Advertisment

தொற்றுநோயிலிருந்து தப்பித்து வருவது போரில் சண்டையிடுவதை போன்றது - அமர்த்தியா சென்

சமூக பேரழிவை கையாள்வதற்கு, பங்கேற்கும் ஆட்சியும், எச்சரிக்கும் பொதுமக்களின் கலந்துரையாடலும் தேவை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, coronavirus india, india migrants coronavirus, amartya sen, covid-19 cases in india, india economy, india lockdown, coronavirus india news updates, coronavirus india cases, coronavirus, coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

coronavirus, coronavirus india, india migrants coronavirus, amartya sen, covid-19 cases in india, india economy, india lockdown, coronavirus india news updates, coronavirus india cases, coronavirus, coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

சமூக பேரழிவுகளை சமாளிப்பது, ஒரு தலைவன், மேலிருந்து கீழ் வரை உள்ள அதிகார மையத்தை பயன்படுத்தி, அவர்களுக்கு கட்டளையிட்டு, வேறு ஒரு அறிவுரையின்றி, அனைவரும் அந்த தலைவன் விரும்புவதை செய்து, போரில் சண்டையிடுவதை போல் கிடையாது. மாறாக சமூக பேரழிவை கையாள்வதற்கு, பங்கேற்கும் ஆட்சியும், எச்சரிக்கும் பொதுமக்களின் கலந்துரையாடலும் தேவை.

Advertisment

அமர்த்தியா சென், கட்டுரையாளர்

இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயகம் என்பது குறித்தும், பழமையான வளரும் நாடு என்பதிலும், நாம் பெருமை கொள்வதற்கு காரணங்கள் இருக்கின்றன. எல்லோருக்கும் குரல் கொடுப்பதை தவிர ஜனநாயகம் நிறைய நடைமுறை நன்மைகளையும் நமக்கு வழங்கியுள்ளது. எனினும், அதை நாம் தற்போது சரியான முறையில் பயன்படுத்திக்கொள்கிறோமா? நாடு பெரிய சுகாதார சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கும்போது, அதன் தேவை அதிகம். முதலில் கொஞ்சம் வரலாற்றை தெரிந்துகொள்வோம். ஆங்கிலேயர்களின் ஆட்சி முடிந்தவுடன், இந்தியாவில் புதிய ஜனநாயகம் தோன்றியவுடனே நடைமுறை சிக்கல்களை நாடு நேரடியாக சந்திக்க நேரிட்டது. பஞ்சம் என்பது இந்தியாவில், ஆங்கிலேயர்களின் ஆட்சியின் வரலாறு முழுவதிலும், தொடர் நிகழ்வாக இருந்தது. அது ஜனநாயக இந்தியா நிறுவப்பட்டபின் உடனடியாக தடுக்கப்பட்டது. இந்தியாவில் கடைசி பஞ்சம் என்பது, 1943ல் ஏற்பட்ட வங்காள பஞ்சமாகும். சுதந்திரத்திற்கு முன், ஆங்கிலேய ஆட்சியின் முடிவில், ஏற்பட்ட அந்த பஞ்சத்திற்கு, அப்போது குழந்தையாக இருந்த நான் சாட்சியாவேன். அதற்குப்பின் இந்தியாவில் பஞ்சம் என்பதே கிடையாது. சுதந்திரத்திற்கு பின்னான தசாப்தத்தின் துவக்கத்தில் ஒரு அச்சுறுத்தல் ஏற்பட துவங்கியது, அதையும் உறுதியாக நின்று இந்தியா தகர்த்தெறிந்துவிட்டது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

இது எப்படி நடந்தது? ஜனநாயகம், பலம் வாய்ந்த ஊக்கத்தை அரசிற்கு அளித்து பஞ்சத்தை தடுக்க கடுமையாக உழைக்க உதவியது. தேர்தல் மற்றும் பொது கலந்துரையாடல் காரணமாக, மக்களின் தேவைகளுக்கு அரசு உடனடியாக பதிலளித்தது. எனினும் தேர்தல் மட்டுமே இதை செய்துவிட முடியாது. உண்மையில் தேர்தல் என்ற நடைமுறையை மட்டும் வைத்து ஜனநாயகத்தை புரிந்துகொள்ள முடியாது. அது அவ்வப்போது நடக்கும் ஒன்றுதான். சில நேரங்களில் ஒன்றுக்கும், அடுத்ததற்கும் பெரிய இடைவெளி இருக்கக்கூடும். மேலும் அது அப்போதை அரசியல் சூழல் உருவாக்கக்கூடிய உற்சாகத்தால் ஊசலாடக்கூடியது. எடுத்துக்காட்டாக பிரதமர் மார்கரேட் தாட்சர், 1982ல் நடைபெற்ற பாக்லேண்ட்ஸ் போருக்கு முன் நடந்த வாக்கெடுப்புகளில் கடுமையாக பின்தங்கினார். போரில் பெரிய வெற்றி பெற்றவுடன், (ஆளும் அரசுகள் அடிக்கடி செய்யும்) 1983ல் நடந்த பொதுத்தேர்தலில் எளிதாக வெற்றி பெற்றார்.

நாடாளுமன்ற முறையில் நடத்தப்படும் தேர்தல்களில், கீழ் சபையில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியிருக்க வேண்டும் என்பது முதன்மையாக இருக்கும். வாக்களிக்கும் முறையில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கோ அல்லது அவர்களின் நலன் பற்றியோ வழக்கமான விதிகள் கிடையாது. எல்லோரும் அவர்களின் சொந்த விருப்பத்தில் வாக்களிக்களிக்கும் உரிமை கொடுக்கப்பட்டிருந்தாலும், தேர்தல், பஞ்சத்தை தடுக்கும் பலமான பாதுகாப்பு அரணாக இருக்க முடியாது. ஏனெனில் குறைவான அளவு எண்ணிக்கையிலான சிறுபான்மையினர் மட்டுமே பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். எனினும் பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் திறந்த பொது கலந்துரையாடல்கள், ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பவர்களின் துன்பம் மற்றும் அபாயத்தை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி, புரிந்துகொள்ள தூண்டுகிறது. அரசின் உறுதியில்லாத தன்மை இவற்றையெல்லாம் நடப்பதற்கு அனுமதிக்கும். நிச்சயமாக, அரசே, அது மக்கள் மற்றும் கட்சிகளால் நடத்தப்படும் அரசாக இருந்தாலும், புரிந்துகொள்ளும் திறன் இருந்தாலும், பொது கலந்துரையாடலில் இருந்து வந்த தகவல்கள் மற்றும் பகுத்தாய்வுகளில் இருந்து அவர்கள் கற்பதால், நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தலாம்.

உண்மையில் சிறுபான்மையினர் மட்டுமே பஞ்சத்தினால் ஏற்படும் இழப்புகளை சந்திக்கின்றனர். அதைப்பார்த்துக்கொண்டிருக்கும் பெரும்பான்மையினருக்கு, கலந்துரையாடல் மற்றும் பத்திரிக்கைகளால் தகவல் கிடைக்கப்பபெறுகிறது. அவர்கள் அரசை பொறுப்புடன் நடந்துகொள்ள தூண்டுகிறார்கள். இது ஒன்று பரிதாபத்தால் நடைபெறும் (அரசு கவனிக்கும்போது) அல்லது அரசின் செயல்படாத தன்மையினால், ஏற்படும் விரோதபோக்கால் நடைபெறும் (அரசு கண்டுகொள்ளாமலே இருக்கும்போது). ஜான் ஸ்டுவர்ட் மில்லின் ஜனநாயகம் குறித்த பகுப்பாய்வில், கலந்துரையாடலால் ஆட்சி என்ற வாசகம், அச்சுறுத்தும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களை காப்பதை அடையாளம் காண உதவுகிறது. குறிப்பாக பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் கட்டுப்பாடற்ற கலந்துரையாடலால் இது சாத்தியமாகிறது.

சமூக பேரழிவுகளை சமாளிப்பது, ஒரு தலைவன், மேலிருந்து கீழ் வரை உள்ள அதிகார மையத்தை பயன்படுத்தி, அவர்களுக்கு கட்டளையிட்டு, வேறு ஒரு அறிவுரையின்றி, அனைவரும் அந்த தலைவன் விரும்புவதை செய்து, போரில் சண்டையிடுவதை போல் கிடையாது. மாறாக சமூக பேரழிவை கையாள்வதற்கு, பங்கேற்கும் ஆட்சியும், எச்சரிக்கும் பொதுமக்களின் கலந்துரையாடலும் தேவை. பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பெரும்பான்மை சமூகத்திடம் இருந்து வெகுதொலைவில் இருக்கலாம். அதேபோல் பல்வேறு சமூக பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கலாம். அதற்காகத்தான் பொது கலந்துரையாடலை வைத்து, அதை கவனிப்பதன் மூலம், கொள்கை வகுப்பாளர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை புரிந்துகொள்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். நெப்போலியனுக்கு, கவனிக்கும் திறனைவிட சிறந்த அதிகார தோரணை இருக்கலாம். அது அவரின் ராணுவ வெற்றிக்கு தடை ஏற்படுத்தாது(ரஷ்யா பிரச்சாரம் தவிர). எனினும் சமூக பேரழிவுகளை கடந்துவருவதற்கு அனைத்தையும் உற்று கவனிப்பது முக்கியமான தேவையாகும்.

இது இந்த தொற்று ஏற்படுத்தியுள்ள பேரழிவுக்கும் பொருந்தும். வசதி படைத்தவர்கள் இந்த தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். மற்றவர்கள் இந்த தொற்று, தொற்றல்லாத ஏழைகளின் நோயான ஊரடங்கு, வேலை இழப்பு போன்றவற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பையும் ஈடுகட்ட வேண்டும் என்று கவலைகொள்வார்கள். புலம்பெயர் தொழிலாளர்களாக வீடுகளிலிருந்து தொலைதூரத்தில் இருந்து பணிபுரிபவர்கள், வீடுகளுக்கு திரும்பிச்செல்வதற்கு வழிகளை தேடுவார்கள். வெவ்வேறு வகையான குழுவினர் அனுபவிக்கும், வெவ்வேறு வகையான பிரச்னைகளை முன்னிலைப்படுத்தவேண்டும். இதுவே பங்கேற்கும் ஜனநாயகத்தால் ஏற்படக்கூடிய நன்மையாகும். குறிப்பாக பத்திரிக்கை சுதந்திரம், கட்டுப்பாடற்ற பொது கலந்துரையாடல் மற்றும் கவனித்து, ஆலோசனை பெற்று அரசு உத்தரவிடுவது ஆகியவையும் அதனால் ஏற்படும் நன்மையாகும்.

இந்தியாவில் கோவிட் – 19ஆல் ஏற்பட்ட திடீர் சிக்கலில், அரசு அதிரடியாக தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு சமூக இடைவெளி ஒரு தீர்வாகவும், முக்கியமானதாகவும் இருக்கிறது. இந்தியாவின் திட்டமிடுதலுக்கு சாதகமாவும் இருக்கிறது. எனினும் பிரச்னைகளின்போது, பரவலை குறைக்கும் நோக்கத்தில், ஒரு பக்கத்தை மட்டும் கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது. அது பல மில்லியன் ஏழை மக்களின் வாழ்வில் அழிவையே ஏற்படுத்தும். இந்த துன்பங்களை குறைக்கும் வகையில் மற்ற கொள்கைகள் வகுக்கப்படவேண்டும்.

வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் இரண்டும் ஏழை மக்களின் அடிப்படை தேவையாகும். எனவே அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கும் அவற்றை பாதுகாப்பதன் மீது சிறப்பு கவனம் செலுத்துவது கொள்கை வகுப்பதற்கான முக்கிய தேவையாகும். இந்த சூழலில் இதற்கு மதிப்பில்லை. பஞ்சமும், பட்டினியும் எப்போதும் பற்றாக்குறை வருமானம் மற்றும் உணவுகூட வாங்கமுடியாத இயலாமை, வறுமை ஆகியவற்றோடு தொடர்புடையவையாகும்.(இதை பொருளாதார ஆய்வுகள் நிரூபித்துள்ளன) இந்த திடீர் ஊரடங்கு பல மில்லியன் தொழிலாளர்கள் பணம் சம்பாதிப்பதை தடுத்திருக்கும், அதனால் பட்டினியோடு அவர்கள் வாழ்வதற்கு இன்னும் நாட்கள் இல்லை. அமெரிக்காவின் மிகச்சிறந்த பொருளாதாரம் (நிறைய வழிகளில் இது உண்மை) வேலையில்லாதவர்களுக்கும், ஏழைகளுக்கும் வருமான மானியத்தை அளித்துள்ளது. அவசர கால நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்காவில் சமூக ரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதை ஏற்றுக்கொண்டது, அரசியல் எதிர்க்கட்சியினரின் துணையோடு பொது கலந்துரையாடல் செய்ததாலே சாத்தியமானது.

இந்தியாவில், இழப்புகளிலிருந்தும், வறுமையிலிருந்தும் ஏழை மக்களை தள்ளி வைப்பதற்கு, அதன் பொருளாதார சூழல்களை தொடர்புபடுத்தி பார்க்கவேண்டும். பொது நிதியை ஏழைகளுக்கு உதவுவதற்கு பயன்படுத்துவது, இந்திய உணவுக்கழகத்தின் கிடங்குகளில் பயன்படுத்தாமல் உள்ள 60 மில்லியன் டன் அரிசி மற்றும் கோதுமையை உணவு தேவைக்காக பயன்படுத்துவது போன்ற திட்டங்கள் மூலம், சாத்தியமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினம் கிடையாது. (மத்திய பட்ஜெட்டில் பொதுநிதிக்கு சிறிதளவு உதவி கிடைக்கிறது) புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் வீடுகளில் சேர்ப்பது, அவர்களின் மீள்குடியேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது, அவர்களிடமுள்ள நோய் தாக்கம் மற்றும் சுகாதாரத்தில் கவனம் செலுத்துவது, இவையெல்லாம் சவாலான பிரச்னைகளாகும். இதற்கு போதிய கவனம் தேவை. மாறாக அறிவுரையின்றி நெகிழ்வற்ற முடிவுகள் எடுக்கப்பட்டால் சிக்கலே ஏற்படும்.

சமூக பேரழிவுகளை தடுப்பதற்கு, நன்றாக உற்று கவனிப்பதுதான் நாம் மத்திய அரசுக்கு கொடுக்கும் பணி. அவர்கள் நன்றாக காது கொடுத்து கேட்கவேண்டும். பிரச்னை என்ன? எங்கு அது சரியாக தாக்கியது? அதனால் மக்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள்? ஆகியவற்றை நன்றாக கேட்க வேண்டும். (எஞ்சியுள்ளவை அரசியலாக சவால் இல்லாதவை) பொது கலந்துரையாடல் ஆட்சியாளர்களுக்கு பெருமளவில் உதவியிருக்கலாம். ஒரு தொற்றுநோயிலிருந்து மீண்டுவருவது போரில் சண்டையிடுவதை போல் இருக்கலாம். ஆனால் உண்மையான தேவை அதிலிருந்து நீண்ட தொலைவில் உள்ளது.

இக்கட்டுரையை எழுதியவர் அமர்த்தியா சென், பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர், தாமஸ் W.லாமவுண்ட் பல்கலைக்கழக பேராசிரியர். ஹாவர்டு பல்கலைக்கழக பொருளாதாரம் மற்றும் தத்துவவியல் பேராசிரியர்.

தமிழில்: R. பிரியதர்சினி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment