ரிச்சர்ட் எரிக் சஸ்கிண்ட் தனது புத்தகமான தி ஃபியூச்சர் ஆஃப் லா( The Future of Law) என்ற புத்தகத்தில், வரவிருக்கும் ஆண்டுகளில், வழக்கறிஞர்களும் அவர்களது கிளையன்ட்களான வழக்கு தொடர்ந்தவர்களும் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்வார்கள் என்று எழுதியுள்ளார். ஆன்லைன் நீதிமன்றங்கள் மற்றும் நீதியின் எதிர்காலம் ஆகியவற்றில், சட்டத் துறையில் கடுமையான மாற்றங்களை தொழில்நுட்பம் கொண்டுவரும், நீதிமன்ற அமைப்பை மாற்றும் என்ற கருத்தை அவர் முன் வைத்தார்.
இந்திய நீதித்துறை அதிகளவில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. பொதுவாக வழக்கறிஞர் தொழிலிலும் அந்த மாற்றம் பிரதிபலிக்கிறது. 2020ம் ஆண்டில் கோவிட் -19 நெருக்கடிக்கு முன்னர் நீதித்துறை பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் இ-கோர்ட்டுகளை நிறுவுதல் ஆகியவற்றுடன் சில குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் நடந்தன. எனவே, டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அதன் திறனை சிறப்பாகப் பயன்படுத்துவதில் குறிப்பாக நீதிமன்ற பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல், வழக்குகளை மின்-தாக்கல் செய்தல் மற்றும் அவற்றின் மெய்நிகர் விசாரணை, நீதிமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பு ஆகியவற்றின் அடிப்படையில். விவாதிக்கப்பட வேண்டியது அவசியம்.
இந்தியாவில், நீதி நிர்வாகத் துறையில் மின்-ஆளுமை 1990களின் பிற்பகுதியில் தொடங்கியது, தகவல் மற்றும் தொழில்நுட்பச் சட்டம், 2000ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பிறகு இதன் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. 21ம் நூற்றாண்டு தொடங்கியபோது, நீதிமன்றத்தின் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கி நிறுவுவதில் கவனம் செலுத்தப்பட்டது. நாடு முழுவதும் 2006 ஆம் ஆண்டில், தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் (NEGP) ஒரு பகுதியாக மின் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டன.
இந்த விஷயத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் முன்னுதாரணமாக வழிகாட்டியாக திகழ்ந்தது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த, நீதிபதி டி ஒய் சந்திரசூட் ஒரு வருடத்தில் சுமார் ஒரு கோடி வழக்குக் கோப்புகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பல கோப்புகளைச் சேமிக்க பெரிய இடம் தேவைப்பட்டது மட்டுமல்லாமல், பல தசாப்தங்கள் பழமையான ஆவணங்களை கைமுறையாகப் பாதுகாப்பதும் கடினமாகி வருவதால் இது அவசியமானது என்று கருதப்பட்டது. கோப்புகள் தேவைக்கேற்ப மின்னணு முறையில் கண்டறியப்படுவதை உறுதிசெய்வது மற்றொரு நோக்கமாக இருந்தது. நீதிமன்ற பதிவுகள் காணாமல் போனதால் ஏற்படும் விளைவுகள் ஆபத்தானவை. உத்தரப்பிரதேச மாநில அரசு எதிர் மனுதாரர் அபய் ராஜ் சிங் ஆகியோர் இடையேயான ஒரு வழக்கில், நீதிமன்றப் பதிவுகள் காணாமல் போனால், மீண்டும் அதனை மீட்டெடுப்பது சாத்தியமில்லை என்றால், நீதிமன்றங்கள் தண்டனையை ரத்து செய்யக் கடமைப்பட்டவை என்று உச்ச நீதிமன்றம் கூறியது. எனவே, நீதிமன்ற பதிவுகள் இல்லாததால் குற்றவாளிகள் சுதந்திரமாக விடுதலை பெற முடியும். இது அரிதான நிகழ்வு அல்ல, பல பழைய வழக்குகளில், குற்றப் பதிவுகள் காணாமல் போனதன் காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவதற்கு வழிவகுத்தது.
கீழ் நீதிமன்றங்களில் இருந்து மேல்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு பதிவுகளை வரவழைப்பதில் நேரம் செலவாவது, வழக்குகளில் தாமதத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். டிஜிட்டல் மயமாக்கப்படும்போது கீழ் நீதிமன்றங்கள் எப்போது வேண்டுமானாலும் பதிவுகளை அனுப்புவதற்கு மிகக் குறைந்த நேரம் செலவிட்டால் போதும். பல ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்கள் பதிவோடு மீட்டெடுக்கப்படவில்லை அல்லது கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், வழக்குகள் ஒத்திவைக்கப்படுவதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்களால் டிஜிட்டல் முறையில் மின்னணு முறையில் தாக்கல் செய்யப்பட்டால், குறைந்தபட்சம் வழக்குகள் இந்த காரணத்தை காட்டி நீதிமன்றங்களால் ஒத்திவைக்கப்படாது.
ஒரு வழக்கறிஞரோ அல்லது மனுதாரரோ டிஜிட்டல் முறையில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தவுடன், அவர் ஒரு செயலியைக் கிளிக் செய்வதன் மூலம், தாக்கல் செய்யப்பட்ட நிலை, விண்ணப்பங்கள் மற்றும் பிரமாணப் பத்திரங்களின் நிலை, அடுத்த விசாரணையின் தேதி, நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகள் போன்றவற்றைச் சரிபார்க்கலாம். இதன் மூலம் வழக்கறிஞர்கள் பயனடைகிறார்கள், ஏனெனில் அவர்களோ அல்லது அவர்களது ஊழியர்களோ இனி தங்கள் வழக்குகளின் நிலையைப் பற்றி அறிய நீதிமன்றத்தின் அறிக்கையிடல் பிரிவுகள் அல்லது பிற பிரிவுகளுக்குச் செல்ல வேண்டியதில்லை. உச்ச நீதிமன்றத்தின் மின்னணு கமிட்டியால் வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம், 2022 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அனைத்து விஷயங்களிலும் மாநில அரசுகளின் வழக்குகள்/மனுக்கள் மின்-தாக்கல் செய்வது கட்டாயமாக்கபட வேண்டும்.
தொற்றுநோய்க்கு முன், மெய்நிகர் விசாரணைகள் வரையறுக்கப்பட்ட முறையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டன; எடுத்துக்காட்டாக, குற்றவியல் வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவரின் காவலை நீட்டிக்கவோஅல்லது குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றத்தின் முன் நேரடியாக ஆஜர்படுத்தவோ சாத்தியம் இல்லாத ஒன்றாக இருந்தது. இருப்பினும், ஒவ்வொரு வழக்கையும் கிட்டத்தட்ட மெய்நிகர் முறையில் விசாரிக்க முடியாது. திருமணச் சிக்கல்கள் மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான வழக்குகள், காசோலைகள் பணம் இன்றி திரும்புதல், மோட்டார் விபத்து இழப்பீடு போன்றவை மத்தியஸ்த மையங்களுக்குப் பரிந்துரைக்கப்படும். லோக் அதாலத்தில் உள்ள சில வழக்குகள் மெய்நிகர் விசாரணையின் மூலம் தீர்க்கும் தகுதி படத்தவை என்றால் அதில் சேர்க்கப்படலாம்.
கிருஷ்ண வேணி நாகம் -ஹரிஷ் நாகம் (2017) ஆகியோருக்கு இடையேயான திருமண சிக்கல் தொடர்பான வழக்கில் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிப்பதை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது. இருப்பினும் குறைந்த காலகட்டமே இது அமலில் இருந்தது. உச்ச நீதிமன்றத்தின் ஒருங்கிணைந்த அமர்வானது, சாந்தினி-விஜய வெங்கடேஷ் (2018) இடையேயான திருமண சிக்கல் வழக்கை மறுபரிசீலனை செய்யும்படி பெரிய பெஞ்சுக்கு பரிந்துரைத்தது. சமீபத்தில், அஞ்சலி பிரம்மாவர் சௌஹான்-நவின் சௌஹான் இடையேயான திருமண சிக்கல் வழக்கினை கெளதம் புத்தா நகர் குடும்ப நீதிமன்றம், வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதித்தது.
ஸ்வப்னில் திரிபாதியின் தீர்ப்பின் அடிப்படையில் அரசியலமைப்பு மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை நேரடியாக ஒளிபரப்ப 2018ல், உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. நீதிமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பு என்பது வெளிப்படைத்தன்மை மற்றும் எளிய அணுகலை உறுதி செய்வதற்கான ஒரு முன்னெடுப்பாகும்.
இதற்கு எதிராக பல எதிர் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், நாட்டிலேயே முதன் முறையாக வழக்கின் விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்வதில் 2021ம் ஆண்டு ஜூலையில் குஜராத் உயர் நீதிமன்றம் முதல் நீதிமன்றமாக இருந்தது. குஜராத் உயர் நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி விக்ரம் நாத் நேரடி ஒளிபரப்பு செயல்பாட்டில் இருந்த சட்ட மற்றும் தொழில்நுட்ப தடைகள் சிறப்பாக அகற்றினார். இந்த முன்மாதிரியை கர்நாடகா, ஒடிசா, மத்தியப் பிரதேசம் மற்றும் பாட்னா போன்ற பிற உயர் நீதிமன்றங்களும் பின்பற்றின.
இணைய இணைப்புச் சிக்கல்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்கள் வழக்குகளை நடத்தக்கூடிய வசதியுள்ள இடத்தின் தேவை ஆகியவை கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய பிரச்னைகளாகும். அரசியல் விருப்பமும், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் ஆதரவும் அவசியம். நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் அதன் நன்மைகள் பற்றி நன்கு அறிந்திருக்கவில்லை. இவை குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், போதிய பயிற்சி பெறுவதும் இப்போதைய காலத்தின் தேவையாகும். அனைத்து வழக்குகளிலும் மெய்நிகர் விசாரணைகள் என்பது நேரடி நீதிமன்ற விசாரணைகளுக்கு மாற்றாக இருக்க முடியாது. எவ்வாறாயினும், பொருத்தமான வழக்குகள் மற்றும் சில வகை பிரிவுகளில் உள்ள வழக்குகளில் மட்டும், பார் உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து நீதிமன்ற நிர்வாகமானது மெய்நிகர் விசாரணை மேற்கொள்வதை கட்டாயமாக்க வேண்டும்.
இந்த கட்டுரை முதன்முதலில் அச்சுப் பதிப்பில் கடந்த 28ம் தேதியன்று அன்று ‘Justice, a click away’ என்ற தலைப்பில் வெளிவந்தது. கட்டுரையின் எழுத்தாளர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் அரசு கூடுதல் வழக்கறிஞராக உள்ளார்.
தமிழில்; ரமணி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil