இறுதியில், இது பொது சுகாதார சேவைகள் மட்டுமே, இதுபோன்ற தொற்று காலங்களில் நம்முடன் இருக்கும். நாம் பொது சுகாதார துறையை பலப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதை புறக்கணித்தால், நாம் ஆபத்தில் சிக்குவோம் என்பது மட்டும் உறுதி.
அபய் சுக்லா, கட்டுரையாளர்
இதுவரை அதிக கவனம் பெறாத ஒரு விஷயத்தை கோவிட் – 19 தொற்றுநோய் குறிப்பிட்டு காட்டுகிறது. மிகப்பெரிய தனியார் சுகாதார துறையில் குறைந்த அளவிலான உட்கட்டமைப்பு வசதிகள் பராமரிக்கப்பட்டுள்ளதை அது குறிக்கிறது. இந்தியாவில் கோவிட் – 19க்கான முதல் மரணத்தை தழுவியவர் கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு முதியவராவார். அவர் கல்புர்கி மற்றும் ஹைத்ராபாத் ஆகிய இரு நகரங்களுக்கும் இடையே தனியார் மருத்துவமனைகளில் மாற்றப்பட்டுக்கொண்டே இருந்தார். பின்னர் கல்புர்கிக்கு வரும் வழியில் அவர் இறந்தார்.
தனியார் மருத்துவமனைகள், பொது சுகாதார அதிகாரிகளுடன் முறையாக ஒருங்கிணைக்காததால், இந்த மரணம் ஏற்பட்டது. பின்னர் ராஜஸ்தான் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் சில தனியார் மருத்துவமனைகள் கோவிட் – 19 நோயாளிகளை அனுமதிக்க மறுத்ததாக அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. நாட்டில் 70 சதவீதத்திற்கும் மேலான சுகாதார கவனம் தனியார் மருத்துவமனைகளால் வழங்கப்படுகிறது. இதுபோன்ற தொற்றுநோய் காலங்களில், நாம் பொது சுகாதாரத்துறை மற்றும் தனியார் துறை ஆகிய இருவரின் பங்கையும் உற்று கவனிக்க வேண்டும்.
பொது சுகாதாரத்துறை தற்போது கடுமையான அழுத்தத்தில் உள்ளது. அது சிக்கலான மற்றும் உருவாகிவரும் பல்வேறு செயல்பாடுகளையும் செய்யவேண்டிய நிலையில் உள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும். முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கண்காணிக்க வேண்டும். தொற்றுநோய் பரவாமல் தடுக்க வேண்டும். தொற்று உள்ளவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தனிமைப்படுத்த வேண்டும். முறையான நெறிமுறைகள் வகுக்க வேண்டும். பொருளாதார ரீதியாக யாரையும் மறுக்காமல், நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டும். அவர்கள் கணிசமான அளவு தடைகள் இருந்தபோதிலும், நியாயமாகத்தான் பணிசெய்கிறார்கள்.
இந்த பொது செயல்பாடுகளை தனியார் துறையினரால் செய்ய முடியாது. ஊக்கமுள்ள முதல்நிலை சுகாதாரம், பொது சுகாதாரத்துறையினரால் ஒருங்கிணைக்கப்பட்டு, துவக்க நிலையிலேயே நோயாளிகள் கண்டுபிடிக்கப்படவேண்டும். பின்னர் அவர்களை தனிமைப்படுத்தி, சிகிச்சையளிக்க வேண்டும். இந்நிலையில், தனியார் துறையையும் உள்ளடக்கிய இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை திட்டங்கள், ஆயுஷ்மான் பாரத்தின் கீழ் உள்ள பிரதமரின் ஆரோக்கிய யோஜனா போன்ற திட்டங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை நாம் மீண்டும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இதுபோன்று வகுக்கப்பட்ட திட்டங்கள், கோவிட் – 19 போன்ற தொற்று காலங்களில் எவ்வாறு உதவுகிறது என்பதையும் குறித்துக்கொள்ள வேண்டும். மத்திய சுகாதார பட்ஜெட்டில், கடந்த இரண்டு ஆண்டுகளில், தேசிய சுகாதார இலக்கின் பங்கு 56 லிருந்து 49 சதவீதமாக குறைந்துள்ளது.(பொது சுகாதார சேவைகளை முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை வரை மட்டுமே கையாள்வது) சுகாதார காப்பீட்டு திட்டங்களின் பங்கு 4 லிருந்து 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த பாதையை நாம் தொடர வேண்டுமா?
மேலும், இந்த தொற்றுநோய் குறிப்பிடத்தக்க அளவு பரவி வரும் நிலையில், அதிகளவிலான நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதில் குறைந்தபட்சம் 5 சதவீதத்திற்கும் மேலானவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை, செயற்கை சுவாச கருவிகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகள் தேவை. சில இடங்களில் ஆயிரத்துக்கும் மேலானவர்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும். பொது மருத்துவமனைகளில் தற்போதுள்ள வசதிகளை நாம் அதிகளவு பெருக்க வேண்டும்.
பல மாநிலங்களில் பொது சுகாதார சேவைகள் புறக்கணிக்கப்பட்டதால், பெரும்பாலான மாவட்ட மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை. தனியார் மருத்துவமனைகள் உள்ளே வந்தால், தனியாரிடம் இருந்து சேவைகளைப்பெற்று ஒவ்வொரு நோயாளிக்கும் பணம் செலுத்துவதன் அடிப்படையில், போதிய கவனம் உறுதி செய்யப்படுகிறது. அதற்கு பிரதமரின் ஆயுஷ் யோஜனா திட்டம் வழிவகுக்கிறது.
கடந்த ஆண்டு முசாபர்பூரில் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திய அக்யூட் என்சிபாலிட்டிஸ் சின்ரோம் மூலம் நமக்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. (அதில் 150 இளம் உயிர்களை இழக்க நேரிட்டது) பெரும்பாலான நோயாளிகளுக்கு பிரதமரின் ஆயுஷ் யோஜனா திட்டத்துடன் தொடர்புடைய வசதிகளுடன் மாவட்டத்தின் பொது மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.
தற்போது கோவிட் – 19ஐ எதிர்கொள்வதில், ஒரு மாற்று அணுகுமுறை கேரளாவில் பின்பற்றப்பட்டு உள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தின் கலெக்டர், தனியார் மருத்துவமனை மற்றும் அரசு சாரா மையங்கள் தங்களின் மருத்துவ மற்றும் மருத்துவம் சார்ந்த துறைகளின் ஊழியர்களை பொது சுகாதாரத்துறையினருடன் சேர்ந்து நோய் கட்டுப்பாட்டிற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஸ்பெயின் ஒரு படி மேலாகச் சென்று, தொற்றுநோய் காலங்களில், அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் பொது சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வந்துவிட்டது. அயர்லாந்து இந்த முறையையே பின்பற்ற எண்ணியுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த தொற்று நோயும், சுகாதாரத்தில் முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என்ற நிலைகளின் இடையே உடைந்துவிட்ட ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தையே காட்டுகிறது. இந்த சூழ்நிலையில் அண்மையில் செய்யப்பட்ட நிதி ஆயோக்கின் திட்டத்தை நாம் கேள்வி கேட்க வேண்டும்.
அதில் தனியார், அரசு, கூட்டு முயற்சி PPP (Public private partnership) என்பதன் அடிப்படையில், மாவட்டத்தில் உள்ள பெரிய மருத்துவமனைகளை அது தனியாரிடம் ஒப்படைக்கும். அரசின் நேரடி கட்டுப்பாட்டிலிருந்து இம்மருத்துவமனைகள் மாற்றப்படும். இந்த பொது வசதிகள் அனைத்தும், தனது நோயாளிகளின் பாதிக்கும் மேற்பட்டவர்களிடம் கட்டண்ம் வசூலிக்கத் தொடங்கும். இந்த தனியார் மயம் பொது சுகாதார துறையின் காக்கும் திறன்களை பலவீனப்படுத்தும். தற்போது சேவைக்கான தேவைகள் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் வசதியில்லாதவர்களுக்கு சேவைகள் மறுக்கப்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
பொது சுகாதார அவசர சிகிச்சைகளை தனியார் நிறுவனங்கள் கையாள்வதில் ஒரு வரம்பு வேண்டும் என்று அமெரிக்காவின் அனுபவங்கள் உணர்த்துகின்றன. கோவிட் – 19ன் பரிசோதனைகள் தனியார் சுகாதார காப்பீட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அது அதிகரித்து வரும் தொற்றுநோயாக இருந்தபோதும் குறைவான அளவே சோதனை செய்தது. அமெரிக்க காங்கிரசில் தீவிரமான கேள்விகள் கேட்கத் துவங்கியவுடன், நோய்கள் தடுப்பு மையம் இலவச பரிசோதனையை மேற்கொள்வதாக உறுதியளித்தது. அது மருத்துவ காப்பீடு வசதி இல்லாவிட்டாலும் பரிசோதனை செய்யவும் ஒப்புக்கொண்டது.
இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, பொது சுகாதார துறையில் நாம் நவீன வளங்களை புகுத்தி அதை மேம்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. இதற்கு பொது சுகாதார துறைக்கு அதிகளவிலான நிதி ஒதுக்கப்பட வேண்டும். தேசிய சுகாதார கொள்கையின் லட்சியத்தை உயர்த்த பொது சுகாதார துறைக்கு 2025ம் ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 2.5 சதவீதத்தை செலவிட வேண்டும். (தற்போது இதற்கு 1.2 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது).
ஆங்கிலத்தில் இந்தக் கட்டுரையைப் படிக்க, இதில் க்ளிக் செய்யவும்.
இதனுடன் அதிகளவிலான வழக்கமான மற்றும் திறமையான மனித சக்தியையும் பணியமர்த்தி இணைக்க வேண்டும். அதுவும் உடனடியாக இதை சில மாநிலங்களில் செய்ய வேண்டிய தேவை உள்ளது. இது பொது சுகாதார துறையின் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, வேலைவாய்ப்பை அதிகரித்து, பொருளாதார வளர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும். உடனடியாக, முன்னுரிமை கொடுக்க வேண்டிய பகுதிகளில், பரிசோதனையை பயணிகளுக்கு மட்டுமின்றி, சந்தேக நபர்களுக்கும் விரிவாக்க வேண்டும்.
பெரிய பொது மருத்துவமனைகள் அவசர சிகிச்சை பிரிவுகளுடன் தயார் நிலையில் உள்ளதை உறுதிசெய்ய வேண்டும். அங்கு செயற்கை சுவாச கருவிகள், ஆக்ஸிஜன் ஆகியவற்றின் அளவையும் கண்காணிக்க வேண்டும். ஒருங்கிணைக்கப்பட்ட நோய் கண்காணிப்பு திட்டங்களை பலப்படுத்த வேண்டும். தன்னார்வ சுகாதார நிறுவனங்கள் பரவலாக அறிவியல் பூர்வமான விழிப்புணர்வு, கோவிட் – 19க்கு தொடர்புடைய செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை ஆகியவற்றை வெளியிட வேண்டும்.
இணையாக, தனியார் சுகாதார துறையினரின் முக்கிய கடமையான, நோய் அறிவிப்பு மற்றும் கண்காணிப்பு, முறையான சிகிச்சை நெறிமுறைகளை ஏற்றுக்கொள்வது மற்றும் தரமான சிகிச்சையளிப்பது, தொற்று சூழலில் சிகிச்சையளிக்க பொது சுகாதார சேவை மையத்தினருடன் இணைந்து பணியாற்றுவது ஆகியவற்றிற்கு அவர்கள் கட்டாயம் பங்களிக்க வேண்டும்.
எர்ணாகுளம் அணுகுமுறையில், பொது சுகாதார அதிகாரிகள், பொது மருத்துவமனைகளால் மட்டுமே அதிகளவிலான நோயாளிகளை கையாள முடியாது என்பதை கருத்தில்கொண்டு, தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து அதிகளவிலான படுக்கைகளை விலை கொடுத்து வாங்கி வைத்துள்ளனர். தனியார் மருத்துவத்துறையும், விதிமுறைகள் கடந்து, லாப நோக்கையும் விடுத்து, பொது சுகாதார இலக்குகளை எட்டுவதற்கும், சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
நாடு தொழில்நுட்ப வழிமுறைகளை வழங்குவது மற்றும் தனியாருக்கு நியாயமான விதிமுறைகள் வகுப்பது, இந்த வளங்களை பொது நலனுக்காக பயன்டுத்திக்கொள்வது என்று அதன் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். பொது சுகாதார துறையை வலுப்படுத்துவது, தனியார் துறை விதிமுறை இரண்டும் இணைந்து செயல்பட வேண்டும். அது சமூக பொறுப்பு, வெளிப்படைத்தன்மை, நோயாளிகள் உரிமை, அதிகார துஷ்பிரயோகம் குறைக்கப்பட்டது ஆகியவற்றை கருத்தில்கொள்ள வேண்டும். தேச நலன் மட்டுமே அதன் முக்கிய அம்சமாக இருக்க வேண்டும்.
கோவிட் – 19ஐ போன்ற ஒரு தொற்றுநோய்கள், எந்த சமூகத்திலும், பொது சுகாதாரம் என்பது சமூகம் சார்ந்த ஒன்று என்பதை நமக்கு அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறது. தனியாரிடமிருந்து நாம் பெறும் வசதிகள், மறுக்க முடியாத பங்காற்றும். இறுதியில், இது பொது சுகாதார சேவைகள் மட்டுமே, இதுபோன்ற தொற்று காலங்களில் நம்முடன் இருக்கும். நாம் பொது சுகாதார துறையை பலப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதை புறக்கணித்தால், நாம் ஆபத்தில் சிக்குவோம் என்பது மட்டும் உறுதி.
(டாக்டர் அபய் சுக்லா, பொது சுகாதார மருத்துவர் மற்றும் ஜன் ஸ்வஸ்திய அபியான் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர், இக்கட்டுரையில் உடன் பணிபுரிபவர்களின் யோசனையையும் குறிப்பிட்டுள்ளார்.)
தமிழில்: R.பிரியதர்சினி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.