கவிதா முரளிதரன்
நீட் என்கிற சமூக அநீதிக்கு பலியாகியிருக்கும் அனிதாவைச் சுற்றி நிகழும் விவாதங்களில் இரண்டு கேள்விகள் கடுமையாக தொந்திரவு செய்கின்றன. ஒன்று நீட் தேர்வில் அவர் தேர்வாகாததன் பின்னால் இருக்கும் எள்ளல் தொனி. இன்னொன்று உச்ச நீதிமன்றம் வரை நீண்ட அவரது போராட்டத்தின் பின்புலம்.
பன்னிரெண்டாம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் எடுத்தவர் எப்படி நீட் தேர்வில் தோற்றுப் போனார்? ஒரு கூலி தொழிலாளியின் மகளான அவர் எப்படி உச்ச நீதிமன்றம் வரை சென்றார்? என்ற இரு கேள்விகளையே அனிதாவின் மரணத்தை கொச்சைப்படுத்த விரும்பும் பல பதிவுகளிலும் பல தொலைகாட்சி விவாதங்களிலும் பார்க்க நேரிட்டது.
நீட் தேர்வில் அனிதா தேர்வு பெற முடியாதது பற்றி வல்லுனர்கள் பல விரிவான பதில்களை கொடுத்திருக்கிறார்கள். சி.பி.எஸ்.இ தேர்வின் அடிப்படையில் நடத்தப்படும் நீட் தேர்வு எளிய கிராமப்புற மாணவர்களுக்கு எப்படிப்பட்ட சவாலாக இருக்கும் என்பது சமூக வலைதளங்களில் விரிவாகவே விவாதிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவ வசதிகளைப் பொருத்தவரையில் பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழகம் சிறந்து விளங்குவதையும் குறிப்பாக கிராமப்புற மருத்துவ சேவையில் தமிழகத்தின் சாதனைகளையும் தொடர்ந்து பேசும் மருத்துவர் எழிலன் போன்றவர்கள் அதன் காரணம் மருத்துவ படிப்புக்கான சேர்க்கை முறையும் என்பதையும் நிறுவியிருக்கிறார்கள்.
ஆனால் உச்ச நீதிமன்றத்துக்கு அனிதா சென்றது பற்றிய கேள்விகளிலுள்ள குரூரங்களை எப்படி கடப்பது?
உச்சநீதிமன்றத்துக்கு அவரை அழைத்துச் சென்றவர்கள் அனிதாவுக்கு போலி நம்பிக்கையை கொடுத்து மோசம் செய்துவிட்டார்கள் என்று தொலைகாட்சி விவாதம் ஒன்றில் சொல்கிறார் ஒரு பா.ஜ.க பிரமுகர்.
ஊழல் வழக்குகளில் சிக்கும் அரசியல்வாதிகள், பாலியல் வன்புணர்வு செய்பவர்கள், கொலைகாரர்கள் என்று எல்லோரும் உச்ச நீதிமன்றத்தின் படிகளை அன்றாடம் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். ஊழலுக்கு எதிரானது, புதிய இந்தியா படைப்பது என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த அரசின் எந்தவொரு பிரதிநிதியும் உச்ச நீதிமன்றம் செல்வதன் மூலம் போலி நம்பிக்கையை பெறாதீர்கள் என்று அவர்கள் யாரையும் பார்த்துச் சொல்வதில்லை. சமூக நீதியின் மீது சடலமாக கிடக்கும் அனிதாவைப் பார்த்து கேள்வி எழுப்புகிறார்கள்.
அனிதா போன்ற ஒருவர் எப்படி உச்ச நீதிமன்றம் சென்றார், அவருக்கு யார் விமான டிக்கட்டுகள் எடுத்துக் கொடுத்தது என்பது போன்ற கேள்விகளின் பின்னாலிருக்கும் ஒற்றை நோக்கம் இதுதான்: அனிதா போன்றவர்கள் உச்ச நீதிமன்றம் போக கூடாது.
எனில் உச்சநீதிமன்றம் யாருக்கானது?
சமமில்லாத கல்விமுறை இருக்கும் நிலையில் ஒற்றை முறை தேர்வு பற்றி உயிரோடு இருக்கும் போது கேள்வி எழுப்பினார் அனிதா. சமமில்லாத நீதி நிலவும் ஒரு சமூகத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதில் கூட படி நிலைகள் இருப்பது பற்றிய கேள்விகளை மரணம் மூலமாக எழுப்பிச் சென்றிருக்கிறார்.
நீட் எனும் பூட்டைக் கொண்டு அனிதாக்களுக்கு மருத்துவ கல்லூரிகளின் வளாகங்களை அடைத்துவிட்டவர்கள், உச்சநீதிமன்றத்துக்குச் செல்ல எந்த நுழைவுத் தேர்வை, எந்த தகுதியை வரையறுக்கிறார்கள்?
உச்ச நீதிமன்றத்துக்கு அனிதா சென்றதன் பின்னால் உள்ள கேள்விகள், உண்மையில் அவரது பொருளாதார நிலை பற்றியது அல்ல. இந்த நாட்டில் நீதி பற்றியது. இந்த நாட்டில் நீதி யாருக்கானது என்பதைப் பற்றியது. வசதியும் வாய்ப்பும் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இங்கு நீதி கிடைக்குமா என்கிற கேள்வி அடிப்படையானது.
யாராவது அனிதாவுக்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்திருப்பார்கள், யாராவது அவர் தில்லியில் தங்க ஏற்பாடு செய்திருப்பார்கள். ஆனால் நீதிமன்ற படிகளை ஏற வைத்தது, கலைந்து போன அவரது கனவும் வீணாகிப் போன அவரது உழைப்புமே.
பத்து வருடங்களுக்கு முன்பு தாயை இழந்த போது மருத்துவராக வேண்டும் என்று முதன்முதலாக நினைத்திருப்பார் அனிதா. அதற்கு இந்த சமூகம் விதித்த எல்லா நிர்பந்தங்களையும் விதிகளையும் சவால்களையும் அவர் எதிர்கொண்டே வந்திருக்கிறார். அதற்கான உழைப்பை செலுத்தி வந்திருக்கிறார். நீட் மூலம் கனவு பறிபோன அவர் நீதிமன்ற படியேறியது ஒன்றும் ஆச்சரியமில்லை.
எளிய மக்களின் கடைசி நம்பிக்கையாக நீதிமன்றங்கள் இது வரை எஞ்சியிருக்கின்றன. அந்த நம்பிக்கையின் மீதும் கரும் நிழலைப் படர விட்டிருக்கிறது அனிதாவின் மரணம்.
நீட் என்றால் எப்படியிருக்கும்னே தெரியாது என்று மழலை மாறாத குரலில் சொன்னவர், அது எப்படியிருக்கும் என்பதை செய்து காட்டியிருக்கிறார். நீட், சமூக நீதியின் மரணம்.
சமூக வலைதளங்களில் எங்களை மன்னித்துவிடு அனிதா என்று அழுகுரல்கள் கேட்கின்றன.
மன்னித்த பிறகு நாங்கள் எளிதாக எங்களது குற்றவுணர்வை ஒரு பாம்புச் சட்டையைப் போல கழற்றி எரிந்து அடுத்த வேலையை நோக்கி நகர்ந்துவிடலாம்.
அதனால்தான் கேட்கிறேன், எங்களை மன்னித்துவிடாதே அனிதா.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.