லிஸ் மாத்யூ
குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜக.வின் வெற்றிக்கு 5 காரணிகளை சுட்டிக்காட்டலாம். குறிப்பாக நரேந்திர மோடியின் மண்ணின் மைந்தர் கோஷம் வென்றிருக்கிறது.
குஜராத் தேர்தலை இப்போதைய மாநில பாஜக அரசின் செயல்பாடுகளுக்கான தேர்வாக பிரதமர் நரேந்திர மோடி முன் வைக்கவில்லை. முந்தைய பாஜக அரசின் சாதனைகளுக்கான தேர்வாகவே தனது பிரசாரத்தில் வலியுறுத்தினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை குஜராத்துக்கு எதிரானவராக மோடி தனது பிரசாரத்தில் முன்வைத்தார். இது வாக்காளர்கள் மனதில் ஒரு தாக்கத்தை உருவாக்கவே செய்திருக்கிறது. குஜராத்திலும், ஹிமாசல பிரதேசத்திலும் பாஜக தலைவர் அமித்ஷா எதிர்பார்த்த அல்லது கணித்த வெற்றி கிடைக்கவில்லைதான். ஆனாலும் தொடர்ந்து 22 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த ஒரு கட்சி குஜராத்தில் ஆட்சியை தக்க வைப்பது ஒரு சாதனை!
Elections Results 2017 : குஜராத், ஹிமாசலில் பாஜக வெற்றி
குஜராத்தில் பாஜக.வின் வெற்றிக்கான காரணங்கள் இவை:
நரேந்திர மோடி :
குஜராத் வெற்றி, சந்தேகமே இல்லாமல் பிரதமர் நரேந்திர மோடிக்கும், ‘பிராண்ட் மோடி’க்கும் கிடைத்த வெற்றியே! 2014 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் கடந்த ஆண்டு நடந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலைப் போலவே குஜராத் வெற்றிக்கும் மோடி பிரதான காரணம்.
குஜராத் வாக்காளர்கள், மோடியின் தலைமைப் பண்பு மீது வைத்திருக்கும் பிடிப்பு இந்தத் தேர்தலில் வெளிப்பட்டிருக்கிறது. மொத்தம் 15 நாட்களில் 34 கூட்டங்களில் மோடி பேசினார். மோடியும் அமித்ஷாவும் இங்கு உருவாக்கி வைத்திருக்கும் வலுவான கட்டமைப்பு, மோடியின் பாப்புலாரிட்டியை அடித்தளம் வரை கொண்டு சேர்க்க உதவியிருக்கிறது.
காங்கிரஸின் பலவீனம் :
பாஜக.வைப் போல குஜராத்தில் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த காங்கிரஸ் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. கடந்த 22 ஆண்டுகளாக காங்கிரஸ் அதிகாரத்தில் இல்லாத நிலையில் காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் சிலர் பாஜக.வுக்கு சென்றதும் காங்கிரஸின் பலவீனம் ஆனது.
பாஜக.வின் இந்துத்வா கொள்கை:
குஜராத் வாக்காளர்களில் பெரும்பகுதியினருக்கு அண்மைக்கால பாஜக.வின் நடவடிக்கைகளிலும் கொள்கைகளிலும் கருத்து மாறுபாடு இருக்கலாம். ஆனால் அந்தக் கட்சியின் ஐடியாலஜி எனப்படும் இந்துத்வா கொள்கையில் பெரிய மாறுபாடு இல்லை.
குஜராத் பிரசாரத்திற்கு வந்த ராகுல் காந்தியும்கூட கோவில்களுக்கு செல்ல ஆரம்பித்தது இதை உணர்ந்ததால்தான். ஆனாலும் பாஜக.வையே இந்த விஷயத்தில் குஜராத் வாக்காளர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அரசு நிர்வாகம் :
குஜராத்தில் பாஜக அரசின் செயல்பாடுகளில் கிராமப்புற மக்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு அதிருப்தி இருக்கிறது. ஆனால் மோடி தலைமையில் நடைபெற்ற கடந்த கால அரசுகள் மீதான மரியாதையையும் பரவலாக பார்க்க முடிகிறது. குறிப்பாக வணிகர்கள், தொழில் அதிபர்கள் தரப்பில் பாஜக அரசை பாதுகாப்பான அரசாக கருதுகின்றனர்.
‘குஜராத்தியர்களின் பெருமை’ என்கிற பிரசாரம்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர்கள், ‘குஜராத்தியர்களின் பெருமை’ என குறிப்பிட்டு முன்வைத்த பிரசாரம் முக்கிய பங்காற்றியிருக்கிறது. மோடி தனது பிரசாரங்களில், ‘மண்ணின் மைந்தர்’ என்கிற கோஷத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். குஜராத்தில் தனது தலைமையில் நடைபெற்ற கடந்த கால அரசுகளின் சாதனைகளை விவரித்த மோடி, ராகுல் காந்தியை குஜராத்துக்கு எதிரானவராக வர்ணித்தார்.
பாஜக.வின் வெற்றிக்கு மேற்படி 5 காரணிகளை முக்கியமாக குறிப்பிட முடிகிறது.