தேர்தல் 2019: தமிழ் தேசியவாதிகள், சூழலியவாதிகள் என்ன செய்வது?

ஒரு வாக்காளன் 2000 ரூபாய் வாங்குகிறான் என்றால், அதை வைத்து தனது வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடும் என அவன் நம்பி வாங்கவில்லை.

சுப.உதயகுமாரன்

மக்களவைத் தேர்தல் 2019, நம் வருங்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு போர் என்பதில் சந்தேகம் இல்லை. தேர்தல் சூழல் வந்தபிறகும்கூட தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு ஏலம் நடக்கிறது. கூடங்குளம் விரிவாக்கம் அறிவிக்கப்பட்டு, செயலாக்கத்திற்கு முயற்சிக்கிறார்கள். சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் எந்த தீய திட்டத்தையும் நிறுத்துவதாக இல்லை.

எதிர்க்கட்சி ஏதாவது நம்பிக்கை தருமா? என்று பார்த்தால், தூத்துக்குடியில் வேட்பாளராக நிற்கும் கனிமொழி, ‘சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வருவோம்’ என வாக்குறுதி கொடுக்கிறார். அந்தத் திட்டம் மீனவர்களை பாதிக்கும் என்பது அவருக்கு தெரியாதா? அந்த மக்களின் கருத்தை இது குறித்து கேட்டார்களா?

ஆக, பாஜக வந்தாலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் எல்லா முடிவுகளையும் எடுக்கப்போவது பன்னாட்டு நிறுவனங்கள், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் அதானி, அம்பானிகள்தான். பாஜக.வோ, காங்கிரஸோ யார் ஜெயித்து வந்தாலும் தமிழ்நாட்டுக்கு ஆபத்துதான். எனவே இரண்டு பேரையுமே ஆதரிக்க முடியாத நிலைமைதான் இருக்கிறது.

திமுக தேர்தல் அறிக்கையில், அணு உலை விவகாரம் பற்றி 2 அம்சங்களை குறிப்பிடுகிறார்கள். ஒன்று, அணு மின் நிலையம் கட்டும் முன்பு உள்ளூர் மக்களின் அனுமதி பெற வேண்டும். மற்றொன்று, உற்பத்தி ஆகும் மின்சாரத்தை அந்த மாநிலத்திற்கே வழங்க வேண்டும். ஆனால் மக்கள் அனுமதி இல்லாமல் கட்டிய அணு உலைகளை என்ன செய்வது? என்பது பற்றி அதில் ஏதும் இல்லை. அதாவது, ‘ஈயம் பூசியது மாதிரியும் இருக்கணும், பூசாதது மாதிரியும் இருக்கணும்’ என்பார்களே, அப்படி இருக்கிறது தேர்தல் அறிக்கை.

டிடிவி தினகரன் வெளியிட்ட தேர்தல் அறிக்கை மற்றக் கட்சிகளைவிட பரவாயில்லைதான். அணு உலை விரிவாக்கம் கூடாது என்கிறார். சுற்றுச் சூழல் சார்ந்த பிரச்னைகளை ஓரளவு தெளிவாக அணுகியிருக்கிறார். ஆனால் இவர்களை நம்பி எப்படி இறங்குவது? நாளை இவர்களும் பாஜக பக்கம் போகமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதே திராவிட கலாச்சாரத்தை சார்ந்த கட்சிதானே இது? தவிர, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா தலைமையில் இயங்கும் இயக்கம் அது என்பதையும் மறந்துவிட முடியாது.

கமல்ஹாசனுக்கு இங்கே என்ன நடக்கிறது? என்பதே தெரியாது. சரத்குமார் போன்றவர்களைப் பற்றிப் பேசுவது வீண். நாம் தமிழர் கட்சி, சூழலியல் பேசுகிறது. தமிழ் தேசியமும் பேசுகிறது. நாங்களும் தமிழ் தேசியவாதிகள்தான். நாங்கள் சூழலியல் வழியாக தமிழ் தேசியத்தை பார்க்கிறோம். ஆனால் அவர்கள் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு பேசுகிறார்கள்.

அந்த அடிப்படையில், நாம் தமிழர் கட்சியின் இனத் தூய்மைவாதம் ஏற்புடையதாக இல்லை. தவிர, ஜனநாயகம் தேவையில்லை என்கிற விதமாக அன்பான சர்வாதிகாரம் என்கிறார்கள். அதை ஏற்க முடியாது.

மொத்தத்தில் தமிழ் மக்கள் யாரோ ஒரு ஆபத்பாந்தவர் வருவார், ஒரு சித்தாந்தம் தருவார், ஒரு கையெழுத்து போடுவார், தலைவிதி மாறிவிடும் என நம்பிக் கொண்டிருக்கக் கூடாது. ஊர் கூடி தேர் இழுத்துத்தான் மாற்றத்தை கொண்டு வர முடியும்.

மதவெறி, ஜாதிவெறி, பணவெறி கட்சிகள் இங்கிருந்து அகற்றப்பட வேண்டும். ஆங்காங்கே உள்ள தோழர்கள் முக்கியமாக பாஜக – அதிமுக அணியை தோற்கடிக்க உள்ளூர் சூழலுக்கு தகுந்தபடி உகந்த சக்திகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

தேர்தல் ஜனநாயகம், ஒரு சடங்காகவே மாறியிருக்கிறது. இதற்கு அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையம் மட்டுமல்ல, மக்களும் உடந்தை. இந்த அமைப்பு முறையில் மக்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

ஒரு வாக்காளன் 2000 ரூபாய் வாங்குகிறான் என்றால், அதை வைத்து தனது வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடும் என அவன் நம்பி வாங்கவில்லை. பிச்சைக்காரனுக்குகூட 2 நாட்களுக்கு அந்தப் பணம் போதாது என்பது அவனுக்குத் தெரியும். ஆனாலும் கோடி கோடியாக கொள்ளை அடித்தவர்கள், அதற்கு பிராயசித்தமாக தருகிற பணமாகத்தான் இதை வாக்காளன் பார்க்கிறான்.

இந்த அமைப்பு முறைகளில் மாற்றம் தேவை. அதை செயல்படுத்துகிற அறிவாளி தலைவர்கள் இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டாக வேண்டும். தமிழகத்தை, இந்த மக்களை, இந்தச் சூழலை நேசிக்கிறவர்கள் 2018-ல் நாகூரில் கூடி ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தினோம்.

ஆனாலும் அந்தந்த பகுதி வழக்குகளையும், பிரச்னைகளையும் எதிர்கொள்ளவே ஒவ்வொரு அமைப்புக்கும் நேரம் சரியாக இருக்கிறது. ஒருங்கிணைவதற்கான கால அவகாசம், பொருளாதார வசதி இல்லை. களப் பணிகள் மட்டும் நிறைய இருக்கிறது. இளம் தலைமுறையினர் மீது நம்பிக்கையும் இருக்கிறது.

(கட்டுரையாளர் சுப.உதயகுமாரன், அணு உலை எதிர்ப்புப் போராளி. பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்)

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close