Advertisment

கூட்டாட்சியா? ஒற்றையாட்சியா? 2 : கருணாநிதியின் முன்னெடுப்பு எத்தகையது?

ஒற்றையாட்சித் தன்மை ஓங்குவதையும், உடனே கூட்டாட்சி கோஷம் அதிகரிப்பதையும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்ட காட்சிகள் போல, இந்தியா பார்த்துக் கொண்டே இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
karunanidhi

விவேக் கணநாதன்

Advertisment

இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் குறித்த உரையாடல்களில் மைல்கற்கள் எது என்றால், முதலாவது அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதங்கள். இரண்டாவது கருணாநிதி அமைத்த ராஜமன்னார் குழு அறிக்கை குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களும் – அவையில் நடந்த விவாதங்களும். மூன்றாவது 2010-ல் சமர்ப்பிக்கப்பட்ட பூஞ்சி கமிஷன் அளித்த பரிந்துரைகள்.

இந்த மூன்றுமே மாநிலங்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கிய மூன்று விதமான பார்வைகளை அளிக்கின்றன. அரசியல் நிர்ணய சபை விவாதங்கள், இந்தியா சிதறுராமல் இருக்க வேண்டிய அவசியம் – அதற்குத் தேவையான வலிமையான மத்திய அரசு – வலிமையான மத்திய அரசு பாசிச எழுச்சிக்கு துணைபோகக்கூடிய அபாயம் – ஒற்றைப்பேரதிகாரம் கொண்ட உறுப்பு அரசாக இந்திய ஒன்றியம் மாறுவதால் உண்டாகும் அழிவுகள் என்கிற மையத்தில் பேசுகின்றன.

ராஜமன்னார் குழு அறிக்கை உயர்ந்தபட்ச கூட்டாட்சி – நிறைவான சுயாட்சி அமைப்பை உருவாக்குவதன் மூலம் கிடைக்கும் சமூக – பொருளாதார பலன்களை மையப்படுத்துகிறது. ராஜமன்னார் குழு அறிக்கை குறித்த தமிழ்நாடு சட்டமன்ற விவாதங்கள், மாநில சுயாட்சி என்பது பிரிவினை வாதமா? அல்லது கட்சி அரசியலுக்கான அரசியல் கோஷமா என்கிற தளங்களில் பேசப்பட்டிருக்கிறது.

2010-ல் சமர்ப்பிக்கப்பட்ட பூஞ்சி குழுவின் அறிக்கை, உயர்ந்தபட்ச கூட்டாட்சி அல்லது அதிகபட்ச மாநில சுயாட்சி என்கிற தளத்தில் இல்லாமல், நம் அரசியலமைப்பு அதிகாரப்பரவல் மிக்க சாசனமாக இருப்பதற்கு மிகக்குறைந்தபட்சமாக செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் என்கி்ற அடிப்படையில் பரிந்துரைகளை செய்துள்ளது.

ஆனால், இந்த விவாதங்கள், அச்சங்கள், திருத்தங்களுக்கான கோரிக்கைகள் எதுவுமே நம் அரசியலமைப்பில் சாசனமாகவில்லை! அதற்கான, விலையத்தான் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற கூத்துக்கள் வரை நாம் கொடுத்திருக்கிறோம்.

வர்ணைக்காக இந்தியாவை நாம் ஒரு கூட்டாட்சி நாடு என்று சொன்னாலும் இந்தியாவின் அரசியலமைப்பு சாசனத்திலேயே ‘கூட்டாட்சி’ (Federal) என்கிற சொல் கிடையாது. ஏன் கூட்டாட்சி என்கிற சொல் சேர்க்கப்படவில்லை என்பதற்கு விளக்கமளிக்கும் அம்பேத்கர், “வேண்டும் என்றே தான் யூனியன் என்ற வார்த்தையைச் சேர்த்திருக்கிறோம்” என்று கூறிவிட்டு, “இந்தியா ஒரு கூட்டாட்சியாக இருந்த போதிலும், அது மாநிலங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் விளைவால் உருவாகவில்லை. அதனால், எந்த மாநிலத்திற்கும் பிரிந்து போகும் உரிமை கிடையாது என்று தெளிவுபடுத்துகிறோம். இந்தக் கூட்டாட்சி ஒரு ஒன்றியம்” என்கிறார்.

சமூக பொருளாதார காரணங்களைவிட, இந்தியா ஒரு நிலமாக இணைந்து இருக்க வேண்டும் என்கிற விருப்பமே ‘கூட்டாட்சி’ வடிவத்தை உருவாக்குவதில் சிக்கலை உருவாக்கியுள்ளது என்பதை அம்பேத்கரே தெளிவுப்படுத்துகிறார். மத்திய – மாநில உறவுகள் ராஜமன்னார் குழு அறிக்கை பற்றிய சட்டமன்ற விவாதங்களிலும் ’மாநில சுயாட்சி என்பது பிரிவினையா?’ என்பது குறித்தே அதிகம் விவாதிக்கப்படுகிறது.

மாறாக, அதிகாரம் குவிவதால் நடக்கும் பாசிச எழுச்சி, சமூக – பொருளாதார பாதிப்புகள் போன்றவை பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஆனால், இந்தியாவின் ஆதாரப் பிரச்சினை பாசிச எழுச்சியும், அதன் விளைவான சமூக பொருளாதார காரணங்களும் தான் என்பதை சுதந்திரத்திற்கு பிறகு மீண்டும் மீண்டும் நாம் உணர்ந்துவருகிறோம்.

திராவிடச் சித்தாந்தத்தின் எழுச்சிக்குப் பிறகு அண்ணாவும், அவரைத் தொடர்ந்து கருணாநிதியும் தொடர்ந்து முன்வைத்த மாநில சுயாட்சி முழக்கத்தை இந்த சமூக - பொருளாதார பின்னணியில் இருந்தே புரிந்து கொள்ள வேண்டும்.

1974ம் ஆண்டு ராஜமன்னார் குழு அறிக்கை பற்றிய விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசும் கருணாநிதி, 1967ம் ஆண்டு முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதல் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்த போது உரையாற்றிய அண்ணாவின் “நமது கூட்டாட்சியில் எத்தகைய வரம்புக்கு உட்பட்டு மாநில அரசுகள் இயங்க வேண்டியிருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அரசியலமைப்பின் விதித்துறைகள் மத்திய அரசுக்கு ஊட்டங்கொடுக்கும் வகையிலேயே அமைந்திருப்பது ஒருபுறமிருக்க, கடந்த 15 ஆண்டுகளாக திட்டமிட்ட பொருளாதார அமைப்பின் கீழ் இணைந்த நெறிமுறைகளும், வளர்ந்த மரபுகளும் மாநிலங்களை மெலியச் செய்து மத்திய அரசை மேலும் வலுவூட்டும் வண்ணம் அமைந்திருக்கின்றன. அயல் நாட்டு வாணிகம், நாணயச் செலாவணி, கடன் கொள்கை முதலியன குறித்து அரசியலமைப்பில் வகை செய்துள்ள அதிகாரங்களின் கீழ், நமது பொருளாதாரத்தை நெறிப்படுத்தும் பொறுப்பு முழுக்க மத்திய அரசிற்கே உரியதாக்கப்பட்டுள்ளது. மேலும், அரசியலமைப்பில் கூறப்படாத எஞ்சிய அதிகாரங்கள் உட்பட, நீட்சித்திறன் உள்ள வருமான இனங்களின் மீது மத்திய அரசிற்கு உள்ள உரிமை வாய்ப்பின் மூலமும், தேசிய வருமான இனத்தின் பெரும்பங்கினை ஈர்த்துச் செல்லும் நிலையிலே மத்திய அரசு உள்ளது. இந்த நிலைமை காரணமாக, மாநிலங்கள் தங்கள் திட்டங்களையும் கொள்கைகளையும் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசின் உதவி மானியத்தையும், கடன்களையும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது. பொதுக்கடன்கள் மூலம், மாநில அரசுகள் நிதிதிரட்ட, அரசியலமைப்பின் 293வது பிரிவின் மூலமாகவும், ரிசர்வ் வங்கியின் மூலமாகவும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மத்திய அரசு கொண்டுள்ளது. நிதிக்குழுக்குகளுக்கு விதிக்கப்படும் ஆய்வு வரன் முறைகள் காரணமாக, மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நிதி அளவுகள் குறித்து நிதிக்குழுக்களாலும் தீர்வு ஏற்பட்ட பாடில்லை” பேச்சைக் கொண்டே மாநில சுயாட்சி - கூட்டாட்சி தத்துவத்திற்கான அவசியத்தை விளக்குகிறார்.

அண்ணா இந்த உரையை ஆற்றியது 1967. கருணாநிதி குறிப்பிட்டுக் காட்டியது 1974ல். ஆனால், 50 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த நிலைமைகளில் இன்றைக்கும் எந்த மாற்றமும் இல்லை. 1962-ல் திராவிட நாடு கோஷம் கைவிடப்பட்ட நிலையில், இன தேசிய சித்தாந்த அரசியலை முன்னெடுத்த அண்ணாவும், கருணாநிதியும் தொடர்ந்து முன்னிறுத்திய மாநில சுயாட்சி முழக்கத்தை சமூக - பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கான அதிகார அமைப்பை உருவாக்குவதற்கான இயக்கமாக புரிந்துகொள்ள வேண்டும். அதன் மூலம் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான பொருளாதார வஞ்சனை அரசியலைமப்பில் உறுதி செய்யப்படுவதையும், மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் கட்சி, அரசியல் சாசனம் வழங்கும் பேரதிகாரம் மூலம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பொருளாதார வாய்ப்புகளை குலைக்கும் அபாயத்திற்கு இடம் கொடுக்கப்பட்டிருப்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.

தாராளமயப் பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்ட பிறகான கால்நூற்றாண்டில், இன்றைக்கு களத்தில் பிரிவினைவாதிகள் யாரும் உயிர்ப்போடு இல்லை. ஆனால், பாசிசமும் – அதன் வழியான வகுப்புவாதமும் – சமூக பொருளாதார சீரழிவும் எல்லோருடைய வீட்டு வாசலிலும் நின்றுகொண்டிருக்கிறது என்ற எதார்த்தத்தை உணரும் போது சமூக - பொருளாதார காரணிகளுக்கும், இந்திய அரசியலமைப்பு இயங்கும் விதத்துக்குமான முரண்பாடுகளின் எச்சரிக்கை உணர்வாக கூட்டாட்சி முழக்கம் இருப்பது புரியும்.

இந்தியாவில் இருக்கும் கட்சி அமைப்புகளும், பண்பாட்டுச் சூழலியலும் யார் ஆளவேண்டும் என்பதைத்தான் மீண்டும் மீண்டும் நம் ஜனநாயகத்தின் முன்பு முன்னிறுத்துகிறது. ஆள்பவர்களுக்கு ஏற்ப, என்ன மாதிரியான அதிகாரத்தால் மக்கள் ஆளப்படுகிறார்கள் என்பது மாறுபடும். ஆள்பவர் நினைத்தால் சர்வாதிகாரியாக நடக்கலாம் – ஆள்பவர் நினைத்தால் சமத்துவாதியாகவும் இருக்கலாம். இதைக் கட்டுப்படுத்தி சீரான அதிகாரத்தை உறுதி செய்ய வேண்டியநமது அரசியலமைப்போ, இரண்டுக்கும் தேமேயென இருந்து ஒத்துழைக்கும்! வி.பி.சிங்கிடம் இருந்தால் அது சமூக நீதியின் குரலாக ஒலிக்கும். மோடியிடம் இருந்தால் இந்துத்துவத்தின் குரலாக ஒலிக்கும். ஆளும் கட்சியின் கொள்கைக்கும், அதிகாரம் செலுத்துபவரின் விருப்பத்திற்கும் ஏற்ப அரசியல் சாசனம் வளைவது என்பது மக்களாட்சியின் அவலம்.

இந்தியாவின் ஜனநாயகச் சூழல், பல கட்சி முறை, ஒவ்வொரு கட்சியும் தனித்தனி சமூகங்களிடம் செல்வாக்கு செலுத்துவதற்கு ஏதுவான சாதி – மத – பண்பாட்டுச் சூழல் என பலவற்றின் சரடாக இருக்கும் அரசியலில், ஆட்சியதிகாரம் ஒரு பெரும் மக்கள் தரப்பை நிராகரித்துவிட்டு இன்னொரு பெரும் மக்கள் தரப்பை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் அபாயம் நீடித்துக் கொண்டே இருக்கிறது. இந்த அபாயத்தில் இருந்து மக்களைக் காப்பாற்றி, அவர்கள் மீது செலுத்தப்படும் அதிகாரம் தாக்குதலாக மாறாமல் தடுக்கும் அரணாக இருக்க வேண்டியது அரசியல் சாசனம். ஆனால், மீண்டும் மீண்டும் தனிமனித விருப்பங்களுக்கு பலியாகும் பலவீனம் நம் சாசனத்தில் மிகுந்திருப்பதையே இத்தனை ஆண்டுகால அனுபவம் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது.

சுதந்திரத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி இந்தியாவில் ஆளும் அதிகாரம் என்ன தத்துவத்தில் இயங்க வேண்டும் என்பது பற்றிய விவாதங்களில் மக்கள் ஒருதரப்பாக இருந்ததேயில்லை. இன்றைக்கு அதற்கான சூழல் உருவாகியிருக்கிறது. கூட்டாட்சித் தத்துவத்தை வெறும் அரசியல் கோஷமாக, கட்சிகளின் பெருமிதக் கொள்கையாக மட்டுமே அல்லாமல், மக்களின் விருப்பத்தைப் பெறும் நம்பிக்கையாக, அதிகாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சாரமாக முன்னெடுக்க 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வழிகாட்டுகிறது.

கூட்டாட்சித் தத்துவத்திற்கு முரணாக இருக்கும் அம்சங்கள் குறித்து அரசியல் நிர்ணய சபையில் என்னென்ன அச்சங்கள் எல்லாம் எழுப்பப்பட்டனவோ அத்தனையையும் இந்த 70 ஆண்டு காலத்தில் இந்தியா பார்த்து முடித்துவிட்டது. அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை, அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை, எப்போதும் நீடிக்கும் கெடுபிடி அரசியல், மாநிலங்களை பொம்மையாக்குதல், ஆளுநர்- குடியரசுத் தலைவர் அதிகாரங்களை பேரத்துக்கான துருப்புச் சீட்டாக்குதல், ஆட்சியைக் கலைத்தல், ஜனநாயகத்தைக் குலைத்தல், குதிரை பேர ஊழல், வகுப்புவாத மக்களாட்சி, இத்தியாதி இத்தியாதி என அனைத்துமே நடந்துமுடிந்த வரலாறாகிவிட்டது.

ஒற்றையாட்சித் தன்மை ஓங்குவதையும், உடனே கூட்டாட்சி கோஷம் அதிகரிப்பதையும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்ட காட்சிகள் போல, சுதந்திர இந்தியா அடுத்தடுத்து பார்த்துக் கொண்டே இருக்கிறது. அதிகார இயக்கத்துக்குள் என்ன நடக்கிறது என தெரிந்துகொள்ள முடியாமல் இருந்த இருள் யுகங்களைத் தாண்டி, எல்லோருடைய கைகளுக்கும், எல்லா தகவல்களும் சென்றுசேரும் ஒரு காலத்தில் இன்றைக்கு நாம் வாழ்கிறோம். நம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக இன்றைய தகவல் மைய உலகை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கூட்டாட்சி என்பதை மீண்டும் மீண்டும் ஒரு கனவாக முன்வைக்கும் கட்சிகள் மீப்பரந்த அளவில் அதை கொண்டு சேர்க்க வேண்டும். இல்லையென்றால், அதே தொழில்நுட்ப – தகவல் மைய இயக்கத்தை எதேச்சதிகார கைப்பற்றுலுக்கான ஆயுதமாக ஆதிக்க சக்திகள் பயன்படுத்தும் அபாயம் இருக்கிறது.

மகதப் பேரரசு காலத்திலிருந்து – இந்திராகாந்தி காலம் வரை, டெல்லியில் ஓர் ஒற்றைப் பேரதிகாரம் பலமுறை வீறுகொண்டு எழுந்துள்ளது. ஆனால், மீண்டும் மீண்டும் அத்தகைய அதிகாரங்கள் வீழ்ந்திருக்கின்றன. எழுச்சியும் – வீழ்ச்சியும் நடந்து கொண்டே இருந்தாலும், அதற்காக கொடுக்கப்பட்ட விலை என்பது மிகப்பெரியது. இன்றைக்கு மீண்டும் ஒற்றைப் பேரதிகாரம் எழுகின்ற நேரத்தில், காந்தியவாதியான கிருபளானி சொன்ன, “டெல்லி ஓர் அழிந்துபோன சாம்ராஜ்யங்களின் சுடுகாடு” என்று வாசகத்தை நாம் நினைவுக்கு கொண்டு வரவேண்டியிருக்கிறது.

இந்தியாவில் இருக்கும் சாதியக் கட்டமைப்பு தன்னளவிலான இறுகல் – தளர்வோடு ஒரு கூட்டிணைவைக் கொண்டு, ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதே படிக்கட்டு முறையிலான கட்டமைப்பை ஜனநாயக வழியில் – அரசியல் சாசனத்தின் உதவியோடு – ஒற்றைப் பேரதிகாரம் உருவாக்குமானால் அதன் விளைவுகள் ஆக மோசமாக இருக்கும் என்கிற எச்சரிக்கை நமக்கு அவசியம்.

முன்னெப்பதையும் விட கூடுதலாக, கூட்டாட்சி என்கிற சொல் எங்கெங்கும் ஓங்கி ஒலிக்க வேண்டும். அதை சாத்தியப்படுத்தும் சூத்திரங்களை அரசியல் கட்சிகள் வகுக்க வேண்டும்.

ஆம். எந்த நேரமும் அத்துமீறலுக்கு வழிகொடுத்துக் கொண்டிருக்கும் விஷக்கொடுக்குகளை நம் சாசனத்தில் இருந்து களைய வேண்டிய நேரம் இது. கூட்டாட்சித் தத்துவத்துக்கான நூற்றாண்டில், அதை நோக்கி நகர்ந்தால் இந்தியா பிழைக்கும்.

கூட்டாட்சியா? ஒற்றையாட்சியா? ஜனநாயகத்துக்கு எது நல்லது!

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment