சமீபத்தில் கடந்த கல்வியாண்டிற்கான சி.பி.எஸ்.இ உட்பட அனைத்து பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது.
முன்பெல்லாம் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு, தேர்வு முடிவுக்காக பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். அதுவும் தேர்வு முடிவுகள் குறிப்பிட்ட நாளில் வெளிவரும் எனத் தெரிந்து விட்டால், அவ்வளவுதான், அதன் பிறகு உறக்கவும் இருக்காது, பசியும் வராது. அவ்வளவு எதிர்பார்ப்போடு மாணவர்கள் காத்திருப்பார்கள்.
தேர்வு முடிவு வெளியிடும் தேதி அறிவித்து விட்டால், மறுநாள் செய்திதாள் எப்பொழுது வரும் என வழி மீது விழி வைத்துக் காத்திருப்பது, தேர்வு எழுதியிருக்கும் மாணவர்கள் மட்டுமல்ல அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களும் கூடதான். பத்திரிகையில் தேர்வு முடிவு பார்ப்பதோடு மட்டும் நின்று விடாமல், தேர்வு முடிவு வெளிவரும் அன்று காலையிலையே, அவரவர் படித்தப் பள்ளிகளில் மாணவர்கள் குவிந்து விடுவார்கள்.
தேர்வு முடிவை அறிந்த உடன் வெற்றி பெற்ற மாணவர்கள் இனிப்புகளை வாங்கி, பள்ளித் தலைமையாசிரியர் தொடங்கி, தங்களுக்குப் பாடம் கற்பித்த ஒவ்வோர் ஆசிரியர் மற்றும் உற்றார், உறவினர், சக மாணவர்கள் என அனைவருக்கும் வழங்கி, தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதோடு அவர்களின் வாழ்த்தையும் பெற்றுக் கொள்வார்கள்.
ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதோடு அவர்களுக்கு அருளாசி வழங்கி வாழ்த்துவார்கள். இது மாணவர்களுக்குப் பெரும் மனநிறைவைத் தருவதோடு இரட்டிப்பு மகிழ்சியையும் ஏற்படுத்தும்.
இந்த இனிப்பு வழங்கும் நிகழ்வு ஒரு நாளோடு முடிந்து போவதல்ல. குறைந்தது ஒரு வாரமாவது தங்கள் வீட்டில் வருவோர், போவோர் அனைவருக்கும் இனிப்பு பகருதல் தொடரும். ஒருவேளை தேர்வு முடிவுகள் வெளிவரும் நாளில் ஏதேனும் ஆசிரியர்கள் பள்ளியில் வராமல் இருந்தால் அவர்களின் வீடுதேடிச் சென்று இனிப்பு வழங்கி, அவர்களிடம் ஆசிபெற்றால் மட்டுமே மாணவர்கள் நிம்மதியடைவார்கள். இதற்கு மாணவர்களின் பெற்றோரும் முழு ஒத்துழைப்பு நல்குவார்கள்.
முன்பெல்லாம் தற்போதைய தேர்வு முடிவுகள் போல், தேர்வு எழுதுவோரில் பெரும்பாலானோர் வெற்றி பெறுவது என்பது கானல் நீராகத்தான் இருக்கும். அதிலும் முதல் வகுப்பில் வெற்றி பெறுவது என்பதும், தற்போது உள்ளது போல் சிலப் பாடங்களுக்கு முழு மதிப்பெண் பெறுவது என்பதும் குதிரைக் கொம்பாகவே இருக்கும்.
இந்நிலையில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவரவர் பெற்றிருக்கும் மதிப்பெண் மற்றும் அவர்களின் தனித் திறமையின் அடிப்படையில் அடுத்தக் கட்ட உயர் படிப்பிற்கு வழிகாட்டுவதை ஆசிரியர்கள் தங்கள் கடமையாகக் கொண்டிருந்தனர். மாணவர்களும் தங்கள் ஆசிரியர்களின் அறிவுரையை அப்படியே வேத வாக்காகக் கருதி அவ்வாறே தங்களின் எதிர்காலக் கல்வியைத் தேர்ந்தெடுத்து வாழ்வில் முன்னேறினார்கள்.
அதுபோலவே தேர்வில் தோல்வியுற்று சோர்ந்து போய், அடுத்து என்னச் செய்யவதுதென்றுத் தெரியாமல் திக்குமுக்காடியிருக்கும் மாணவர்களையும் மிகுந்த கருணை உள்ளத்தோடு அழைத்துப் பேசி, அவர்களுக்கு வேண்டிய அறிவுரை வழங்கி, ஆறுதல் படுத்துவதையும் தங்களின் தலையாயக் கடமையாகக் கொண்டிருந்தனர் ஆசிரியர்கள்.
ஆசிரியர்களின் தேற்றுதலும் ஆற்றுப்படுத்துதலும் தோல்வியுற்ற மாணவர்களுக்குப் பெரும் புண்ணிற்குக் கிடைத்த அருபெரும் மருந்தாகவே இருந்தது. இது அவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, தோல்வி பற்றியக் கவலையை நீக்கி, எதிர்கால வாழ்க்கைப் பற்றியப் பயத்தைப் போக்கி இயல்பான, மகிழ்வான வாழ்க்கைக்கு வழிகோலியது.
முன்பெல்லாம் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் மீண்டும் தேர்வெழுதி வெற்றி பெறுவதென்பது அவ்வளவு சுலபமானக் காரியமல்ல. எனினும் தங்களிடம் படித்த மாணவர்களில் வெற்றி வெற்றவர்களையும் தோல்வியுற்றவர்களையும் வேறுபடுத்திப் பார்க்காமல், இருவரையும் சமமாகக் கருதி அவரவருக்கு வேண்டிய வழிகாட்டுதல்களை வழங்குவதில் அன்றைய ஆசிரியர்கள் ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்ந்தனர் என்றால் அது மிகையாகாது.
இன்றையச் சூழ்நிலையில் மாணவர்கள் தேர்வெழுதி விட்டு, தேர்வு முடிவு வெளிவருவதற்கு முன்பு வெற்றி பெறுவோமா இல்லை தோல்வியுறுவோமா என்ற பயத்திலையே தற்கொலைச் செய்து கொள்கின்றனர். தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு மதிப்பெண் குறைந்து விட்டால் அதற்காகவும் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒருசில மாணவர்கள் இவ்வாறானக் கொடிய முடிவுக்கு ஆளாக விட்டாலும், தங்களின் எதிர்காலம் இத்தோடு தொலைந்து விட்டது என்ற நினைப்பில் மன அழுத்தத்தால் மனநிலைப் பாதிக்கப்பட்டவர்களாக மாறிவிடுகின்றனர். இதற்குக் காரணம் அவர்களால் தங்கள் படிப்பு பற்றிய அல்லது பிரச்னைகள் பற்றிய விஷயங்களை ஆசிரியர்களோடு பகிர்ந்து கொள்வதற்கு இயலாமையே ஆகும்.
ஆனால் முன்பெல்லாம் ஆசிரியர்கள் அப்படி இருப்பதில்லை. “ஆசிரியர்கள் மாணவர்களின் இரண்டாவது பெற்றோர்” என்னும் கல்வியாளர்களின் கருத்துக்கு இணங்க, பெற்றோருக்கும் மேலாக மாணவர்களிடம், ஆசிரியர்கள் கண்ணும் கருத்துமாகக் கவனம் செலுத்தி வந்தனர் என்பது நிதர்சனமான உண்மை.
அறிவியல் தொழில் நுட்பத்தின் அபார வளர்ச்சியின் காரணமாக தற்போது, பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள், தேர்வு முடிந்து ஒருசில நாள்களுக்குள்ளையே வெளியிடப்படுகின்றன. அப்படி வெளியிடப்படும் தேர்வு முடிவுகள் அனைத்தும் இணையதளம் மூலம் வெளியிடப்படுகின்றன. அவ்வாறு வெளியிடப்படுவதால், மாணவர்கள் பத்திரிகையைப் பார்த்தோ, பள்ளியில் சென்றோ, ஆசிரியர்களிடம் கேட்டோ தங்களின் தேர்வு முடிவையோ, மதிப்பெண்ணையோ தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை.
அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு, அவர்களின் கைகளில் இருக்கும் செல்போன் மூலமே தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு அவர்கள், தேர்வு முடிவுகளை இணையத்தளம் மூலம் பார்த்துத் தெரிந்து கொண்ட பின்னர், வெற்றி பெற்றலோ, தோல்வியுற்றாலோ, அவர்கள் படித்தப் பள்ளியை நாடிச் செல்வதுமில்லை, கற்பித்த ஆசிரியர்களைத் தேடிச் செல்வதுமில்லை.
முன்புபோல் தேர்வு முடிகள் வந்த பிறகுப் பள்ளியின் பக்கமே மாணவர்கள் செல்வதில்லை. கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்குவதோ, அவர்களிடம் வாழ்த்துப் பெறுவதோ அடியோடு இல்லாமலாகிப் போயிற்று. தேர்வு முடிவுகள் வெளியாகும் போது, தாங்கள் கற்பித்துக் கொடுத்த மாணவர்கள் இனிப்புடன் வருவார்கள், தங்களிடம் வாழ்த்து வாங்குவார்கள் என்ற நம்பிக்கையோடு சில உத்தமமான ஆசிரியர்கள் காத்திருப்பார்கள். அவர்களின் நிலை, அந்தோ பரிதாபம் “இலவு காத்தக் கிளியின்” கதையாகத்தான் மாறிவிடும்.
இப்படி தேர்வு முடிவுகள் வெளிவந்த பின்பு மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களைச் சந்திக்காமல் இருப்பதும், அவர்களிடமிருந்து வாழ்த்து பெறாமல் இருப்பதும் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே இருக்கும் உறவை வெகுவாகப் பாதிக்கிறது. மட்டுமின்றி முன்பு போல் மாணவர்களுக்குப் போதிய அறிவுரை வழங்கவோ, வழிகாட்டவோ ஆசிரியர்களால் இயலவில்லை.
ஒருவேளை சில மாணவர்கள், தேர்வில் தோற்றுப் போயிருக்கலாம் அல்லது அவர்கள் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவான மதிப்பெண் பெற்றிருக்கலாம். அதனால் அவர்களுக்கு மிகுந்த மன அழுத்தம் உண்டாகலாம் அல்லது தீராத கவலையும் கௌவிக் கொள்ளலாம். அவற்றை ஆசிரியர்களிடம் அல்லது சரியான நபர்களிடம் பகிர்ந்து கொள்ள இயலாமல் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கலாம். பெற்றோரும் ஒருவேளை தங்கள் பிள்ளைகளின் உணர்வுகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம்.
அப்படிப்பட்டச் சூழ்நிலையில் மாணவர்கள் தங்களின் மனக் குமுறல்களை ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டியது மிகமிக அவசியமானதாகும். அவ்வாறு மாணவர்கள் தங்களிடம் கூறும் பிரச்னைகளின் அடிப்படையில் அவர்களுக்கு, ஆசிரியர்கள் அறிவுரையும் வழிகாட்டலும் வழங்க வேண்டியது இயல்பானது.
ஆனால் தற்போதைய இணையதள தேர்வு முடிவுகள் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சந்திக்க வாய்ப்பளிக்காத நிலையில் உள்ளன. இதனால் ஏற்படும் மன அழுத்தமே பெரும்பாலான மாணவர்கள் தற்கொலை செய்யும் அளவுக்குக் கொண்டுச் செல்கிறது.
வளர்ந்து வரும் நவீன உலகில் அறிவியல் தொழில் நுட்ப வளர்சியும் இணையதளச் சேவையும் மக்களின் அன்றாட வாழ்க்கையோடு பிரிக்க முடியாத விதத்தில் பின்னிப்பிணைந்துள்ளன. என்றாலும் இவற்றால் ஏற்படும் மனித உறவுகளின் இடைவெளியானது மிகவும் அபத்தமானச் சூழ்நிலைக்கு மனிதனை இட்டுச் செல்கிறது என்பதுதான் வேதனைக்குரியது.
(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம், படந்தாலுமூடு, கிரேஸ் கல்வியியல் கல்லூரி முதல்வர்! அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com )
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.