Advertisment

விவசாய நெருக்கடியின் காரணிகள்

மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் பாதிக்கப்படுவது விவசாயிகள்தான். நாட்டின் ஜீவாதாரமான விவசாயம் நெருக்கடிக்கு ஆளனது ஏன்? என்பதை விவரிக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
agricalture

PM Kisan Apply Online, PM Kisan Credit Card, pmkisan.gov.in, PM Kisan Samman Nidhi, பி.எம். கிசான், பிரதான் மந்திரி சம்மான் நிதி, பிரதமர் மோடி

வழக்கறிஞர். கே.எஸ். இராதாகிருஷ்ணன்.

Advertisment

மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் பாதிக்கப்படுவது விவசாயிகள்தான். நாட்டின் ஜீவாதாரமான விவசாயம் நெருக்கடிக்கு ஆளனது ஏன்?

Social Economy of Development of India, பொருளாதார நிபுணர் கே.எஸ். சலம் எழுதி Sage வெளியிட்ட நூலில் விவசாயம் குறித்தான சில குறிப்புகள் வருமாறு.

விவசாயிகள் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு பெருமளவில் இடம் பெயருதல், தற்கொலைகள் ஆகியன எங்கோ தவறு நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான வெளிப்பாடாகவே காண முடிகிறது. விவசாயத் துறையும், அதை சார்ந்து இருக்கும் மற்ற வேளாண் தொழில் துறைகளின் வளர்ச்சி அனைத்தும் மிகவும் குறைவாகவே உள்ளன. இதனால் விவசாயத்தை சார்ந்துள்ள தொழிலாளர்களின் விகிதாச்சாரம் மிகவும் சரிந்துள்ளது அச்சத்தை அளிக்கிறது. காரணம் இன்றி வெளியேறி ஓடினாலும் வரவேற்பதற்கு இடம் வேண்டுமே.

1960களில் மத்தியில் விவசாயத்தின் நெருக்கடி முற்றிய போது அதனை அப்போது தீர்க்க எடுக்கப்பட்ட வழிமுறைகள் மிகவும் கவனத்திற்குரியது. விவசாய வருமானங்கள், பயிர்க்கான செலவினங்கள் மற்றும் அவற்றில் இருந்து பெறப்படும் வருவாயை பொறுத்ததே ஆகும்.

1960களில்,

-உற்பத்தி திறனை வளர்த்தல்

-நேரடி, மறைமுக மானியங்கள் வாயிலாக செலவினங்களை கட்டுப்படுத்தல்,

-உற்பத்தி செலவுகளைவிட கூடுதலாக விளை பொருளுக்கு விலை கிடைத்தல்.

- குறைந்தபட்ச ஆதரவு விலை முறைமை ஒரு புறம் விவசாயிகளுக்கு பாதுகாப்பு தந்த்தெனில், மறுபுறம் பொதுவிநயோக முறையை பலப்படுத்துவதன் வாயிலாக நுகர்வோரை பாதுகாக்கிற வழிமுறையும் அமைக்கப்பட்டது. இந்த அணுகுமுறையில் குறைகள் இருந்திருக்கலாம். ஆனாலும் விவசாய உற்பத்தியிலும் விவசாயிகள் நலனிலும் செய்யப்பட்ட முன்னேற்றங்கள் குறிப்பிடத்தக்கவை.

பொருளாதார சீர்திருத்தங்களின் காலமாக கருதப்படும் உலகமய யுகத்தில் விவசாயத்திற்கே பலத்த அடி விழுந்துள்ளது. 1990களின் துவக்கத்தில் தாராளமயக் கொள்கைகள் விசாயத்திற்கு பலனளிப்பவை என்று சொல்லப்பட்ட வாதங்கள் பல்வேறு காரணங்களால் பொய்த்து போய் உள்ளன.

-தாராளமயம் என்பது விலை கட்டுப்பாடு என்கிற கடிவாளத்தை அவிழ்த்துவிட்டதால் விவசாய இடுபொருட்களின் விலைகள் அதிகரித்துவிட்டன.

-உரம் போன்ற முக்கியமான இடுபொருட்களுக்கு தரப்பட்டு வந்த மானியங்கள் வருடந்தோறும் குறைக்கப்பட்டிருப்பதால் விவசாய செலவினங்கள் அதிகரித்தே வந்துள்ளன.

-அரசுப் பொருளாதாரத்தில் இருந்து விலகுதல் என்ற பெயரில் பொது முதலீடுகள் தடுக்கப்பட்டதால் நீர்ப்பாசனம், வடிகால்கள், வெள்ளக் கட்டுப்பாடு போற்வற்றிற்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

-விவசாயிகளுக்கு தொழில்நுட்ப சேவைகள் விரிவாக்கப்படுவதும் செவீனங்கள் முடக்கப்பட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

-உணவு தானியங்கள், பருத்தி போன்றவற்றின் இறக்குமதிகள், தாராளமாக்கப்பட்டதால் உள்நாட்டு சந்தையில் விவசாயிகளுக்கு உரிய விலைகள் கிடைக்கவில்லை.

மழை வந்தும் விலை இல்லை

2014 – 17க்கு இடைப்பட்ட மூன்று ஆண்டுக்களில் இந்திய அளவில் முதல் இரு ஆண்டுகள் மோசமானவை. 2012– 17 ல் நாட்டின் பல பகுதிகளில் பருவமழை பொய்த்துவிட்டன. அதிலும் தமிழகம் போன்ற பகுதிகள் வறட்சியில் இருந்து இன்னும் மீளாத வகையில் துயரப்படுகிறது. 2013 – 14 இல் 2.65 கோடி டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி 2014 – 2015 இல் 2.52 கோடி டன்னாகவும், 2015- 2016 இல் 2.51 கோடி டன்னாகவும் வீழ்ச்சியடைந்தது.

2016-17 இல் முன் மதிப்பீடுகள் 2.73 கோடி டன்னாக உயரலாம் என்றே கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த மழைவளம் அதிகம் உள்ள ஆண்டாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் ஒரே மாதிரி தான் உள்ளன.

துவரம் பருப்பு குவிண்டாலுக்கு ரூ. 9 முதல் 10 ஆயிரத்தில் கிடைத்த காலம் போய் ரூ.3,500 முதல் 4,000 வரை மட்டும் தான் கிடைக்கிறது. சோயா பீன்ஸ் ரூ. 3,600 முதல் 3,700 வரை கிடைத்தது இப்போது ரூ. 2,400 முதல் 2,500 வரையே கிடைப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கார்ப்பரேட்டுகள் வாயிலாக நடுத்தர மக்களின் நலனுக்காக செய்யப்படுகின்ற இறக்குமதிகள், பண வீக்கத்தை கட்டுப்படுத்துதல் என்ற காரணங்களை கொண்டு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மேலும் விவசாயிகளின் வருமானத்தை குறைக்கிறதே அன்றி எந்த பிரச்சனையையும் தீர்ப்பதில்லை.

விவசாயிகள் தங்களுடைய உரிமைக்காகவும், கண்ணியமாக வாழ்வதற்காகவும், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறது. பல்வேறு போராட்டங்கள். விவசாயிகள் தற்கொலையும், கடனை அடைக்க முடியாமல் மனவேதனையில் இந்தியாவில் இதுவரை 5 லட்சத்திற்கும் மேலான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

என்ன தீர்வு?

விவசாய வல்லுநர் எம்.எஸ்.சாமிநாதன் குழுவின் முக்கிய பரிந்துரையான உற்பத்திச் செலவினம் + 50 சதவீதத்தை குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் என்பது அமலாக்கப்பட வேண்டும். மேலும்

•விலைகளின் நிலைத்தன்மை

•உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கு பொது முதலீடு

•மறு பகிர்மான ரீதியாக மானியங்களை உறுதி செய்தல் ஆகியன தேவைப்படுகிறது.

ஆனால், விவசாயிகளுக்கோ விவசாயத்திற்கோ ஆதரவு தரப்படுவதை செல்வாக்கு மிக்க பகுதியினர் பலர் உரத்த குரலில் தெரிவிக்கின்றனர். துயரத்தில் ஆழ்ந்துள்ள விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வதற்கு கடும் எதிர்ப்பை இவர்கள் தெரிவிக்கிறார்கள். கடன் ஒழுக்கத்தை இது கெடுத்துவிடும் என்பது இவர்களது வாதம்.

ஆனால் உண்மையில் நுகர்வோர்கள் தருகிற விலைகளுக்கும், விவசாயிகளுக்கு கிடைக்கிற வருமானத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. விவசாயிகளுக்கு வரவேண்டிய வருமானம் மடை மாற்றம் செய்யப்படுகிறது.

வேலைவாய்ப்புகளில் 50 சதவீதத்தினை தரக்கூடிய விவசாயம் பற்றிய எந்தவொரு கவலையும் இல்லாமல் உலகமய காலத்தின் ‘வளர்ச்சி’ பயணித்துக் கொண்டே இருக்கிறது. இவ்வளவு சீரழிவுக்குப் பிறகும் மறு சிந்தனையே இல்லாமல் அதே பாதையில் சென்று கொண்டிருப்பது தான் வேதனையின் உச்சம்.

சுருக்கமாக பார்த்தோமானால்,

1.விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு கட்டுப்படியான லாபகரமான விலை வேண்டும். இடைத்தரகர்களை ஒழிக்க வேண்டும்.

2.விவசாய இடுபொருள்கள் நியாயமான விலையில் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும்.

3.வறட்சியால் அடிக்கடி பாதிப்பு ஏற்படும் நிலையை அறிந்து நீராதாரத்தை விவசாயத்திற்கு கிடைக்க கூடிய வகையில் பெருக்க வேண்டும்.

4.சொட்டு நீர் பாசன முறையை விரிவுப்படுத்தி அதற்கான விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்த வேண்டும்.

5.இயற்கை விவசாயம், மரபு ரீதியான நம்முடைய கால்நடைகளின் பெருக்கத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

6.உழவர்களுக்கு கிடைக்கவேண்டிய நிதி ஆதாரங்கள், கடன் பிரச்சனைகள், அரசு வழங்கும் மானியங்களை நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையும் வேண்டும்.

7.கிராமப் புறங்களில் 100 நாள் வேலைத்திட்டத்தை விவசாயத்தோடு இணைக்க வேண்டும்.

8.விவசாயிகளுக்கு ஆலோசணை வழங்கும் விரிவாக்க மையங்கள் உண்மையாகவே ஆலோசனை வழங்கும் மையங்களாக அமைய வேண்டும்.

9.குளங்கள், நீர் நிலைகளில் மாரமத்து பணிகளை அந்தந்த கிராமத்து விவசாயிகளிடமே வழங்கப்பட்டு, அந்த குளங்களில் கிடைக்கும் வண்டல் மண்ணை பயன்படுத்தவும் மீன்களை பிடித்து அதை வணிகப்படுத்தவும் அந்தந்த கிராம மக்களிடமே உரிமையை வழங்க வேண்டும்.

10.கடனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்கொலை முடிவுக்கு செல்லாமல் அவர்களுக்கு ஆலோசனைகளை (Counselling) வழங்கி ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு அவர்களை திருப்ப வேண்டும். இவையாவும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில பிரச்சனைகள் ஆகும்.

பல்வேறு குழுக்கள் விவசாய பிரச்சனை குறித்து ஆராய நாடு விடுதலை பெற்றதில் இருந்து மத்திய அரசும், அந்தந்த மாநில அரசுகளும் அமைத்துள்ளன. அறிக்கைகளையும், பரிந்துரைகளையும் பெற்று எந்தவிதமான ஆக்கப்பூர்வ மேல் நடவடிக்கைகளும் இல்லை.

ஒப்புக்கு விவசாயிகளுக்கு உறுதிமொழிகளை அரசுகள் அள்ளி வழங்குகின்றன. அவர்களுக்காக போராடும் தளத்தில் உள்ளவர்களும் நீலிக்கண்ணீரோடு குரல் எழுப்பிவிட்டு இருந்துவிடுகின்றனர்.

போராட்டம் என்பது உண்மையான விவசாயிக்கு போராடாமல் தங்களுடைய சுயநலம், தங்களுடைய புகழ் வேண்டும் என்பதற்காக சுயமரியாதை இல்லாமல் தரம் தாழ்ந்த போராட்டங்களால்

தலைநிமிர்ந்து இருக்கும் விவசாயிகளின் கண்ணியம் ஒரு சிலரால் இழக்கப்படுகிறது. ‘ஜெய் கிசான், ஜெய் ஜவான்’ என்ற உயிரோட்டமான கோசத்திற்கு அர்த்தம் இல்லாமல் செய்துவிடுவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

கடந்த காலங்களில் 1970, 80களில் நாராயணசாமி நாயுடு நடத்திய கட்டை வண்டி போராட்டங்களை கண்டு அரசுகளும், பிரதமருமே அஞ்சியது உண்டு. அந்த நிலைமையில் இருந்து தரந்தாழாமல் போராடி அரசுகளை பணிய வைத்து உரிமைகளை பெறுவதில் தான் நியாயங்கள் உள்ளன.

(கட்டுரையாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர், செய்தித்தொடர்பாளர், தி.மு.க.

இணையாசிரியர் - கதைச்சொல்லி, நதிநீர் இணைப்புத் தொடர்பாக போராடி வருபவர். தொடர்புக்கு : rkkurunji@gmail.com)

K S Radhakrishnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment