Advertisment

திராவிட நாடு சர்ச்சை : வெள்ளிக்கிழமை பேச்சு, விடிஞ்சதும் போச்சு!

திராவிட நாடு கொள்கைக்கு ஆதரவாக ஸ்டாலின் பேசியதும் சமூக வலைதளங்களில் திமுக.வினர் கொண்டாடினர். மறுநாள் மறுத்ததும் ‘மீம்ஸ்’காரர்களுக்கு கொண்டாட்டம்!

author-image
WebDesk
Mar 18, 2018 11:58 IST
Dravida Nadu, MK Stalin changes His Stand

Dravida Nadu, MK Stalin changes His Stand

ச.செல்வராஜ்

Advertisment

திராவிட நாடு பிரச்னையில் மு.க.ஸ்டாலின் உண்மையில் சொன்னது என்ன? பிறகு அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது? என்பதை பார்க்கலாம்!

திராவிட நாடு, அறிஞர் அண்ணா முன் வைத்த முழக்கம்! ‘அடைந்தால் திராவிட நாடு, அடையாவிட்டால் சுடுகாடு’ என ஒலித்த காலம் அது! ‘திராவிடர் கழகம்’ என திராவிட மக்களை முன்வைத்து கழகம் கண்டார் பெரியார். ஆனால் அண்ணா, ‘திராவிடர்’ என்கிற பதத்தை தனது கட்சிப் பெயரில் பயன்படுத்தவில்லை. ‘ர்’ விகுதியை எடுத்துவிட்டு, ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என கட்சி தொடங்கினார்.

திராவிட நிலப்பரப்பை குறிக்கும் வகையில் அண்ணாவின் கழகம் அமைந்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்று வரை கருணாநிதியை தலைவராக கொண்டு செயல்படும் திமுக, ‘திராவிடர் முன்னேற்றக் கழகம்’ இல்லை. ‘திராவிட முன்னேற்றக் கழகம்’தான்!

திராவிட நாடு என்கிற கோரிக்கையின் அடையாளமாக அண்ணா உருவாக்கிய பதம், அதிமுக, மதிமுக, இதிமுக(டி.ராஜேந்தர் கட்சி) என தொடர்கிறது. விஜயகாந்த் மட்டும் தத்துவார்த்தமாக இதை யோசித்து (?) தனது கட்சியின் பெயரில் ‘திராவிடர்’ என வரும்படி பார்த்துக் கொண்டார். தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்!

திராவிட நாடு கொள்கையை ஆதரிக்கிற விதமாக, அல்லது திராவிட பரப்பான தென் மாநிலங்களின் முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட கட்சி என்கிற அடையாளம்தான் இன்று வரை இந்தக் கட்சிகளின் பெயர்களில் ஒலிக்கிறது. ‘இதை முன்வைத்துதான் கேரளாவும், கர்நாடகாவும் தண்ணீர் தர மறுகின்றானே..! நீங்கள் ஏன் இன்னும் திராவிடத்தை தூக்கிச் சுமக்கிறீர்கள்! கட்சிப் பெயரில் திராவிடத்தை துறந்துவிடுங்கள்’ என நாம் தமிழர் உள்ளிட்ட அமைப்புகள் குரல் எழுப்புகின்றன. டிடிவி தினகரன் தனது கட்சியில் திராவிடத்தை துறந்ததற்கு இந்தப் பின்னணிகூட ஒரு காரணமாக கூறப்படுகிறது.

ஆனாலும் திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்த அண்ணா, இந்திய-சீனப் போரையொட்டி அதை கைவிட்டார். தேசம் இக்கட்டான சூழலில் இருக்கும்போது பிரிவினை கேட்பது சரியல்ல என நினைத்து அண்ணா கைவிட்டதாக ஒரு தரப்பினரும், மத்திய அரசின் சட்ட நெருக்கடிகளை யோசித்து அண்ணா கைவிட்டதாக இன்னொரு தரப்பினரும் பேசுவதுண்டு!

திராவிட நாடு கோரிக்கை இப்போது மறுபடியும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிளம்புகிறது. குறிப்பாக கேரளாவை மத்திய அரசு புறக்கணிப்பதாக கூறி, சில மாதங்களுக்கு முன்பு அங்கு திராவிட நாடு என்கிற பதத்தை சிலர் ஒலித்தார்கள். ஆந்திரா பிரிவினையின்போது ஒப்புக்கொள்ளப்பட்ட நிதி உதவி போன்றவற்றை மத்திய அரசு செய்ய மறுப்பதால் அண்மையில் சந்திரபாபு நாயுடு வேறு விதமாக குமுறினார்.

‘மத்திய அரசுக்கு தென் மாநிலங்களில் இருந்துதான் அதிக வரி வருவாய் போகிறது. அந்த நிதியை வைத்து வட மாநிலங்களை வளப்படுத்துகிறார்கள்’ என்றார் நாயுடு. அதாவது, ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்கிற அண்ணாவின் முழக்கத்தை வேறு வார்த்தைகளில் சந்திரபாபு நாயுடு சொன்னார்.

இதை அடிப்படையாக வைத்துக்கொண்டு மார்ச் 16-ம் தேதி ஈரோட்டில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ‘திராவிட நாடு கோரிக்கை மறுபடியும் எழுகிறதே?’ என்பதுதான் அந்தக் கேள்வி. முன்னாள் அமைச்சர்கள் முத்துசாமி, பொங்கலூர் பழனிசாமி ஆகியோரை அருகில் வைத்துக்கொண்டு மு.க.ஸ்டாலின் அதற்கு சொன்ன வார்த்தைகள் இவைதான்.. ‘வந்தால் வரவேற்கிறப்படுகிறது. வரும் என்ற நம்பிக்கையில்தான் நான் இருக்கிறேன்’ என தெளிவாக டி.வி. கேமராக்களுக்கு முன்பு பதில் கூறினார் ஸ்டாலின்.

‘திராவிட நாடு கோரிக்கையை நான் வரவேற்கிறேன். திராவிட நாடு வரும் என்கிற நம்பிக்கையில் நான் இருக்கிறேன்’ என ஸ்டாலின் குறிப்பிட்டதாக பொருள் கொள்கின்றன ஊடகங்கள். திராவிட நாடு கொள்கையை திமுக மீண்டும் ஆதரிப்பதாக நாடு முழுவதும் சேனல்களில் விவாதம் நடந்தது. ‘பிரிவினையை ஆதரிக்கிறாரா ஸ்டாலின்?’ என தமிழ் சேனல்களும் பரபரப்பு கூட்டின.

வெள்ளிக்கிழமை ஈரோட்டில் பேட்டி கொடுத்த ஸ்டாலின், மறுநாள் விடிந்ததும் இந்த விவகாரம் ஆகியிருந்த பூதாகரத்தில் சற்றே அரண்டுதான் போயிருந்தார். இதற்கிடையே பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடு காடு என்றவர்கள் பிரிவினை கோருவது தண்டனைக்குரிய குற்றம் என்றவுடன் நாங்கள் தனிநாடு கேட்கவில்லை, அதிக அதிகாரம் தான் கேட்கிறோம் என்று பின்வாங்கியதை உலகறியும். இன்னமும் அந்தச் சட்டம் இருக்கிறது என்று சிலருக்கு நினைவூட்ட வேண்டியுள்ளது.’ என எச்சரிக்கும் தொனியில் பதிவு போட்டார்.

சனிக்கிழமை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், “திராவிட நாடு கோரிக்கை எழுந்திருக்கிறதே என நிருபர்கள் கேட்டபோது, ‘இப்போது இருக்கிற சூழ்நிலையில் அதுபோல உருவாகிக் கொண்டிருக்கிறது. அது வந்தால் வரவேற்போம்’ என்று சொன்னேன். ஆனால் திராவிட நாடு கொள்கையை அண்ணா அன்றைக்கே கைவிட்டிருக்கிறார். கைவிடும்போதுகூட சொல்லியிருக்கிறார்... திராவிட நாடு கொள்கையை கைவிட்டிருக்கிறோமே தவிர, அதற்கான காரண காரியங்கள் அப்படியே இருக்கிறது என்றார்.

அண்ணா சொன்னது நூற்றுக்கு நூறு இப்போது உண்மை என்பது தெரிகிறது. ’ என பதில் அளித்தார் ஸ்டாலின். ஆக, ‘திராவிட நாடு கொள்கையை வரவேற்கிறோம். ஆனால் ஆதரிக்கவில்லை’ என்கிற ரேஞ்சில் குழப்பமான ஒரு பதிலை குறிப்பிட்டு நழுவியிருக்கிறார் ஸ்டாலின்.

வெள்ளிகிழமை திராவிட நாடு கொள்கைக்கு ஆதரவாக ஸ்டாலின் பேட்டி கொடுத்ததும் சமூக வலைதளங்களில் திமுக.வினர் பலரும் அந்தக் கருத்தை கொண்டாடவே செய்தார்கள். சனிக்கிழமை ஸ்டாலின் மறுத்துச் சொன்னதும் ‘மீம்ஸ்’காரர்களுக்கு கொண்டாட்டம் ஆகிவிட்டது!

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்! ஆந்திரா தனது நிதி ஒதுக்கீடு, தனி அந்தஸ்து கோரிக்கைகளுக்காக தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக கோஷம் எழுப்புகிறது. ஆனால் நமக்கு இப்போது முக்கியப் பிரச்னையான காவிரி நீரை தர மறுப்பதே, இன்னொரு திராவிட மாநிலமான கர்நாடகம்தானே! சந்திரபாபு நாயுடு மாதிரி தென் மாநில உரிமை பேசுகிறவர்களோ, திராவிட நாடு கோரிக்கையை ஆதரிக்கிற அண்டை மாநிலத்தினரோ காவிரி பிரச்னையில் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக துரும்பையாவது கிள்ளிப் போடுவார்களா?

தமிழ்நாட்டுக்கு ஆதரவாக கூட வேண்டாம்! உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்துவதுதான் சரி என மத்திய அரசுக்கு எதிராக நாயுடு உள்ளிட்ட திராவிட பஞ்சாயத்துதாரர்கள் யாரும் முனகல் சத்தம்கூட வெளிப்படுத்தவில்லையே! ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டபோது அண்டை மாநிலங்களில் எந்த திராவிட ரத்தமும் கொதிக்க வில்லை. அந்த ரத்த கறையுடன் ராஜபக்‌ஷே சாஞ்சிக்கும், திருப்பதிக்கும் விஜயம் செய்தபோதும் ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கவே செய்தார்கள்.

பெரியார் சொன்ன ‘வெங்காயத்’திற்கு பொருத்தமான ஒரு சொல் உண்டென்றால், அது ‘திராவிடம்’தான்!

 

#Mk Stalin #Andhra Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment