டிஜிபி நியமனமும் அரசியலும்

முதன் முதலாக, தமிழகத்தின் தலைமைச் செயலாளரையும், உள்துறை செயலாளரையும், மத்திய அரசு நேரில் வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

சங்கர்

தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார் என்று வழக்கத்துக்கு மாறாக விவாதங்களும், சர்ச்சைகளும் உருவாகி உள்ளன. இதர மாநிலங்களில் சாதாரணமாக நடைபெறும் இந்த பதவி நியமனம், காவல்துறை உயர் மட்டத்தில் நிலவும் தீவிரமான அரசியலின் காரணமாக பெரும் குழப்பதில் நிற்கிறது.

சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவி என்பது, ஒரு மாநிலத்தின் காவல்துறையின் தலைமைப் பதவியாகும். இந்த தலைமை இயக்குநர் பதவியை அடைய வேண்டும் என்பது, ஒவ்வொரு ஐபிஎஸ் அதிகாரியின் கனவு. இதன் காரணமாகவே இந்தப் பதவியை அடைவதில், போட்டி கடுமையாக இருக்கிறது

பல்வேறு அரசியல் காரணங்களுக்காக காவல்துறை தலைமை இயக்குநர் பதவியில் இருப்பவரை, விருப்பப்படி பந்தாடும் வழக்கம் நிலவி வந்தது. இது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை சீராக பராமரிப்பதிலும், காவல்துறையை வழிநடத்துவதிலும் சிக்கலை ஏற்படுத்தி வந்தது. இது குறித்து, பிரகாஷ் சிங் என்ற ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி, காவல்துறை தலைமை இயக்குநர் நியமனம் குறித்தும், காவல்துறையில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் 2006ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பின்படி, ஒரு மாநிலத்தில் பணியாற்றும், மூத்த ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களை, மாநில அரசு, மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்ப வேண்டும். அந்த பட்டியலை பரிசீலிக்கும் தேர்வாணையம், முதல் ஐந்து அதிகாரிகளில் மூவரின் பெயர்களை தேர்ந்தெடுத்து மாநில அரசுக்கு அனுப்பும். அப்படி அனுப்பப்படும் மூவரின் பெயர்களில் இருந்து மாநில அரசு ஒருவரை தேர்ந்தெடுத்து டிஜிபியாக நியமிக்க வேண்டும். டிஜிபியாக நியமிக்கப்படும் அதிகாரி, அடுத்த இரண்டாண்டுகளுக்கு தொடர்ந்து டிஜிபியாக இருப்பார். அவரது பணி ஓய்வு இடையில் வந்தாலும் கூட, அவர் இரண்டாண்டுகளுக்கு டிஜிபியாக தொடர்ந்து இருப்பார் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

DGP - Ramanujam
இந்தத் தீர்ப்பை பெரும்பாலான மாநிலங்கள் முழுமையாக பின்பற்றின. ஆனால் தமிழகத்தில்தான் முதல் முறையாக இந்த தீர்ப்பை வளைத்து, சட்டவிரோதமாக அவர்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரிக்கு பணி நீட்டிப்பு வழங்க இந்தத் தீர்ப்பை தமிழக அரசு பயன்படுத்திக் கொண்டது. 2012ம் ஆண்டு நவம்பர் 30 அன்று பதவியிலிருந்து ஓய்வு பெற வேண்டியவர் ராமானுஜம். நவம்பர் 30 அன்று, ராமானுஜத்தை டிஜிபியாக நியமித்து உத்தரவு பிறப்பித்தார் ஜெயலலிதா. இதன் காரணமாக, உச்சநீதிமன்றத்தின் பிரகாஷ் சிங் வழக்கு தீர்ப்பின்படி, ராமானுஜம், பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் இரண்டு ஆண்டுகளுக்கு டிஜிபியாக பணியிலிருந்தார். இந்த நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்னமும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ராமானுஜம் பணியிலிருந்து 2014ம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு, அஷோக் குமார் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். அவரும் ஒரு சில மாதங்களில் ஓய்வு பெற இருந்த நிலையில், பிரகாஷ் சிங் தீர்ப்பின் அடிப்படையில் அவரும் இரண்டாண்டுகள் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். அஷோக் குமார் ஓய்வு பெற்றபின், பணியில் உள்ள மூத்த அதிகாரிகளை, பணி மூப்புப் படி டிஜிபியாக நியமிக்க விரும்பாத அதிமுக அரசு, அதிகாரிகளில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் டிகே.ராஜேந்திரனை பொறுப்பு டிஜிபியாக நியமித்தது. டிகே.ராஜேந்திரன் பொறுப்பு டிஜிபியாகவே பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில்தான் ராஜேந்திரன் வரும் ஜுன் 30 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற உள்ளார். வழக்கமாக பணியில் உள்ள டிஜிபி ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவே அடுத்த அதிகாரிகளின் பட்டியலை மத்திய பணியாளர் ஆணையத்துக்கு அனுப்புவது வழக்கம். ஆனால் இம்முறை டிகே.ராஜேந்திரன் ஓய்வு பெற ஒரு வாரமே உள்ள நிலையில்தான் மூத்த ஐந்து அதிகாரிகளின் பெயர் பட்டியலை தமிழக அரசு அனுப்பியது.

DGP - CS - Girija vaithyanathan
தமிழக உளவுத்துறையின் தலைவராக இருக்கும் அதிகாரி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கம் என்று கூறப்படுகிறது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அந்த அதிகாரியை மாற்றி, டேவிட்சன் ஆசிர்வாதம் என்ற ஐபிஎஸ் அதிகாரியை உளவுத்துறை ஐஜியாக நியமித்தார். எடப்பாடி பதவியேற்றதும் முதல் வேலையாக டேவிட்சனை மாற்றி, மீண்டும் கேஎன்.சத்தியமூர்த்தியையே உளவுத்துறை தலைவராக நியமித்தார். சத்தியமூர்த்தியின் பரிந்துரையின் அடிப்படையில், எடப்பாடி பழனிச்சாமி, டிகே.ராஜேந்திரனை மீண்டும் இரண்டாண்டுகளுக்கு டிஜிபியாக நியமனம் செய்ய முடிவெடுத்து விட்டார் என்ற தகவல் காவல்துறை அதிகாரிகள் இடையே பரவி வந்தது.

இந்த நிலையில்தான், திடீரென்று ஊடகங்களில், ஆகஸ்ட் 2016ல், தமிழக வருமானவரித்துறை தமிழக அரசுக்கு எழுதிய கடிதம் மற்றும் அதன் விபரங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை, செங்குன்றத்தில், கேடிஎம் குட்கா என்ற நிறுவனம் சட்டவிரோதமாக குட்கா தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்தது. தமிழகத்தில் 2013ம் ஆண்டு முதல் தமிழகத்தில் பான் மற்றும் குட்கா தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த தொழிற்சாலை சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது. இந்த தொழிற்சாலையில் வருமான வரித் துறையினர் ஜுலை 2016ல் சோதனைகளை நடத்தினர். அந்த சோதனைகளின்போது, ஒரு லெட்ஜர் கைப்பற்றப்பட்டது. அந்த லெட்ஜரில், தமிழகத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாதந்தோறும் 15 லட்சம் மற்றும் சென்னை மாநகர ஆணையர்களாக இருந்த ஜார்ஜ் மற்றும் டிகே.ராஜேந்திரன் ஆகிய இருவரும் தலா 60 லட்ச ரூபாய்க்கு மேல் லஞ்சமாக பெற்றிருந்தது தெரிய வந்தது. இந்த விபரங்கள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இப்படிப்பட்ட ஊழலில் சிக்கியுள்ள டிஜிபியான டிகே.ராஜேந்திரனை மீண்டும் டிஜிபியாக அடுத்த இரண்டாண்டுகளுக்கு நியமிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, மத்திய உள்துறை, வருமான வரித்துறை நடத்திய சோதனையின் விபரங்களை பெற்றுள்ளது இந்த சம்பவத்தில் பரபரப்பை கூட்டியுள்ளது.

DGP - IAS - Niranjan Mardi
வழக்கமாக கடிதப் போக்குவரத்து மூலமாகவே டிஜிபி நியமனம் தொடர்பாக மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் கருத்து பெறப்படும். ஆனால் இம்முறை முதன் முதலாக, தமிழகத்தின் தலைமைச் செயலாளரையும், உள்துறை செயலாளரையும், மத்திய அரசு நேரில் வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இன்று காலை 8.30 ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் டெல்லி சென்றுள்ளார். அவருடன் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டியும் சென்றுள்ளார். குட்கா ஊழல் குறித்த அனைத்து கோப்புகளையும் அவர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இன்று மதியம் மூன்று மணிக்கு மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் தமிழக டிஜிபியை தேர்வு செய்வது தொடர்பாக கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், தமிழகத்தின் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளான, அர்ச்சனா ராமசுந்தரம், கே.ராதாகிருஷ்ணன், கேபி.மகேந்திரன், டிகே.ராஜேந்திரன், மற்றும் ஜார்ஜ் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட உள்ளன. இவர்களில் யாருக்கு அடுத்த டிஜிபியாகும் வாய்ப்பு உள்ளது என்பது விரைவில் தெரியும்.

ஆட்சியாளர்கள் விறுப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு நேர்மையான அதிகாரிகளை தேர்வு செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

×Close
×Close