ஊரடங்கு தடையும், ஏழை மக்கள் வாழ்வும்

இங்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், அவர்களின் வாழ்க்கையையும், சுதந்திரத்தையும் மேம்படுத்துமா என்று சிந்தியுங்கள். இந்த கடைசி மனிதர்கள் சிலரை நான் இன்று சந்தித்தேன். இன்று அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் உங்களையும், என்னையும் காக்கும். ஆனால் விளிம்பு நிலை மனிதர்களை காக்குமா? அவர்களின் வாழ்க்கையை நிச்சயம் அது பாதிக்கவே செய்யும்.

By: Published: March 27, 2020, 5:59:40 PM

ஹர்ஷ் மாண்டர், கட்டுரையாளர்
நான் கொரோனாவால் சாகமாட்டேன். அதற்கு முன்னரே பட்டினியால் செத்துவிடுவேன். நான் இந்த புலம்பலலை ஒரு டஜனுக்கும் மேற்பட்ட முறை பல்வேறு ஆட்களிடம் இருந்து கேட்டுவிட்டேன். நான் பழைய டெல்லியில், உதவியின்றி தவிக்கும், இந்த துன்பத்தை அவர்களிடம் பகிர்ந்துகொள்ள ஆட்கள் இல்லாத நிலையில் அவர்களுக்கு உணவளிக்கும் ஒரு குழுவில் இணைந்துள்ளேன். அங்கு நான் கேட்டதுதான் மேல் சொன்னவை. இப்போது நாங்கள் அனுபவிக்கும் கொடுமையைவிட பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொடுமையானதாக இருக்கவில்லையென்று ஒருவர் கூறுகிறார். இந்த சூழலில் நாம் எவ்வாறு வாழ்வோம் என்று நமக்கு தெரியாது.

ஒரு மணி நேரம் கழித்து, குழப்பத்துடனும், விரக்தியுடனும் நமது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் நிவாரண அறிக்கையை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அவரது குறிக்கோள் கொரோனா வைரஸ் ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்ப்பிலிருந்து ஏழைகளை பாதுகாப்பது என்று அறிவித்துள்ளார். யாரும் பட்டினியோடு செல்ல அனுமதிக்க மாட்டேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

ஒரு குடும்பத்திற்கு கூடுதலாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ பருப்பு, முதியவர்களுக்கு ரூ.1000, கைம்பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 மூன்று மாதங்களுக்கு ஜன்தன் வங்கி கணக்கு உள்ள பெண்களுக்கு செலுத்தப்படும். ரூ.2,000 விவசாயிகளுக்கு தற்போது உள்ள திட்டத்தின் கீழ் வழங்கப்படும். இது உறுதிப்படுத்துமா?

நிதியமைச்சரோ அல்லது பிரதமரோ, ஆபத்தான வகையில் பரவிவரும் கோவிட் – 19ஐ எதிர்த்து போராடும் நடவடிக்கைகள் குறித்த அவரின் தேசத்திற்கான மூன்று உரைகளில், பேரழிவை ஏற்படுத்த சாத்தியமுள்ள இந்த வைரசுக்கு எதிரான போரில் நாட்டைகாக்க எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள் பல மில்லியன் முறைசாரா தொழிலாளர்கள், வேளாண் பணியாளர்கள் மற்றும் ஆதரவற்ற மக்களை பாதிக்கும் என்பதை ஒப்புக்கொண்டார்.

மோடி ஏழைகளை குறித்துக்காட்டி, மற்றவர்கள் அவர்களின் துன்பத்தை போக்குவதற்கு உதவவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். நிர்மலா சீதாராமன் அவர்களின் துன்பம் குறித்து குறிப்பிட்டுருந்தார். ஆனால் ஒருமுறை கொஞ்சம் உணவும், சிறிது பணமும் கொடுத்தாலே போதும் என்று அவர் எண்ணியதுபோல் தோன்றுகிறது. அவர்களுக்கு இந்த பேரிடரில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அது உதவிவிடும் என்று எண்ணுகிறார்.

இவை ஒவ்வொன்றையும், செயல்படுத்துவதில் பல தடைகளும் உள்ளது. எடுத்துக்காட்டாக, எவ்வாறு அவர்கள் ஊரடங்கு தடை இருக்கும்போது பணத்தை தங்கள் வங்கிக்கணக்கில் இருந்து எடுத்துக்கொள்வார்கள்? சாப்பாட்டிற்கே வழியில்லாத மக்களுக்கு, தெருவோர குழந்தைகளுக்கு, வீடற்றவர்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு, தொலைதூரத்தில் வசிக்கக்கூடிய பழங்குயினருக்கு வங்கிக்கணக்கோ அல்லது கார்டுகளோ இல்லை.

மேலும் குறிப்பாக, தேசிய ஊரடங்கு தடையால் ஏற்படவுள்ள பொருளாதார பாதிப்பு பேரழிவாக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்ளவில்லை. ஏற்கனவே பாதாளத்தில் உள்ள முறைசாரா பணியாளர்களின் பொருளாதாரம்தான் கடுமையாக பாதிக்கப்படும். ஜெயந்தி கோஷ் என்ற பொருளாதார நிபுணர், தனது அண்மை பேட்டியில், முதல் இரண்டு நாள் ஊரடங்கு தடையால் ஏற்படும் பொருளாதார இழப்பே, பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட மொத்த பொருளாதார பாதிப்பைவிட அதிகமாக இருக்கும். பொருளாதாரம் கீழ்நோக்கி சரிந்து, அதலபாதாளத்தில் விழுந்துவிடும் ஆபத்தான நிலையில் நின்றுகொண்டிருக்கிறது என்கிறார். அவரது கடுமையான மதிப்பீட்டில் உள்ள உண்மையை அங்கீகரிக்க, முறையான பொருளாதார பயிற்சி நமக்கு தேவையில்லை. யார் அறுவடை செய்வார்கள்? அந்த அறுவடை பொருட்களை யார் வாங்குவார்கள்? சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் முடிவைக்க உத்தரவிடப்பட்டுள்ளன. உணவகங்கள் மற்றும் தையலகங்கள் போன்ற முறைசாரா பணிகளும் மூடப்பட்டுள்ளன. ஒரு வீடில்லாதவர் என்னிடம் கூறினார். நான் தெருக்களில்தான் வளர்ந்தேன். எனக்கு குடும்பம் கிடையாது. நான் தந்தூர் ரொட்டிகள் செய்வதற்கு கற்றுக்கொண்டு தினமும் ரூ.500 சம்பாதித்து வந்தேன். தற்போது, நான் கையைக்கட்டி அமர்ந்துகொண்டு நீங்கள் தரும் இரண்டு ரொட்டிகளுக்காக காத்திருக்கிறேன் என்று கூறியபோது, நான் வெட்கித் தலைகுனிந்தேன்.

நாங்கள் உணவளிக்கும் இடத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடற்ற மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். அதில், நாங்கள் 6 மணி நேரத்திற்கும் மேலாக யாராவது உணவு கொண்டு வருவார்களா என்று காத்திருந்தோம் என்று பெரும்பாலனவர்கள் கூறினார்கள். கடந்த மூன்று நாட்களில் தாங்கள் இரண்டு முறை மட்டுமே சாப்பிட்டதாக பலர் கூறினார்கள். தொண்டு நிறுவனங்கள் மூலம் அவர்களுக்கு கிடைத்தது குறைவான உணவுதான். எனினும் அவர்கள் தங்கள் வயிற்றை நிரப்பிக்கொண்டார்கள்.

அந்த இடத்தில் ஒருவர் உணவளிக்கிறார் என்றால், இவர்கள் நெருக்கியடித்துக்கொண்டு ஓடுவார்கள். மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு ஓட வேண்டிய நிலைதான் வரும். உணவே எல்லாவற்றிற்கும் மூலாதாரம். ஆனால், ஒருவரின் கண்ணியத்தை அழிக்க அதுவே போதுமானது. அவர்களுக்கு வேலை தேவை. இரக்கமல்ல. அந்த வேலை தேசத்தின் செயலால் எடுத்துக்கொள்ளப்படும் போது, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவது தனியாரின் தொண்டு அல்ல, அது பொதுமக்களின் கடமை. ஆனால் இன்னும் மூன்று வாரங்களுக்கு அவர்கள் இதை பொறுத்துக்கொள்ள வேண்டும். அவர்களை பசியும் சேர்ந்து அச்சுறுத்தும்.

அவர்களுக்கு நகரில் உணவும், வேலையும் கிடைக்கவில்லையெனில், அவர்கள் வாழ்வதற்காக மீண்டும் தங்கள் கிராமங்களுக்கே செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று பெரும்பாலானவர்கள் வருந்தினார்கள். ஆனால் பிரதமர் ஊரடங்கு தடை அறிவித்த சிறிது நேரத்திலேயே பல இடங்களில் பஸ்களும், ரயில்களும் நிறுத்தப்பட்டன. இந்திய அரசு பல்வேறு நாடுகளில் இருந்த இந்தியர்களை அழைத்து வருவதற்கு விமானங்களை அனுப்பியது. ஆனால் அது தன் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும், வேலையின்றி, உணவின்றி, வீடின்றி வாழும் ஏழைகள் குறித்து எவ்வித பொறுப்பும் ஏற்றுக்கொள்ளவில்லை. திருட்டுத்தனமாக செல்ல முயன்றவர்களையும், ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள தங்கள் கிராமத்திற்கு நடந்தோ அல்லது சைக்கிளிலோ செல்ல வற்புறுத்தியது. அவர்கள் பசியையும், போலீசையும் கடந்தே வந்தனர். நாடு முழுவதும் நெடுஞசாலைகளில் டிரக் டிரைவர்கள் சிக்கிக்கொண்டார்கள்.

சுகாதார சேவையை முன்னேற்ற ஒரு சிறிய திட்டம் அறிவிக்கப்பட்டதை தவிர, அவர்களை வைரஸ் தாக்கினால், ஏழைகளுக்கான சுகாதார வசதிகளாக ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் எங்கு பரிசோதனை செய்துகொள்வார்கள்? அவர்கள் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டுமா? அவர்களுக்கு மருத்துவமனை எங்குள்ளது? அவர்களுக்கு வென்டிலேசன் வசதி உள்ளதா? ஸ்பெயின் மற்றும் நியூசிலாந்திடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இதுபோன்ற தொற்றுநோய் காலங்களில் தனியார் சுகாதார சேவைகளை நாம் தேசியமயமாக்க வேண்டும். இல்லாவிட்டால், ஏழைகள் பசியால் மட்டுமல்ல, வைரசாலும் இறக்க நேரிடும்.

முன்எப்போதும் இல்லாத பிரச்னையை நாடு சந்திக்கும்போது, மற்ற கட்சியினரிடம் இருந்தும் பிரதமருக்கு ஆதரவு கிடைக்கிறது. இந்த போரில் தனது முதன்மை கமாண்டர் பிரதமர்தான் என்று ப.சிதிம்பரம் கூறுகிறார். பல முதலமைச்சர்கள் ஒத்துவருகிறார்கள். ஆனால் எனக்கு அச்சமாக உள்ளது. ஏழை மக்களுக்கு எதிரான இந்த ஊரடங்கு தடையை என்னால் ஆதரிக்க முடியாது. இந்தியா தைவான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கற்கவேண்டும். அவை எவ்வாறு தேசிய ஊரடங்கு தடைகள் விதிக்காமலே நோயை எதிர்கொண்டு போராடின என்று அறியவேண்டும். அதை கருத்தில்கொண்டு, ஏழைகளை பாதிக்காமல் மீண்டும் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாடு தற்போது பொது இரக்கத்தை இழந்துள்ளது. பணக்காரர்களும், ஏழைகளும் சமமாக பார்க்கப்படவேண்டும். மகாத்மா காந்தி நமக்கு விட்டுச்சென்றவற்றை இப்போது நினைவு கூறவேண்டும். நாம் குழப்பத்திலும், சந்தேகத்திலும் இருக்கும்போது, அவர் அறிவுறுத்தியுள்ளார். அதிகளவு பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள, உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு, இங்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், அவர்களின் வாழ்க்கையையும், சுதந்திரத்தையும் மேம்படுத்துமா என்று சிந்தியுங்கள். இந்த கடைசி மனிதர்கள் சிலரை நான் இன்று சந்தித்தேன். இன்று அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் உங்களையும், என்னையும் காக்கும். ஆனால் விளிம்பு நிலை மனிதர்களை காக்குமா? அவர்களின் வாழ்க்கையை நிச்சயம் அது பாதிக்கவே செய்யும்.

இக்கட்டுரையை எழுதிய மாண்டேர், மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் எழுத்தாளர்.

தமிழில்: R. பிரியதர்சினி.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Covid 19 coronavirus lockdown india poor people situation

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X