ச.கோசல்ராம்
தமிழகத்தில் மதுவுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. தமிழக அரசின் அக்ஷய பாத்திரமே மது கடைகள்தான். எத்தனை தடைகள் வந்தாலும், வேறு வேறு ரூபத்தில் மது விற்பனையை அரசு ஊக்குவிக்கிறது. அதன் அடுத்த கட்டம்தான் தமிழக அரசு வீடுகளில் அதிக அளவில் மது பாட்டில்களை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கியது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி, படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். பதவி ஏற்றதும் 500 மதுக்கடைகளை மூடவும் உத்தரவு பிறப்பித்து நம்பிக்கையை விதைத்தார். இந்நிலையில் நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்குள் இருக்கும் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழகத்தில் சுமார் 3500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை அமைக்க முயற்சி நடைபெற்றது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு போராட்டமாகவும் வெடித்தது. பல இடங்களில் திறந்திருந்த மதுக்கடைகளை மக்கள் போராடி மூட வைத்தனர்.
இந்நிலையில் மதுப்பாட்டில்கள் வைத்திருக்கும் விதியில் மாற்றம் கொண்டு வந்துள்ளது, தமிழக அரசு. அதன் படி, ‘‘தமிழ்நாடு மதுவகைகள் விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி இந்திய தயாரிப்பு வெளிநாடு மது வகைகளில் 6 பாட்டில்களும் (4.5 லிட்டர்) இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுவகைகளில் 6 பாட்டில்களும், 12 பீர் பாட்டில்களும் (7.8லிட்டர்), ஒயின் 12 பாட்டில்களும் (9லிட்டர்) வைத்துக் கொள்ளலாம். இந்த உத்தரவு அரசிதழிலும் வெளியிடப்பட்டது.
இதற்கு முன்பு ஒருவர் வீட்டில் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகளில் ஒரு பாட்டிலும், இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுவகைகளில் ஒரு பாட்டிலும், ஒயின் ஒரு பாட்டிலும், 2 பீர் பாட்டில்களுமே வைத்துக் கொள்ள முடியும்.
தமிழக அரசின் புதிய உத்தரவால் என்ன கேடு வந்துவிடப் போகிறது என்று மதுப்பிரியர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மூடப்பட்ட 3500 மதுக்கடைகளால், மது பிரியர்கள் கடைகளைத் தேடி நீண்ட தூரம் போக வேண்டியதிருக்கிறது. அதனால் இந்த உத்தரவு அவர்களுக்கு நன்மை பயக்கும். வாரத்துக்கு ஒரு முறை மொத்தமாக வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ள முடியும். அரசு தரப்பில் 6 பாட்டில் இந்திய தயாரிப்பான வெளிநாடு மதுபானங்களை வீட்டில் வைத்திருக்க முடியும். அதாவது 4.5 லிட்டர் வரையில் வீட்டில் வைத்திருக்கலாம். பெரும்பாலும் குவாட்டர் பாட்டிலாகதான் குடிமகன்கள் பயன்படுத்துகிறார்கள். எனவே பத்து பாட்டில் வரையில் சர்வ சாதரணமாக வைத்துக் கொள்ள முடியும்.
மற்ற மதுபான வகைகளின் எண்ணிக்கையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், வீட்டில் பார் செட் செய்து கொள்ள முடியும். சர்வ சாதாரணமாக 30 மதுபாட்டில்களை வீட்டில் வைத்துக்கொள்ள அரசு அனுமதிக்கிறது. ஓரு மாத சம்பளத்தையும் மதுக்கடையில் மொத்தமாக செலுத்திவிடச் சொல்கிறது. வீட்டில் வைத்து குடிக்கும் போது குழந்தைகளுக்கும் இந்த பழக்கம் தொற்றிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது என்று வருத்தப்படுகிறார்கள், சமூக ஆர்வலர்கள்.
அரசின் இந்த அறிவிப்பு, மதுவை சில்லறையாக விற்கவே வழி வகுக்கும் என்பது மதுவுக்கு எதிராக போராடி வருபவர்களின் கருத்தாக இருக்கிறது. மதுக்கடைகள் இப்போது பகல் 12 மணிக்கு திறக்கப்படுகிறது. அதுவரை குடிமகன்கள் காத்திருக்க வேண்டியதிருக்கிறது. சிலர் கள்ள மார்க்கெட்டில் வாங்கி வைத்து பாட்டிலுக்கு ரூ.20 வீதம் அதிகம் வைத்து விற்று வருகிறார்கள். இதை பக்கத்து வீட்டினர் போலீசில் புகார் செய்தால், அவர்களை கைது செய்ய வேண்டியதிருக்கிறது. இப்போது அரசாங்கம் அவர்களுக்கு வீட்டில் வாங்கி வைக்க அனுமதி கொடுத்திருப்பது, அவர்களின் கள்ள சந்தைக்கு அரசு அங்கிகாரம் கொடுத்திருக்கிறது.
இனி வீடுகளில் மொத்தமாக வாங்கி வைத்து சில்லறை விலைக்கு விற்பார்கள். எந்த நேரமும் மது பாட்டில்கள் கிடைக்கும். இதை போலீசாராலும் தடுக்க முடியாது. கேட்டால் அரசு அனுமதித்த அளவே வைத்து விற்பதாக, மாமூல் வாங்கி கொண்டு போலீசாரே சொல்வார்கள். பல இடங்களில் போலீசாரே வீடுகளில் மது விற்பனையை போலீசாரே அனுமதிப்பார்கள். இப்போதே கள்ளச்சந்தையில் டாஸ்மாக் மதுவும் போலி மதுவும் விற்கப்படுகிறது. இனி போலி மதுவும் அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. விஷ சாராய சாவுகளை தடுப்பதற்காகவே டாஸ்மாக் கொண்டு வந்ததாக சொன்னார்கள். இப்போதைய அறிவிப்பு மீண்டும் அதை நோக்கியே நகர்த்திச் செல்லும் என்பது மதுவுக்கு எதிரானவர்களின் கருத்தாக இருக்கிறது.
வீடுகளில் இத்தனை பாட்டில்கள்தான் வைத்துக் கொள்ளலாம் என்று அரசு சொல்லியிருக்கிறது. டாஸ்மாக்கில் ஒரு ஆளுக்கு இவ்வளவு பாட்டில்தான் கொடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவும் கிடையாது. ஆளும் கட்சி பிரமுகர்கள் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து, விடுமுறை நாட்களில் கூடுதல் விலைக்கு விற்று பணம் சம்பாதிப்பார்கள். சுதந்திர தினம், வள்ளலார் தினம் போன்ற நாட்களிலும் இனி மது தாரளமாக கிடைக்கும். குடியிருப்புக்கு அருகில் மதுக்கடை உள்ளது. அதை அகற்ற வேண்டும் என்று தானே போராடுகிறீர்கள். வீட்டிலேயே மதுக்கடையை திறக்க அனுமதித்துவிட்டோம். இனி எப்படி போராடுவீர்கள் என்று தமிழக அரசு சொல்லாமல் சொல்கிறது. இதுதான் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வரும் நடவடிக்கையா?
2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது விஜயகாந்த் தனது தேர்தல் அறிக்கையில், ரேஷன் பொருட்களை வீடு தேடி கொண்டு வந்து கொடுக்க செய்வோம் என்று அறிவித்தார். அதை யாராவது ஞாபகப்படுத்தினால், வீடு தேடி மது வரும் திட்டத்தை கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் மது விற்ற காசு தள்ளாடாது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.