நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் இங்கு விவரிக்கிறார்...
இந்திய தேர்தல் முடிவு, பெரிய ஏமாற்றத்தை தரக்கூடியதாக இருக்கிறது. அதற்கான காரணத்தை நிச்சயம் ஆராய வேண்டும்.
பாரதிய ஜனதா ஆட்சியில் கண்ணுக்கு தெரிந்தே நிறைய கொடுமைகள் நடந்திருக்கின்றன. குறிப்பாக, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி தொடர்பான கொதிநிலை, தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பாடுகள் எல்லாம் இருந்தன. கடந்த ஐந்தாண்டு காலத்தில் அடிப்படையான பல விஷயங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
இவை எல்லாம் இருந்தும்கூட, எப்படி பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெற்றது என்பது பெரிய கேள்வி. இந்திய ஜனநாயகத்தில் பணபலம் அனைத்தையும் மூழ்கடித்து விடுகிறதா, அல்லது வேறு ஏதாவது பிரச்னை இருக்கிறதா? என்பது பற்றிய பார்வை தேவைப்படுகிறது.
இந்தத் தேர்தலில் அருவருப்பான இன்னொரு அம்சம், பாரதிய ஜனதா என்ன சொல்கிறதோ அதை கேட்கிற அமைப்பாக தேர்தல் ஆணையம் இருந்தது. எந்தெந்த மாநிலங்களில் பாஜக.வுக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என நினைத்தார்களோ, அந்த மாநிலங்களில் முன்கூட்டியே தேர்தலை முடித்தனர். தங்களுக்கு சாதகமான மாநிலங்களில் கடைசியாக தேர்தலை நடத்தினர். அதில் பிடிபடாத மர்மங்கள் இருக்கின்றன.
இதெல்லாம் தவிர, இந்திய தேர்தல் முறை பற்றியே மாற்றுச் சிந்தனையும் தேவைப்படுகிறது. இன்றைய சூழலில் வசதி படைத்தவர்கள், பணக்காரர்கள் மட்டுதான் தேர்தல் களத்திற்கு வர முடிகிறது. அதற்குரிய தன்மைகள்தான் தேர்தல் முறையில் இருக்கின்றன. எனவே தேர்தல் முறையை மாற்றுவதும் தேவையானதாக இருக்கிறது.
பாரதிய ஜனதாக் கட்சியை எதிர்த்து நிற்கிற கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லை என்பதும் ஒரு பலவீனம்தான். காங்கிரஸ் கட்சி தனது நீண்ட அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை. உதாரணமாக, டெல்லியில் ஆம் ஆத்மி- காங்கிரஸ் கூட்டணி அமையாமல் போனது, உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸை உள்ளடக்கிய அணியை அமைக்காமல் விட்டது ஆகியவற்றை கூறலாம்.
இங்கே கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸுடன் சேர்ந்து நிற்கிறோம். கேரளாவில் ராகுல் காந்தியே சென்று போட்டியிடுவது எல்லாம் மக்கள் மத்தியில் குழப்பத்தை அதிகரிக்கத்தான் செய்யும். இதை ராகுல் காந்தி தவிர்த்திருக்கலாம்.
காங்கிரஸ் கட்சி பெருந்தன்மையுடன் இருந்திருக்க வேண்டும். பலவீனத்தின் உச்சத்தில்தான் அது இருக்கிறது. பாரதிய ஜனதாக் கட்சியின் எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைப்பதில் அது தோல்வி அடைந்திருக்கிறது. தேர்தல் முடிவின் எண்ணிக்கையில் அது தெரிகிறது.
இடதுசாரிகளுக்கு இந்தத் தேர்தலில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு வரலாற்று ரீதியாக பரிசீலிக்கப்பட வேண்டிய ஒரு அம்சம். இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்து 5 இடங்களைத்தான் பெற்றிருக்கிறோம். இது மிகப்பெரிய பின்னடைவே. இதற்கு பல காரணங்கள் இல்லாமல் இல்லை. அதேசமயம், காரணங்களை மட்டும் சொல்லி பிரயோஜனம் இல்லை.
இன்றைய காலத்திற்கு பொருத்தமான அரசியலையும், போராட்ட வழிமுறைகளையும் கம்யூனிஸ்ட்கள் உருவாக்க வேண்டும். உலகமயம் இல்லாத காலத்து அரசியல் சூழல்கள் வேறு. உலக மயத்திற்கு பிறகு எல்லாமே மாறிவிட்டன.
தேர்தலே ஒரு கார்ப்பரேட் தேர்தல்தான். விளம்பரங்கள் உள்பட இதில் உள்ள அம்சங்களைப் பார்த்தால், அனைத்திலும் கார்ப்பரேட் தன்மை இருக்கும். தேர்தல் முறையும் இப்படி இருக்கிறது. மக்களும் மாறிப் போனார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளும் புதிய காலத்தின் தேவைக்கு ஏற்ப மாற வேண்டும்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் புதிய வேலைத்திட்டங்களை முன்வைக்க வேண்டும். உதாரணமாக, உலகமயம் வந்து பொருளாதாரத்தையே வேறு மாதிரி மாற்றிப் போட்டுவிட்டது. உலக மயத்திற்கு ஏற்ப கொள்கைகளையும், திட்டங்களையும் வகுத்து சீன நாடு செல்கிறது. உலகத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்துமே அந்த மாதிரி மாற்றத்தை நோக்கி நகர்கின்றன.
தேர்தல் சீர்திருத்தம் தேவை என கம்யூனிஸ்ட்கள் சொல்கிறோம். அதை இந்திய மக்கள் உணர்கிற வகையில் பெரிய போராட்டமாக கொண்டு சொல்லவில்லை.
இந்தியாவிலும் அதே போன்ற ஒரு மாற்றம், அதற்கான தீவிர முன்னெடுப்புகள் கம்யூனிஸ்ட்களுக்கு தேவைப்படுகின்றன.
தேர்தல் சீர்திருத்தம் தேவை என கம்யூனிஸ்ட்கள் சொல்கிறோம். அதை இந்திய மக்கள் உணர்கிற வகையில் பெரிய போராட்டமாக கொண்டு சொல்லவில்லை. இதெல்லாம் பலவீனங்கள்.
தொழிலாளர்களை ஒருங்கிணைப்பது கம்யூனிஸ்ட்களின் முக்கியமான பணி. இன்று அந்த நிலைமையே மாறிவிட்டது. தொழிலாளர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. விவசாய அமைப்புகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. மனித உழைப்புச் சுரண்டல் என்பது மாறி, இயற்கைச் சுரண்டல் என்கிற நிலைக்கு சென்றிருக்கிறது. இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? என்பதுதான் இன்று இருக்கிற கேள்வி.
அடுத்து, இந்தியாவில் ஏகப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் இருப்பதில் அர்த்தமே இல்லை. பெயரளவுக்கு கட்சிகளை வைத்துக் கொண்டிராமல், கம்யூனிஸ்ட்கள் ஒன்றாக இணைவது என்கிற நிலை வந்தால் அரசியல் கருத்துகளை வலிமையாக முன்வைக்க முடியும். அந்தத் தேவை இன்று வந்திருப்பதாக நினைக்கிறேன்.
இதற்கு மேலும் ஒன்றாக சேர்ந்து நிற்காவிட்டால், கட்சிகள் காணாமல் போய்விடும். இப்போது இருப்பதையும் இழந்துவிட்டுப் போக வேண்டியதுதான். இன்றைய காலகட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதைப் பற்றி யோசிப்பார்கள் என கருதுகிறேன்.
மேற்கு வங்கம், திரிபுரா என இரு இடங்களில் ஆட்சியில் இருந்த நிலை மாறி, இன்று கேரளாவிலும் நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கிறது. கம்யூனிஸ்ட் ஒற்றுமை என்பதைத் தாண்டி வேறு மாற்று என்னதான் இருக்கிறது கம்யூனிஸ்ட்களுக்கு? ஒற்றுமை என்பது, ஒரே கட்சியாக மாற வேண்டும் என்பதுதான்.
மீண்டும் இந்தியாவை நெருக்கடி சூழ்ந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். அதை எப்படி இந்திய மக்கள் எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தொகுப்பு: ச.செல்வராஜ்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.