Advertisment

எதற்காக, யாரை குறிவைத்து இந்த சோதனைகள்?

வருமான வரித்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்த வழக்கு என்னவாயிற்று? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அழுத்தம் ஏன் கொடுக்கவில்லை?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jaya TV, IT Raid, TTV Dinakaran, Sasikala,

ச.கோசல்ராம்

Advertisment

தமிழகத்தையும், மக்களையும் பரபரப்பாக வைத்திருக்க வேண்டும் என மதிய, மாநில அரசுகள் முடிவெடுத்து செயல்படுவது போலவே தெரிகிறது. சசிகலாவின் குடும்பத்தினர் 180க்கும் மேற்பட்ட இடங்களில் 1800 அதிகாரிகளை வைத்து, வருமான வரித்துறையினர் இன்று நடத்தி வரும் சோதனையும் அதைத்தான் நிருப்பிக்கிறது.

ஒரிரு நாட்களோ, ஓரிரு வாரங்களோ பரபரப்பாக பேசப்படும் இந்த ரெய்டுகள், அதன் பின்னர் எந்த தகவலும் இல்லாமல் முடங்கிப் போய்விடுவது வாடிக்கையான ஒன்றுதான். கடந்த ஓராண்டில் மட்டும் இப்படி பல ரெய்டுகள் என்ன ஆனதென்றே புரியாத புதிராக இருக்கிறது.

2016ம் ஆண்டு தேர்தல் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, திருப்பூர் அருகே மூன்று கண்டெய்னர் லாரிகளில் 570 கோடி ரூபாய் பணம் பிடிப்பட்டது. இது குறித்து முரண்பட தகவல்களே வந்தது. இது வரையில் அந்த பணம் பற்றிய விபரம் மர்மமாகவே உள்ளது.

தேர்தல் நெருக்கத்தில், கரூர் அன்புநாதன் பண்ணை வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெரும்பணம் தேர்தலுக்காக கடத்தப்பட்டதாக அப்போது வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். அதன் பின்னர் அந்த வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்தோம் என்பதை வருமான வரித்துறை தெரிவிக்கவே இல்லை.

அன்புநாதன் வீட்டில் கைபற்றப்பட்ட பணம், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு சொந்தமானது என்று சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் வீட்டிலும் அவரது மகன் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அதே நாளில் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வீடு, அலுவலகம் உள்பட பல இடங்களில் சோதனை நடந்தது. அந்த வழக்கும் கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார், பிரதமர் மோடி. அதன் பின்னர், தமிழகத்தில் நடந்த முதல் ரெய்டு, சேகர் ரெட்டி அலுவலகம், வீடுகளில். புத்தம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் 100 கோடி வரையில் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து சேகர் ரெட்டி, அவரது பார்ட்னர்கள் கைது செய்யப்பட்டனர். ஒரிரு மாதங்களில் அவர்கள் ஜாமீனில் விடுதலையானார்கள். சமீபத்தில் இந்த வழக்கில், சேகர் ரெட்டிக்கு எங்கிருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கிடைத்தது என்ற தகவலை ரிசர்வ் பேங்க் தரவில்லை என்று சிபிஐ புகார் தெரிவித்திருந்தது. பணம் ரிசர்வ் வங்கி வரை பாய்ந்துவிட்டது என்பது மக்களுக்கு புரிந்தது.

ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி இறந்தார். அதே டிசம்பர் மாதம் 21ம் தேதி, அப்போதைய தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன்ராவ் ஐஏஎஸ் வீட்டிலும், தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடந்தது. முதல் முறையாக தலைமை செயலகத்துக்குள்ளேயே வருமான வரித்துறை புகுந்தது. அதன் பின்னர் ராம்மோகன்ராவ், ‘என் வீட்டில் பணம் எடுக்கவில்லை. ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படியெல்லாம் ரெய்டு நடத்தியிருக்க முடியுமா?’ என்று கேள்வி கேட்டார். அதன் பின்னர் அவர் வேறு பதவிக்கு மாற்றப்பட்டு, எந்த பிரச்னையும் இல்லாமம் ஒய்வு பெற்றுவிட்டார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. அப்போது வேட்பாளராக போட்டியிட்ட டிடிவி தினகரனுக்காக வாக்களர்களுக்கு அமைச்சர்களே பணம் கொடுத்ததாக புகார் வந்தது. இதையடுத்து வருமான வரித்துறையினர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது மூன்று அமைச்சர்கள், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஆகியோர் அமைச்சர் வீட்டுக்கு விரைந்து வந்தனர். வருமான வரித்துறை அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்தனர். இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஆர்.ஏ.புரம் போலீசில் புகார் கொடுத்தார்கள். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்ததோடு, இன்று வரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

இந்த சம்பவத்துக்குப் பின்னர் இரண்டுபட்டிருந்த அதிமுகவின் அணிகளான ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் இணைந்தார்கள். இதற்கு டிடிவி தினகரன் ஒப்புக் கொள்ளவில்லை. அவரை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்று சேர்ந்தார்கள். இப்போது இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் கமிஷனில் மோதிக் கொண்டு இருக்கிறார்கள்.

இபிஎஸ் அணிக்கு மத்திய அரசுக்கு ஆதரவு இருக்கிறது. மத்திய அரசுக்கு டிடிவி தினகரன் குடும்பத்தினர் அரசியலில் இருக்கக் கூடாது என்று நினைக்கிறது. எனவே அதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது என்ற குற்றச்சாடு எழுந்துள்ளது. இதுவரையில் மத்திய அரசை எதிர்க்க தயங்கி வந்த டிடிவி தினகரன், முதல் முறையாக மத்திய அரசை கடுமையான விமர்சனம் வைத்துள்ளார்.

தினகரனுடைய குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறது. வருமான வரித்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்த வழக்கு என்னவாயிற்று என கேள்வி எழுப்பிருக்க வேண்டாமா? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அழுத்தம் ஏன் கொடுக்கவில்லை. வருமான வரித்துறையினர் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுப்பது யார் என்ற கேள்வியும் எழுகிறது.

நேரடியாக இப்படியொரு குற்றச்சாட்டு வந்தாலும், மறைமுக குற்றச்சாட்டும் அரசியல் வட்டாரங்கள் வலுவாக வட்டமடிக்கிறது. அதாவது பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டாகிவிட்டது. 7ம் தேதியன்று அகில இந்திய அளவில் அனைத்து மீடியாக்களிலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றியே விவாதித்தார்கள். அதை திசை மாற்றவே ஒரே நேரத்தில் 180 மேற்பட்ட இடங்களில் சோதனையை நடத்தியிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த சோதனையைத் தொடர்ந்து நாடு முழுவதும் இதைப் பற்றிய விவாதங்களே அதிகமாக நடந்து கொண்டு இருக்கிறது, அவர்கள் நினைத்தபடியே.

இதனிடையே 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செய்த பின்னரும் டிடிவி தினகரன் சும்மா இருக்கவில்லை. பத்துக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை தன்வசம் படுத்திவிட்டதாகவும், அவர்களை கவர்னரிடம் அழைத்துச் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் உலாவந்தது. இந்த நிலையில்தான் ரெய்டு நடந்திருக்கிறது. வெட்ட வெட்ட வளரும் மரம் போல டிடிவி தினகரன் எழுந்து வருவதை ஏற்க முடியாததாலேயே இந்த சோதனை என்ற பேச்சும் உள்ளது.

இப்போது 180க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனைகளில் என்னென்ன கைப்பற்றப்பட்டுள்ளது என்பதை வருமான வரித்துறை கண்டிப்பாக சொல்லப்போவதில்லை. எல்லாமே ரகசியமாகவே நடக்கப் போகிறது. வரி ஏய்ப்பு செய்தால், பைன் கட்டி வழக்கை முடித்துவிட்டு போய்விடுவார்கள். மக்கள் அதற்குள் அடுத்த ரெய்டை பற்றி பேசிக் கொண்டு இருப்பார்கள்.

V K Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment