இலங்கை அதிபராக பதவியேற்ற பின்னர், அனுர குமார திசாநாயக்கவின் முதலாவது வெளிநாட்டுப் பயணமான இந்தியப் பயணம் இருந்தது. இது இருதரப்பு உறவில் ஒரு முக்கியமான தருணத்தில் வந்துள்ளது. கூட்டு அறிக்கையின் நேர்மறையான தொனி இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ஆழமான பொருளாதார மற்றும் ராஜதந்திர உறவின் தொடக்கத்தை குறிக்கிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Express view on President Dissanayake’s India visit: Building bridges with Sri Lanka
இந்த நம்பிக்கைக்கு ஒரு காரணம், திசாநாயக்க தனது நாட்டில் பரந்த அளவில் மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளார்: செப்டம்பரில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், அவரது கட்சியான தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி) தலைமையிலான கூட்டணி, கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் உறுதியான பெரும்பான்மையைப் பெற்றது. கடந்த காலங்களில் இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்த தடைகளாக இருந்த காரணங்களில் முக்கியமான ஒன்று இலங்கை அரசாங்கங்களின் நிலையில்லாத தன்மையாகும். கடந்த சில மாதங்களில், திசாநாயக்கவும் என்.பி.பி-யும் தங்களது அரசின் நிர்வாக நடைமுறைகளைக் காட்டுவதற்கும், அவர்களது கட்சியின் வன்முறைகளால் கடந்த காலத்தில் உருவான அச்சங்களைத் தணிப்பதற்கும் அதிகம் முயற்சி செய்திருக்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக, மக்கள் நலத் திட்டங்களுக்கு அதிக செலவு செய்தாலும், அதன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஐ.எம்.எஃப் திட்டம் தொடரும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. இரு நாடுகளும் கட்டுப்பாடில்லாத வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது முக்கியமானதாகும், குறிப்பாக எரிசக்தி வழங்கல், வர்த்தகம், தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் இலங்கையில் இந்திய அந்நிய நேரடி முதலீடு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
ஆதார் அடையாள அட்டை, யு.பி.ஐ பணவர்த்தனை போன்ற இந்திய டிஜிட்டல் கட்டமைப்பு இலங்கையின் வளர்ச்சிக்கு உதவ முடியும் என்பதை இரு நாடுகளின் கூட்டறிக்கை அங்கீகரிக்கிறது. எனினும், இரண்டு நீண்டகால சிக்கல்களைத் தீர்ப்பதற்கு, இரு தரப்பிலிருந்தும் பரஸ்பர உணர்வுகளை மதிக்கும் பொறுமை தேவை. முதலாவதாக, இரு நாட்டு மீனவர்களும் கடல் எல்லையைத் தாண்டி அளவுக்கு மீறி மீன்பிடிப்பது. இதற்குத் தீர்வு காண, மீனவர்களின் நலனையும் அதைச் சார்ந்த வணிகத்தையும் கருத்தில் கொண்டு, அதிக ராஜதந்திரத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். இரு தரப்பிலும் ஒருங்கிணைக்கப்பட்ட மீன்பிடித்தலின் மூலம் இதற்குத் தீர்வு கிடைக்கலாம்.
இரண்டாவது பிரச்சினை, இலங்கையின் தமிழ் சிறுபான்மையினர். பிரதமர் நரேந்திர மோடி, சிறுபான்மையினரின் நலன்களை உத்தரவாதமளிக்கும் இலங்கை அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தை வெளிப்படையாகக் குறிப்பிடாமல், “இலங்கை அதன் அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துவதோடு, அதன் வாக்குறுதியின்படி மாகாண சட்டசபைத் தேர்தலை நடத்தும்”, என்று நம்புவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தச் சிக்கலைக் கையாள அத்தகைய மென்மை தேவை தான். வெளிப்படையாகப் பேசினால், திசாநாயக்கவும் என்.பி.பி.-யும் சிங்கள தேசியவாதிகள் ஆவர். அதன் அரசியல் நிர்ப்பந்தங்கள் இந்த விவகாரத்தை டெல்லி எவ்வாறு அணுக வேண்டும் என்பதைத் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக இந்தியாவிலும் அதற்கு உணர்ச்சி மற்றும் அரசியல் பின்னணி உள்ளது.
அதிபர் திசாநாயக்கவின் பயணத்தினால் கிடைக்கப் பெற்ற மிக முக்கியமான உறுதிமொழி, "இந்தியாவின் இறையாண்மைக்குப் பங்கம் விளைவிக்கும் எதையும் எங்கள் மண்ணில் அனுமதிக்க மாட்டோம்" என்பதும் மற்றும் "சுதந்திரமான, பாதுகாப்பான இந்தியப் பெருங்கடல் பகுதி" என்னும் நிலைப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்தியதாகும். அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதில் சீனா ஈடுபட்டுள்ள நிலையிலும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் செயல்பாடுகள் பற்றிய இந்தக் குறிப்பு வெளிவருகிறது. திசாநாயக்கவின் இந்த உத்தரவாதம் ஒரு நேர்மறையான உறுதிமொழியாக இருக்கும் அதே வேளையில், மற்ற நாடுகளுடன் கொழும்பின் உறவுகள் மீது தனக்கு வீட்டோ அதிகாரம் இல்லை என்பதை டெல்லி உணர வேண்டும். இரு தரப்பினரும் இந்த விஷயத்தில் தங்கள் எல்லைக் கோடுகளை வரையறுத்து தெளிவான கருத்துப் பரிமாற்றங்கள் செய்ய வேண்டும். இது தவறான புரிதல்களைத் தடுப்பதுடன், துணைக் கண்டத்தில் மிக முக்கியமான ஒரு உறவை வலுப்படுத்த உதவும்.
மொழிபெயர்ப்பு: எம்.கோபால்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.