Advertisment

தூத்தூர் மீனவர்களை உலுக்கிய ஓகி : உலகமே இருண்ட அந்த தருணங்கள்!

படகில் இருந்த அத்தனை சி.எஃப்.எல். பல்புகளும், ‘வயர்லெஸ் செட்’டும் சேதமாகிவிட்டன. படகு மூழ்க ஆரம்பித்தபோது, மொத்தமும் இருண்டு போயிருந்தது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kanyakumari District, Thoothur, Chinnadurai, Vallavilai, Kerala State, Sea, Fishermen, Kanyakumari Fishermen, Tamilnadu Fishermen, Cyclone Ockhi, deep sea fishermen

அருண் ஜனார்த்தனன்

Advertisment

நவம்பர் 30-ம் தேதி மாலை 3 மணி ... லட்சத் தீவு கடற்கரைக்கு கிழக்கே நடுக்கடலில் அந்தோணி தாசன் (வயது 33) நின்றிருந்த படகு தள்ளாட ஆரம்பித்தது. ஓகி புயல் அங்கு தாக்குதலைத் தொடுத்த வேளை அது!

70 அடி நீளம் உடைய அந்த மீன் பிடிப் படகில் தாசன் உள்பட 10 பேர் இருந்தனர். தாசனின் சொந்த ஊர், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை பகுதியான தூத்தூர். கடலுக்கு மீன் பிடிக்க அவரும், அவரைச் சேர்ந்தவர்களும் கிளம்பி 14 நாட்கள் ஆகியிருந்தன. வழக்கமாக 45 நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன் பிடி தொழில் செய்பவர்கள் இவர்கள்!

கடற்படை மீட்டது!

‘30-ம் தேதி மாலைக்குள் எங்களது படகு, ஒரு பக்கம் சாய ஆரம்பித்தது. இரவு 7 மணிக்கெல்லாம் படகில் இருந்த அத்தனை சி.எஃப்.எல். பல்புகளும், ‘வயர்லெஸ் செட்’டும் சேதமாகிவிட்டன. படகு மூழ்க ஆரம்பித்தபோது, மொத்தமும் இருண்டு போயிருந்தது’ என்கிறார் தாசன், இன்னமும் நடுக்கம் குறையாமல்!

டிசம்பர் 2-ம் தேதி காலை 10 மணிக்கு மேற்படி 10 பேரில் தாசனும், வெளியூர் மீன்பிடித் தொழிலாளி ஒருவரும் மட்டுமே உயிருடன் இருந்தார்கள். இவர்கள் இருவரும் ஆளுக்கு சுமார் 25 காலி கேன்களை உடலில் கட்டிக்கொண்டு தப்பியிருந்தார்கள். இந்திய கடற்படை ஹெலிகாப்டர் ஒன்றுதான் இவர்களை மீட்டிருந்தது.

அந்த நேரத்தில் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைக்கு அப்பால் மட்டும் 3000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். தாசன் சென்ற படகைப் போலவே ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற பெரும்பாலான படகுகள் கடலின் ஆழத்தை அறிய உதவும் ‘எக்கோ சவுண்டர்’, திசையை கண்டறியும் ஜி.பி.எஸ். கருவி, ஒன்று அல்லது இரண்டு வயர்லெஸ் உபகரணங்களை வைத்திருந்தனர்.

சில நிமிடங்களில் நொறுங்கிய

தகவல் தொடர்பு பெட்டி

வயர்லெஸ் செட்களைப் பொறுத்தவரை, 20 நாட்டிக்கல் மைல் சுற்றளவில் மட்டுமே எச்சரிக்கை தகவல்களை உள் வாங்கக்கூடியவை! மத்திய, மாநில அரசுகள் முதல் எச்சரிக்கையை விடுத்தபோது இவர்கள் 60 முதல் 100 நாட்டிகல் மைல்களுக்கு அப்பால் இருந்தார்கள்.

தாசனின் சொந்த ஊரான தூத்தூரை பற்றி சொல்லியாக வேண்டும். இந்த வட்டார மீனவர்கள், உலக அளவில் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்கு பெயர் பெற்றவர்கள்! கன்னியாகுமரி மாவட்டத்தில் இவர்களுக்கு தேவையான அளவில் மீன்பிடித் துறைமுகம் இல்லாததால், கேரள மீன்பிடித் துறைமுகங்களில் இருந்து செல்வது இவர்களது வழக்கம்!

தாசன் சென்ற படகில் கேரள மீன்வளத்துறை பரீட்சார்த்த முறையில் வழங்கிய ‘எஸ்.ஓ.எஸ். பாக்ஸ்’ இருந்தது. மீனவர்களை அபாயம் சூழ்ந்தால், கடலோர காவல் படையை தாமதமின்றி அனுப்புவதற்கான தகவல் தொடர்புகள் அதில் இருந்தன. மொத்தம் 24 படகுகள் இந்த வசதியை பெற்றிருந்தன. ஆனால் புயல் தாக்கிய சில நிமிடங்களிலேயே தாசனின் படகில் இருந்த ‘எஸ்.ஓ.எஸ்.’ பெட்டியும் நொறுங்கிப் போயிருந்தது.

மாயமானவர்கள் எண்ணிக்கை

டிச.22-க்கு பிறகு தெரியும்!

‘தூத்தூர் மண்டலத்தில் இருந்து மட்டும் ‘காணாமல் போன’ மீனவர்களின் எண்ணிக்கை 350’ என்கிறார், 65 வயதான ரொமான்ஸ். தூத்தூர் அருகிலுள்ள சின்னத்துறை கிராமத்தை சேர்ந்த இவர், ஆழ்கடல் மீன்பிடித் தொழிலாளர் சங்கத் தலைவராக இருக்கிறார். இந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் மட்டும் நவம்பர் தொடக்கத்தில் 75 படகுகளில் கிளம்பிப் போயிருக்கிறார்கள். ‘இதுதான் அனைவரும் திரும்பி வரவேண்டிய வேளை. டிசம்பர் 22 வாக்கில் காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கை தெரிய வரும்’ என்கிறார் ரொமான்ஸ்.

அதே பகுதியில் வள்ளவிளையை சேர்ந்த படகு உரிமையாளர்கள் என்சிலோன் மற்றும் ஏ.கிறிஸ்டியான்ஸ் ஆகியோர் கூறுகையில், ‘ஒரு படகு ஒரு முறை சென்று திரும்ப குறைந்தபட்சம் ரூ 5 லட்சம் செலவாகும். அதில் முக்கியமாக உணவுப் பொருட்களுக்காக 50,000 ரூபாய், எரிபொருளுக்கு (டீசல்) மூன்றரை லட்சம் ரூபாய், மீன்களை பதப்படுத்தி வைக்க தேவையான ஐஸ் கட்டிகளுக்கு அறுபதாயிரம் ரூபாய் தேவைப்படும்.

மீன் பிடிப்பதில் கிடைக்கும் வருமானம் 7 முதல் 9 லட்சம் ரூபாய் வரை இருக்கும். அதில் 45 சதவிகிதம் படகு உரிமையாளர்களுக்கு! எஞ்சிய தொகையை அந்தப் படகில் சென்ற மீன்பிடித் தொழிலாளர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.

வெளிநாடுகளில் சிக்கிய அனுபவம்!

ஆழ்கடலுக்கு செல்லும் இந்த மீனவர்கள் அடிக்கடி வெளிநாட்டுக் கடல் பகுதிக்குள் செல்வது நடக்கும். மொரிஷியஸ், ஓமன் கடல்பகுதிக்குள் சென்று சிக்கலை சந்தித்த அனுபவம் எங்களுக்கு உண்டு. ஆனாலும் எங்கள் படகுகள் அளவில் சிறியவை என்பதால் பெரிதாக கொடுமைப்படுத்தாமல் விட்டுவிடுவார்கள்’ என்கிறார்கள் அவர்கள்.

வெளிநாட்டு மீனவர்களை நடுக்கடலில் சந்திக்கும் வாய்ப்பும் இவர்களுக்கு ஏற்படும். குறிப்பாக, ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஆர்வமாக இயங்கும் ஈரான் நாட்டு மீனவர்களை அடிக்கடி சந்திப்பார்களாம். அப்போது அவர்களுடன் உணவுகளை பறிமாறிக் கொண்ட அனுபவமும் தங்களுக்கு இருப்பதாக கூறுகிறார் என்சிலோன். கன்னியாகுமரிக்கு தெற்கே 1800 கி.மீ வரை வரை மீன் பிடிக்க சென்று வருவதாக கூறுகிறார்கள் இவர்கள்.

இங்குள்ள மீனவர்கள் இன்னல்களை எதிர்கொள்ளும் போதெல்லாம், மறுபடியும் அவர்கள் திரும்புவது தேவாலயத்திற்குத்தான். 9 கிராமங்களை உள்ளடக்கிய தூத்தூர் மண்டலத்தின் முதல்வர் ஆண்ட்ரூஸ் கோஸ்மோஸ் இது குறித்து கூறுகையில், ‘அவர்கள் பிரச்னைகளை எதிர்கொண்டாலோ, அவர்களுக்கு உதவி தேவைப்பட்டாலோ தேவாலயம் அதில் தலையிடும்.’ என்றார்.

என்ஜினீயர் ஆக விரும்பும் வாரிசுகள்!

கேரளாவின் அருகில் இந்தப் பகுதி இருப்பதாலேயே தமிழக அரசால் புறக்கணிக்கப்படுவதாகவும் ஒரு குமுறல் இருக்கிறது. உள்ளூர் எம்.பி.யும் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் இந்தப் பகுதியில் 25,000 கோடி ரூபாய் முதலீட்டில் கப்பல் துறைமுகம் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார். அண்மையில் அவர் மீனவர்களை சந்திக்க வந்தபோது எதிர்ப்புகள் கிளம்ப அதுவும் காரணம்.

பீட்டர் டார்வின் என்ற மீனவர் கூறுகையில், ‘வேறு பல சவால்களும் இருக்கின்றன. சமீப காலமாக மீன்பிடிப் படகுகளில் 10 சதவிகிதம் பேர், வெளியிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் இடம் பிடிக்கிறார்கள். பெரும்பாலான படகுகள் தொழிலுக்கு கிளம்புகிற கொச்சியில் அவர்கள் தாராளமாக கிடைக்கிறார்கள். இது மீன்பிடித் தொழிலின் பாரம்பரியத் தன்மையை மாற்றிக்கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் எங்கள் குழந்தைகள் பொறியாளர் ஆவதையே விரும்புகிறார்கள்’ என்றார் அவர்.

(தமிழில் : ச.செல்வராஜ் )

 

Kerala State Kanyakumari District
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment