உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்; கொரோனா வைரசுக்கு முகமும் கிடையாது, நிறமும் கிடையாது

பொது சுகாதார முயற்சிகள், தொற்றுநோய் குறித்த சமூக உளவியல், வைரஸ் மற்றும் அது பரவுவதால் ஏற்படும் அச்சம் ஆகிய இரண்டையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சாகர் அட்ரி, முக்தா கண்டி
நாம் வைரஸ் தொற்றுக்கு இரண்டு விதமாக எதிர்வினையாற்றலாம். ஒன்று சிங்கப்பூரைப்போல், முழுவதுமான மருத்துவ முறையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். அடுத்ததாக டெனால்ட் ட்ரம்பைப்போல் வெளிநாட்டு வைரஸ் என்றழைத்து இனவெறியை தூண்டலாம்.

தொற்று நோய்கள் பொது சுகாதாரத்தில் ஏற்படுத்தும் சீர்கேட்டைப்போல், பெரியளவில், பரவலாக சமூக உளவியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். மூத்த அரசியல் தலைவர்கள் முதல் சாதாரண பொதுமக்கள் வரை தொற்றுநோய்கள் அடிக்கடி, இனவாத, மதவாத அடிப்படையிலான வெறுப்புணர்ச்சி தோன்றுவதற்கு காரணமாகின்றன. புதுடெல்லியில் ஒரு சம்பவம், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இரண்டு டெல்லி பல்கலைக்கழக மாணவர்களை கொரோனா வைரஸ் என்று அழைத்துபோல், நியூயார்க்கிலும், ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண்ணை, அறிகுறிகள் காண்பித்ததால், கொரோனா வைரசை சுமந்து வந்தார் என்று நம்பி, தவறான தாக்குதலுக்கு ஆளாக்கினர்.

தொற்றுநோய்களும், இனவெறி அல்லது அயல்நாட்டு வெறுப்பும்

பயத்தின் அடிப்படையிலான தொற்றுநோய்களில் பல காரணிகளின் பங்களிப்பு இருக்கும். அது தூண்டிவிடும் அல்லது உத்ரவாதம் கொடுக்கும். சில முக்கிய அரசியல்வாதிகள், தலைவர்கள், ஊடகத்துறையினர், சமூகத்தில் பிரபலமானவர்கள் ஆகியவர்களின் பொறுப்பில்லாத வார்த்தைகளும், செயல்களுமே அதில் ஒரு காரணியாகும். இதுபோன்றதொரு பெரியளவிலான சிக்கல் ஏற்படும்போது, அதை கையாள்வதற்கு தயாராக இல்லாமல் இருப்பதுடன், ஒத்த எதிர்வினைகள் தேவைப்படும்போது பொறுப்புக்களை சுருக்கிக்கொண்டு, அதிபர் டொனால்ட் டிரம்பின் மந்தமான, தவறான தகவல்களைகொண்ட பதில்களும், பேச்சுக்களும் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. தற்போது அமெரிக்க முழுவதும் வைரஸ் சாத்தியமான அத்தனை வகைகளிலும், பெருமளவில் பரவி வருகிறது. தற்போது, மெக்சிக்கோ எல்லையில் எழுப்பப்பட்டுள்ள சுவரைப்போல், ஒவ்வொரு எல்லையிலும் சுவர் என்பது தற்போது தேவையான ஒன்று. இதுபோன்ற சுவர்களால், மெக்சிக்கோவுக்கு வைரஸ் பரவவில்லை என்பது போல், (அவர் பேசியபோது மெக்சிகோவில் ஒருவர் கூட பாதிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை) அயல்நாட்டு வெறுப்பை அல்லது இனவாதத்தை தூண்டிவிடும் வகையில் பேசியுள்ளார்.

தொற்றுநோய்களுக்கு எதிர்வினையான இனவாதம் அல்லது அயல்நாட்டு வெறுப்பை தூண்டிவிடும் வகையிலான பேச்சுக்கள் ஒன்றும் புதிய நிகழ்வு கிடையாது. இதற்கு அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் குடியேறிய ஐரோப்பியர்கள் மீது, 19ம் நூற்றாண்டில் மஞ்சள் காய்ச்சல் பரவியபோது காட்டப்பட்ட பாகுபாட்டை எடுத்துக்காட்டாக கூறலாம். 2014ம் ஆண்டு எபோலா பரவியபோது, அந்த தொற்று தாக்கம் ஏற்படுத்திய நாடுகளில் இருந்து வந்த மாணவர்களுக்கு கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டது. கொரோனா தொற்று காலத்திலும், ஆசிய வம்சாவளியை சேர்ந்தவர்களை வேறுபடுத்திக்காட்டுவதிலும், இனவாதம் மற்றும் அயல்நாட்டு வெறுப்புணர்வை இயல்பான ஒன்றாக காட்டுவதிலும் சமூக வலைதளங்களின் பங்களிப்பபையும் புறக்கணிக்க முடியாது.

தொற்றுநோய்களை பொறுத்தவரையில், அவை ஏற்படுத்தும் கண்ணுக்கு தெரியக்கூடிய தாக்கங்கள் பரவலாக தெரியாது. ஆனால் அவை உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று உளவியலாளர் ஸ்டீவன் டைலர் கூறுகிறார். ஒருவருக்கு சாதாரணமான தும்மல், இருமல் மற்றும் நோய்வாய்ப்பட்டது போன்ற அறிகுறிகள் காட்டப்படும்போது, பீதியில் உடனடியாக எதிர்வினையாற்றுவோம். அந்த தொற்றுநோய் தோன்றிய இடம் குறித்து ஒரு வெறுப்புணர்வுதான் தோன்றும். அது இனவாதத்தை தூண்டும் அல்லது உடல் ரீதியாக தாக்குவது வரை இட்டுச்செல்லும். இந்த நடவடிக்கைகள் சட்டம் இயற்றுபவர்கள் மற்றும் அதிகாரத்தில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் மூலமாக இயல்பான நிலைக்கு கொண்டுவரப்படும்.

டெல்லியில் ஹோலி பண்டிகைக்கான வழக்கமான நடவடிக்கைகளில் வடகிழக்கு பிராந்திய மாணவர்களை கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டை போலீசார் தள்ளுபடி செய்தனர். அமெரிக்காவில் ரிபப்ளிக்கனின் மூத்த அதிகாரி, சீனாவை, அவர்கள் வவ்வால் மற்றும் வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட விலங்குகள் முதலியவற்றை சமைக்காமல் உண்பதற்காக, இந்த நாகரீக உலகம் அவர்களை விலக்கி வைக்க வேண்டும் அறிவித்துள்ளார். பிறரை வேறுபடுத்தி பார்க்கும் மனப்போக்கு சில சமுதாயங்களுக்கிடையே அடிக்கடி வெளிப்படும். ஒவ்வொருவரின் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் மற்றும் வெவ்வேறான உணவுமுறைகள் உள்ளிட்ட வேற்றுமைகள் மீது இதுபோன்ற தொற்றுகளை ஏற்படுத்தும்போது குற்றம் சாட்டப்படும். தற்போதைய காலநிலையில், இதுபோன்ற உணர்வுகளும், பரந்த சூழலும் ஏற்கனவே, அமெரிக்கா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு பெரிய நாடுகளில் சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டன. இந்த உணர்வுகள் அடிக்கடி பரவும். அவை இதுபோன்ற தொற்றுநோய்களால் கூர்தீட்டப்படுகின்றன. அவை ஏற்கனவே உலகத்திடம் இருந்து விலகி இருப்பதற்கு நமக்கு பலமான எல்லை வேண்டும் என்று வாதம் செய்யும் அரசியல்வாதிகளின் பேச்சுக்களுக்கு தவறாக ஊக்கமளிக்கின்றன.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிப்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்:

தொற்றுநோய்கள் மற்றும் அதிர்ச்சிக்கு பிறகான மனஅழுத்த பாதிப்பு (PTSD – post-traumatic stress disorder)

மனஅழுத்தத்தை அதிகரிக்கும் மற்றுமொரு காரணி என்னவென்றால், தொற்றுநோய் பாதிப்பை கட்டுப்படுத்த செய்யப்படும் பலவந்தமான கட்டுப்பாடுகள். பொது நிகழ்ச்சிகளை ஒத்திவைப்பது, வணிக வளாகங்கள், திரையரங்குகள் மற்றும் கலாச்சார, மதம் தொடர்பான விழாக்களை நடத்தவிடாமல் தடுப்பதும் ஆகும். இந்த தடைகள் நாம் வழக்கமாக இல்லாமல் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் குறித்த ஆய்வின்படி, அவர்கள் அதிர்ச்சிக்கு பிறகான மனஅழுத்த பாதிப்பால், (PTSD – post-traumatic stress disorder) பாதிக்கப்பட்டுள்ளதற்கான அறிகுறிகளும் தென்படும். குறிப்பாக அவர்களுக்கு நோய் உறுதிசெய்யப்பட்டுவிட்டால், அவர்கள் இந்த மன அழுத்தப் பிரச்னைக்கு ஆளாகிறார்கள். இதுபோன்ற முற்றிலும் புதியதான, தெரியாத நோய்க்கு ஆளாகும்போது, மேலும் தனிமைப்படுத்தப்படும்போது, அவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அவர்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதற்கான முறையான விளக்கம் கொடுக்கப்படடாததால், அவர்கள் தங்களை காரணமின்றி தனிமைப்படுத்தி வைத்துவிட்டதாகவும், அரசை திட்டியும், சுகாதார பணியாளர்கள் மற்றும் அதோடு தொடர்புடையவர்களை திட்டிக்கொண்டும் தனிமையில் மனநிலை பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற தொற்றுநோய்களின் விளைவுகளை புரிந்துகொண்ட நிறைய அறிவியல் நிபுணர்கள் சமூகத்திற்கு அதை விளக்கியுள்ளனர். அதில் மிக முக்கியமானவர் மற்றும் குறிப்பிடத்தக்கவர் டாக்டர் அந்தோணி பாச்சி, தொற்றுநோய் தொடர்பாக அனுபவம் வாய்ந்தவர். தேசிய சுகாதார மையத்தின், அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் மைய தலைவர். பாச்சி அறிவியலை எளிமையாக, மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துக்கூறக்கூடியவராகவும், தவறான எண்ணங்களுக்கு விளக்கமளிப்பவராகவும் இருக்கிறார். பொதுமக்களுக்கு விளக்கமளிக்கக்கூடிய வகையில் அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியாளர்களுக்கும் தெளிவான விளக்கங்களை அளிக்கக்கூடியவராக இருக்கிறார். இதுபோன்ற தொற்றுநோய்களும், அதன் மூலம் ஏற்படும் பீதிகளுக்கு இந்த அமைதிப்படுத்தும் குரல்கள் அரணாகி மக்களை தேவையில்லாத பீதியில் இருந்து காக்கின்றன. நல்லவேளை இந்தியாவின் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பெரும்பாலும், இந்த வைரஸ் தொற்று குறித்து பொறுப்பில்லாத எவ்வித கருத்துக்களும் தெரிவிக்காமல் இருப்பது ஆறுதலாக உள்ளது. மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான இந்திய கவுன்சிலின் அறிவியலாளர்கள் மற்றும் மருத்துவர்கள் தாங்கள் கூறும் கருத்துக்களை தெளிவாக கூற திட்டமிட்டுள்ளனர். இந்தியாவின் கண்காணிப்பு வசதிகள் மற்றும் தொற்றுநோய்க்கு எதிர்வினையாற்றுவதில் அதன் வேகம் ஆகிய அனைத்தையும் ஊடகங்கள் விமர்சித்துவிட்டன. அது தொடர்பான விவாதங்கள் அறிவு செறிந்த எல்லைக்குள்ளும், கண்ணியமாகவும் இருந்தன. இந்திய குடியரசு கட்சியின் ராம்தாஸ் அத்வாலேவின் கோ கொரோனா என்று கோஷமிட்டபடி வைரலான வீடியோ மட்டும் அறிவுசாரா பழக்கமாக இருந்தது. ஆனால் இது ஆபத்தை ஏற்படுத்தாமல், நகைச்சுவை உணர்வை மட்டுமே ஏற்படுத்தியது கொஞ்சம் ஆறுதலான ஒன்று.

நமது பயம் தேர்ந்தெடுக்கப்பட்டதா?

மற்றொரு பக்கம் அனைவரையும் அச்சம் சூழ்ந்துள்ளது. எனினும், நாம் எவ்வளவு நோய் எதிர்ப்புதிறன் கொண்டவர்களாக இருந்தாலும், இந்தியா மற்றும் மற்ற நாடுகளில், நோய்களும், அது தொடர்பான பல்வேறு ஆபத்துக்களும் புரையோடிப்போய்கிடப்பதாக புகழ்பெற்ற பொதுசுகாதார அறிவியலாளர் டாக்டர் விக்ரம் பட்டேல் தான் எழுதியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார். எனில், அவற்றையெல்லாம் சகித்து வாழும் மக்கள், இந்த தொற்றுநோயைக் கண்டு மக்கள் கதறுவது முரணாகத்தான் உள்ளது என்கிறார். கோவிட் – 19ஐவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்திய தொற்றுகள் பல தலைமுறைகளாக நம்முடன் இருந்துள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள இந்த தொற்றுநோய்க்கு அதிகளவிலான ஊடக வெளிச்சம், கவனம் கிடைத்துள்ளது மற்றும் பொதுமக்களிடம் இருந்து ஓய்வில்லாத கேள்விகள் வந்துகொண்டேயிருப்பது இந்ததொற்றுறோயை மிகைப்படுத்திக்காட்டுகிறது. டிபி எனப்படும் டியூபர்குளோசிஸ் என்ற ஒற்றை நோய், இந்தியாவிற்கு கொரோனாவைவிட எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் தெரியுமா? என்று பட்டேல் கூறுகிறார். இந்தியாவில் டிபியின் தாக்கத்தை காட்டுவதற்காக ஒரு புள்ளிவிவரத்தை அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவில் ஒரு வாரத்தில் இறக்கும் டிபி நோயாளிகளின் எண்ணிக்கை, கொரோனா வைரசால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கையை மிஞ்சும். எனினும், இந்தியாவில் டிபி என்பது ஏழைகளின் நோயாக உள்ளது. அது சுகாதாரமற்ற, மோசமான நிலையில் உள்ளவர்களுக்கு ஏற்படும் வியாதியாக உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லையை கடந்து விமானங்களில் பயணம் செய்வதில்லை, ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்குவதில்லை. கார்ப்ரேட் அலுவலகங்களில் பணிபுரிவதில்லை. ஆனால் டிபியை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் நம் நாட்டில் மந்தமாக நடைபெறுகிறது. கொள்கை வகுப்பாளர்களால் டிபி எளிதாக தனிமைப்படுத்தி வைக்கப்படுகிறது. தற்போது ஆரோக்கியத்தின் மேல் ஏற்பட்டுள்ள கவனம், மற்றவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்ற உணர்வும் இந்த நோயைவிட கொடுமையானது. கொரோனா வைரஸ் போன்ற புதியதாக உள்ளதாலோ அல்லது நமக்கு கொடுக்கப்படும் குறைவான தகவல்களால் சில தொற்றுநோய்களை தேர்ந்தெடுத்து, அவற்றின் மீது அச்சம் கொள்கிறோம்.

அச்சத்தை கட்டுப்படுத்துவது, தொற்றுநோய்கள் மற்றும் அதிர்ச்சிக்கு பிறகான மனஅழுத்த பாதிப்பு மற்றும் களங்கம்

பயம் என்பது ஒரு சக்திவாய்ந்த மற்றும் தேவையான உணர்வு. அது மனித வாழ்க்கையையும், உடலையும் பாதுகாக்க தேவையான எதிர்வினையை ஆற்றி ஆபத்தை தடுப்பது உண்மைதான். ஆபத்தான தவறான தகவல்கள், பாகுபாடுகள், இனவெறி அல்லது அயல்நாட்டு வெறுப்பு ஆகியவற்றை சமாளிக்க வேண்டியது கட்டாயம். பதுக்கல் மற்றும் முக்கிய வளங்களை பீதியில் வாங்கி சேமிப்பது போன்ற அனைத்தும், மந்தை மனநிலையில் இருந்து ஏற்படுவது. தெளிவான, வெளிப்படையான, எங்கும் நிறைந்துள்ள தகவல்கள் மற்றும் செய்திகள் சரியான அவசர காலத்தில் கொடுக்கப்படுவது தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவும். அது பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், சுகாதார துறையினரை மட்டுமே பின்தொடர்வது மற்றும் அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் கொண்ட தகவல்களை மட்டுமே நம்புவதற்கும் அவர்களுக்கு உதவும். சமூக வலைதளங்கள் நிறைந்த காலத்தில் கோவிட் – 19 என்பது முதல் தொற்றுநோயாக இருப்பதால், தொற்றுநோய் பரவும் வேகத்தைவிட, தேவையில்லாத சமூக கிளர்ச்சி ஏற்படும் வகையிலான செய்திகளை பரப்புவதை, செய்தி அனுப்புபவர்கள் தவிர்க்க வேண்டும். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனவே சமூக வலைதளத்தை பயன்படுத்தி யாரும் விளையாட்டு காட்டவேண்டாம். நோய் தடுப்பு மையத்தின் அறிவுரைப்படி, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், நோய் தாக்கப்பட்டவர்கள், நோய் தாக்குதலால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் மற்றும் இறந்தவர்களின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள், ஒரு குறிப்பிட்ட இனம் அல்லது தேசம் சார்ந்தவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மட்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இந்தநேரத்தில், நோய் குறித்து அறிவுறுத்துவதைப்போல், இனவெறி அல்லது அயல்நாட்டு வெறுப்பும் தவறு என்பது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகமிக அவசியம். இதுவும், பயத்துடனான எதிர்வினையும் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும். உள்ளூர் செய்தித்தாள்கள் மற்றும் உள்ளூர் ஊடகங்களின் மூலம் அனைவருக்கும் துல்லிமான தகவல்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இந்த பொது சுகாதார பிரச்னைகள் தலைவிரித்தாடும்போது நம் மனதை தளரவிடக்கூடாது. தொற்றுநோய்கள் குறித்த சமூக உளவியலை கட்டுப்படுத்துவது எளிதல்ல. ஆனால், ஒன்றை நாம் தெளிவாக உணர்த்த வேண்டும். அது வைரசுக்கு முகமும் இல்லை. இனமும் இல்லை என்பது மட்டுமே. பொது சுகாதார முயற்சிகள், தொற்று நோய் குறித்த சமூக உளவியல், வைரஸ் மற்றும் அது பரவுவதால் ஏற்படும் அச்சம் ஆகிய இரண்டையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர்கள் குறிப்பு:
சாகர் அட்ரி, டிபி, மலேரியா மற்றும் மற்ற தொற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான புதிய கண்டுபிடிப்புகளை செய்யும், இந்திய சுகாதார நிதி நிறுவனத்தின் திட்ட இயக்குனர்.

முக்தா கண்டி, காந்தி நகர் ஐஐடியின் ஆராய்ச்சி நிபுணர். தற்போது மக்கள்தொகை கவுன்சில் என்ற புதுடெல்லி பொது சுகாதார ஆராய்ச்சி மையத்தின் திட்ட அலுவலர்.

தமிழில் : R. பிரியதர்சினி.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close