கன்னியாகுமரி : ஆபத்தை உருவாக்கும் ‘ஓகி’ அரசியல்!

கடல் தொழில் செய்யும் மக்களாக இருந்தாலும் மலையோர மக்களாக இருந்தாலும் அவர்களுக்கு சரியான நிவாரணத் தொகையும் இழப்பீடும் வழங்க வேண்டும்.

முனைவர் கமல. செல்வராஜ்

காலையில் எழுந்து கடலுக்குப் போகணும், விடிஞ்சதும் ரப்பர் பால் வெட்டப் போகணும், வெயிலுக்கு முன்னாடி குலைத்து நிற்கும் வாழைக் குலைகளை பொதிந்து விடணும் என அவரவரின் தொழிலுக்கு ஏற்ப மறு நாள் வேலைகளை மனதிற்குள் பதியம் செய்து விட்டு படுக்கைக்குச் சென்ற குமரி மக்களை நடுராத்திரியில் கொள்ளை மழையும் கொடும் காற்றும் ஓகி புயலாக அடித்து நொறுக்கி தாண்டவமாடி சரியாக பதினைந்து நாள்கள் உருண்டோடிவிட்டன.

ஓகியின் கோரத் தாண்டவத்தில் தடம் பறிந்து போன பணக்கார மரமான ரப்பர் மரங்கள் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகம். குலைத்ததும், குலைக்கும் பருவத்தை எட்டியதுமாக சுமார் முப்பது லட்சத்திலிருந்து 40 லட்சம் வரை வாழை மரங்கள். பிறப்பு முதல் இறப்பு வரை கடல் தொழிலை நம்பி வாழும் மக்களில் காணாமல் போன மக்களின் எண்ணிக்கை அந்தக் கடலம்மைக்கு மட்டமேத் தெரியும். இரவை பகலாக்கிக் கொண்டு நிமிர்ந்து நின்ற மின்கம்பங்கள் இடைமுறிந்து போனது 16 ஆயிரத்திற்கும் அதிகம்.

ஒட்டு மொத்தத்தில் மூன்று நாள்கள் குமரி மாவட்டம் இருளின் கோரப்பிடியில் மூழ்கித் தவித்தது. பதினைந்து நாள்களாகியும் இன்னும் மின்சாரம் எட்டிப் பார்க்காத மலையோரக் கிராமங்களும் வீடுகளும் எண்ணிலடங்காதவை.

கடலுக்குப் போனவங்க எப்பத்தான் திரும்பி வருவாங்க என்ற தீராத ஏக்கத்தில் கடலோர மக்கள். கட்டான கரண்டு இனி எப்பத்தான் வரும் என்ற எதிப்பார்ப்பில் மலையோர மக்கள். தடம் பறிந்து போன ரப்பருக்கும், முறிந்து போன வாழைக்கும் எப்பத்தான் நிவாரணம் கிடைக்கும் என்ற தாகத்தில் விவசாயிகள்.

மாநிலத்தின் முதலமைச்சர் முதல் மத்தியில் பாதுகாப்பு அமைச்சர் வரை வந்தாச்சு. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் வழக்கம் போல் வந்து ஆறுதல் கூறியாச்சு. குஜராத் தேர்தல் முடிந்ததாலும், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் நடக்க இருப்பதாலும் ஒருவேளை பிரதம மந்திரி நரேந்திர மோடி கூட வந்து போகலாம். யார் வந்து என்ன பயன் என்பது மட்டுமே மக்களின் கேள்விக்குறி.

கடலில் சென்று மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு இருபது லட்சம் பணம் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்து விட்டது. அதோடு காயமடைந்தவர்களுக்கும், சேதமடைந்த படகுகளுக்கும் போதிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்து விட்டார்கள்.

ஆனால் மாவட்டம் முழுவதும் மின்சாரம் தாக்கியும், மரம் முறிந்து விழுந்தும் சுமார் பத்துக்கும் அதிகமானோர் இன்னுயிர் நீத்துள்ளனர். கூடவே பலர் பெரும் காயங்களுக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சையும் பெற்று வருகின்றனர். அவர்களுக்குக் கடலோர மக்களுக்கு வழங்கப்பட்ட அளவுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை. இந்தப் பாகுபாடு குமரிமாவட்ட மக்களிடையே பல்வேறு விதமான குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.

கடலோரப் பகுதி மக்களை ஒன்றிணைத்து அந்தந்தப் பகுதியிலுள்ள பாதிரிமார்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினார்கள். கடைசியாக குழித்துறை ரயில்வே நிலையத்தில் பிரமாண்டமான மறியல் போராட்டத்தையும் நடத்தி முடித்தார்கள். அதனால் அவர்கள் கேட்டவைக்கு வாக்குறுதி கிடைத்து விட்டது.

அந்த அளவிற்கு பிற மக்களை ஒன்றிணைப்பதற்கும் போராட்டம் நடத்துவதற்கும் யாரும் முன்வரவில்லை. அதனால் அவர்களுக்குப் போதிய நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என்பது அந்த மக்களின் குமுறல். இது மாவட்டத்தில் இருக்கும் சில சாதி அமைப்புகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி வெளிப்படையாகச் சாதி ரீதியாக வினா எழுப்பி போஸ்டர் யுத்தம் நடத்தும் அளவிற்கு வந்துள்ளது. இது மாவட்டத்தில் மிகப் பெரிய ஆபத்தை உருவாக்குமோ என்ற அச்சத்தைக்கூட ஏற்படுத்தியுள்ளது.

பதினைந்து நாள்கள் கடந்த பிறகும் கண்டுகொள்வார் யாரும் இல்லை என்ற விசாயிகள், அவர்களின் கூட்டமைப்பின் சார்பில் குமரிமாவட்டத்தில் கடையடைப்பு (பந்த்) போராட்டத்தை அறிவித்தனர். அப்போராட்டத்திற்கு பாரதீய ஜனதா கட்சி, தி.மு.க, காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர் கட்சிகளும் ஆதரவுத் தெரிவித்தனர். இதனால் மாவட்டம் முழுவதும் கடையடைப்புப் போராட்டம் முழு வெற்றி பெற்றது.

பகல் நேரத்தில் போலீசாரின் துணையோடு அரசு பஸ்களை இயக்குவதற்கு முற்பட்டபோது கூட வெற்றி பெற முடியவில்லை. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்து சுமார் முப்பதிற்கும் அதிகமான பஸ்கள் சேதமடைந்துள்ளன. பெரும்பாலான பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனால் அரசு தானே முன்வந்து நடத்தும் பந்த் போல், எதிர் கட்சிகள் நடத்திய பந்த் முழு வெற்றி பெற்றது.

இனியும் அரசு விழித்துக் கொண்டு உயிர் இழப்பு ஏற்பட்டவர்கள் கடல் தொழில் செய்யும் மக்களாக இருந்தாலும் மலையோர மக்களாக இருந்தாலும் அவர்களுக்கு சரியான நிவாரணத் தொகையும் இழப்பீடும் வழங்க வேண்டும். மட்டுமின்றி ரப்பர் மரங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு அரசு தற்போது அறிவித்திருக்கும் ஒரு ஹெட்டேருக்கு ஒரு லட்சம் ரூபாய் என்பது மிகவும் சொற்பமானத் தொகையே ஆகும். ஏனென்றால் ரப்பர் மரத்தைப் பொறுத்த வரை அதை நடவுச் செய்யது பின்னர் குறைந்தது ஏழு ஆண்டுகள்வரை எவ்வித வருமானமுமின்றி பராமரித்தால் மட்டுமே அதிலிருந்து வருமானம் பெறுவதற்கு முடியும். வருமானம் பெறுவதற்குத் தொடங்கினால் சுமார் பதினைந்திலிருந்து இருபது ஆண்டுகள் வரை தொடர்ந்து வருமானம் கிடைத்துக் கொண்டேயிருக்கும்.

அதனால் குறைந்த பட்சம் கடலில் மீன்பிடிப்பதற்குப் பயன்படுத்தும் சாதாரணப் படகுக்கு வழங்கும் அளவிற்காவது, ரப்பர் மரத்திற்கும் வழங்க வேண்டும். அதுபோன்றே வாழை விவசாயிகளுக்கும் கால தாமதம் செய்யாமல் உடனடியாக நல்ல முறையிலான நஷ்டஈடு வழங்க வேண்டும்.

பெரும் இழப்பீடு ஏற்பட்டிருக்கும் வாழை, ரப்பர் விவசாயிகள் வங்கிகளிலிருந்து, விவசாயக் கடன் பெற்றிருந்தால் அக்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் அவர்கள் மீண்டும் விவசாயம் செய்வதற்கான புதிய விவசாயக் கடனும் வழங்க வேண்டும். என்றால் மட்டுமே விவசாயிகளை ஓரளவிற்குக் காப்பாற்றிக் கொள்வதற்கு முடியும்.

மேலும் புயல் வந்து 15 நாள்கள் கடந்த பின்பும் மின்சார இணைப்பு வழங்கப்படாமல் இருக்கும் பகுதிகளில் மிக விரைவாக மின்சாரம் வழங்குவதற்கு போர்கால துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சார வசதியின்மையினால் மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்கள் அனைத்தும் அடியோடு பாதிக்கப் பட்டுள்ளது. இவற்றுடன் மாவட்டத்தின் பல பகுதிகளில் ரோடுகளும் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. அவற்றை சீரமைப்பதற்கும் அரசும் அதிகாரிகளும் துரித நடவடிக்கை கண்டிப்பாக எடுத்தாக வேண்டும்.

இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டு அரசு கடலோர மக்களுக்கும் கரையோர மக்களுக்கும் வழங்கும் நிவாரணத் தொகைக்கும் நஷ்ட ஈட்டிற்கும் பாரபட்சம் இருப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்து மக்களிடையே இருக்கும் கருத்து வேற்றுமையை அடியோடு நீக்க வேண்டும்.

(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். பேச: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close