திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்வு குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தனது கருத்துகளை இங்கு முன்வைக்கிறார்...
ஸ்டாலின் இந்த நேரத்தில் எந்த ரிஸ்க்-கும் எடுக்க விரும்பவில்லை. பாதுகாப்பாக கட்சியையும், கூட்டணியையும் இப்போது இருப்பது போலவே எடுத்துச் சென்று, 2021-ல் முதல்வர் ஆவதே அவரது லட்சியம். அதைத்தான் பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வுகளில் உணர்த்தியிருக்கிறார். வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைக்கக் கூடாது என நினைக்கிற அவரது, வியூகத்தை குறை சொல்ல முடியாது.
அரசியல் வியூகங்களில் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஸ்டாலின் என அனைவருக்குமே ‘முன் ஏர்’ காமராஜர்தான். முதல் தேர்தலில் வன்னியர் சமூகத்தை சேர்ந்த இருவருக்கு மட்டுமே தேர்தலில் காமராஜர் டிக்கெட் கொடுத்தார். முதலியார், ரெட்டியார், நாயுடு, பிள்ளை, உடையார், மூப்பனார், யாதவர், கிராமணி, பட்டியல் சமூகத்தினரை தனக்கு ஆதரவளிக்க வைத்து அரசியல் செய்தார்.
பெரும்பான்மை வன்னியர் சமூகத்தில் இருந்து உருவாகிற தலைவர், தனக்கு சவாலாக வரும் வாய்ப்பு இருக்கலாம் என்பதே அந்த தவிர்ப்பின் பின்னணி. உ.பி., பீகாரில் யாதவர்கள் வலுவான சக்தியாக உருவெடுத்ததுபோல, இங்கு வன்னியர்கள் வலுவான அரசியல் சக்தியாக தோன்றாமல் இருக்க அதுவே காரணம்.
ஸ்டாலினுக்கு இப்போது சீனியரான துரைமுருகனை பொதுச்செயலாளர் ஆக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனினும் ஸ்டாலினால் பொதுச் செயலாளராக ஆக்கப்படுகிற துரைமுருகனுக்கு வயது 82. இனி அவர் ஸ்டாலினுக்கு போட்டியாக தலைவர் பதவியை கேட்கப் போவதில்லை. அவரது அதிகபட்ச இலக்கு, வேலூரில் தனது மகன் கதிர் ஆனந்தின் இருப்பை வலுப்படுத்துவதாகவே இருக்கும். தவிர, பொதுச்செயலாளரின் அதிகாரம் திமுக.வில் குறைக்கப்பட்டுவிட்டது.
எனினும் துரைமுருகன் இந்தப் பதவியை பெருமிதமாகவே உணர்வார். ஒரு பெரும்பான்மை சமூகத்தை திமுக பெருமிதப்படுத்தியதாக இதைக் காட்ட முடியும். தன்னை வாழவைத்த வன்னியர் சமூகத்திற்கு திமுக நன்றிக் கடன் செலுத்தியதாக கூறிக் கொள்ளலாம். ஒருவேளை துரைமுருகனுக்கு இந்தப் பதவியை வழங்காமல் இருந்திருந்தால், பாமக போன்ற கட்சிகள் இதை ஒரு பிரச்னையாக கூறியிருக்கலாம். அதற்கும் திமுக வாய்ப்பு கொடுக்கவில்லை.
டி.ஆர்.பாலு நியமனத்திலும் சில கணக்குகள் இருக்கின்றன. ஸ்டாலினைச் சுற்றியும், உதயநிதியைச் சுற்றியும் ஏற்கனவே முக்குலத்தோர் சமூகத் தலைவர்கள் இருக்கிறார்கள். அதேசமயம், திமுக.வுக்கு அந்தச் சமூக வாக்குகள் மிகக் குறைவு. தங்களுக்கு பெரிதாக வாக்களிக்காத சமூகத்திற்கே திமுக.வில் வழங்கப்படும் முக்கியத்துவம், திமுக.வுக்கு வாக்களித்து வருகிற சமூகங்களை அதிருப்தியில் தள்ளும் என்பது நிஜம். புதிதாக அரசியலுக்கு வருகிற ரஜினிக்கு ஆதரவாக அது திரும்பலாம்.
இது பிரசாந்த் கிஷோர் மூலமாக திமுக தலைமைக்கும் தெரியும். அதைத் தாண்டி டி.ஆர்.பாலுவுக்கு வழங்குகிறார்கள் என்றால், அவர் சென்னையில் ஏற்கனவே ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு இயங்கியவர். 1998-ல் டி.ஆர்.பாலுவைத் தவிர வேறு யாராக இருந்திருந்தாலும் தென் சென்னையில் ஜனா கிருஷ்ணமூர்த்தியை தோற்கடித்திருக்க முடியாது. 2009-ல் இவரைத் தவிர வேறு யாராலும் ஏ.கே.மூர்த்தியை தோற்கடித்திருக்க முடியாது. மக்களவையில் நீண்ட அனுபவம் கொண்டவர்.
எல்லாவற்றுக்கும் மேலாக முக்குலத்தோரில் கள்ளர், மறவர் வாக்குகள் டிடிவி தினகரன் பக்கமே அதிகம் போகின்றன. ஆனால் அகமுடையார் வாக்குகள் திமுக.வுக்கு வருகின்றன. அகமுடையார் சமூக அரசியல் வீழ்ச்சிக்கு சசிகலா காரணம் என்கிற வருத்தம் அந்தச் சமூகத்தினரிடம் இருக்கிறது. அந்த அடிப்படையில் ஜெயலலிதா, சசிகலா தாக்கத்தை மீறி தத்துவ மேதை டி.கே.எஸ்., தா.கிருஷ்ணன், கோ.சி.மணி, டி.ஆர்.பாலு என அகமுடையார் தலைவர்கள் தொடர்ந்து திமுக.வுக்கு தூணாக இருந்திருக்கிறார்கள்.
முக்குலத்தோர் என்கிற பொதுப் பிரிவு அடையாளத்தில் இல்லாவிட்டாலும், அகமுடையார் சமூகப் பிரதிநிதித்துவம் என்கிற அடிப்படையில் திமுக.வுக்கு இதில் வாக்கு லாபம் இருக்கிறது. தவிர, டி.ஆர்.பாலு பணபலம் மிக்கவர். பெரிய ஆர்கனைசர்! 1978-ல் திமுக.வுக்கு ராஜ்யசபா தேர்தல் சவாலாக அமைந்தபோது கருணாநிதியின் தளபதியாக இரா.செழியனை தோற்கடித்து ராஜ்யசபா எம்.பி. ஆனவர் டி.ஆர்.பாலு. இவரையும் புறக்கணிக்க முடியாத சூழலும் ஸ்டாலினுக்கு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
டி.ஆர்.பாலுவும் ஸ்டாலினுக்கு எதிராக அதிகார அரசியல் நடத்தப் போவதில்லை. அவருக்கும் மன்னார்குடியில் தனது மகனை ஆளாக்குவதுதான் விருப்பமாக இருக்கும். எனவே துரைமுருகன், பாலு ஆகியோரை தேர்வு செய்ததன் மூலமாக கட்சிக்குள் இப்போது எந்த சலசலப்பும் உருவாகாமல் பாதுகாத்திருக்கிறார் ஸ்டாலின். 2021 தேர்தல் வரை இது போன்ற சுமூக சூழ்நிலையை கட்சிக்குள் வைத்திருக்க ஸ்டாலின் விரும்புவது, ராஜ தந்திரமே!
ஒருவேளை சீனியர்களை புறக்கணித்து, அவர்கள் இனி இந்தக் கட்சிக்குள் தங்களுக்கு வாழ்வில்லை என முடிவெடுத்தால், இது குறித்து வெளியே பேசுவார்கள். அது சர்ச்சைகளை உருவாக்கும். 1993-ல் அப்படி இனி தங்களுக்கு கட்சிக்குள் வாழ்வு இல்லை என நினைத்த சீனியர்கள் பலர்தான் வைகோ பின்னால் போனார்கள். அது போன்ற சூழல்களுக்கு இப்போது ஸ்டாலின் இடம் கொடுக்க வில்லை.
அரசியல் ரீதியாக துரைமுருகன் நியமனம் மூலமாக திமுக.வுக்கு இன்னொரு பலனும் இருக்கிறது. பாமக.வுக்காக இனி திமுக காத்திருக்கத் தேவையில்லை. 2019-ல் துரைமுருகன் போன்ற தலைவர்களே பா.ம.க தேவை என ஸ்டாலினிடம் வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் பாமக.வை தவிர்த்துவிட்டு, வெற்றி பெறும் சூட்சுமத்தை ஸ்டாலின் நிகழ்த்திக் காட்டினார். இனி துரைமுருகன் போன்றவர்களே பாமக கூட்டணி அவசியம் என குரல் கொடுக்க முடியாது.
ஒருவேளை அப்படி குரல் எழுப்பினால், ‘உங்களுக்கு கட்சி தந்திருக்கும் அங்கீகாரத்திற்கு அந்தச் சமூக வாக்குகளைப் பெற முடியாதா?’ என்கிற கேள்வியை ஸ்டாலின் முன்வைப்பார். எனவே பாமக.வுக்கான பேர பலத்தை துரைமுருகன் நியமனம் மூலமாக வெகுவாக குறைத்துவிட்டது திமுக.
எப்படிப் பார்த்தாலும் துரைமுருகன், பாலு நியமனங்கள் திமுக.வுக்கு பாதுகாப்பான தற்காப்பு ஆட்டம்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.