தி இந்தியன் எக்ஸ்பிரஸ், பிப்ரவரி 20, 2022 நாளிதழில் வெளியான எனது கட்டுரையை அரசு படித்து என்னை பெருமைப்படுத்தியுள்ளது. அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தை உணர்ந்து, மத்திய அரசின் கீழ் 10 லட்சம் பேர் உடனடியாக பணியமர்த்தப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது. ஒவ்வொரு குடும்பமும் வேலையின்மையால் பாதிக்கப்படுகிறது. இதில் ஏற்கனவே வேலையில்லாமல் இருக்கும் நபர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஆண்டு (2020-21) மற்றும் அதை மீட்டெடுத்த ஆண்டுகளையும் (2021-22) சேர்த்து பார்க்கும் போது வேலைவாய்ப்பின்மையே இந்தியா சந்தித்த பெரும் சவாலாக இருந்தது.
கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான திரு நரேந்திர மோடி ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்று வாக்குறுதி அளித்தார். இதில் சந்தேகம் கொண்டவர்கள் இது சாத்தியம் தானா என்று கேள்வி எழுப்பினர். ஆனால் மோடி ஆதரவாளர்களின் தொடர்ச்சியான கோஷங்களால் கேள்வி எழுப்பியவர்கள் குரல்கள் அமுங்கி விட்டன. வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியரின் கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் என்ற வாக்குறுதியையும் மக்கள் காலப்போக்கில் மறந்து விட்டனர். ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் கொடுக்க முடியுமா என்ற கணக்கை கூட யாரும் போட்டுப் பார்த்தார்களா என்பது தெரியவில்லை.
இப்போது புதிய அரசாங்கம் பதவியேற்ற பிறகு, ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைப்பது பற்றிய பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்கு மறந்து விட்டது. அடுத்தடுத்த தேர்தல்களிலும் மக்கள் இவர்களை மன்னித்து அவர்களுக்கே வாக்களித்தனர். காங்கிரஸ் கொண்டு வந்த திட்டங்களுக்கு எல்லாம் புதிய பெயர்களை சூட்டி அதை தங்களுடைய திட்டங்கள் போலவே பாஜக அரசு காட்டிக் கொண்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமானது, மோடி குஜராத் முதல்வராக இருந்த போது அலட்சிய படுத்தப்பட்ட திட்டம். அதுவே தற்போது ஏழைகளின் புகலிடமாக உள்ளது. இந்த திட்டத்தை விட சிறப்பான திட்டத்தை கண்டுபிடிக்க முடியாதால்தான் மோடி அரசு அதை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
மோசம் மேலும் படு மோசமானது
வேலையில்லாத் திண்டாட்டத்தை பொறுத்த வரையில் நிலைமை மோசம் என்ற நிலையில் இருந்து படுமோசமான நிலைக்கு போய்விட்டது. வேலைவாய்ப்பின்மையை அளவிட இந்த உலகில் இரண்டு வழிகள் உள்ளன. அதாவது நாட்டின் மொத்த தொழிலாளர் எண்ணிக்கையின் அளவு. அதில் எத்தனை பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்பது தான் இரண்டு வழி முறைகள். இந்தியாவின் மொத்த தொழிலாளர் எண்ணிக்கை சுமார் 430 மில்லியன். இவர்களில் எத்தனை பேர் வேலையில் இருக்கிறார்கள் அல்லது வேலையை எதிர்பார்த்தது இருக்கிறார்கள் என்பது உற்பத்தியில் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தை பொறுத்தது. இந்த விகிதம் இந்தியாவில் 2022ல் 42.13 சதவீதமாக இருக்கிறது. உலகிலேயே இந்தியாவில் தான் இது குறைவாக உள்ளது. இந்த விகிதம் அமெரிக்காவில் 63 சதவீதமாக உள்ளது. இனி செய்வதற்கு வேலை கிடைக்காது என்ற எண்ணத்தில் கோடிக்கணக்கான நபர்கள் வேறு வேலை கிடைக்குமா என்று கூட நினைக்காமல் சோம்பி இருந்து விட்டனர் என்று சிஎம்ஐஇ அமைப்பு கூறுகிறது.
இது தவிர, 20 சதவீதம் பேர் மட்டுமே மாத சம்பளம் பெறும் வேலைகளில் இருக்கிறார்கள். 50 சதவீதம் பேர் சுயதொழில் செய்பவர்கள். மீதமுள்ளவர்கள் தினசரி கூலி வேலை செய்து ஜீவிப்பவர்கள். கடந்த ஜூன் 2021 இல், CMIE இன் நுகர்வோர் பிரமிடுகள் வீட்டுக் கணக்கெடுப்பின்படி, சராசரி குடும்ப மாத வருமானம் ரூ.15,000 ஆகவும், மாதாந்திர நுகர்வுச் செலவு ரூ.11,000 ஆகவும் இருந்தது. இத்தகைய ஆபத்தான தொழிலாளர் சந்தையில், ஒரு குடும்பத்தில் உள்ள ஒரே தொழிலாளி தனது வேலையை இழந்தபோது அந்தக் குடும்பம் எப்போதும் துயரத்திலும் வறுமையிலும் விழுந்தது. ஏழைகள்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டனர். ஊட்டச்சத்து குறைபாடும், பசியும் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
2014 முதல் 8 ஆண்டுகளில் லட்சக்கணக்கான மில்லியன் கணக்கான வேலைகளை நாம் இழந்தோம். ஆனால் சில லட்சக்கணக்கான வேலைகள் உருவாக்கப்பட்டன. உற்பத்தியில் தொழிலாளர்கள் பங்கேற்பது குறைந்து வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது. நாங்கள் சத்தமாக குரல் கொடுத்தோம். ஆனால் அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. சில சந்தேகத்திற்குரிய தவறான புள்ளி விவரங்களை கொடுத்து மேலும் பல வேலைவாய்ப்புகளை உருவாக்கி விட்டதாக சொல்லிக் கொண்டது. ஒரு கட்டத்தில், ‘பகோடா விற்பது’ கூட ஒரு வேலை தான் என்று சொல்லிக் கொண்டது.
பார்வைக்கு தெரியாது
இந்த ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாள் கட்டுரையில் அதிகமான ஏராளமான வேலைவாய்ப்புகள் கண் எதிரிலேயே மறைந்திருக்கின்றன என்று எழுதி இருந்தேன். அரசாங்கத்தின் ஆவணங்களின்படி அரசுப் பணிகளில் அனுமதிக்கப்பட்ட காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை மட்டுமே 34,65,000. 2020 மார்ச் மாத நிலவரப்படி 8,72,243 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. அதில் குரூப் ‘சி’ பிரிவில் மட்டும் காலியிடங்கள் 7,56,146 (ஆதாரம்: தி இந்து). வேலையில்லா திண்டாட்டத்தால் எல்லாப் பிரிவினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றாலும் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடி இனத்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லலாம். அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேர் மத்திய அரசுப் பணிகளில் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றால் அது நல்ல தொடக்கமாகும். ஆனால், ஏற்கனவே காலியிடங்களாக உள்ள இடங்களை கழித்துவிட்டால் மொத்தமாக 1,27,757 பேருக்குத்தான் வேலைவாய்ப்பு உள்ளது.
இந்திய அரசு இதற்கு மேலும் முயல வேண்டும். லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை ‘அடையாளம் காண வேண்டும். அல்லது உருவாக்க வேண்டும். ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், நூலகர்கள், விளையாட்டுப் பயிற்சியாளர்கள், பிற துறைப் பயிற்றுநர்கள், பிசியோதெரபிஸ்ட்கள் , ஆலோசகர்கள், உளவியல் ஆலோசகர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், துணைநிலை மருத்துவ பணியாளர்கள், ஆய்வக தொழில்நுட்பர்கள், சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவாளர்கள், நகரத் திட்டமிடுவோர், கட்டிடக்கலை நிபுணர்கள், வேளாண்மை விரிவாக்க அலுவலர்கள், உணவுப் பதப்படுத்துதல் துறை நிபுணர்கள், கால்நடை மருத்துவர்கள் என ஏராளமான பணிகள் உள்ளன. ஒரு வளரும் நாட்டுக்கு அத்தியாவசியமான இவ்வளவு வேலை வாய்ப்புகள் இருப்பதே அரசுக்குத் தெரியாமல் இருக்கிறது.
அரசுக்கு வெளியேயும் வாய்ப்புகள்
பெரும்பாலான வேலைவாய்ப்புகள் அரசுக்கு வெளியேயும் இருக்கின்றன. அவை தனியார் துறையில் உள்ளன. இதுவரை நாம் பார்க்காத இந்தியாவைச் சுற்றியுள்ள ஆழ்கடல்கள், இந்தியாவில் ஓடும் ஆறுகள், கோடிக்கணக்கான நீர்நிலைகள், தரிசு நிலங்கள் ஆகியவை மூலம் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்க முடியும். நூற்று முப்பது கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு அவர்களுடைய மொத்த தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லை. அவர்களுடைய தேவைகளை ஓரளவுக்குப் பூர்த்தி செய்வதாக இருந்தால் கூட லட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிவிட முடியும். தனிப்பட்ட போக்குவரத்து வசதிகளை எடுத்துக்கொள்ளுங்கள். 24.7% குடும்பங்களுக்கு என்று சொந்தமாக கார், பைக், சைக்கிள் கூட இல்லை. வீடுகளுக்குத் தேவைப்படும் பொருட்களை எடுத்துக் கொள்வோம். வெப்ப மண்டலத்தில் இருக்கும் நம் நாட்டில் வெறும் 24 சதவீத குடும்பங்கள் மட்டுமே சொந்தமாக ஏர்-கூலர் அல்லது ஏர்-கண்டிஷனர்கள் வைத்துள்ளன. இவற்றின் விலையையும் வரிகளையும் குறைத்து வாங்க கூடிய அளவுக்கு மலிவாக விற்றால் கோடிக்கணக்கில் இவை விற்பனையாகும். இந்தப் பொருட்களின் உற்பத்தி, விநியோகம், விற்பனை மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு நேர்முக, மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும், இவற்றைத் தயாரிக்கும் ஆலைகளில் உற்பத்தி திறன் மற்றும் அளவு அதிகரிக்கும். இதனால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து மகிழ்ச்சி அடைவார்கள்.
மோடி அரசில் கடந்த எட்டாண்டுகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. எட்டாண்டுகளை மோடி அரசு வீணாக்கியுள்ளது. வேலை வாய்ப்புகளை உருவாக்குவது அரசின் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும். அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது சமூக மற்றும் அரசியல் மூலதனத்தை பயன் படுத்தி இந்திய மக்களை பிளவு படுத்துகிறது. அரசின் தவறான கொள்கைகள் பிளவுபட்டுக் கிடக்கும் இந்தியா பொருளாதார ரீதியாகவும் கடுமையான சேதங்களுக்கு ஆளாகியிருக்கிறது. அரசின் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் மனக்காயங்களை ஆற்ற உதவாது. பொருளாதாரத்தில் ஏற்பட்ட சேதங்களை சரி செய்ய இயலாது. காலம் கடந்த இந்த நிவாரணங்கள் மிகவும் அற்பமானவை.
தமிழில் :த. வளவன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“