நூற்றாண்டை நெருங்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: முதல் தலித் பொதுச் செயலாளர் டி.ராஜா

டி.ராஜாவுக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க, மற்றொரு மூத்த தலைவர் டி.ராஜாவை பொதுச்செயலாளராக அறிவிக்க எதிர்ப்பு தெரிவிக்க கிளம்பினார்

D Raja appointed as general secretary of CPI - நூற்றாண்டை நெருங்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: முதல் தலித் பொதுச் செயலாளர் டி.ராஜா
D Raja appointed as general secretary of CPI – நூற்றாண்டை நெருங்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: முதல் தலித் பொதுச் செயலாளர் டி.ராஜா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் தமிழகத்தைச் சேர்ந்த டி.ராஜாவை அக்கட்சியின் பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளது. இது கம்யூனிஸ்ட் கட்சியில் தாதமதமாக நடந்த ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வு என்றால் அது மிகையல்ல.

உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று உழைக்கும் மக்களுக்காக களத்தில் நிற்கிற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட நூற்றாண்டை நெருங்கும் வேளையில் தமிழகத்தைச் சேர்ந்த டி.ராஜா அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் நல்லக்கண்ணு, சி.மகேந்திரன், முத்தரசன் ஆகியோர் டெல்லி சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழகத்திலும் தோழமை கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டி.ராஜா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எத்தகைய சூழலில் இருக்கும்போது பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், அதே போல, அகில இந்திய அரசியல் சுழல் எந்த நிலையில் இருக்கும்போது அவர் கட்சியில் தலைமை பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது விவாதிக்கப்பட வேண்டியவை.

சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்றத்தில் முதல் மூன்று மக்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதன்மை எதிர்க்கட்சி என்ற அளவுக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கொண்டிருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பெரும்பாலும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த எளிய மக்களே அதன் தொண்டர்கள். தமிழகத்தில் அக்கட்சியை பட்டியல் இன மக்களின் கட்சி என்று அழைத்த காலமும் உண்டு. அதனுடைய கம்யூனிஸ சித்தாந்தத்தின் அடிப்படையில், இன்றும்கூட பல பிரச்னைகளில் அடித்தட்டு மக்களுக்காக களத்தில் நிற்பது கம்யூனிஸ்ட் கட்சிதான். இது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்லாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பொருந்தும்.

மக்கள் பிரச்னைகளில் மற்ற கட்சிகளை ஒப்பிடுகையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் கொள்கை அடிப்படையில் நேர்மையாக தங்கள் போராட்டங்களை முன்னெடுத்தார்கள் என்றும் மக்களுடன் நின்றார்கள் என்றும் உறுதியாகக் கூறலாம். ஆனால், கட்சியின் அகில இந்திய தலைமைப் பதவியில் எத்தனை பேர் உழைக்கும் மக்களான தலித் சமூகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விமர்சனங்கள் தலித் அறிவுஜீவிகளால் முன்வைக்கப்பட்டுவருகிறது. அதே நேரத்தில், கட்சியின் ஒன்றிய, மாவட்ட, மாநில பொறுப்புகளில் தலித்கள் முக்கிய பொறுப்புகளை வகித்தாலும் அகில இந்தியப் பொறுப்புகள் வகிப்பது என்பது இல்லை என்ற நிலைதான் இருந்தது. அது டி.ராஜாவின் வருகையால் நூற்றாண்டை நெறுங்கும் வேளையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இந்த விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பொலிட் பீரோவில் இன்னும் ஒரு தலித்கூட இடம் பெறவில்லை என்ற விமர்சனம் நீடிக்கிறது. அதுவும் இதே போல முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், டி.ராஜா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பதவிக்கு எத்தகைய சூழலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தில் இருந்த கட்சி தற்போது மக்களவையில் வெறும் 2 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது. கடந்த தேர்தலில் அக்கட்சி செல்வாக்கு செலுத்திய மாநிலங்களில் எல்லாம் படுதோல்வி அடைந்தது. அடையாள அரசியல், வகுப்புவாத அரசியல் கோலோச்சும் காலத்தில் அதை எதிர்கொள்ள முடியாமல் திணறும் மற்ற தேசிய, மாநில பெரிய கட்சிகளைப் போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் திணறிவருகிறது. இந்த சூழலில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.ராஜாவை அகில இந்திய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்துள்ளது. அதிலும், முன்னாள் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டிக்கு உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்ற நிலையில், கட்சியில் இளைய தலைமுறை தலைவர்கள் அருகிவிட்ட நிலையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தைச் சேர்ந்த டி.ராஜா பொதுச்செயலாளராகிறார் இதை வெகுநாளாக எதிர்பார்த்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் நல்லக்கண்ணு, சி.மகேந்திரன், முத்தரசன் ஆகியோர் அவரை ஆதரித்து, வாழ்த்து தெரிவிக்க டெல்லிக்கு விமானம் மூலம் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். அதே நேரத்தில், மற்றொரு மூத்த தலைவர் டி.ராஜாவை பொதுச்செயலாளராக அறிவிக்க எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என டெல்லி செல்ல விமான டிக்கெட் எல்லாம் முன்பதிவு செய்த பின்னர், அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் டெல்லி செல்ல முடியவில்லை என்ற தகவலும் கட்சியில் கூறுகிறார்கள்.

இப்படியான சூழலில்தான் தமிழகத்தைச் சேர்ந்தவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவருமான டி.ராஜா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகியுள்ளார். சோர்வடைந்து போயிருக்கும் கட்சியை இவருடைய தலைமை தூக்கி நிறுத்துமா; முன்பு போல, இந்திய, தமிழக அரசியல் வானில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் காலம் திரும்புமா; என்றும், அடையாள அரசியலையும் வகுப்புவாத அரசியலையும் கட்சி புதிய தெம்புடன் எதிர்கொள்ளுமா என்பதையும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமல்ல கம்யூனிஸ அபிமானிகளும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கு டி.ராஜா என்ன செய்யப்போகிறார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

கட்டுரை: எ.பாலாஜி

Get the latest Tamil news and Opinion news here. You can also read all the Opinion news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: D raja appointed as general secretary of cpi

Next Story
பிக் பாஸ்: கட்டிப்போடும் கண்காணிப்பு அரசியல்Bigg Boss Tamil 3, Bigg Boss Tamil 3 contestants, பிக் பாஸ் தமிழ் 3, Bigg Boss Tamil 3 latest news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com