இங்கிலாந்து நாட்டின் லிவர்பூலைப் பூர்வீகமாகக் கொண்ட பிரான்சிஸ் பாராட், ஒரு ஓவியர், அவருக்கு மார்க் என்ற சகோதரர் இருந்தார். மார்க் இறந்த பின்னர் மார்க்குக்கு சொந்தமான ஒரு கிராமபோன், மார்க்கின் குரல் பதிவு செய்யப் பட்ட சில ரெகார்டுகள், மார்க்கின் நிப்பர் என்று அழைக்கப்படும் வேட்டைநாய் போன்றவை பிரான்சிஸ் வசமாயின. பிரான்சிஸ் இந்த இசைப்பதிவுகளை வாசித்தபோது, நாய் போனோகிராப் அருகே ஓடி, குரல் எங்கிருந்து வந்தது என்று குழப்பமான பார்வையுடன் கேட்கும். பிரான்சிஸ் அந்தக் காட்சியை படமாக வரைந்து அதை "அவரது மாஸ்டர் குரல்" என்று அழைத்தார். கிராமபோன் நிறுவனம் இந்த ஓவியத்தை 1899 ஆம் ஆண்டு 100 பவுனுக்கு வாங்கியது. இந்த லோகோ மிகவும் பிரபலமானது, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நிறுவனம் அதன் பெயரை HMV என மாற்றியது. இதன் பின்னர் அந்த நாய் படமும் அதன் வாசகமும் உலக அளவில் பிரபலமாயின. நிப்பர் நாயும் 2014ல் சித்திரமாக்கப் பட்டு ஒரு கல்வெட்டாக புகழ் பெற்றது.
விளிம்பு நிலை அல்ல
கடந்த வாரம், பிஜேபியின் திருமதி நுபுர் ஷர்மா மற்றும் திரு நவீன் குமார் என இரண்டு செய்தி தொடர்பாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று படித்த போது நிப்பர் கதை நினைவுக்கு வந்தது. இனிமேல் இருவரையும் நூபுர் மற்றும் நவீன் என்று குறிப்பிடுகிறேன். கடந்த ஜூன் 5 அன்று, "பல்வேறு விஷயங்களில் கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணான கருத்துக்களை நீங்கள் வெளிப்படுத்தி உள்ளீர்கள்" என்ற வார்த்தைகளுடன் தொடங்கும் கடிதம் நூபுருக்கு வந்தது. இதை படித்ததும் இந்திய குடிமக்களான கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் தொடர்பான விஷயங்களில் பாஜகவின் நிலை தான் என்ன என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
நூபுர் மற்றும் நவீன் பிஜேபியின் விசுவாசமான அடிவருடிகள். அவர்கள் தங்கள் தலைவர்களை உன்னிப்பாக கவனிக்கிறார்கள். அவர்கள் மனம் போலவே நடக்கிறார்கள். உங்களில் பலரைப் போலவே, நூபுரும் நவீனும் தமது தலைவர்கள் பேசுவதை கேட்கிறார்கள். உதாரணமாக, குஜராத்தில் 2012 தேர்தல் பிரச்சாரத்தில், திரு நரேந்திர மோடி அவர்கள் கூறியதைக் கேட்டனர் , “50 மில்லியன் குஜராத்திகளின் சுயமரியாதையையும் மன உறுதியையும் உயர்த்தினால், அலிஸ், மாலிஸ் மற்றும் ஜமாலிகளின் திட்டங்கள் நமக்கு எந்தத் தீங்கும் செய்யாது என்று பேசியதை கேட்டார்கள். அலிஸ், மாலிஸ் மற்றும் ஜமாலிகள் யார், யார்? அவர்கள் நமக்கு தீங்கு விளைவிக்க திட்டங்கள் தீட்டுவது ஏன் என நூபுர், மற்றும் நவீன் எண்ணிப் பார்த்திருப்பார்கள்.
நினைவில் நிற்கும் நீங்காத வார்த்தைகள்
கடந்த 2017 ஆம் ஆண்டு உ.பி. மாநில சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் ஒரு கிராமத்தில் முஸ்லிம்களுக்கு ஒரு நல்லடக்கத்தலம் ஏற்படுத்தினால் அங்கே இந்துக்களுக்கும் மயான பூமியை ஏற்படுத்த வேண்டும். இதில் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது என்று பிரதமர் மோடி பேசினார். இந்த வார்த்தைகள் நுபூருக்கும் நவீனுக்கும் மனதில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
2019 ம் வருடம் ஏப்ரல் 11ம் தேதி அன்று திரு அமித் ஷா பேசியதையும் இவர்கள் கேட்டிருக்க வேண்டும். “நாங்கள் முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வோம். பௌத்தர்கள், இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் தவிர, ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் நாட்டிலிருந்து அகற்றுவோம். ஊடுருவல்காரர்களை ஒழிப்பதே பாஜகவின் உறுதிமொழி. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கரையான்கள் போன்றவர்கள். அவர்கள் ஏழைகளுக்கு போக வேண்டிய தானியங்களை உண்கிறார்கள், அவர்கள் உங்கள் வேலையைப் பறிக்கின்றனர், என்று பேசினார். இந்த வார்த்தைகளும் நூபுருக்கும், நரினுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இந்த வார்த்தைகள் சரியான இடத்தில் சரியான நபர் உச்சரித்த சரியான வார்த்தைகள் என்று இருவரும் நம்பியிருக்க வேண்டும்.
2019 ம் வருடம் டிசம்பர் 15ம் தேதி அன்று, ஜார்கண்டில் நடந்த தேர்தல் பேரணியில், "சிக்கல்களை உருவாக்குபவர்கள் அவர்களின் ஆடைகளால் அடையாளம் காணப்படுகின்றனர்" என்று பிரதமர் கூறினார். நுபூரும் நவீனும் அந்தப் பேச்சைக் கேட்டிருக்கலாம்; மற்றும் அவர்களின் ஆடைகளால் மக்களை அடையாளம் காண தீர்மானித்திருக்கலாம். உ.பி., சட்டப்பேரவைக்கான தேர்தல் பிரசாரத்தின் போது, முதல்வர் திரு ஆதித்யநாத “போட்டி மிகவும் கடுமையாக உள்ளது. சண்டை இப்போது 80 க்கும் 20 க்கும் தான், என்று பகிங்கிரமாக அறிவித்தார். நுபூரும் நவீனும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இருக்க வேண்டும், மேலும் அந்த 20 சதவிகிதம் என்று அவர் குறிப்பிட்டதை எதிரிகள் என்று நினைத்திருக்க வேண்டும்.
முஸ்லீம்கள் குறித்த பாஜகவின் நிலைப்பாட்டை ஆர்.எஸ்.எஸ்ஸில் குருஜி என அழைக்கப்படும் எம். எஸ். கோல்வாக்கர் கருத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்தியாவிலோ அல்லது இந்தியாவின் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களிலோ முஸ்லிம்கள் தேவைப்பட மாட்டார்கள். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள 375 பாஜக எம்.பி.க்களில், இம்மாத இறுதிக்குள் ஒரு முஸ்லிம் எம்.பி கூட இருக்க மாட்டார். 403 உறுப்பினர்களைக் கொண்ட உ.பி சட்டமன்றத்துக்கோ அல்லது 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கோ நடந்த தேர்தலில் பாஜக ஒரு முஸ்லீம் வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை. பாஜக முதல்வராக உள்ள 11 மாநிலங்களில் ஒரு முஸ்லிம் அமைச்சர் இருக்கிறார். ஜூன் 2012 இல் திரு SY குரைஷி ஓய்வு பெற்றதிலிருந்து ECI யில் ஒரு முஸ்லிம் தேர்தல் ஆணையராக இல்லை, என்று அந்த பட்டியல் நீண்டு கொண்டே போனது.
என் பார்வையில், திருமதி நுபுர் சர்மாவும் திரு நவீன் குமாரும் பல்வேறு விஷயங்களில் பிஜேபியின் நிலைப்பாட்டை உண்மையாக பிரதிபலித்தார்கள். அவர்கள் மாஸ்டரின் குரலைக் கேட்டு, அவரவர் வழியில் பேசினார்கள். பாஜக நவீன இந்தியாவின் கிராமபோன் நிறுவனம் என்றே நான் நினைக்கிறேன்,
செவிடன் காது
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கைகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து பாஜக மற்றும் மத்திய அரசாங்கத்தை பலமுறை எச்சரித்தன. ரோமியோ எதிர்ப்பு படைகள், லவ் ஜிஹாதுக்கு எதிரான பிரச்சாரம், தேசிய குடிமக்கள் பதிவேடு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து, மாநில சட்டமன்றங்களில் மதமாற்ற எதிர்ப்பு மசோதாக்கள், ஹிஜாப், ஹலால், ஆசான் போன்ற அல்லாத பிரச்னைகளை கிளப்புவது குறித்து அரசுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அனைவருக்கும் பொதுவான சட்டம், மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புத் தூண்டும் என்று பல பிரச்சினைகளில் அரசாங்கம் செவிடாகி விட்டது. இப்போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் 15 நாடுகள் பாஜகவின் செய்தித் தொடர்பாளர்களின் பேச்சுகளைக் கண்டித்தபோது, அரசாங்கம் அவசர கதியில் செயல்படுகிறது. ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தனது ராஜதந்திரத்தை கையில் எடுத்துள்ளது.
இத்தனை விவகாரங்கள் நடந்த பின்பும் பிரதமர் ஒரு கண்டனம் கூட நேரடியாக தெரிவிக்க வில்லையே என்பது தான் வேதனையான உண்மை. இத்தனை குழப்பத்திலும் அவர் எப்போதும் போல ஆட்சி நடத்தலாம் என்று நினைக்கிறார். இந்தியாவில் சுமார் 202 மில்லியன் முஸ்லிம்கள் வசிக்கும் நிலையில் அவர்களை தவிர்த்து அரசியல் செய்வது கடினம். இந்த முறை, மோடிக்கு எச்சரிக்கை கொடுத்திருப்பது உலகம் தான்.
தமிழில் :த. வளவன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.