மாற்றுக்கருத்து கொண்டவர்களை வீதியில் போராட அழைக்கிறதா பாஜக...

Delhi violence : 40க்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கிய திடீர் வன்முறை முன்கூட்டியே யூகிக்கக்கூடிய ஒன்று. தயாராக இல்லாமல் இருந்தவர்கள் டெல்லி போலீசார் மட்டும்தான்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 ஆண்டுகள் உள்ள நிலையில், தற்போது லோக்சபாவில் அதற்கு உள்ள பெரும்பான்மை பலத்தால், பாஜக இதுபோன்ற பல்வேறு விஷயங்களை கொண்டுவர துணிவுடன் தொடர்ந்து செயல்படுகிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

இயல்பாக வரவிருக்கும் பேரிடரை முன்கூட்டியே அறிவிப்பதற்கு பொதுஅறிவே போதுமானது. ஆனால், அதற்கு ஆறாம் அறிவு தேவையில்லை. வடகிழக்கு டெல்லியில் பிப்ரவரி 24ம் தேதி துவங்கி சில நாட்கள் நீடித்து, 40க்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கிய திடீர் வன்முறை முன்கூட்டியே யூகிக்கக்கூடிய ஒன்று. தயாராக இல்லாமல் இருந்தவர்கள் டெல்லி போலீசார் மட்டும்தான். இந்து செய்திதாளின் பிப்ரவரி 25ம் தேதியிட்ட செய்தியின்படி, 100க்கும் மேற்பட்ட போலீசாரின் முன்னிலையின் தான் வன்முறை வெடித்துள்ளது. அவர்கள் சூழ்நிலைக்கு தக்கவாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறுகிறது.

யார் முதலில் கல்லை வீசியது? யார் முதலில் ஆத்திரமூட்டியது? யார் முதலில் துப்பாக்கியை உபயோகித்தது என்பது முக்கியமல்ல. அரசுக்கும், குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த சண்டை தெருக்களில் வெடித்துச்சிதறி, குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், குடியுரிமை திருத்தச்சட்ட ஆதரவாளர்களுக்கும் இடையேயான போராக மாறியது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி முதல் நடந்து வருகிறது. டெல்லியில் உள்ள ஷாகின் பாகில் அமர்ந்தும், மற்ற பெரு நகரங்கள் மற்றும் நகரங்களில் பேரணி, நீதிமன்றத்துக்கு மனு அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு வகையிலான போராட்டங்களாக நடைபெற்றது. பிப்ரவரி 23ம் தேதி பாஜவின் ஒரு தலைவர், போலீசாருக்கு இறுதியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதன்படி, மூன்று நாட்கள் ஜாபராபாத், மற்றும் சந்த் பாகின் வீதிகளை ஆக்கிரமிக்காமல் இருங்கள். தற்போது எதுவும் கூற வேண்டாம். நாங்கள் உங்களுக்கு காது கொடுக்க மாட்டோம். மூன்று நாட்கள் மட்டும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இது திட்டமிடப்பட்டதா?

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா (இதன் 40 சதவீத மாணவர்கள் முஸ்லிம் அல்லாதவர்கள்) ஆகிய 3 பல்கலைக்கழகங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்த புதிய ஆதாரங்கள் வெளியாகின. அப்போது எல்லோரும் டெல்லி மற்றும் உத்திர பிரதேச போலீசாரையே குற்றம் சாட்டினர். (துப்பாக்கி சூட்டில், உத்திரபிரதேசத்தில் மட்டும் 23 பேர் கொல்லப்பட்டனர்) நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பெரும்பாலானோர் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். நாட்கள் செல்லச்செல்ல நீதிமன்றம், முதல் தகவல் அறிக்கை மற்றும் போலீஸ் அறிக்கையின் உண்மை தன்மை குறித்து கேள்வி எழுப்பத்துவங்கியது. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் எதிர்ப்பாளர்களின் பாதுகாப்பு குறித்து பேசினர். எதிர்ப்பாளர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்துவதை எதிர்த்து எச்சரிக்கை விடுத்தனர்.
அரசு எதுவுமே தவறில்லை என்பது போல் போலியாக நடித்தது. அரசிடம் இருந்து வந்த ஒரே பதில் குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவை பாதுகாப்பானது என்பதாக மட்டுமே இருந்தது. அது பாதுகாப்பது போல் இல்லை. பயமுறுத்துவதுபோல் இருந்தது.

நடப்பவை அனைத்து பாஜவின் திட்டப்படி நடக்கிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. மாறுபட்ட கருத்துடைய பிரிவினரை, அவரவர் கொள்கைகளை கெட்டியாக பிடித்துக்கொள்ள பாஜக தூண்டுகிறதா என்று பலரும் சந்தேகிக்கின்றனர். அவர்களை வீதிக்கு கொண்டுவந்து, அவர்களிடையே உள்ள கருத்துவேறுபாட்டை முடிவுக்குகொண்டுவர நினைக்கிறதா? இந்த பார்வை கடினமானதாகவோ அல்லது சரியில்லாததாகவோ இருக்கலாம். இறங்கி வராத அரசின் பிடிவாதம் மற்றும் போராட்டக்காரர்களுடன் (முஸ்லிம்களுடன் மட்டுமல்ல) பேச்சுவார்த்தை நடத்த மறுப்பதே இந்த சந்தேகத்தை மேலும் ஆழமாக்குகிறது
.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு – பரவும் அச்சம்

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு தீங்கற்றது மற்றும் குடியுரிமை திருத்தச்சட்டம் தேச நலன் கருதி செய்யப்படுவது மற்றும் இவ்விரண்டும் இணைக்கப்படாதது என்று அரசு கூறுகிறது. இதை புரிந்துகொள்வதை கடந்து, எப்படி சிலர் இந்த சிறுபிள்ளைத்தனமான வாக்குவாதத்தை விழுங்கிவிடுகிறார்கள்? தேசிய மக்கள்தொகை பதிவேடு தீங்கானதே கிடையாது. பல விஷமமான கேள்விகள் அந்த படிவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. குடியுரிமை திருத்தச்சட்டம் அப்பட்டமாக பாகுபாடு காட்டுவதாகும். ….மேலும் குடியுரிமை திருத்தச்சட்டமும், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பும் இணைந்த ஒன்று. தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு முதலில் வழக்கமான குடியிருப்புவாசிகள் குறித்து கணக்கெடுத்துக்கொள்ளும். அவ்வாறு அடையாளப்படுத்த முடியாவர்களை சந்தேகத்திற்கு இடமானவர்கள் பட்டியலில் சேர்க்கும். அடிப்படையில் அந்த சந்தேகத்திற்கு உரிய வகையில் அனைத்து மதத்தினரும் இருப்பார்கள். இந்த கட்டத்தில் குடியுரிமை திருத்தச்சட்டம், சந்தேகத்திற்கு உரிய வகையில் உள்ள இந்து, கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜெயின், புத்தர்கள் அல்லது பார்சியினத்தினரை ஒரு சிறிய விண்ணப்பத்தின் மூலம் குடியுரிமை கோர வைத்து, எளிதாக குடியுரிமை வழங்கிவிடும். எஞ்சியுள்ள சந்தேக நபர்கள் முஸ்லிம்களாக இருப்பார்கள். அவர்கள் குடியுரிமை திருத்தச்சட்டத்தின் மூலம் பயனடைய முடியாத வகையில் இருப்பார்கள்.

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு முடியும்போது பல மில்லியன் முஸ்லிம்கள் தனித்து விடப்பட்டவர்களாக இருப்பார்கள். பல மில்லியன் முஸ்லிம்கள் பீதி அடைந்திருக்கும்போது, அவர்களுக்கு ஆதரவாக எப்போதும் கதவுகளுக்கு பின்னே இருக்கும், சில ஆயிரம் முஸ்லிம் பெண்களும், குழந்தைகளும் தெருவிற்கும், பார்க்குகளுக்கும் வந்து, குளிர், மழை, போலீஸ் லத்தி ஆகியவற்றை எதிர்த்து போராடுவது ஒன்றும் ஆச்சர்யமான ஒன்று கிடையாது. மேலும் அவர்களுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுப்பது எதுவெனில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அல்லாதோர் மற்றும் சில அரசியல் கட்சியினரின் ஒத்துழைப்பும், ஆதரவுமே ஆகும்.

அக்கறையின்மையும், ஜனநாயகமின்மையும்

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 ஆண்டுகள் உள்ள நிலையில், தற்போது லோக்சபாவில் அதற்கு உள்ள பெரும்பான்மை பலத்தால், பாஜக இதுபோன்ற பல்வேறு விஷயங்களை கொண்டுவர துணிவுடன் தொடர்ந்து செயல்படுகிறது. 2019ம் ஆண்டில் பாஜக தயக்கத்துடனே 6 முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கியது(மேற்கு வங்காளத்தில் மூன்று பேர், ஜம்மு காஷ்மீரில் 2 பேர், லட்சத்தீவுகளில் ஒருவர்) அதே நேரத்தில் அதற்கு முஸ்லிம்களின் வாக்குகள் தேவையில்லை என்பதை, அது மறைக்கவும் இல்லை. இரண்டாவது முறை பாஜக ஆட்சி அமைத்தவுடன், பிரதமர் சில முடிவுகளை எடுத்தார். அது முஸ்லிம்களின் பயத்தை அதிகரித்தது. அவர்களின் நலனை மத்திய அரசு பாதுகாக்காது என்று முஸ்லிம்கள் கருதுகிறார்கள். இந்த எண்ணமே அவர்களை செயல்படவும், எதிர்வினையாற்றவும் வைக்கிறது.

ஒரு அக்கறையுள்ள, ஜனநாயக நாடு மக்களிடம் சென்று, அவர்களுடன் உரையாட வேண்டும். சட்டங்கள் மற்றும் அதன் தேவைகள் குறித்து அவர்களுக்கு விளக்க வேண்டும். ஆனால் கடந்த இரண்டு மாதமாக அவ்வாறு எதுவும் நடக்காதது வருந்ததக்கது.
பொருளாதாரத்தில் ஒரு தவிர்க்க முடியாத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக, உலகளவில் இந்தியாவின் புகழ் மங்கியுள்ளது. அதற்கு ஜரோப்பிய யூனியனின் கூற்றுகளும், அமெரிக்க காங்கிரசின் கமிட்டி மற்றும் ஜநா அமைப்புகளின் கூற்றுகளுமே சான்றாகும். நிறைய நாடுகள் அவர்களின் அக்கறையை தனிப்பட்ட முறையில் இந்தியாவுக்கு தெரிவித்து வருகின்றன. முதலீட்டாளர்கள், அரசியல்வாதிகள், கொள்கை வகுப்பவர்கள், உலகளவில் வாசிக்கப்படும் பத்திரிக்கைகளான டைம், தி எக்கானமிஸ்ட், தி நியூயார்க் டைம்ஸ், த வால் ஸ்டீர் ஐர்னல் ஆகியவற்றில் கடுமையாக விமர்சித்து எழுதிவருகின்றனர்.
மதகுருமார்களின் ஆட்சி நடப்பதுபோல் இந்தியா நடந்துகொள்ள வேண்டும் அல்லது மதசார்பற்ற ஜனநாயக நாடுபோல் நடந்து கொள்ளவேண்டும். எதை அது தேர்ந்தெடுத்தாலும், அதன் மூலம் ஏற்படும் எண்ணிலடங்கா விளைவுகளை சந்திக்கப்போவது அதன் மக்களும், அதன் பொருளாதாரமுமே ஆகும்.

தமிழில்: R.பிரியதர்சினி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close