தூங்கா இரவுகள்

அன்றைய தினம் தெரிந்துவிடப்போவது தேர்தல் முடிவு மாத்திரமல்ல.. தமிழக மக்கள் 'விழித்துக் கொண்டார்களா ' என்பதும்தான்.

By: Published: April 27, 2019, 5:43:09 PM

க.சந்திரகலா

‘நான் உறங்காத இரவுகள் எத்தனை? உன் தலைமுடி எண்ணிக்கை தெரியுமா அத்தனை.. !’- இது காதல் வயப்பட்டவனின் கவிதை வரி மாத்திரமல்ல.. தேர்தலுக்கு பிந்தைய தமிழக வேட்பாளர்களின் நிலையும் கிட்டத்தட்ட இதேதான்.

திமுக, அதிமுக கூட்டணி தவிர்த்த கட்சிகள், சுயேட்சைகள் இந்த விசயத்தில் அதிகம் அலட்டிக்கொள்ளப் போவதில்லை. காரணம் அவர்களுக்கான தோல்வி என்பது அவர்களே அனுமானித்த விசயம்தான்.

இதில் அமமுக விதிவிலக்கு. பாதை எதுவென தெரியாத நிலையில், ஒரேயொரு பாத தடத்தை பின்தொடரும் பாலைவன யாத்ரீகர்கள் அவர்கள். திமுக,அதிமுக கூட்டணி கட்சிகள் அப்படியல்ல. நிறைய எதிர்பார்ப்பிலிருக்கிறார்கள்.

இந்த தேர்தல் முடிவு பல வேட்பாளர்களது அரசியல் வாழ்வையும், குறிப்பிட்ட சில கட்சிகளின் ஆயுளையும்/ ஆட்சியையும் தீர்மானிக்கிற சங்கதியாக இருக்கிறது.
முன்பெல்லாம் முதலீடு தேவைப்படாத ஒற்றைத்தொழில் அரசியல். ஒரேயொரு நிபந்தனை மட்டும்தான்; கை சுத்தமாக இருப்பவரை கை தூக்கிவிட மக்கள் காத்துக்கிடந்தார்கள்.

இப்போது அப்படியல்ல. ஊழல் செய்தானா? சட்ட விரோதமாக சம்பாதித்தானா என்ற கேள்வியில்லை. அதிலிருந்து ஒரு நோட்டை உருவிக்கொடுத்தால் இரண்டு கை நீட்டி வாங்குகிற நிலைக்கு மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஏப்ரல் 18 வரை இனம்தெரியாத பரபரப்பில் இருந்த வாக்காளர்கள் , ‘எவன் வந்தாலும் நமக்கு இதே கதிதான’ என தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு இன்றைக்கு தூங்கிக்கொண்டிருக்கிறார்கள்!

ஆனால் ..வேட்பாளனுக்குள் ஆயிரம் கேள்விகள்!
கோடிகளை வெள்ளமாக பாய விட்டிருக்கோம். ஓட்டும் அதேபோல பெட்டிக்குள் பாய்ஞ்சிருக்குமா? கூட்டணிக்காக காலைப்பிடிச்சு கெஞ்சியவன் கொடுத்த பெட்டியை தலைக்கு வெச்சு படுத்துகிட்டானா? நம்பளை நம்ப வெச்சுகிட்டு உள்ளடி வேலை பார்த்தானா?

கடைசி நேரத்தில் அந்தகட்சியோட கூட்டணி வெச்சது தப்பாயிடிச்சோ? தேவையில்லேன்னு தெரிஞ்சும் மற்ற கட்சியை தோளில் ஏத்திக்கிட்டதுதான் எல்லாத்துக்கும் காரணமோ..?

இப்படி ஆயிரம் சந்தேகங்களை, கேள்விகளை தங்களுக்குத் தாங்களே கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு எங்கிருந்து தூக்கம்வரும்? மே23 வரை இவர்கள் தூங்கப்போவதில்லை; எந்தவொரு தாலாட்டும் இவர்களை தூங்கவைக்கவும் முடியாது.

அன்றைய தினம் தெரிந்துவிடப்போவது
தேர்தல் முடிவு மாத்திரமல்ல.. தமிழக மக்கள் ‘விழித்துக் கொண்டார்களா ‘ என்பதும்தான்.

(கட்டுரையாளர் க.சந்திரகலா, கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோடு கிராமத்தை சேர்ந்தவர். சிறுகதைகள், கவிதைகள் படைப்பிலும் புதிய உயரத்தை நோக்கி பயணிப்பவர்)

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Election 2019 vote counting on may

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X