இயற்கை - மனிதனுக்கு இடையேயான உறவை உலகம் மறுபரிசீலனை செய்ய வந்த வாய்ப்பே கொரோனா பாதிப்பு

2000 ஆண்டுகளுக்கு முன் வேதகால முனிவர்கள், அனைத்து உயிர்களுக்கும் சமமான அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

இவ்வளவு அறிவியல் மற்றும் மருத்துவ வசதிகள் இருந்தபோதும், மனிதர்கள் எவ்வளவு பாதிக்கப்படக்கூடிய நிலையிலும், உதவியற்ற நிலையிலும் இருக்கிறார்கள் என்பதை இந்த தொற்றுநோய் காட்டிவிட்டது. உலகம் முழுவதும் உள்ள அறிவியல் விஞ்ஞானிகள், சரியான மருந்து கண்டுபிடிப்பதிலும், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதிலும், நேரங்காலம் பார்க்காமல் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

வெங்கையா நாயுடு, கட்டுரையாளர்.

இந்த ஆண்டு, நாம், முன் எப்போதும் பார்த்திடாத, ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்ட, கோவிட் – 19க்கு எதிராக பரபரப்பாக உலகம் போராடிக்கொண்டிருக்கும் வேளையில் உலக சுகாதார தினம் வருகிறது. இது மனிதர்களுக்கு தன் சுத்தத்தை மட்டும் வலியுறுத்தவில்லை. இயற்கையை சேதப்படுத்தாதீர்கள் என்றும் வலியுறுத்துகிறது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த ஊழியர்களின் மகத்தான பணிகளை நினைவுகூறும் ஒரு நிகழ்வாகவும் அமைந்துள்ளது. கோவிட் – 19 ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ பணியாளர்கள் மீதே, இந்தாண்டு, உலக சுகாதார நிறுவனம் அதீத கவனம் செலுத்துகிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

இவ்வளவு அறிவியல் மற்றும் மருத்துவ வசதிகள் இருந்தபோதும், மனிதர்கள் எவ்வளவு பாதிக்கப்படக்கூடிய நிலையிலும், உதவியற்ற நிலையிலும் இருக்கிறார்கள் என்பதை இந்த தொற்றுநோய் காட்டிவிட்டது. உலகம் முழுவதும் உள்ள அறிவியல் விஞ்ஞானிகள், சரியான மருந்து கண்டுபிடிப்பதிலும், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதிலும், நேரங்காலம் பார்க்காமல் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

மனிதர்களை கொல்லக்கூடிய வீரியம் கொண்ட வைரஸ் இளவரசர் என்றும், பரம ஏழை என்றும் வித்யாசப்படுத்தி பார்க்காது. மதம், இனம் என்ற எவ்வித வேறுபாடும் பார்க்காது. ஒவ்வொரு நாடாக இது உலகத்தையே ஆட்டுவிக்கிறது. ஊரடங்கு, எல்லையை மூடுவது என்று இந்த பரவலை தடுப்பதற்காக நாடுகள், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.

இது முரணாக மட்டுமல்ல வினோதமாகவும் இருக்கிறது. நாம் உலகளவில் இணையத்தின் மூலம் முன்எப்போதும் இல்லாததைவிட அதிகளவு இணைந்திருக்கிறோம். ஆனால் உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸ் நாடுகளின் எல்லைகளை மூடுவதற்கு வற்புறுத்தியுள்ளது. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தியுள்ளது.

இது மனித குலத்திற்கு பரிசோதனை காலம். இந்த போரில் இருந்து நாம் வெளியேறிய பின்னர், உண்மையாக மாற்றப்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை மீட்க நாம் முயற்சி செய்ய வேண்டும். தனிமனிதர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை களைய வேண்டும். இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணவேண்டிய சூழல் ஏற்படும். இந்த பேரழிவை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகளை தடுத்திருக்க முடியுமா? நமது வளர்ச்சி மாதிரியின் மீது, நமது சுற்றுச்சூழல் அமைப்பின் பலவீனம், நமது உற்பத்தி மற்றும் நுகர்வு முறையின் நிலையில்லாத தன்மை ஆகியவை குறித்து கேள்விகள் எழுப்பும் நேரம் வரும். இது உண்மையெனில் நாம் ஆச்சர்யப்படலாம். சில சிந்தனையாளர்கள், மனிதனின் பேராசை மற்ற உயிரினங்களின் வாழிடத்தை அழிப்பது போன்றவையே இதுபோன்ற பேரழிவுகளை ஏற்படுத்துகிறது என்று வாதிடலாம்.

சுற்றுச்சூழல் சமநிலையில் இருந்து நாம் விலகியிருப்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும் என கோவிட – 19 தொற்று வலியுறுத்துகிறது. இந்தியாவின் பழைய கொள்கையான இதை நாம் மதித்து, சமநிலை ஏற்படுத்துவது குறித்து இந்த சூழலில் எண்ணிப்பார்க்க வேண்டும். 2000 ஆண்டுகளுக்கு முன் வேதகால முனிவர்கள், அனைத்து உயிர்களுக்கும் சமமான அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற உலகத்தின் பார்வையை ஆதரித்தனர். ரிக் வேதத்தில், கீழ்கண்ட சமஸ்கிருத ஸ்தோத்திரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓம் தத்ச்ம்யோரவிரினி மஹே கட்டுண்யாஜ்நாப்பதாயே தெய்விஸ்வாஸ்திரசுனாஹா வாஸ்டிர்மனுஷேபஹயாஹா உர்தவமிஜிகாட்டுபேசஜம் ஷாம் நோ அஷ்டுவிபடே ஷாம் சாட்டுஸ்படே ஓம் சாந்தி சாந்தி சாந்தி (அந்த முனிவர் உலகின் அனைத்து உயிர்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறார். அவர் தாவரங்களுக்காக பிரார்த்திக்கிறார். குறிப்பாக மருத்துவ மூலிகைகள் அதிகளவில் வளர வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார். அதன் மூலம் அனைத்து நோய்களும் குணமாக்கப்பட்டு, நாம் ஒவ்வொருவரும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ பிரார்த்திக்கிறார். இரண்டு கால் உயிரினங்கள் மற்றும் நான்கு கால் உயிரினங்கள் ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் இறைவன் அமைதியை வழங்குவார் என்று அந்த முனிவர் நம்புகிறார். எல்லா பகுதிமக்களின் மனிதிலும் அமைதி ஏற்படட்டும் என்று அவர் பிரார்த்திக்கிறார் என்பதே இதன் அர்த்தமாகும்)

இந்த பிரார்த்தனை ஸ்தோத்திரம் , பண்டைய இந்தியாவின் முக்கியமான கொள்கையை சுருக்கமாக காட்டுகிறது. இயற்கையை மதித்து, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்வதற்கு, ஒவ்வொரு உயிரும், ஒவ்வொன்றுக்கு துணையாக இருக்க வேண்டும் என்பதை கோடிட்டு காட்டுகிறது. இயற்கையை வழிபடுவது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். விலங்குகள், தாவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் இறையின் வெளிப்பாடாக உள்ளதாக அது வலியுறுத்துகிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் சமநிலையை பேணுவது ஆகிய அனைத்துமே நமது பண்டைய கலாச்சாரங்கள் ஆகும்.

எனது மூதாதையரின் இயற்கை சார்ந்த அறிவு மற்றும் புரிதல் குறித்தும், அவர்கள் அதை மதத்தின் வெளிப்பாடாக்கி, அதை காக்க வேண்டியதை வலியுறுத்தியதற்கு நான் தலைவணங்குகிறேன் என்று நமது தேசப்பிதா மகாத்மா காந்தி கூறியுள்ளார்.

தற்போது இந்தியர்கள் மற்றும் உலகின் ஒவ்வொரு மனிதனும், இயற்கையை பாதுகாப்பதற்காக போட வேண்டும். அப்போதுதான் இந்த கிரகமும், அதில் வாழும் மக்களும், மற்ற உயிரினங்களும் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியாகவும் உயிர்வாழ முடியும். நாம் சுவாசிக்கும் காற்று, நாம் குடிக்கும் தண்ணீர் சுத்தமாக இருக்க வேண்டும். மண், தாவரங்கள் மற்றும் மற்ற இயற்கை வளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நமது பிரார்த்தனைகளும் இவற்றை வலியுறுத்தியே இருக்கும். பூமி மட்டுமல்ல வானமும், விண்வெளியும் நன்றாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வேத வரிகளை இங்கு பார்ப்போம்.

தியாவுசாந்திர் அண்டரிக்ஷாம் சாந்தி பிரித்வி சாந்திர் அப்பா சாந்திர் ஓசாதயா சாந்தி வனஸ்பதாயா சாந்திர் விஷ்வதேவா சாந்திர் பிரம்மா சாந்தி, சர்வம் சாந்தி சாந்திர் எவா சாந்தி, சா மா சாந்திர் எதி

(வான் மற்றும் விண்வெளியில் அமைதி வேண்டும். பூமியில் அமைதி நிலவ வேண்டும். தண்ணீரில் அமைதி நிலவ வேண்டும். தாவரங்களில் அமைதி நிலவவேண்டும். மரங்களில் அமைதி நிலவவேண்டும். இறைவன் வாழும் இயற்கையின் ஒவ்வொரு வடிவிலும் அமைதி நிலவவேண்டும். நம் உணர்வுகளில் அமைதி உள்ளது. எல்லா இடங்களிலும் அமைதி பரவுகிறது. வெளியே அமைதி, உள்ளே அமைதி, உங்கள் வாழ்வை முழுமையாக்கும் அமைதியை அனைவரும் பெறுங்கள் என்பதே அதன் பொருளாகும்)

சுதந்திரம் முதல் இந்தியா பல்வேறு சுகாதார அளவீடுகளிலும் குறிப்பிட்ட அளவு வளர்ச்சியை பெற்றுள்ளது. அம்மை, போலியோ உள்ளிட்ட கடுமையான தொற்றுநோய்களை விரட்டியுள்ளது. மனிதனின் சராசரி ஆயுள் 69 என்ற நிலையை எட்டியுள்ளது. தொற்று, கர்ப்ப கால, பிறப்பு மற்றும் ஊட்டசத்து குறைபாடு போன்றவற்றால் ஏற்படும் நோய்களை 1990 முதல் 2016ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், 61 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக குறைத்துள்ளது.

ஆனாலும், வாழ்க்கை முறை மாற்றங்களால், தொற்று அல்லாத நோய்களின் அளவு பெரியளவில் அதிகரித்துள்ளது. இந்தியாவின் 61 சதவீத இறப்புக்கு காரணம் இதய கோளாறு, புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற தொற்றல்லாத நோய்கள்தான் என்று சில ஆண்டுகளுக்கு முந்தைய உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த கவலையளிக்கும் நிலையிலிருந்து விடுபட, சுகாதாரமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தி, தேசியளவிலான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். உடல் உழைப்பில்லாத வாழ்க்கையை தவிர்த்தல், துரித உணவுகளை தவிர்த்தல் மற்றும் ஆரோக்கிய வாழ்வுக்கு தேவையான மற்ற நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும்.

யோகா, தியானம் மற்றும் முறையான சரிவிகித உணவை உட்கொள்வதால் ஏற்படும் நன்மை ஆகியவை குறித்த விழிப்புணர்வை குழந்தையில் இருந்தே அறிவுறுத்த வேண்டும். இவையெல்லாம் பள்ளி பாடங்களின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். இந்திய மருத்துவ சங்கங்கள் மற்றும் மருத்துவ மையங்கள் தலைமை ஏற்று மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இதில், பொதுமக்களுக்கு தகவல்களை கொண்டு செல்வதில் ஊடகங்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். மற்றொரு முக்கியமான பிரச்னை என்னவெனில், நாம் முதியவர்களை பாதுகாக்க வேண்டும். அவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இதுபோன்ற தொற்றுநோய் காலங்களில் அவர்கள் அதிகளவில் பாதிக்கக்கூடியவர்களாக உள்ளனர்.

சுகாதார கட்டமைப்பு வசதிகளில் கிராமம், நகரம் வித்யாசம் அதிகளவில் உள்ளது மற்றும் கோவிட் – 19 பொது சுகாதார துறையில் பெருமளவில் முதலீடுகள் செய்ய வேண்டும் என்பதை கோடிட்டுகாட்டி, அதில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை கூறுகிறது. இது நம்மை விழித்துக்கொள்ள செய்யும் ஒரு மணியாக கருதவேண்டும். ஆயுஷ்மான் பாரத்திட்டம் இந்த பிரச்னையை கையில் எடுத்து, 50 கோடி பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் 1.5 லட்சம் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள் வழியாக முதன்மை சுகாதார வசதிகள் வழங்கவேண்டும். பொது சுகாதாரத்தில் முன்னெச்சரிக்கை மற்றும் குணமடையச் செய்தல் ஆகிய இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வாழ்க்கை முறையில் உள்ள பிரச்னைகளை பேசி, அவற்றிற்கும் முழுமையான தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த தொற்றுநோய் மனிதனுக்கும், இயற்கைக்கும் உள்ள தொடர்பை மீண்டும் சோதித்து பார்க்க வேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டது. இந்த பூமியை தாவரங்கள், பறவைகள், விலங்குகள் மற்றும் அனைத்து உயிர்களுடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை நாம் உணரவேண்டும். இந்த தொடர்பின் பரிமாணங்களை நாம் புரிந்துகொள்வதுடன், உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ள ஒற்றை சுகாதாரம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அது சுகாதாரத்தை பேணுவதில், மக்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் என பலதரப்பட்ட அணுமுறையை கொண்டுள்ளது. இதன்மூலம் சுகாதார துறையில் வெற்றிபெற பல்வேறு துறைகளையும் ஒன்றிணைத்து, சுகாதார துறையில், உயிரியலாளர்கள், கால்நடை மருத்தவர்கள், வைரஸ் நிபுணர்கள், சுற்றுச்சூழல் வல்லுனர்கள் ஆகிய பல்வேறு துறை நிபுணர்களையும் சேர்த்துக்கொண்டு கொள்ளைகளையும், திட்டங்களையும் தீட்ட வேண்டும்.

நமக்கு ஒரே உலகம் மட்டுமே உள்ளது. அதில் சமநிலையை நாம் பேண வேண்டும். அப்போதுதான் நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். அறிவுடன், உண்மை அறிவையும் சேர்க்க வேண்டும். நாம், சுற்றுச்சூழலை பாதுகாத்து, மனிதர்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு மேம்பட்ட சுகாதாரத்துடன், பாதுகாப்பான பூமியை உருவாக்க ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்.

இக்கட்டுரையை எழுதிய வெங்கையா நாயுடு, இந்திய குடியரசு துணைத்தலைவர்.

தமிழில் : R. பிரியதர்சினி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close