Endangered Animals : இயற்கைக்கு நாம் தொடர்ந்து இழைக்கும் தீங்கின் விளைவால் நாம் அவ்வபோது நிறைய உயிரினங்களை இழந்துவிடுகின்றோம். கடந்த வருடம் சூடான் என்கின்ற வெள்ளை நிற காண்டாமிருகத்தை இழந்துவிட்டோம். அந்த இனத்தில் மிஞ்சியிருந்த ஒரே ஒரு வெள்ளை நிற ஆண் காண்டாமிருகம் அது. அதன் பின்னர் அதன் சந்ததியே நம் உலகில் இல்லாமல் போகின்ற அபாயம் இருக்கிறது.
தொடர் தொழில் மயமாக்கல் காரணமாக நாம் இழந்து வரும் உயிரினங்கள், பறவைகள், மரம் செடி கொடிகள் என ஏராளம். சில உயிரினங்கள் உலக மயமாக்கல் காராணமாக கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து சில நாட்களில் அது வரலாற்றில் காணப்படும் ஒரு உயிரினமாக மாறிவிடுகிறது.
யானைகள் பொதுவாக வலசை போவதில்லை. அதற்கு ஞாபக சக்தி அதிகம் மேலும் வலசை சென்றாலும், அது சென்று வரும் பாதைகள் அதன் ஜீன் அமைப்பில் ஞாபகமாக்கப்படுவது வழக்கம். அது பழகி வரும் பாதைகளை அடைத்துவிட்டாலோ, கோவில், சிலைகள், ரெசார்ட்கள், ஹோட்டல்கள், குடியிருப்புகள் என மாறிவிட்டாலோ அதன் பாடு திண்டாட்டம் ஆகிவிடுகிறது.
வெறுமனே நாம் “ஊருக்குள் புகுந்த யானை வீடுகளை நாசம் செய்தது, வயல்வெளிகளை நாசம் செய்தது. அதனால் மின்சார வேலி வைத்தோம்” என்று சொல்லிக் கொண்டு நகர்ந்துவிடுவோம். அதில் சிக்கிக் கொண்டு இறந்து போகும் வன உயிரினங்களும் உண்டு, அந்த மின்சார வேலியில் மாட்டி உயிரை துறக்கும் அந்த நிலத்தின் உரிமையாளர்களும் உண்டு.
Endangered Animals : சூடானின் மறைவு
காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருந்து உருவாக்கப்படும் மருந்து உலகம் எங்கும் பிரசித்தி பெற்றவையாக இருக்கிறது. அது அனைத்து விதமான நோய்களையும் குணப்படுத்தி, நீண்ட ஆயுளை வழங்கும் என்ற நம்பிக்கை சீனர்களின் மனதில் நிலை பெற்று நின்ற ஒன்று. அதன் விளைவாகவே ஆப்பிரிக்க நாடுகளில் காண்டாமிருகங்கள் அதன் கொம்புகளுக்காகவே வேட்டையாடப்பட்டன.
யானைகளின் தந்தம் போல் ஒரு முறை வெட்டப்பட்டால் மீண்டும் வளராமல் இருக்காது. தொடர்ந்து துளிர்த்துக் கொண்டே இருப்பதால் காண்டாமிருகங்களை பாதுகாக்கும் பொருட்டு தனியார் பூங்காக்களில் விருப்பம் உள்ளவர்கள் வளர்க்கலாம் என்ற உத்தரவை ஆப்பிரிக்கா முழுவதும் பிரகடனப்படுத்தினார்கள்.
இருப்பினும் வடக்கு வெள்ளை காண்டாமிருகங்கள் தங்கள் அழிவை நோக்கி நகரத் துவங்கியது. இறுதியில் இருந்த ஒற்றை ஆண் வெள்ளை காண்டாமிருகமும் இந்த உலகை விட்டு பிரிந்தது.
அது இறந்த போது, ராஜ மரியாதை அளிக்கப்பட்டு, தேசிய கீதம் பாடப்பட்டு, அது விரும்பி உண்ணும் கேரட்டுகளை குவியலாக வைத்து இறுதி அஞ்சலி செலுத்தியது கென்ய அரசாங்கம்.
இவனுக்கு சரியான இணை வேண்டும் என்று கூறி டிண்டெரில் ஒரு அக்கௌண்ட்டும் கிரியேட் செய்து வைத்திருந்தார்கள்.
Endangered Animals : எல்லை பிரச்சனைகளால் காணாமல் போகும் வன உயிரினங்கள்
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் விளைவாக, காடுகளில் சுற்றித் திரிந்த ஆயிரக் கணக்கான யானைகளுக்கு மதம் பிடித்திருந்தது. இதுவே அங்கு பெரும் சிக்கலை உருவாக்கியது.
தற்போது மெக்சிக்கோவில் இருந்து கள்ளத்தனமாக நிறைய பேர் அமெரிக்காவில் குடி புகுவதை தடுக்கும் பொருட்டு மிகப்பெரிய எல்லைச் சுவர் ஒன்றை எழுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறது அமெரிக்கா. எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் நிறைய பூங்காக்கள், தேசிய வன உயிரினங்கள் காப்பகங்கள் இதனால் பெரிய அளவில் பாதிப்பிற்கு உள்ளாகும்.
கட்டுமானங்கள் நடைபெற ஆரம்பித்தால், தாங்கள் இது நாள் வாழ்ந்து வந்த தட்ப வெப்ப நிலைக்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத ஒரு இடத்திற்கு வலசை போக விலங்குகள் கட்டாயப்படுத்தப்படுகின்றன. இதனால் ஏற்படும் விளைவுகள், உயிரினங்கள், புதிய கால சூழலுக்கு தங்களை தகவமைத்து கொள்ளாமல் அழியத் துவங்கிவிடும்.
ரியோ கிராண்ட் பள்ளத்தாக்கின் கீழ் பகுதியில் அமைந்திருக்கிறது நார்த் அமெரிக்கன் பட்டர்பிளை அசோசியேசன் என்ற அமைப்பின் கீழ் இருக்கும் தேசிய பட்டாம்பூச்சி மையம். ஆயிரக்கணக்கான அரியவகை பட்டாம்பூச்சிகளின் வாழ்விடமாக இது அமைந்திருக்கிறது. 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் இந்த பூங்காவின் மையப் பகுதியில் அமெரிக்க, மெக்சிக்கோ எல்லை பிரிக்கப்படுவதால், கட்டாயம் இந்த எல்லைச் சுவற்றை எழுப்ப வேண்டுமா என்ற கேள்வி சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
ஓசிலாட் எனப்படும் மிக சிறிய பூனை வகைகளின் வாழ்விடம் இது மட்டுமே. உலகின் வேறெந்த பகுதிகளிலும் இந்த பூனைகள் காணப்படுவதில்லை. ரியோ கிராண்ட் ஆற்றை நம்பி தங்களின் வாழ்விடங்களையும் மரபு சார் அறிவினையும் வளர்த்துக் கொண்ட விலங்கினங்கள் எந்த அளவு பாதிப்பினை அடையும் என்பதை மனிதர்கள் உணர்வதில்லை. இந்த பூமி மனிதர்களுக்கானது மட்டுமல்ல.
நம் முன்னோர்கள் கண்ட பல்வேறு உயிரினங்களை இன்று நாம் காண்பதில்லை. நான் காணும் உயிரினங்கள் பலவற்றை நமக்கு பின் வரும் சந்ததியினர் அறியப் போவதும் இல்லை.
நூறு வருடங்களுக்கு பின்பு கண்டறியப்பட்ட கருஞ்சிறுத்தை
கருஞ்சிறுத்தை (Black leopard) என்ற ஒரு மிருகம் பற்றி நாம் கேள்விப்பட்டுக் கொண்டு மட்டுமே இதுநாள் வரையில் இருந்திருக்கின்றோம். ஆனால் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது கருஞ்சிறுத்தை என்ற ஒரு இனம் இருப்பதை நாம் அறியவே.
ஆப்பிரிக்காவில் கருஞ்சிறுத்தை இருக்கிறது என்பதை வாய்வழிக் கதையாகவே நாம் கேட்டு வந்த காலக்கட்டத்தில் அதனை உறுதி செய்திருக்கிறார் நிக் பில்ஃபோல்ட் என்ற புகைப்படக் கலைஞர்.
லொய்சாபா வனப்பகுதியில் இந்த விலங்கு சுற்றித் திரிவதாக வந்த செய்திகளின் அடிப்படையில் கென்யாவை சேர்ந்த நிக் மற்றும் அவருடைய குழுவினர் இந்த விலங்கின் இருப்பினை உறுதி செய்ய ஒரு ஆப்பரேசனில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.
நாளை இது போன்ற ஒரு நிலை ஆசிய யானைகளுக்கோ, வங்கப் புலிகளுக்கோ வந்துவிடக் கூடாது என்பதில் நம் அரசு உறுதியாக இல்லாத பட்சத்தில் சின்னத்தம்பிகள் எல்லாம் கும்கிகளாக மாற்றப்படும். புலிகள் எல்லாம் பூங்காக்களில் காட்சிப் பொருளாக அமர்த்தப்படும் என்பதில் ஐயமில்லை.
ஆலிவ் ரிட்லி ஆமைகள்
இதய வடிவில் இருக்கும் ஆலிவ் ரிட்லி ஆமைகள் அழியத் துவங்கியதை அறிந்த பின்பு தான் அதனை பாதுகாக்கும் பொருட்டு அரசாங்கம் சிறிய சிறிய முயற்சிகள் மேற்கொண்டு, அதன் முட்டைகளை சேகரித்து பாதுகாப்பான இடத்தில் புதைத்து வைக்கும் பழக்கத்தை தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
சின்னஞ்சிறு உயிரினமும் சுழற்சி முறையில் நம் வாழ்விற்கு உதவும் உயிரினங்கள் தான். போதுமான விழிப்புணர்வுகள், தொலைநோக்கு பார்வையோடு உருவாக்கப்படும் திட்டங்கள் இல்லாமல் போனால் இயற்கையோடு நமக்கும் அழிவு என்பதை மனிதர்களும் உணர வேண்டும்.
ப்ளூ மக்காவ்
ரியோ என்ற ஹாலிவுட் படத்தில் காட்டப்பட்ட ரியோ கிளிகளான ப்ளூ மக்காவ் தற்போது உலகில் எங்கும் இல்லை என்பது கடந்த ஆண்டு உறுதியானது. பேர்ட்லைப் இண்டெர்நேசனல் எடுத்த சர்வே ஒன்றில், கடந்த சில வருடங்களாக தங்களுடைய வாழ்வை நீட்டித்துக் கொள்ள இருந்த போராட்டத்தில் தோல்வி தழுவியது ப்ளூ மக்காவ் பறவைகள்.
மனிதனால் உருவாக்கப்பட்ட கால நிலை மாற்றத்தால் 417 கிலோ எடை வரை இருக்கும் ஜெயிண்ட் ஆமைகள், கடல் உடும்புகள், ஃப்லைட்லெஸ் கோர்மொரெண்ட் பறவைகள், ஃபின்செஸ் பறவைகள் தங்களின் வாழ்நாளை இவ்வுலகில் நீட்டிக்க கடுமையான போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.