அறிவின் முன்னேற்றத்தில் தனிமைப்படுத்தல் பார்வையின் அடிப்படையே குறைபாடானது!

அறிவுக்குள் இருக்கும் அழகான அம்சமே, அது வகைவகையான பெறுமதிகளை உருவாக்கிக்கொள்வதுதான். புதிய கண்டுபிடிப்புகளின் ஆக்கபூர்வமான பயன்பாடு முதல் மக்களுக்கு இடையிலான புதிய பிணைப்புகளைப் படைப்பதுவரை பலவாக இருக்கும். பதினேழாம் நூற்றாண்டின் பிரெஞ்சு எழுத்தாளர் இராபுட்டின் புசி கூறிய பிரபல வாசகம், ’காதலானது குருட்டுத்தனத்திலிருந்து வருகிறது; அறிவோ நட்பிலிருந்து உருவாகிறது’. ஒன்று என்னவாகப் போகிறது என்பதைப் பார்க்க இயலாமையின் நல்ல விளைவாகக்கூட காதல் இருக்கலாம். ஆனாலும் அது உலகத்தில் பல மாறுபட்ட வழிகளில் இவ்வுலகை செழுமைப்படுத்தி உள்ளது. குறிப்பாக, ரோமியோ ஜூலியட், அபிஞனா சாகுந்தலா, லைலா மஜ்னு என பெரும் இலக்கியங்களின் படைப்புகளைச் சொல்லலாம். ஆனால், நட்பு அறிவானது புசி ராபுட்டின் குறிப்பிட்டதைப்போல, அப்படி எதையும் உருவாக்கியிருக்கிறதா இல்லையா?

கோயம்பேடு திணறுகிறது: பொங்கல் பண்டிகையின் போது நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள்..

புசி ராபுட்டின் வலியுறுத்தியதன் தாக்கத்துக்கு எதிர்த்திசையைப் பற்றியே அதாவது அறிவானது நட்பை உருவாக்கவில்லை என்றல்ல, நட்பு எவ்வாறு அறிவை உருவாக்குகிறது என்பதைப் பற்றி நான் கவனம்செலுத்த விரும்புகிறேன். நட்பு, அறிவை உருவாக்கப் பயன்படுகிறது எனும் கருத்தானது குறிப்பாக தத்துவத்திலும் அறிவியலின் வரலாற்றிலும் முக்கியத்துவம் பெறுகிறது. தேசியவாத மிகையுணர்வுகள் ஒரு நாட்டை தனியான கணிதம் மற்றும் அறிவியல் வகைமையாகக் கூறிக்கொள்ளலாம். ஆனால் உலகின் மற்ற பகுதிகளிலிருந்து நம்மைப் பிரிக்கவைத்துவிடும். (மற்றவர்களிடமிருந்து நாம் என்ன கற்கமுடியும் என்பதல்ல, நம்முடைய நண்பர்களிடம் எவ்வளவு என்பதே!) ஆனால் அது கணித, அறிவியல் ஏன் கலை பண்பாட்டுரீதியிலும் தொடர்ச்சியாக கடைப்பிடிக்கும்படியான வழிமுறை இல்லை. உதாரணத்துக்கு, பழங்கால இந்தியா என்பது ஒரு தீவு; அதன் அற்புதமான கண்டறிவுகள், புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தனிமைப்படுவது, உலகின் மற்ற பகுதிகளிடமிருந்து விலகிநிற்பது ஆகியவை இந்தியாவில் தேசியவாத அறிவாளர்களுக்கு திருப்தியளிக்கக்கூடியதாக இருக்கலாம். ஆனால், அடிப்படையில் இது தவறாகும்.

தான் ஒரு வசூல் ’மன்னன்’ என்பதை மீண்டும் நிரூபித்த ரஜினி!

நாம் ஒருவர் இன்னொருவரிடம் கற்றுக்கொள்கிறோம். மற்றவர்கள் அறிந்துவைத்திருப்பதோடு தொடர்பில் இருப்பதன் மூலம், நம்முடைய அறிவுப்புலங்கள் விரிவடைந்துகொண்டே இருக்கின்றன. ஒரு முறை நம்மிடம் புதியதான அறிவானது உருவானதுமே அதற்குரிய இயங்கியல்தன்மையோடு விரிவடைகிறது. வெளியுலகத்தின் மூலம் நாம் பெற்றதைவிட அதற்கு அதிகமாக திருப்பியளிக்கமுடியும்.

இந்தியக் கணிதவியலின் பொற்காலம் என்பதை எடுத்துக்கொள்வோம். அடிக்கடி இங்கு சொல்லப்படுவதைப் போல, இது, வேத காலம் அல்ல. ( வேத கணிதம் என்பது குறித்த மிகையான பேச்சு இப்போது இந்தியாவின் சில பல்கலைக்கழக வட்டாரங்களில் ஒரு புதுமையான உலகத்தைப் படைக்க முயல்கின்றன.) முதல் ஆயிரமாண்டின் செவ்வியல் காலமான, காளிதாசர், சுத்ரகா மற்றும் பிற எழுத்தாளர்களால் மிகப் பெரும் காவியம் படைக்கப்பட்ட காலத்தை ஒட்டியதாகும். இந்தியாவில் பெரிய கணிதப் புரட்சியானது, கி.மு. 470-ல் பிறந்த ஆர்யபட்டாவால் முன்னெடுக்கப்பட்டது. வராகமித்திரர், பிரம்மகுப்தா, பாஸ்கரா மற்றும் பிறர் மூலம் மேம்படுத்தப்பட்டது. ஆர்யபட்டரின் புறப்பாடானது அவரின் சமகாலத்தில் முற்றிலும் தனித்தன்மைவாய்ந்த அசாதாரணமான உயரத்தை எட்டியது. உரோம், பாபிலோன், கிரீசு ஆகிய இடங்களில் கணிதத்தில் ஏற்பட்ட வளர்ச்சியின் தாக்கத்தையும் ஆர்ய்பட்டரின் கணிதம் பெற்றிருந்தது என்பதற்குப் போதுமான சான்றுகள் உள்ளன. அயல்நாட்டின் தாக்கம் இருந்தாலும் ஆர்ய்பட்டரின் வசம்தான் இந்திய கணிதம் இருக்கிறது; வானியல்கூட ஒட்டுமொத்த உலகத்துக்கும் முன்னோடியான பங்களிப்பாக பாரிய பாய்ச்சல்களை எடுத்தது. இந்தியா வெளியிலிருந்து கற்றுக்கொண்டதுதான்; ஆனால் அதைவிட ஏராளமாக வெளியுலகுக்கு கொடுத்திருக்கிறது.

இந்தியாவில் உருவான புதிய புரிந்துகொள்ளல் அயல்நாடுகளுக்கும் பரவின. கிரேக்கம், உரோமுக்கு மட்டுமல்ல குறிப்பாக சீனாவுக்கும் பரவியது. அங்குதான் மையமான விளைவை, சீனத்தின் கோளியல் பணியில் அசாதாரணமான முன்னேற்றத்தை அது ஏற்படுத்தியது.(எட்டாம் நூற்றாண்டில் சீன வானியல் அமைப்பின் தலைமைப்பொறுப்பில் இருந்தவர்கூட, இந்தியாவைச் சேர்ந்த கணித அறிஞர் கௌதமாதான்.) மேலும், அராபிய மொழிப் பகுதிகளுக்கும் சென்று, அங்கு 8 – 11 நூற்றாண்டுகள் காலகட்டத்தில் கணிதவியல் வளர்ச்சிக்கு முதன்மையான உந்துதலாக அமைந்தது. மற்ற நாடுகளிடமிருந்து இந்தியா எதைக் கற்றுக்கொள்ளத் தொடங்கியதோ உடனே இந்தியா அவற்றுக்குக் கற்பிக்கத் தொடங்கியது. விளைவாக, கணிதவியல் உலகத்துக்கு அது பெருமளவிலான பங்களிப்புகளைச் செய்தது. ஒருவர் மற்றவரிடம் கற்றுக்கொள்ளும் திறன் உள்பட்ட பரந்த பொருளில், இந்த ஊடாட்டமான செயற்பாட்டில் நட்பானது மையமான பாத்திரத்தை வகிக்கிறது. தேச எல்லைகளைக் கடந்து ஒவ்வொரு நகர்வுமே அடுத்த ஒன்றை வலுப்படுத்துவதாக இருந்துள்ளது.

சுமேரியா, பாபிலோனிய நாகரிகத்தின் தொடக்ககாலம் உருவானபோது கிபி 3ஆவது நூற்றாண்டில் கிரேக்கத்தின் கணிதவியலில் முக்கோணவியல் கருத்துகள் யூக்ளிட், ஆர்க்கிமிட்டிஸ் ஆகியோரிடமும் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு ஆசியாமைனரில் ஹிப்பாகிரஸிடமும் கவனத்தை ஈர்த்தன. கிமு முதல் நூற்றாண்டில் இந்தியாவில் சூர்ய சித்தாந்தா முக்கோணவியல் அமைப்புகளை வெளியிட்டார். இந்திய கணிதவியலில் இருந்த கிரேக்கத் தாக்கம் தெளிவானது. ஆனால் சூர்ய சித்தாந்தாவுக்கு முக்கோணவியலை வளர்த்ததில் குறிப்பாக வானியலில் அதைப் பயன்படுத்தியதில் கூடுதல் பங்கு இருந்தது. அலெக்சாண்டரும் அவரைப்போன்ற கிரேக்க குடியேற்றப் போர்க்காரர்களும் இந்தியாவுக்குக் கொண்டுவந்ததைவிட இவரின் பங்கு அதிகமானது.கிபி 5-ம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தையொட்டி ஆர்ய்பட்டர் கணிதவியல் வளர்ச்சியின் செறிவான அம்சங்களை வழங்கினார். சைன் தீட்டா கருத்தாக்கமானது இன்றைக்கும் முக்கோணவியலில் பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

சரி, எப்படி ஆர்யபட்டரின் சைன் எனும் கருத்தாக்கப் பெயர் உருவாக்கப்பட்டது? அது, சமஸ்கிருதம் அல்லது வேறு எந்த இந்திய மொழியிலும் உள்ள சொல் அல்ல. மொழியியல் வரலாற்றின் இந்த சிறு பகுதி, ஆர்குமெண்டேட்டிவ் இந்தியனில் ஏற்கெனவே நான் விவாதத்துக்கு வைத்ததை இங்கு நினைவுகூர்வது பொருத்தமாகும். ஆர்யபட்டர், முக்கோணவியலின் அடிப்படையாகப் பயன்படும் அரை நாண், சமஸ்கிருதத்தில் ஜ்ய -ஆர்தா என்பதிலிருந்து, ‘சைன்’- ஐ உருவாக்கினார். ஜ்ய என்பது குறுகியது எனப் பொருள்படும். அராபிய கணிதவியலாளர்கள் இதை மொழியாக்கம்செய்து, ஜிபா என மருவி அழைத்தனர். அராபியில் உயிரெழுத்துகளை நீக்கிவிட்டு, உயிர்மெய்யெழுத்துகளில்தான் எழுதுவர். ஆகையால் ஆர்ய்பட்டரின் ’ஜ்ய’ என்பது ஜ்,ப் என அராபியில் ஜிபா என்றானது. அராபியில் இந்த சொல்லுக்கு பொருள் இல்லை. ஆனால், இதே முறையில் ஜ், ப் ஆகியவை, ஜைப் என ஒலிக்கப்படமுடியும். அராபியில் இதற்கு மலைக்குகை அல்லது விரிகுடா எனும் பொருள் உண்டு.

ஆர்ய்பட்டரிடமிருந்து பெறப்பட்ட நவீன முக்கோணவியலின் அராபிய சொற்கள் அப்படியே இலத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டபோது, ஜைப் எனும் சொல், இலத்தீனில் அதே பொருளைத் தரௌம் ’சைனஸ்’ என்று ஆனது. (தொலடாவில் பணியாற்றிய இத்தாலியரான கெரார்டோ கிரெமினா என்பவர் கி.பி. 1150-ல் இம்மொழிபெயர்ப்பைச் செய்தார்). அதன் பிறகு, சைனஸ் எனும் வார்த்தையிலிருஎந்து நவீன முக்கோணவியல் பதனமான ‘சைன்’ பிறந்தது. அதிகமாகப் பயன்படுத்தப்படும் கணிதவியல் சொல்லான சைன் ஆனது, ஆர்யபட்டரின் சமஸ்கிருதப் பெயரான ’ஜ்ய’ மற்றும் அதன் அராபிய, இலத்தீன மொழிபெயர்ப்புகளின் நினைவையும் தாங்கிநிற்கிறது. ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு எளிமையான வடிவில் என்ன வந்ததோ அதுவே கணிதவியல் மற்றும் வானியலில் இந்த உலகத்துக்கே திரும்பச்சென்றது.

அறிவியல், கணிதவியல், பண்பாட்டு வளர்ச்சியில் பிரிவினைப்பார்வையானது கடுமையாக திசைதிருப்புவதாகும். உண்மையிலேயே நட்பின் பாத்திரமானது தேச எல்லைகளைத் தாண்டி அதேசமயம் தன்னுடைய எல்லைக்குள் வினைபுரிவதாகும். அரசியல் பிரிவினைவாதிகள் வளர்க்க விரும்புகின்ற – ஒரே தேசத்துக்குள்ளும் குழுக்கள் அல்லது பிரிவினருக்கு இடையில், பிரிவினை, பதற்றம், வன்முறை ஆகியவை, நமது சமூக வாழ்வை மட்டுமல்ல, நாடுகளுக்கு இடையிலும் அறிவுத்துறை வளர்ச்சிக்கு தடைக்கற்களாக மாறிவிடும்.

மெய்யாக, அறிவு வளர்ச்சி குறித்த தனிமைப்படுத்தல்வாதக் கண்ணோட்டமானது அடிப்படையிலேயே பாதகமானது. அது தேசியவாதத்துக்கும் பிரிவினைவாதத்துக்கும் எந்த அளவு பொருந்தக்கூடியது என்பது ஒரு சேதியே அல்ல. நட்பு என்பது நமது அறிவுலகத் தொடர்ச்சியில் முக்கியமானது. மற்ற பல பெறுமதிகளைப் போலவே, கணிதவியல், அறிவியலில் பொது அறிவில் முன்னேற்றம் என்பது நட்பின் அழகிய தாக்கங்களில் ஒன்றாகும்.

இந்த கட்டுரை முதன்முதலில் 2020 ஜனவரி 8 ஆம் தேதி “நட்பும் முன்னேற்றமும்” என்ற தலைப்பில் அச்சிடப்பட்டது. கட்டுரையின் ஆசிரியர் அமர்த்தியா சென் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். தாமஸ் டபிள்யூ. லாமண்ட் பல்கலைக்கழக பேராசிரியரும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் தத்துவ பேராசிரியருமாவார். 2020 இன்ஃபோசிஸ் பரிசு விழாவில் சிறப்பு சொற்பொழிவில் இருந்து எடுக்கப்பட்டது.

தமிழில் – இர.இரா.தமிழ்க்கனல்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close