முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர், டாக்டர் நான்சி மெசோனியர் பிப்ரவரி 6ம் தேதி கொரோனா வைரஸ் பரவுவது குறித்து எச்சரித்து, இது மேலும் பரவுமா என்பது இப்போது கேள்வியல்ல, சரியாக எப்போது தாக்கும், இந்த நாட்டில் எத்தனை பேர் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது என்று கூறினார். சீனாவில் இந்த வைரஸ் பரவத்தொடங்கி 10 வாரங்களுக்கு மேல் ஆகின்றன. சீனா மிகுந்த கட்டுப்பாட்டுடன், மக்களை கண்காணித்து வருகிறது. மேலும் சீன அரசு விரும்பினால், அங்குள்ளவர்களை இரும்பு கவசமணிந்து பாதுகாக்க முடியும். ஆரம்பத்தில் சிறிது தாமதமாகவே பணிகளை செய்து வந்தாலும், பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்த பின்னர், எல்லா பகுதிகளிலும் படு வேகமாக நடவடிக்கைகளை எடுக்கத்துவங்கிவிட்டது. போக்குவரத்தை தவிர்த்து, நகரங்களை மூடி வைப்பது, நகரத்திற்குள்ளே வெளியில் செல்வதை தடுத்து வைப்பது, கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள் ஏற்படுத்துவது, இரண்டு மருத்துவமனைகள் கட்டுவது, தேவையான அளவு மருத்துவர்கள், நர்ஸ்கள், துணை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை தயார் நிலையில் வைப்பது என்று அரசு தீவிரமாக செயல்படுகிறது. ஒழுக்கமான வாழ்க்கை முறையை கடைபிடித்து வரும் ரஷ்யாவும், ஜப்பானும் மற்றவர்களை விட தயார் நிலையில் இருக்கிறார்கள். ஆனால், இத்தாலியும், ஈரானும் மோசமான நிலையிலேயே உள்ளன.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
தயாராயிருக்கும் நிலை
இந்தியாவில் கவலைகொள்வதற்கு காரணம் இருக்கிறது. நாம் தயாராக இருக்க வேண்டும். பீதியடையத்தேவையில்லை என்று பிரதமர் சில நாட்களுக்கு முன்னர் கூறினார். அது உண்மையான தான். ஆனால், நம் நாடு எவ்வளவு தயாராக இருக்கிறது? இன்னும் துல்லியமாக கூறினால், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் எவ்வளவு தயாராக இருக்கின்றன? சில மாநிலங்களைத்தவிர அனைத்து மாநிலங்களிலும், சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. அங்கு விமான சேவை தினமும் நடக்கிறது. அன்றாடம் விமானங்கள் தரையிறங்குகின்றன. உள்நாட்டு பயணங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இங்குமங்கும் இடம் பெயர்கின்றனர். பெரும்பாலானவர்கள் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதிகளிலேயே வசிக்கின்றனர். வீடுகள் மிக நெருக்கமாக உள்ளன. எல்லா இடங்களிலும் குப்பை இருக்கிறது. நகரங்களும், மாநகரங்களும் சுகாதாரமின்றி காட்சியளிக்கின்றன. இந்த நிதர்சன உண்மையுடன், இந்நாடு எந்தளவுக்கு தயாராக உள்ளது?
பிரதமர் தன் முதல் மதிப்பாய்வு கூட்டத்தை மார்ச் 3ம் தேதி நடத்தினார். சுகாதாரத்துறை அமைச்சர் தனது அறிக்கையை மார்ச் 5ம் தேதி வழங்கினார். இதுவரை மாநில முதலமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஒரு கலந்தாய்வு கூட்டம் கூட நடத்தப்படவில்லை. தேசிய வைராலஜி மையம் மற்றும் 15 ஆய்வகங்கள் மட்டுமே தற்போது கொரோனா பரிசோதனை செய்யும் வசதியுடன் உள்ளன. நமக்கு இன்னும் அதிகளவில் பரிசோதனை மையங்கள் உடனடி தேவையாக உள்ளன. மற்ற நாடுகளிடம் இருந்து நாம் கற்ற படிப்பினை என்னவெனில், ஒருவருக்கு வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட அன்றே வைரஸ் உச்ச வேகத்தில் பரவி அனைவரையும் தொற்றிவிடுகிறது என்பதாகும். இந்தியாவில் இது ஒருவரிடம் இருந்து 2 பேருக்கும், 2 பேரில் இருந்து 6 பேருக்கும், 6 பேரில் இருந்து 30 பேருக்கும் பரவிவிட்டது. இவையனைத்தும் 3 நாளில் நடந்தது. இப்போது பீதியடையத்தேவையில்லைதான். எனினும், கவலையும், அவநம்பிக்கையும் ஏற்படுகிறது. ஒரு பெரிய அளவிலான பரப்புரை நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கப்பட்டது. கொரோனா குறித்த அச்சுறுத்தலில் போதிய கவனம் செலுத்தாமல், மாறாக அரசு குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிராம்பை வரவேற்பது என்று இருந்துவிட்டது. தற்போதும் கூட அதன் முக்கியத்துவம் வேறு சில விஷயங்களில் இருப்பது வருத்தமளிக்கிறது.
இதற்கிடையில், இந்த வகுப்புவாத வைரஸ், கொரோனா வைரசை எதிர்த்து போராடுவதில் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. நாம் இதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லையென்றாலும், சிறுபான்மையினர் மோசமான சூழ்நிலையில் வாழ்கின்றனர். அனைத்து சமுதாயத்தினருடன் நல்லுறவை பேணவில்லையெனில், சுகாதாரப்பணியாளர்கள் எவ்வாறு அப்பகுதிகளில் வாழும் மக்களை சென்றடைவார்கள். எவ்வாறு போலீஸ்காரர்கள் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை தனிமைப்படுத்தி, மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வார்கள். இதுபோன்ற அச்சுறுத்தல் உள்ள நோயை எதிர்த்து போராட, முதலில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு, அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேண வேண்டும். ஆனால் அரசு அண்மையில், நம்முள் விதைத்த கசப்பான சம்பவங்களால், அனைத்து சமுதாயத்தினரும் சேர்ந்து இந்த நோயை எதிர்த்து போராட வருவார்களா? குறிப்பிட்ட அளவினரே வருவார்கள். வீடுகளைவிட்டு வெளியேறி வருபவர்கள் அல்லது பயத்துடன் வாழ்பவர்கள் கூட வரமாட்டார்கள். தவிர, ஏன் சில நாடுகள் நம் குறைகளை சுட்டிக்காட்டும்போது, இந்தியா எதிர்வினையாற்றுகிறது. இந்தியா 1950ல் காலனி ஆதிக்கம் குறித்து கருத்து கூறவில்லையா? அல்லது இனப்பாகுபாடு அல்லது மனித உரிமை மீறல் (ரோஹிங்கியா இடப்பெயர்வின்போது) அல்லது இனப்படுகொலை (சில ஆப்ரிக்க நாடுகளில் நடந்தது) ஆகியவை குறித்து கருத்து கூறவில்லையா? அதேபோல் நம் மீதான குற்றச்சாட்டுக்களையும் நாம் ஏற்க வேண்டும்.
முன்பு எப்போதையும்விட, நமக்கு நண்பர்களும், வியாபார கூட்டாளிகளும் தேவை. நமது பொருளாதாரம் 8 சதவீதம் முதல் 4.7 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. உலக பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, 2020ல் 2.9 முதல் 2.4 சதவீதம் பொருளாதார சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. கொரோனா வைரஸ் மேலும் பாதிப்பை ஏற்படுத்தினால் தயாரிப்பு மற்றும் வழங்கலில் சிக்கல் ஏற்படும்.
சில அறிவுரைகள்
அரசு எடுக்கவேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து சில அறிவுரைகள் இங்கு கொடுக்கப்படுகின்றன. ஆனால், பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் சிலவற்றை ஏற்காது.
1. பிரதமர் உடனடியாக மக்கள் மத்தியில் உரையாற்ற வேண்டும். இந்த தேசிய பிரச்னையில் மத்திய அரசும், மாநில அரசும், தங்கள் வேற்றுமைகளை களைந்து, இணைந்தே மக்களை காக்கும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அதை மக்கள் உணர்வதற்கு ஏற்றவாறு ஒவ்வொரு வாரமும் நிலையை பிரதமரே நேரில் விளக்க வேண்டும்.
2. தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்க வேண்டும்.
3. குடியுரிமை திருத்தச்சட்ட செயல்பாடுகளை இடைநீக்கம் செய்ய வேண்டும். இதற்காக போடப்பட்ட வழக்குகளை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றத்தை கோர வேண்டும்.
4. டெல்லி கலவரம் குறித்து விசாரிக்க சுதந்திர ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும்.
5. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் அடங்கிய, தேசிய அவசரக்குழுவை நியமித்து, கோவிட்- 19ஐ கையாள வேண்டும்.
6. பிரமாண்டமான, உபயோகமற்ற திட்டங்களுக்கு அளிக்கப்படும் நிதியை தற்காலிகமாக நிறுத்தி, கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் அதிகரிக்கவும், வைரஸ் பாதித்தவர்களுக்கு தேவையான சிகிச்சையளிக்கவும் செலவிடவேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கு நிதி வழங்கி, அவர்களும் சிகிச்சையளிக்க ஒத்துழைக்க வேண்டும்.
7. கொரோனா வைரசுக்கு வயதானவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அவர்களுக்கு போதிய வசதிகளுடன், தனி வார்டுகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8. மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களை அதிகளவில் மாஸ்குகள், கிளவுஸ்கள், பாதுகாப்பான உடைகள், சானிடஸ்சர்கள் மற்றும் தேவையான மருந்துகள் ஆகியவற்றை உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு நடைமுறையின் படி தயாரித்து, பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
9. நோய் பாதிப்புள்ள நாடுகளுக்கு செல்லும் பயணிகளின் தேவையற்ற பயணத்தை ரத்து செய்து, அங்கிருந்து வருபவர்களுக்கு விசா வழங்குவதையும் தடை செய்ய வேண்டும். சர்வதே கருத்தரங்குகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.
10. சுற்றுலா, விமான போக்குவரத்து, தங்கும்விடுதிகள், சேவை மையங்கள், ஏற்றுமதி, இறக்குமதி போன்ற பாதிக்கப்படும் துறைகளுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் மற்றும் ஊக்கத்தொகை வழங்கவேண்டும். உங்கள் தரப்பில் இருந்து அடிக்கடி கையை கழுவவும். விரல்களால் எதையும் தொடாமல் இருக்க வேண்டும்.
தமிழில்: R. பிரியதர்சினி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil