Advertisment

காங்கிரஸ் வீழ்ச்சிக்கும், பாஜக எழுச்சிக்கும் காரணமான வி.பி.சிங்

காங்கிரசில் இருந்து வெளியேறி 1989 பாராளுமன்ற தேர்தலை தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளராக சந்தித்து பாஜக, இடதுசாரிகள் ஆதரவுடன் பிரதமராக பதவி வகித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாஜக எழுச்சிக்கும் காரணமான வி.பி.சிங்

பாஜக எழுச்சிக்கும் காரணமான வி.பி.சிங்

அ. பெருமாள் மணி, அரசியல் ஆய்வாளர்

Advertisment

இந்தியாவின் ஏழாவது பிரதம மந்திரியாக 11 மாதங்களும் மேலும் சில நாட்களும் பதவி வகித்தவர். விஸ்வநாத பிரதாப் சிங். காங்கிரசில் இருந்து வெளியேறி 1989 பாராளுமன்ற தேர்தலை தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளராக சந்தித்து பாஜக, இடதுசாரிகள் ஆதரவுடன் பிரதமராக பதவி வகித்தார். உத்தர பிரதேசத்தில் உள்ள மாண்டா என்ற பகுதியின் 41 வது ராஜா பகதூராக அறியப்பட்ட விஸ்வநாத பிரதாப் சிங் 1971ம் ஆண்டு புல்பூர் தொகுதியின் காங்கிரஸ் மக்களவை உறுப்பினராக பொது வாழ்க்கைக்கு வந்தார்.

1980ல் யாரும் எதிர்பாராத வகையில் இந்திரா காந்தி உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வர் பதவியை வி பி சிங் அவர்களுக்கு வழங்கினார். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தின் பன்னிரெண்டாவது முதலமைச்சராக இரண்டாண்டு காலத்திற்கும் சற்று கூடுதலாக பதவி வகித்தார். அதன் பிறகு மாநில அரசியலிருந்து தேசிய அரசியலுக்கு வந்துவிட்டார். இந்திராகாந்தியின் நம்பிக்கைக்குரிய முதலமைச்சர்களில் ஒருவராக இருந்த வி பி சிங், ராஜீவ் காந்தி காலத்தில் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியமான இரண்டாம் கட்டத் தலைவர்களில் ஒருவராக பரிமளித்தார்.

1984  ஆம் ஆண்டு ராஜ்யசபா வழியாக பாராளுமன்றத்திற்குள் அழைத்துவரப்பட்டார் சிங். பிரணாப் முகர்ஜியிடம் இருந்த காங்கிரஸ் ராஜ்ய சபா தலைவர் பதவி சிங்கிடம் வழங்கப்பட்டது. ராஜீவ்காந்தி விஸ்வநாத பிரதாப் சிங் மீது கொண்டிருந்த நம்பிக்கைக்கு இது ஒரு சான்று. ராஜ்ய சபா தலைவர் பதவியுடன் மத்திய நிதி இலாகாவையும் சிங்கிடம் வழங்கினார். ராஜீவ் அமைச்சரவையின் நம்பர் டூ என சிங்கை குறிப்பிடலாம்.

போபர்ஸ் பீரங்கி வாங்கிய வழக்கில் ராஜீவ்காந்தி மீது எதிர்க்கட்சியினர் ஊழல் புகார்களை வாசித்தனர். அந்த நேரத்தில் ராஜீவ் காந்திக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கினார், பாதுகாப்பு அமைச்சராக இருந்த விபி சிங் பதவியை ராஜினாமா செய்துவிட்டு. தனிக் கட்சியை தொடங்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டார். ஜன் மோர்ச்சா என்ற அமைப்பு பிறந்தது. பிறகு ஜனதாதளமாக வடிவெடுத்த போது அதன் முதல் தலைவரானார் விஸ்வநாத பிரதாப் சிங்.

காங்கிரசில் இருந்து வெளியே வந்து ஜனதா தளத்தின் தலைவராக ராஜீவ் காந்திக்கு எதிராக வலிமையான கூட்டணியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டார். பல பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேசிய முன்னணியை உருவாக்கினார். அதன் தலைவராக. தெலுங்கு தேசம் கட்சியின் என். டி. ராமாராவும், ஒருங்கிணைப்பாளராக வி பி சிங்கும் செயல்பட்டனர். 1989 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஏறக்குறைய 18 சதவீத வாக்குகளுடன் ஜனதா தளம் 143 இடங்களை வென்றது. 40% வாக்குகளை பெற்ற காங்கிரஸ் கட்சி 197 இடங்களில் வெற்றி பெற்றது.

85 இடங்களை வைத்திருந்த. பாரதிய ஜனதா கட்சி வி பி சிங்கிற்கு அமைச்சரவைக்கு வெளியே இருந்து ஆதரவளிக்க முன்வந்தது. 33 இடங்களுடன் இடது சாரிகளும். சிங்கை ஆதரித்தனர். காங்கிரசுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைந்து விஸ்வநாத பிரதாப் சிங்கை பிரதமர் நாற்காலியில் அமர்த்தினர். 1989 டிசம்பர் இரண்டாம் தேதி இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றார் விபி சிங். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாரதிய ஜனதா தலைவர் அத்வானி தனது ரத யாத்திரையை 1990 ல் தொடங்கினார்.

விஸ்வநாத பிரதாப் சிங். அமைச்சரவையில் ஜவுளித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த இளம் சோசியலிஸ்ட்டான லாலு பிரசாத் பீகார் மாநில முதலமைச்சராக பதவியேற்றிருந்தார். பீகார் மாநிலத்திற்குள் ரத யாத்திரை நுழைந்தது. சமஸ்திபூரில் வைத்து அத்வானி கைதுசெய்யப்பட்டார். அத்வானி கைதை காரணம் காட்டி விபி சிங்குக்கு அளித்து வந்த ஆதரவை பாரதிய ஜனதா கட்சி விலக்கிக் கொண்டது. ஜனதா தளத்தின் 11 மாதகால ஆட்சி முடிவிற்கு வந்தது.

வி.பி.சிங் ஆட்சிக்குப் பிறகு காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் பிரதமராகப் பொறுப்பேற்றார். அந்த ஆட்சி நீண்டகாலம் நீடிக்கவில்லை. 1991 ல் அடுத்த பொதுத் தேர்தலை சந்தித்தது இந்தியா. இந்த தேர்தலில் 20 சதவீத வாக்குகளுடன் 120 இடங்களைப் பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்திற்கு. உயர்ந்தது பாரதிய ஜனதா கட்சி. 1991 ல் ஜனதா தளத்திற்கு 59 இடங்களும் 12 சதவிகித வாக்குகளும் கிடைத்தது.

காலப்போக்கில் ஜனதா தளம் பல்வேறு பிளவுகளை சந்தித்தது. ஒரு சில மாநிலங்களில் வலிமையான அமைப்பாக உருவெடுத்தது. தேசிய அளவில். ஜனதா தளம் தனது முக்கியத்துவத்தை இழந்தது. காங்கிரசுக்கு மாற்றாக தேசிய அளவில் ஜனதா தளம் இழந்த இடத்தை பாரதிய ஜனதா கட்சி அடுத்தடுத்த தேர்தல்களில் கைப்பற்றியது. அதன் வாக்கு சதவீதமும் படிப்படியாக உயர்ந்தது.

1990 களில் இந்திய அரசியலை பெரிதாக பாதித்த மண்டல் அரசியல், மந்திர் அரசியல் இரண்டிற்குமான விதை வி.பி சிங் ஆட்சிக் காலத்தில் தூவப்பட்டது. இந்தியா முழுவதும் அறியப்பட்ட மாபெரும் தலைவராக சிங் இருந்தார் ஆனால் அவரது இடத்திற்கு அவருக்குப் பின் வலிமையான தலைவர்கள் யாரும் வராதது ஜனதாதளத்திற்கு ஒரு பின்னடைவாகவே அமைந்தது. 1984 க்கு பிறகு காங்கிரஸ் இன்று வரை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவில்லை. சுதந்திரத்திற்குப் பிறகான அரசியல் காங்கிரசை சுற்றியே அமைந்தது. அதனை மடைமாற்றம் செய்த பெருமை விஸ்வநாத பிரதாப் சிங்கையே சேரும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment