ஸ்டாலின் ராஜாங்கம், எழுத்தாளர்
தலித் எழில்மலை தலித் மக்கள் முன்னணி என்ற அமைப்பில் இயங்கி பாமகவிலும் அதிமுகவிலும் இருந்துவிட்டு கடைசிக் காலத்தில் சற்றே ஒதுங்கியிருந்தாலும் எல்லா கட்சியிலும் இருந்த வழக்கமான தலித் போன்று அடையாளமாக இருக்கவில்லை. தலித் அல்லாத அமைப்புகளில் இருந்திருந்தாலும் அவரை தலித் சார்ந்து நினைவு கூர்வதற்கு விஷயங்கள் இருக்கின்றன என்பது தான் குறிப்பிடத்தக்க விஷயம். ஏழுமலை என்ற இந்து மதம் சார்ந்த தன் பெயரிலிருந்து விடுபட்டு எழில்மலை என்று பெயர் மாற்றிக் கொண்டவர். அதோடு தமிழகத்தில் தலித் என்ற அடையாளம் பரவலாகும் முன்பே தன் பெயருக்கு முன் தலித் என்ற அடையாளத்தை சேர்த்துக்கொண்டு இயங்கியவர். அம்பேத்கரை குறிக்கக் கூடிய நீலச்சட்டை, ஜெய்பீம் அவரது அடையாளங்கள். அந்த அளவிற்கு எங்கு இருந்தாலும் தனித்துவத்தை தக்கவைத்தார். ராணுவத்தில் பணியாற்றிய அவர் தீவிர அம்பேத்கரிய உணர்வாளர். அந்த உணர்வை அவர் அம்பேத்கரின் நூல்களை முழுவதும் வாசித்ததன் மூலம் பெற்றிருந்தார். அம்பேத்கரை ஆங்கிலத்திலும் தமிழிலும் சரளமாக பேசக் கூடியவர். 9 மொழிகள் தெரிந்தவர். ஏறக்குறைய 1980களின் தொடக்கத்தில் இருந்து அவருடைய பணிகள் பற்றியான குறிப்புகள் கிடைக்க காணப்படுகின்றன. அவருடைய வாழ்க்கையை இரண்டு கட்டமாகப் பிரிக்கலாம். 80-களின் ஆரம்பத்தில் தொடங்கி 90-களின் தொடக்கம் வரையிலும் ஒன்று. அதற்கடுத்தது மற்றொன்று. முதல் காலகட்டத்தில் அவர் ஒடுக்கப்பட்ட மக்களுடைய பிரச்னைகளை முன்வைத்து பல்வேறு பேரணிகள், கவன ஈர்ப்பு மாநாடுகள் போன்றவற்றை செய்தவராக இருந்தார். வீட்டுமனைப் பட்டா கேட்பது, குடிநீர் பிரச்னை, இரட்டை டம்ப்ளர் முறைக்கு எதிரான போராட்டம் என்று விரிவாக செயல்பட்டவர். அவர் தலித் மக்கள் முன்னணி , அம்பேத்கரிஸ்ட் பேரவை போன்ற அமைப்புகளில் இயங்கியவர். தலைவராக எல்லா சந்தர்ப்பங்களும் இருந்தும் அவ்வாறு மாற்றிக்கொள்ளாதவர்.
அதாவது தலித் செயல்பாட்டாளர்கள் அறிவுசார்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதில் அம்பேத்கரை ஒரு முன்னுதாரணமாக வைத்து அவர் வலியுறுத்தினார். 1982இல், தலித் சாகித்ய அகாதமி என்ற பதிப்பகத்தைத் தொடங்கி, பண்டிதர் அயோத்திதாசரின் படைப்புகள், டாக்டர் அம்பேத்கரின் நூல்களை வெளியிட்டார்.
பெங்களூரில் இருந்து வெளியான தலித் வாய்ஸ் என்ற ஆங்கில இதழாசிரியர் வி.டி.ராஜசேகர் என்பவருடன் இணைந்து, தலித் எழில்மலை தொடங்கிய, தலித் சாகித்ய அகாதமியின் முதல் வெளியீடு, ‘விடுதலைக்கு வழி என்ன?’ (அம்பேத்கர் 1936 ஆம் ஆண்டு ஆற்றிய உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு) 1982இல் வெளிவந்தது. பிறகு ‘ஐ.நா.சபையில் தலித் குரல்’ (பேராயர் எம். அசாரியா ஐக்கிய நாடுகள் அவையில் ஆற்றிய உரை) பெங்களூர் வி.டி.ராஜசேகர், பேராயர் எம்.அசாரியா ஆகியோர் எழுதிய 26 ஆங்கிலச் சிறு நூல்களையும், 10க்கும் மேற்பட்ட தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களையும், மூலப்படைப்புகளையும், தலித் சாகித்ய அகாதமி வெளியிட்டது.
1948ஆம் ஆண்டு, டாக்டர் அம்பேத்கர் எழுதிய ‘தீண்டப்படாதவர்கள் யார், அவர்கள் எப்படி தீண்டத்தகாதவர்கள் ஆனார்கள்’ என்ற ஆங்கில நூலை, ‘மண்ணின் மைந்தர்களின் மறைக்கப்பட்ட வரலாறு’, என்ற பெயரில், பி.மாணிக்கம், வி.எம்.முருகேசன், ஜே.ஆனந்தராஜ் ஆகியோரின் தமிழ் மொழி பெயர்ப்பில் (1985) வெளியிட்டனர். இந்து மதத்தின் புதிர்கள் என்ற அம்பேத்கர் எழுதிய நூலின் ஒரு பகுதியான ராமனா? கிருஷ்ணானா?, சாதி ஒழிப்பு, ஆகிய நூல்களையும் கொணர்ந்தனர். அம்பேத்கரின் நூல் தொகுதிகள் வரும் முன்னரே இந்த நூல்கள் அகாதமியால் கொணரப்பட்டிருந்தது.
அடுத்ததாக தலித் சாகித்ய அகாதமியின் சார்பாக அயோத்திதாசரின் எழுத்துகள் நூல்களாக வெளியாயின. 1980-களின் தொடக்கத்திலேயே அயோத்திதாசரைப் பற்றி அறிந்திருந்தார் அவர். அண்மையில் நான் கோலார் தங்கவயலுக்கு சென்றிருந்தபோது அயோத்திதாசர் பற்றிய கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பேசிய பிரசுரங்களை கண்டேன். அவ்வாறு அயோத்திதாசரை அறிந்திருந்த அவர் 1990களின் பிற்பகுதியில் அகாதமி சார்பில் எழுத்தாளர் ரவிக்குமார் ஒருங்கிணைப்பிலான அறிவுக் குழுவினரைக் கொண்டு பதிப்பித்தார் .அவர் பதிப்பித்த எந்த நூலிலும் பெயரை சேர்த்துக் கொண்டதே இல்லை. ஞான. அலாய்சியஸ் அயோத்திதாசருடைய நேரடி எழுத்துக்களைக் கொண்டுவந்த அதே ஆண்டில் இந்த நூல்கள் வெளியாயின.
1990-களின் தமிழ் அறிவுத்தளத்தில் தலித் அடையாளங்களாக உருவாக்கப்பட்ட பல விஷயங்களுக்கு தலித் எழில்மலை உந்துதலாக இருந்திருக்கிறார். குறிப்பாக, 1990-களில் பூனா ஒப்பந்தத்துக்கு எதிராக இரட்டை வாக்குரிமை வேண்டும் என்கிற குரல் தலித் இயக்கங்களுக்கு மத்தியில் உருவாகி வந்த தருணத்தில், பூனா ஒப்பந்தத்தைக் கைவிட்டு இரட்டை வாக்குரிமையை கோருவது தொடர்பாக அறிவுஜீவிகளின் கவனத்தை ஈர்த்ததில் முக்கியமான பங்கு வகித்திருக்கிறார். 1956 ஆம் ஆண்டு அம்பேத்கர் பெளத்தம் தழுவிய நாக்பூர் தீக்ஷா பூமிக்கு தமிழகத்திலிருந்து செல்வது ஒரு கலாச்சாரமாக இன்றைக்கு மாறியிருக்கிறது. அம்பேத்கரிய பெரியவர்களின் செயலாக இருந்த இதனை இயக்க செயல்முறையாக மாற்றியவர் இவர்.
வகுப்புகள், மாநாடுகள் , வெளியீடுகள் சார்ந்து தமிழ் அறிவுஜீவிகள் பலரையும் அழைத்து ஈடுபடுத்தினார். 1990 களின் தலித் பண்பாட்டுக் கூட்டங்களில் மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஒரு பிரகடனமாக அறிவித்ததுண்டு. ஆனால் அதனை அவர் நடத்திய மாநாடுகளில் மிக இயல்பாக அவர் மேற்கொண்டு இருந்தார்.
இவரது இரண்டாவது கட்டம் என்று 1990 களின் அரசியல் வாழ்வை கூறலாம். வி.டி.ராஜசேகர் போலவே SC + BC ஒருங்கிணைந்து பிராமணியத்தை எதிர்ப்பது என்ற கருத்தை ஏற்றிருந்த அவர் 1990களில் அதே கருத்தை பேசிய பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்ந்து பொதுச் செயலாளர் ஆனார். இரண்டு முறை தேர்தல் வெற்றியை இழந்த அவர் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகவும் இருந்தார் . குறிப்பிட்ட சாதியின் கட்சியாக அறியப்பட்ட பாமகவின் முகம் மாறுவதிலும், அது பல சமூக நீதி விஷயங்களை பேசுவதற்கான ஒரு தொடர்பு கண்ணியாகவும் எழில்மலை இருந்தார்.
அவர் பாமகவில் இணைந்து செயல்பட்டபோதிலும்கூட, அம்பேத்கரிய ஓர்மையை, கைக்கொண்டுவந்தார் என்பதுதான் முக்கியம். அமைச்சராக இருந்தபோதுதான் அம்பேத்கர் எழுதிய காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்கு செய்ததென்ன? என்ற நூலினை டாக்டர் ராமதாஸை வைத்து வெளியிட்டார். பின்னால், அவர் பாமகவில் இருந்து விலகியபோது அக்கட்சியில் இருந்து வந்த குற்றச்சாட்டுகளில் முக்கியமானது, அவர் பாமகவினரைவிட தலித்துகளிடம் நெருக்கம் காட்டினார் என்பதும் தான். அவர் அமைச்சராக இருந்த போது தாம்பரம் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது அம்மையத்திற்கு அயோத்திதாசர் பெயரை சூட்டுவதென முடிவெடுத்தார்.
ஐநா மன்றத்தில் இன ரீதியான கொடுமைகள் குறித்த விவாதம் நடந்த போது இன ரீதியான கொடுமைகளை விட சாதிக் கொடுமைகள் கொடியது என்று பேசினார்.
இந்த வகையில் தமிழ்நாட்டின் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் பேசப்பட்ட தலித்துகளையும் பிற்படுத்தப்பட்டவர்களையும் இணைத்தல் என்ற அரசியலின் தலித் தரப்பு பிரதிநிதியாக இருந்தவர் எழில்மலை என்று சொல்லலாம். எழில்மலை தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி எழுதியிருக்க வேண்டும். அதில் அவருக்கு இருந்த அனுபவங்கள், வாசிப்பு, போராட்டங்கள், பல இடங்களைக் கடந்து அடுத்தடுத்த நிலைகளுக்கு சென்ற காரணம் ,சென்ற விதம் எழுதியிருந்தால் மிக முக்கிய ஒரு ஆவணமாக இருந்திருக்கும்.
பாமகவிலிருந்து விலக நேர்ந்த பிறகு அவர் முற்றிலும் தன்னை ஒரு அரசியல்வாதியாக தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியை நோக்கி நகர்ந்தார். தீவிர பிராமண எதிர்ப்பு பேசி தொடங்கிய அவர் பிராமணரல்லாதார் அரசியல் வழியாக வந்து கடைசியில் அதிமுகவில் சேர்பவராக மாறினார். தலித் மக்களை நேரடியாக பிரதிபலிக்கும் விசிக போன்ற அமைப்புகள் செல்வாக்கு பெற்ற காலத்தில் எழில்மலை போன்றோருடைய அரசியல் வாழ்வு ஏதோவொரு வகையில் முடிவுக்கு வந்தது.
அவருடைய அரசியல், அரசியல் பணிகள் பற்றி விமர்சனப் பூர்வமான பார்வை இனி உருவாகலாம். அது வேறு. ஆனால், அவர் மிக முக்கியமான பணிகளையும் பல பங்களிப்புகளையும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் செய்தவர். இன்னும் சொல்லப்போனால், 1990-களில் தொடக்கத்தில் தலித் அரசியல் எழுச்சியில் உருவான பல அடையாளங்கள் உருப்பெறுவதற்கான தரவுகளை உருவாக்கினார். ஆனால், அந்த அளவிற்கு அவர் பெயர் பெருமளவு குறிப்பிடப்படுவது இல்லை. அவர் இருந்தார் என்பதைக் கூட நாம் யோசித்ததில்லை. ஒருவர் ஒன்றை செய்தார் என்பதை விட அதை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் தான் நினைவில் கொள்ளப்படும் என்ற அவலமான நிலை இன்றிருக்கிறது.
அவருடைய மொத்த அரசியல் வாழ்விலும் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் நாம் தெரிந்துகொள்வதற்கு பல விஷயங்கள் இருக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.