Advertisment

இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் மிஷன்: விண்வெளியில் இந்தியாவின் ஒரு புது முயற்சி

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவை மட்டுமே உள்ளடக்கிய விண்வெளியில் செயற்கைக் கோள்களை இணைக்கும் திறன் கொண்ட நாடுகளின் கௌரவக் குழுவில், ஸ்பேடெக்ஸின் (விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வு பணி) வெற்றியால் இனி இந்தியாவும் இடம்பெறும்.

author-image
WebDesk
New Update
Express View on ISROs SpaDeX mission A tryst in space Tamil News

சமீப காலங்களில், இஸ்ரோ கிரக ஆராய்ச்சியின் அனைத்து அம்சங்களுக்கும் பங்களிக்கும் அளவுக்கு நிபுணத்துவம் பெற்றுள்ளதாக தகவல்களை உலகிற்குத் தெரியப் படுத்திக் கொண்டிருக்கிறது. 2025-லும் அதற்குப் பின்பும், இந்த நிறுவனத்திற்கு இன்னும் பல பயணங்கள் காத்திருக்கின்றன.

நாட்டின் முதல் “விண்வெளியில் செயற்கைக் கோள்களை இணைக்கும் திட்டமான”, ஸ்பேடெக்ஸை  ஏவியதன் மூலம் இஸ்ரோ குறிப்பிடத்தக்க, இன்னும் பல சாதனைகளைப் படைத்துள்ள இந்த வருடத்தை முத்தாக முடித்து வைத்துள்ளது. திங்களன்று, பளு தூக்கும் குதிரை என்று அழைக்கப்படும், பி.எஸ்.எல்.வி இரண்டு செயற்கைக்கோள்களை புவியின் கீழ்ச் சுற்றுப் பாதையில் செலுத்தியது. "சேசர்" மற்றும் "டார்கெட்" என்று பெயரிடப்பட்ட இந்த விண்வெளி வாகனங்கள்,வரும் நாட்களில் கவனமாக நடத்தப்படும் தொடர்ச்சியான இயக்கங்கள் மூலம் தங்களை நோக்கி நகர ஆரம்பிக்கும். 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Express View on ISRO’s SpaDeX mission: A tryst in space

பின்பு இஸ்ரோ விஞ்ஞானிகள் இரண்டுக்கும் இடையே உள்ள தூரத்தைக் குறைக்க முயற்சிப்பார்கள், இறுதியில் அது இந்த விண்கலங்கள் இணைய வழிவகுக்கும். இந்தியாவின் முதன்மையான இந்த விண்வெளி நிறுவனம் இந்தச் செயல்பாடுகள் முடிய ஒரு வாரத்திற்கு மேல் ஆகலாம் என்று எதிர்பார்க்கிறது. தற்போது அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவை மட்டுமே உள்ளடக்கிய விண்வெளியில் செயற்கைக் கோள்களை இணைக்கும் திறன் கொண்ட நாடுகளின் கௌரவக் குழுவில், ஸ்பேடெக்ஸின் வெற்றியால் இனி இந்தியாவும் இடம்பெறும். பன்னாட்டு விண்வெளி நிலையம் போன்ற கனரக விண்கலங்கள் தேவைப்படும் திட்டங்களுக்கு விண்கலங்களை இணைப்பது அவசியம். ஏனென்றால், கனரக விண்கலங்களையும் கருவிகளையும் ஒரே நேரத்தில் ஏவ முடியாது. , ஸ்பேடெக்ஸ் இந்தியாவின் விண்வெளி இலட்சியங்களுக்கு மிகமுக்கியமானது மட்டுமின்றி சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்திற்கும் இந்தியாவின் விண்வெளி நிலையத்தை இயக்குவதற்கும் அது அவசியமாகும். இது இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு, விண்கலங்களை இணைக்கும் திறன் தேவைப்படும் உலகளாவிய திட்டங்களில் பங்குதாரராக இருப்பதற்கான வாய்ப்புகளைப் பெற வழிவகுக்கும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், இஸ்ரோ, செயற்கைக்கோள்களை புவியின் சுற்றுப்பாதையில் பெரும்பாலும் தகவல் தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு மற்றும் வளிமண்டல ஆய்வுகளுக்காக, நிலைநிறுத்திய ஒரு நிறுவனத்திலிருந்து, கோள்களை ஆய்வு செய்யும் நிறுவனமாக மாறியுள்ளது. 2023-ஆம் ஆண்டில் சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா-1 விண்கலங்கள் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பிரபஞ்ச எக்ஸ்-கதிர்கள் ஒருமுனைவதை ஆய்வு செய்ய முதல் விண்வெளி ஆய்வகம் அமைக்கப்பட்டது. செப்டம்பர் 2024-ல், வெள்ளி கிரகத்தைச் சுற்றும் விண்கலத் திட்டத்திற்கும், அத்திட்டம் வெள்ளியின் மேற்பரப்பு மற்றும் வளிமண்டலத்தை ஆய்வு செய்ய உதவும், மற்றும் சந்திரனில் இருந்து மண், பாறை மாதிரிகளைச் சேகரித்து அவற்றை பூமிக்குக் கொண்டுவரும் சந்திரயான்-4 திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அடுத்த ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியை முதல் முறையாக மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்த மைல்கல் திட்டத்தின் தொடக்கமாக முன்னோடி விண்கலங்கள் ஏவப்படும். இந்திய விண்வெளி ஆய்வின் புதிய சகாப்தம், 2023-ம் ஆண்டின் சந்திரன் மிஷன் போன்ற சமீபத்திய முயற்சிகளிலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டதாக இருக்கும்.

Advertisment
Advertisement

உதாரணமாக, சந்திரயான்-4, ஐந்து பாகங்களுடன், வெவ்வேறு நாட்களில் ஏவப்பட்டு, பின்னர் இரண்டு தனித்தனி தொகுதிகளாக ஒருங்கிணைக்கப்படும். இதேபோல், பாரதிய அந்தரிக்ஷா நிலையம் (Indian Space Station) விண்வெளியில் வைத்து ஒன்றிணைக்கப்பட்ட ஐந்து கலங்களைக் கொண்டிருக்கும், அவற்றின் முதலாவது கலம் 2028-ல்  ஏவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்பேடெக்ஸ் இந்த பணிகளுக்கு அடித்தளம் அமைக்கப் போகிறது.

திங்களன்று ஏவப்பட்ட விண்கலம் பல சோதனைகளின் அடைகாப்புக் கருவிகளையும் கொண்டுள்ளது, இதில் எட்டு தட்டைப்பயறு விதைகள் அடங்கிய பெட்டியும் அடங்கும், திட்டத்தின் படி சரியாகச் சென்றால், விண்வெளியில் இரண்டு இலை நிலைக்கு அந்த விதைகள் வளரும். சமீப காலங்களில், இஸ்ரோ கிரக ஆராய்ச்சியின் அனைத்து அம்சங்களுக்கும் பங்களிக்கும் அளவுக்கு நிபுணத்துவம் பெற்றுள்ளதாக தகவல்களை உலகுக்குத் தெரியப் படுத்திக் கொண்டிருக்கிறது. 2025-திலும் அதற்குப் பின்பும், இந்த நிறுவனத்திற்கு இன்னும் பல பயணங்கள் காத்திருக்கின்றன.

மொழிபெயர்ப்பு: எம். கோபால் 

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment