முனைவர் கமல. செல்வராஜ்
கொரோனா தாக்கி இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது பற்றிய ஒரு பெரும் சர்ச்சை தற்பொழுது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கானத் தீர்வு என்ன என்பைதைத்தான் இங்கு விவரிக்கப்படுகிறது. இந்தத் தீர்வுக்குத் தமிழக அரசு செவிமடுத்தால், இத்துடன் இப்பிரச்னை முற்றுப்புள்ளியாகும். இல்லையேல் இது தொடர்கதையாகும் என்பதுதான் உண்மை.
சென்னையில் தனியார் மருத்துவமனையில், நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணராக இருந்த டாக்டர் சைமன், கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். அவரது உடலை அடக்கம் செய்வதற்கு, கீழ்ப்பாக்கத்திலுள்ள அரசுக் கல்லறைத் தோட்டத்தில் புதைப்பதற்கு, மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்து, அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். அங்கு இடமில்லை.
அதன் பிறகு அவரது உடலை அங்கிருந்து, திருவேலங்காடு கல்லறைத் தோட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு மக்கள் மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியும் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியும் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். அதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டு நள்ளிரவு ஒரு மணிக்குப் பிறகு டாக்டரின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டுள்ளது.
போலீசார் 21 பேரைக் கைது செய்துள்ளனர். அதோடு 75 பேர் மீது கொலை முயற்சி உட்பட 9 பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் மத்திய அரசு உடனடியாக மந்திரி சபையை அவசரமாகக் கூட்டி மருத்துவர், செவிலியர், சுகாதாரப் பணியாளர்கள் மீது யாரேனும் தாக்குதல் நடத்தி அது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 6 மாதம் முதல் 7ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாயிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என அவசர சட்டம் நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலோடு நடைமுறைப் படுத்தியுள்ளது.
அதோடு மட்டும் நின்று விடாமல், தமிழக அரசும் உடனடியாக ஒரு அவசரச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அதன்படி தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களுக்கு ஓராண்டு முதல் மூன்றாண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும், அதோடு அபராதமும் விதிக்கப்படும் என்பதுதான் அந்த அவசரச் சட்டம்.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் இறந்தவர்களின் உடலை அடக்குவதினால் எவ்விதப் பாதிப்பும் வராது என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்காததே இந்த எதிர்ப்பிற்குக் காரணம்.
டாக்டர் சைமனின் உடல் அடக்கத்தில் இவ்வளவு பிரச்னைகளும் நடந்தப் பிறகும், அவரின் மனைவி ஆனந்தி, தனது கணவரின் விருப்பத்திற்கு இணங்க, அவரின் உடலை, திருவேலங்காடு கல்லறைத் தோட்டத்திலிருந்து தோண்டி எடுத்து, கீழ்பாக்கத்திலுள்ளக் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். கணவரின் உடலைக் கீழ்ப்பாகம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார்.
இவை டாக்டர் சைமனின் மரணம் குறித்து பல்வேறு விதமான விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. சமூக ஊடகங்களான பேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் பல விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்த மாதிரியான பிரச்னைகள் தொடர்ந்து எழாமல் இருக்க வேண்டுமானால், இனி யாராவது, தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தால், அவர்கள் எந்த சாதி, சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், தமிழக அரசே அந்த உடலை ஏற்றெடுத்து, அதற்கென்று ஒரு மின்மயானத்தை(மின்சாரத்தில் எரிவூட்டுவது) உருவாக்கி அதில் வைத்து எரிவூட்ட வேண்டும். இந்த மின் எரிவூட்டும் நடைமுறை நம் அண்டை மாநிலமான கேரளாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதைத் தவிர்த்து மக்கள் மத்தியில் கொரோனா பற்றி இவ்வளவு பெரிய பீதியை உருவாக்கி வைத்து விட்டு, அதன் மூலம் இறந்தவர்களின் சடலத்தை மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடக்கம் செய்வதற்கு முற்பட்டால், எந்த மக்களும், எவ்வளவு பெரியச் சட்டங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் எந்த அளவிற்கு மதித்து அமைதி காப்பார்கள் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கும். மக்களின் உணர்வுடன் போராடுவதைவிட மாற்று வழி சிறந்தது.
(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com )
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.