ஸ்வாமி அக்னிவேஷ் மற்றும் வல்சன் தம்பு
ஒவ்வொரு மதமும் நமக்கு ஒவ்வொரு நம்பிக்கையினையும், வழிபாட்டு முறையினையும் வழக்கத்தில் வைத்திருக்கும். ஆனால் அனைத்தையும் கண் மூடித் தனமாக நாம் நம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இங்கு வரிசையாக மதங்கள் மீதும் மத நம்பிக்கைகளின் மீதும் தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. தன்னுடைய மதம் தான் சிறந்தது என்று நிரூபித்துக் கொள்வதற்காக இவைகள் நடப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் ஒரு மதத்தின் நிலைப்பாடு என்ன என்பதை அந்த மதத்தினை பின்பற்றுபவர்கள் தான் உணர வேண்டும்.
சமீப காலமாக கேரளத்தில் இருக்கும் தேவாலய பாதிரியார்கள் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் பதிவாகி வருகின்றன. பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நான்கு பாதிரியார்கள் பற்றிய விபரங்கள் தெரிய வந்தன. கிறித்துவ மதத்தின் படி பாவமன்னிப்பு கேட்க வருபவர்களின் பிரச்சனைகள் அனைத்தையும் பாதிரியார்கள் ரகசியமாக வைத்திருக்க வேண்டும்.
ஆனால் அவர்களோ அப்பெண்ணிற்கு பாலியல் ரீதியாக தொந்தரவும் கொடுத்தது மட்டுமின்றி, அவர்களின் மத ஒழுங்குகளையும் மீறியுள்ளார்கள். பாதிரியார்கள், தேவாலயங்களில் பணி புரியும் அருட்சகோதரிகளிடமும் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு, பாதிரியார் ஒருவர் இளம்பெண் ஒருவரை நம்ப வைத்து, அவரை கர்ப்பமாக்கிவிட்டு அதை மறைக்க முற்பட்ட சம்பவங்கள் போன்றும் நடைபெறுகிறது.
போப் ஆண்டவராக பணிபுரியும் போப் பிரான்சிஸ் தன்னுடைய அலுவலகத்தில் இருந்த 34 பாதிரியார்களை, பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்று அறிந்த பின்பு பணியில் இருந்து நீக்கியுள்ளார்.
எங்கு பிரச்சனை நடைபெறுகிறதோ அங்கே அதற்கான தீர்வும் இருக்கிறது என்று மக்களை நம்பவைத்து, இது போன்ற சம்பவங்களில் குற்றவாளிகளை தப்பி வைத்துவிடுகிறார்கள். ஆனால் இவர்களே மற்ற மதங்களில் இருக்கும் குறைகள் பற்றி பெரிதாக வருத்தப்பட்டுக் கொள்வார்கள். கோயித் அவர்கள் கூறியது போல் "ஒவ்வொரு வீட்டினரும் அவருடைய வாசல்களை சுத்தமாக வைத்திருந்தால் நகரமே சுத்தமாக இருக்கும். மாறாக ஒவ்வொரு வீட்டினரும் மற்றவர் வீட்டு வாசலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் ஊரே அசுத்தமாக மாறிவிடும்" அப்படியாகத் தான் இருக்கிறது இன்றைய நிலை.
ஒரு மதத்தின் தலைவர் என்பவர், மற்றவர்களை விட மேன்மையான கொள்கைகளை கொண்டவராக இருக்க வேண்டும். அப்போது தான் அவர்களின் வழிநடத்தல்கள் நன்றாக இருக்கும். பார்வையற்றவர் எப்படி கண்களில் பிரச்சனை உள்ளவர்களை வழி நடத்த முடியும்? நாம் இது போன்ற பிர்ச்சனைகளை நிந்தித்தால் கடவுளுக்கு எதிராக நாம் பேசுகிறோம் என்பார்கள். ஆனால் உண்மைக்கு புறம்பாக இருப்பது தானே கடவுளுக்கு எதிராக இருப்பது. அதை ஏன் மக்கள் உணர மறுக்கிறார்கள்.
கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும் ஒருவன் ஒரு பிரச்சனையில் இருந்து தப்பிக்கின்றான் என்றால் அதற்கு நாம் அனைவரும் தான் பொறுப்பு.
பாதிரியார்களோ, பூசாரிகளோ, அவர்கள் யாரும் கடவுள் இருக்கும் இடத்தை நமக்கு வழி காட்டுபவர்கள் அல்ல. அவர்கள் கூறுவது யாவும் உண்மையாய் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவர்கள் மட்டும் தான், இறப்பிற்கு பின்பும் மறுஜென்மம் அனைத்தும் இருக்கிறது என்று நம்மை நம்ப வைத்தவர்கள். அதனால் தான் மதம் ஒரு போதை என்று கார்ல் மார்க்ஸ் அன்றே கூறியிருக்கிறார்.
கடவுளிற்கும், மதத்திற்கும், மதத்தினால் நடத்தப்படும் தவறுகளுக்கும் இடையே இருக்கும் உதாரணத்தினை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் என்றால் இங்கு நம்பிக்கை ஒரு பிரச்சனை இல்லை. ஆனால் குருட்டுத் தனமாக நம்பிக்கை வைத்தல் என்பது தான் பிரச்சனை. குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டனைக்குரியவர்கள் தான்.
வேத விற்பன்னர் மற்றும் சமூக ஆர்வலர் ஸ்வாமி அக்னிவேஷ் மற்றும் தம்பு அவர்கள் இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிற்காக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்
இக்கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் படைப்பாளிகளின் சொந்த கருத்தே!