நிர்மலாதேவி
பெண்ணுக்கு சம உரிமையும், சமூக நீதியும் கிடைக்கச் சொல்வதே பெண்ணியம். பெண்களின் உரிமை என்பது யாராலோ வழங்கப்படுவதன்று. பெண்ணே தனக்கானதை அடைந்து கொள்வது. இதனை அறிந்திருந்த கலைஞர், அவர் எழுத்தின் மூலம் அதாவது கதைகள், நாவல்கள், திரைப்படங்கள், நாடகங்கள், காவியங்கள் மூலம் வெளிப்பட்டுத்தியுள்ளார்.
ஆணும் பெண்ணும் சமம் என்ற கொள்கையாளர் கலைஞர். அதனால்தான் அவர் ஆட்சியில் இருந்த போது உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50 சதவிகித இடஒதுக்கிடு கொடுக்க முடியாவிட்டாலும் 33 சதவிகிதம் கொடுத்தே ஆக வேண்டும் எனப் போராடி பெற்றுத் தந்தவர். இன்று சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல்களில் மகளிருக்கான இடஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளதால் பெண்ணுக்கான சம உரிமை கிடைத்துள்ளது.
ஆணுக்குத் தான் வீடும் வாழ்க்கையும் என்ற நிலையில் வைதீகத் திருமணங்கள் நடந்து வந்த நிலையை மாற்றி பெண்ணுரிமைக்கான ஓர் ஏற்பாடாக தந்தை பெரியாரால் ஏற்படுத்தப்பட்ட சுய மரியாதை திருமணங்கள் தமிழகத்தில் நடந்தச் செய்தவர் கலைஞர்.
சொத்துரிமையில் ஆணுக்கு நிகரான சம பங்கு பெண்ணுக்கு உண்டு என சட்டம் வகுத்து அதை நடைமுறைபடுத்தியவர், கலைஞர். தனக்குப் பின் தன் மகனுக்குச் சொத்து என எண்ணிய ஆணினம், பெண்ணினத்தின் பால் கற்பித்ததே கற்பு. கற்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைத்தவர் கலைஞர். இன்று பெண்கள் சுதந்திரமாக சமூகத்தில் வாழ வழி வகுத்தவர்.
‘‘கண்ணுக்குள் பாவைபோல்
உருண்டிருக்கும் உள்ளம் - கைம்
பெண்ணுக்கு இருப்பதையும்
உணர்ந்திடுவாய்”
எம்று கூறி கைம்பெண் துயரை வெளிப்படுத்தியவர் கலைஞர். விதவை என்ற சொல்லில் உள்ள ஒரு எழுத்தில் கூடு பொட்டில்லை என்று கூறி, ‘கைம்பெண்’ என்று எழுதி இரண்டு பொட்டுகள் வைத்தவர் கலைஞர். ஆணை போலவே பெண்ணுக்கும் மறுமணம் செய்து கொள்ளும், உரிமை உண்டு என்று பெண்களின் விடியலுக்கு திட்டங்கள் தீட்டி செயல்படுத்தியவர்.
8ம் வகுப்பு வரை படித்த ஏழை இளம் பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் ஏற்படுத்தியதன் மூலம், ‘முதிர் கன்னிகள்’ என்ற நிலைமாறி பெண்கள் வாழ்வு பெற்றனர்.
விரும்பும் படிப்பு, தொழில், குடும்ப அமைப்பு இவற்றை தெரிவு செய்யும் சுதந்திரமும், பொருளாதார சுதந்திரமும், பெண்கள் பெற வேண்டும் என்று விரும்பியவர் கலைஞர்.
பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெறுவதற்காக மகளிர் சுய உதவிக்குழுக்களை ஏற்படுத்தி பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெறச் செய்தவர் கலைஞர்.
தாய்மை பெண்ணுக்கான அடையாளம். மகப்பேறு தொடர்பான எந்த ஒரு விசயமும் பெண்ணால் முடிவெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்துடையவர் கலைஞர். பெண் குழந்தை பிறப்பு முதல் இறுதிக்காலம் வரை சமூகப் பாதுகாப்புடன் வாழ வழிவகை செய்தவர் கலைஞர்.
பெண்ணுரிமைப் போருக்கு அண்ணா வழியில் பெரு வெற்றி கிடைத்திட்ட பேராதரவு வழங்குவது பெண் வயிற்றில் பிறந்தோரின் பெரும் கடமை என்கிறார், கலைஞர்.
‘‘நல்லகாலம் நம் காலிலே வந்து விழாது
அதை நோக்கி நாம்தான் கால்கடுக்க நடக்க வேண்டும்’’
என்ற கலைஞர் தாயையும், தாயைப் போல பெண்களையும் மதித்துப் போற்றுகிறார்.
(கட்டுரையாளர் பி.நிர்மலாதேவி எம்.ஏ., எம்.எட்., எம்.ஃபில், முதுநிலை பட்டதாரி அசிரியை, திருப்பாலை, மதுரை. தொடர்புக்கு : 8608388984)
கவிஞர் சல்மாவின் சிறப்பு கவிதை
கலைஞர் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை