கடந்த ஒரு ஆண்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தன்னை ஒரு திறமையான எதிர்கட்சித் தலைவர் என்பதைவிட கண்ணியமான அரசியல்வாதியாக முன்னிறுத்திக்கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்துகிறார்.
கண்ணன்
அதிமுக ஒரு ஆண்டு ஆட்சியை நிறைவுசெய்திருக்கும் வேளையில் 89 தொகுதிகளுடன் சட்டமன்றத்தில் வலுவான எதிர்கட்சியாக விளங்கும் திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடும் அலசப்பட வேண்டிய தருணம் இது.
கடந்த ஒரு ஆண்டில் தமிழக அரசியலில் பல்வேறு இமாலய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஜெயலலிதா 75 நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பின் மறைந்தார். அந்தக் காலகட்டத்தில் அரசு கிட்டத்தட்ட ஸ்தம்பித்திருந்தது. முதல்வரின் உடல்நிலை பற்றி மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் தவிர வேறொரு தகவலும் கிடைக்கவில்லை. முதல்வர் இறந்துவிட்டார் என்ற சந்தேகத்தைப் போக்க முதல்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை அவர் இறக்கும் வரை நிறைவேற்றப்படவே இல்லை. ஜெயலலிதா இறந்த பின் இரண்டு முதல்வர்கள் மாறிவிட்டனர். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும் குற்றவாளிதான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. அவரது உடன்பிறவாச் சகோதரி சசிகலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் ஆளும் கட்சியிலும் ஆட்சியிலும் அவரது குடும்பத்தின் ஆதிக்கம் இன்னும் முழுமையாக விலகியபாடில்லை. வலுவற்ற தலைமையைக் கொண்ட தமிழக அரசின் மீது மத்திய அரசின் தலையீடும் வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது.
இத்தகு பரபரப்பான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ள காலகட்டத்தில் எதிர்கட்சித் தலைவராக ஸ்டாலின் எவ்வளவோ செய்திருக்க முடியும். ஆனால் அவர் பெருமளவில் அறிக்கைவிடுதல், தனிப்பட்ட முறையில் திமுகவினரைக் கொண்டு அடையாளப் போராட்டங்கள் நடத்துதல் ஆகியவற்றோடு நிறுத்திக்கொண்டுவிட்டார்.
இந்தக் காலகட்டத்தில் ஸ்டாலினின் சில செயல்பாடுகள் அவரை கண்ணியமான அரசியல்வாதியாக மக்கள் மனதில் பதியவைத்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்; விழாவில் பின்னிருக்கை ஒதுக்கப்பட்டதைப் பெரிய பிரச்சினையாக்காமல் தவிர்த்தார்; ஜெயலலிதாவின் மறைவின்போது அவரை மனதாரப் பாராட்டினார்; ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது அவரை நேரில் சென்று சந்தித்தார்; இவை எல்லாம் ஒரு அரசியல்வாதியாக ஸ்டாலினுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன.
எதிர்கட்சித் தலைவராகவும் சுத்தமாகச் செயல்படவே இல்லை என்று சொல்லிவிட முடியாது. தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் அவர் தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கடையடைப்புப் போராட்டம் பெருமளவு வெற்றிபெற்றது. தமிழகத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு எதிர்க்கட்சியால் அழைப்புவிடுக்கப்பட்ட போராட்டத்துக்கு அவ்வளவு ஆதரவு கிடைத்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
அதேபோல் சில வாரங்களுக்கு முன், அதிமுகவில் ஒரு பிரிவினரை மட்டும் மிரட்டி வழிக்குக் கொண்டுவர மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்தியில் ஆளும் பாஜக ஏவிவிடுகிறது என்று துணிச்சலான காட்டமான அறிக்கையை வெளியிட்டபோது அரசியல் விமர்சகர்கள் சற்று மனம் குளிர்ந்தனர். ஆனால் அந்த அறிக்கையில் இருந்த வேகம் அதன் பிறகு தொடரவில்லை.
நாட்டையே வியக்கவைத்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போதும் ஒரு எதிர்கட்சித் தலைவராக போதுமான அளவு செயல்படவில்லை. அவரது தலைமையில் திமுக சில போராட்டங்களை நடத்தியது. ஆனால் அவற்றுக்கும் போதுமான மக்கள் ஆதரவைப் பெற முடியவில்லை. இளைஞர்களின் ஜல்லிக்கட்டுப் போராட்டம் அரச வன்முறையால் ஒடுக்கப்பட்டபோதும் அதைக் கண்டித்து ஒரு அறிக்கை விடுவதோடு தன் எதிர்ப்பை நிறுத்திக் கொண்டது பலரையும் ஏமாற்றமடையச் செய்தது.
இப்போது தமிழக அரசு அடுத்த நான்காண்டுகளை நிறைவுசெய்யுமா என்ற சந்தேகம் தமிழக அரசியலை கவனிக்கும் அனைவரையும் ஆட்கொண்டுள்ளது. ஸ்டாலினும், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரும் என்று வெளிப்படையாகக் கூறிவிட்டனர். அதிமுகவில் வலுவான தலைவர் யாரும் இல்லை. கட்சியும் கட்சியின் வாக்குவங்கியும் பிரிந்திருக்கின்றன. இந்த நிலையிலும் உடனடியாகத் தேர்தல் வந்தால் திமுக வெற்றியடைந்து ஸ்டாலின் முதல்வராகிவிடுவார் என்று உறுதியாகச் சொல்வதற்கில்லை.
இந்த நிலையை உணர்ந்துகொண்டு ஸ்டாலின் தன் செயல்பாடுகளில் வீரியத்தையும் வேகத்தையும் அதிகரித்துக்கொள்வது அவருக்கும் திமுகவின் எதிர்காலத்துக்கும் தமிழக மக்களுக்கும் நன்மை பயக்கும்.