scorecardresearch

ஆபத்தும் கொடூரமும்!

பலாத்காரம் மற்றும் கொலை இரண்டிற்குமே ஒரு தண்டனை கிடைக்கும் என்றால் பாதிக்கப்பட்ட குழந்தையினை கொல்வதே, குற்றத்தில் தப்பிப்பதற்கான வழியாகவே தோன்றும்.

Kathua Rape Case Verdict Life imprisonment
Kathua Rape Case Verdict Life imprisonment

ஃப்ளாவியா ஆக்னஸ்

ஒரு இனம் சார்ந்த வெறுப்பு மற்றும் எதிர்ப்பினை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை போன்று அச்சுறுத்தலுக்குரிய செயல்பாட்டின் மூலம் வெளிப்படுத்தி இருப்பது தண்டனைக்குரியது. மொத்த தேசமே வருந்தக் கூடியது. காஷ்மீரின் கத்துவா பகுதியில் உள்ள பக்கர்வால் என்ற இஸ்லாமிய நாடோடி வகுப்பினைச் சேர்ந்த எட்டு வயது சிறுமிக்கு ஏற்பட்ட இந்த கொடூரத்தினை இந்து தேசியவாதத்தின் பெயர் கொண்டு மறைக்க முயன்ற காரணம் இந்தியாவின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற தூண்டியது. அந்த அழகான கண்கள் கொண்ட அப்பெண்ணின் புகைப்படம் நம்மை நோக்கி தொலைகாட்சி வழியாக பார்க்கும் போது நம்மால் என்னதான் செய்துவிட முடிகின்றது?

சில போராட்டக்காரர்கள் இந்த வன்முறையினை மதம் சார்ந்த வன்முறையாக மட்டுமே எடுத்துச் செல்லாமல் இந்தியப் பெண்களின் பாதுகாப்பினை அச்சுறுத்தும் வன்முறையாக கருதுகிறார்கள். எதிர்காலத்தில் இது போன்ற எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் போராட்டம் செய்கின்றார்கள். டெல்லி பெண்கள் கமிஷன் தலைவர் திருமதி. ஸ்வாதி மஹிவல் போன்றோர்களும் இந்த தண்டனையை அமல்படுத்தக் கூறி போராட்டத்தில் பங்கேற்றார்கள்.

பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை தான் முடிவு என்று கூறி போராட்டங்களை எளிதில் அடக்கிவிடலாம். ஆனால் சமயம் சார்ந்த வெறுப்புகளின் பின்னணியில் இது போன்ற கொடூரங்கள் நிகழாமல் தடுப்பதென்பது பெரிய காரியமாக இருக்கின்றது. சிறிதும் கால அவகாசம் இல்லாமல் இது போன்ற சட்டமாற்றங்களை கொண்டு வந்து நடைமுறைப்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால் போராட்டங்களை வலுவிழக்கச் செய்ய இது போன்ற அவசர சட்டங்கள் உதவுகின்றன. இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு மரண தண்டனை ஒன்றே தான் தீர்வாக அமையும் என்று சொல்லி நிர்பயாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராடினார்கள்.

ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்டு, சாலையில் அந்த பெண்ணை வீசியது பெரும் பிரச்சனைகளையும் இந்தியப் பெண்களின் பாதுகாப்பினையும் கேள்விக்குறியாக்கியது. நிர்பயா வழக்கினை விசாரிக்க நீதிபதி ஜெ.எஸ். வர்மா தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரை, எத்தனை விரைவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்ப்பு வழங்க வேண்டும் என்று தீர்மானமாக அறிவித்தது. ஆனால் இம்முறை கத்துவா பிரச்சனைக்காக இதுவரை எந்த ஒரு விசாரணைக் குழுவும் அமைக்கப்படவில்லை. பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்விற்காக அவர்களுடன் பயணிக்கும் துறை சார்ந்த வல்லுநர்களிடமும் எந்த வித கருத்துகளும் கேட்கப்படாமலே 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு 20 வருட சிறை வாசமும் மரண தண்டனையும் விதிக்கப்படும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

ஆனால் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் தவறுகள் குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது என்பதை யாராலும் உறுதியாக கூற இயலாது. மகாராஷ்ட்ரா மாநில காவல் நிலையத்தில், மதுரா என்ற பெண்ணை காவலர்கள் பலாத்காரம் செய்த வழக்கின் தீர்ப்பு நாடெங்கும் பெரும் அதிர்ச்சியினையும் போராட்டங்களையும் உண்டாக்கியது. அதன் விளைவாக 1983ல் பாலியல் பலாத்காரம் தொடர்பான சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அனைத்து விதமான பாலியல் பலாத்காரங்களுக்கும் 7 ஆண்டுகள் கட்டாய சிறை தண்டனையும், மனம் மற்றும் உடல்ரீதியாக அதிக பாதிப்பினை ஏற்படுத்தும் பலாத்காரங்களுக்கு 10 வருட சிறை தண்டனையும் அளிக்கப்படும் என்று சட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. அந்த மாற்றங்களைத் தொடர்ந்து பாலியல் தொடர்பான புகார்கள் பதிவு என்பது தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. 6019 புகார்கள் 83ல் பதிவாக, 1988ல் 9099ஆகவும், 1990ல் 9519ஆக பதிவானது.

வருடங்கள் அதிகரிக்க அதிகரிக்க புகார்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. 2012ல் மட்டும் 24,023 புகார்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதே வருடம் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் கொடுமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பாக சட்டங்கள் இயற்றப்பட்டது. 2013ல் குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதன் பின்பும் குற்றங்கள் அதிகரித்த வகையில் தான் இருந்தது. 2014ல் 36,735ஆகவும், 2015ல் 34,651ஆகவும், 2016ல் 38, 947ஆகவும் புகார்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

புகார்கள் குறித்த விழிப்புணர்வோ, கடுமையான சட்டங்களோ பாலியல் புகார்களும், துன்புறுத்தல்களும் இல்லாத இந்தியாவினை உருவாக்குவது போல் தோன்றவில்லை என்பது வெளிப்படை. மரண தண்டனையும் இதற்கு விதிவிலக்கல்ல. கத்துவாவில் நடைபெற்ற கொடூரங்கள் போல் நடப்பது மிக அரிது. பெரும்பாலாக குழந்தைகள் மீதாக நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் நம் வீட்டிலேயே நடைபெறுகின்றது. 95% குழந்தைகளுக்கு அவர்களை யார் என்று மிகவும் நன்றாகவே தெரியும் என்கின்றது NCRB அறிக்கை. 12 வயது குழந்தை தானாக முன் வந்து நடந்ததை கூறி காவல்துறையில் புகார் அளிக்கும் என்று கூற இயலாது. தன் குடும்ப உறுப்பினர் என்று வரும் போது அவர்களுக்கு மரண தண்டனை அளிப்பதை யாரும் விரும்பமாட்டார்கள் என்பது உண்மை. முடிந்த வரையில் நடந்த நிகழ்வினை மறைப்பதற்கே முயற்சிகள் நடைபெறுமே ஒழிய நீதியோ தீர்வோ கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு. மற்றொரு விதமாக யோசித்தால், பலாத்காரம் மற்றும் பலாத்காரத்துடனான கொலை என இரண்டிற்குமே ஒரு தண்டனை கிடைக்கும் என்கின்ற பட்சத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையினை கொல்வது என்பது குற்றவாளிக்கு குற்றத்தில் தப்பிப்பதற்கான மிகச்சிறந்த வழியாகவே தோன்றும். கத்துவா பிரச்சனையையும் போராட்டங்களையும் நீர்த்துப் போகச் செய்யவே இது போன்ற சட்டங்கள் உதவலாம்.

(இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 30.04.18 அன்று, சட்ட வல்லூநரும், பெண் உரிமை போராளியுமான ஃப்ளாவியா ஆக்னஸ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

தமிழில் நிதியா பாண்டியன்.

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Draconian and dangerous