இந்தியா முழுவதும் பதினேழாவது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதில் மேற்கு வங்கத்தைத் தவிர பிற அனைத்து மாநிலங்களிலும் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்திருப்பது வரவேற்கத் தக்கது.
இம்முறை நடந்த தேர்தலில், இதுவரையிலும் எந்த தேர்தலிலும் நடைபெறாத ஒரு வினோதம் நடைபெற்றது. சில மாநிலங்களில், இதுவரை எலியும் பூனையும் போல் எதிரும் புதிருமாகச் செயல்பட்டு வந்த, சில மாநிலக் கட்சிகள் தங்களுக்குள் கூட்டணியமைத்துக் கொண்டு தேர்தல் களத்தில் மாயாஜால வித்தைக்காட்டின. அவற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது உத்திரபிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுமாகும்.
இப்படி கொள்கைகளையும் கோட்பாடுகளையும் விட்டு கொடுத்துக் கூட்டணியமைத்துக் கொண்டக் கட்சிகளின் நோக்கம் வேறொன்றுமல்ல, எப்படியாவது பாரதிய ஜனதா கட்சியை மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுப்பதும், நரேந்திர மோடியை பிரதமர் பதவியிலிருந்து இறக்குவதுமே ஆகும்.
ஆனால் தேர்தல் நடந்து முடிந்த பிறகு வெளியாயிருக்கும், மீடியாக்களின் கருத்துக்கணிப்பின் அடிப்படையில் பா.ஜ.க கூட்டணி மீண்டும் தனிப்பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியமைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி இரண்டாவது இடத்திலும் மற்ற கூட்டணிக் கட்சிகள் மூன்றாவது இடத்திலும் வெற்றி வாய்ப்பைப் பெறும் என்பது மீடியாக்களின் கணிப்பு. இந்தக் கருத்துக் கணிப்புகள் மெய்யாகுமா? பொய்யாகுமா? என்பது முந்தையத் தேர்தல் கருத்துக் கணிப்புகளோடு ஒப்பிடுகையில் கேள்விக்குறிதான்.
இந்தியாவில் தேசிய அளவில் பலம் வாய்ந்த பா.ஜ.க அல்லது காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்தால், அடுத்த ஐந்தாண்டு காலம் நாட்டில் நிலையான ஆட்சி நடைபெறும். மட்டுமல்லாது அந்தக் கட்சிகள் ஓரளவுக்கு நாட்டு மக்களின் நலன் கருதி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்ற அம்சங்களில் சிறிதளவேனும் கவனம் செலுத்தும்.
ஆனால் தங்களின் சுயக் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் காற்றில் பறக்க விட்டுவிட்டு, பிறக்கட்சிகளைப் பழிவாங்க வேண்டும் அல்லது ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்ற நோக்கில் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துள்ள மாநிலக் கட்சிகள் மீடியாக்களின் கருத்துக் கணிப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கி விட்டு தப்பித்தவறி ஒருவேளை ஆட்சிக்கு வரலாம்.
அப்படி உதிரிக் கட்சிகள் ஆட்சி பீடத்திற்கு ஆசைப்பட்டால், பிரதமர் நாற்காலி யாருக்குச் சொந்தம் என்பதிலிருந்தே இழுபறித் தொடங்கிவிடும். அதையும் தாண்டி மனமில்லா மனதோடு எல்லோரும் ஒப்புக்கொண்டு ஒருவரை பிரதமராகத் தேர்ந்தெடுத்தாலும், அந்த ஆட்சி ஒருசில நாள்கள் தொடருமா… ஒருசில மாதங்கள் நகருமா… ஓராண்டாவது நீடிக்குமா… என்பதெல்லாம் அறுதியிட்டுக் கூறமுடியாது.
ஏனென்றால் கடந்த காலங்களில் இதுபோல் சிறு கட்சிகள் சேர்ந்து ஆட்சியமைத்து பிரதம மந்திரிகளான, மொரார்ஜிதேசாய் தொடங்கி, சரண்சிங், சந்திரசேகர், கர்நாடகாவில் இன்றும் நிஜ சாட்சியாக உள்ள தேவகௌடா, ஐ.கே. குஜிரால், பா.ஜ.க. வின் பிரதம மந்திரியாக முதல் முறை 16 நாள்களும், இரண்டாவது முறை 13 மாதங்களும் ஆட்சி செய்து மூன்றாவது முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்த அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களும் மாபெரும் சாட்சிகளாவார்கள்.
ஒருவேளை இந்த யூகங்ளையெல்லாம் தாண்டி, உதிரி கட்சிகளெல்லாம் சேர்ந்து ஆட்சி அமைத்தால், அது நல்லாட்சியாகவோ, நிலையான ஆட்சியாகவோ இருப்பதற்கு வாய்ப்பே இருக்காது. தவிர்த்து, தங்களின் குடும்பங்களை வளர்ப்பதற்காக ஊழலும், லஞ்சலாவண்ணியமும் நிறைந்த தான்தோன்றித் தனமான ஆட்சியாகவே இருக்கும்.
எது எப்படியாயினும் நாளையப் பொழுது நிலையான… வளர்ச்சிக்கான… நல்லாட்சிக்கான… பொழுதாகப் புலரட்டும் என மனப்பூர்வமாய் எதிர்பார்ப்போம்.
(கட்டுரையாளர் முனைவர் கமல.செல்வராஜ், கல்வியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர்)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.