை கண்காணிக்கவும், பயனாளர்களை பதிவு செய்துகொள்ளவும், ரேஷன் கார்டுகளை வழங்கவும், பிரச்னைகளை கையாளவும் மற்றும் பகுபாய்வு செய்வதற்கும் பொது வினியோக திட்டத்திற்கு ஒரு வலைபின்னலை உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. பல மில்லியன் மக்களின் வாழ்க்கைக்கு ரேஷன் பொருட்கள் மிக முக்கியமான தேவை. அந்த இடம் அனைவரையும் சேர்த்துக்கொள்வது, தனியுரிமை, பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடன் செயலாற்றுதல் போன்ற கொள்கைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். பொது வினியோக முறையில் ஒருங்கிணைந்த மேலாண்மை, நல்ல துவக்கத்தை வழங்கும்.
அதே நேரத்தில், ஜிஎஸ்டியில் உள்ள குறைபாடுகள் மற்றும் சவால்களில் இருந்து பாடம் கற்கவேண்டும். எடுத்துக்காட்டாக ஜிஎஸ்டி பணத்தை திரும்பப்பெறுதலில் தாமதம் ஏற்பட்டால், அது பணப்புழக்க பிரச்னைகளை ஏற்படுத்தும். அதேபோல் ரேஷன் உணவுப்பொருட்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டால், அது அழிவை ஏற்படுத்தும். எனவே, ஒரே ரேஷன் திட்டத்திற்கு வரையறைக்குட்பட்ட நேரத்திற்குள் செயல்படும் வகையிலும், 15 மாநிலங்கள் ஏற்றுக்கொண்ட பொது சேவைகள் உரிமை சட்டத்தைப்போல், உடனடி குறைதீர் முறையுடன் செயல்படும் வகையில் நாம் உருவாக்க வேண்டும்.
சிறு மற்றும் குறுந்தொழிலாளர்கள், ஒரே நாளில் தொழில்நுட்பத்தை கைகொள்ள வேண்டிய நிலையில் இருப்பவர்கள், தொகுப்பது தொடர்பான சுமை அதிகரிப்பது குறித்து குற்றம்சாட்டினர். அதேபோன்ற சவால்கள் ஒரே ரேஷன் திட்டத்திலும் ஏற்படும். பொது வினியோக திட்டத்தில் பங்குபெறுபவர்களை ஒரு வாரியத்தின் கீழ் கொண்டுவரவேண்டும். தவிர்க்க முடியாத துவக்க கால பிரச்னைகளிலிருந்து மக்களை காப்பதற்கு, எளிமையான முறையில் இந்த திட்டத்தை வைத்திருக்க வேண்டும். அதற்கு உதவி சேவைகளை பரவலாக்குவது, பல வழிகளில் ஒருவரின் உண்மைத்தன்மையை நிரூபிப்பது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.
இவையெல்லாம் சிறப்பாக செய்யப்பட்டால், ஒரே ரேஷன் திட்டமும் உண்மையான தேசிய மற்றும் நன்மைகள் கொண்ட பல்வேறு திட்டங்கள் வருவதற்கு அடித்தளம் அமைக்கும். அவற்றில் எல்பிஜி மானியம், சமூக ஓய்வூதிய திட்டம் ஆகியவையும் அடங்கும். இது, நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பான, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கும் நல்ல திட்டமாகும்.
இக்கட்டுரையை எழுதியவர்கள் ஒமிடியார் இந்தியா நெட்வொர்க்கில் பணிபுரிபவர்கள் ஆவார்கள்.
தமிழில்: R.பிரியதர்சினி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.